Community

தாயின் சிறப்பு

(தாய் கோழிக்கும், அதன் குஞ்சுகளுக்கும் இடையேயான உரையாடல்கள் இங்கு கதையாக தொகுகக்கப்பட்டுள்ளது)

பூவாத்தா ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அறுபது வயதை தாண்டிய மூதாட்டி.அவள் தனது வீட்டில் ஒரு அழகான நாட்டுக்கோழியை ஆசை ஆசையாக வளர்த்து வந்தாள்.ஒருகால கட்டத்தில் அவள் வளர்த்த கோழியும் பதினாறு முட்டையிட்டது. இருபத்தொரு நாட்கள் அடைகாத்த பிறகு தாய் கோழியும் பதினாறு கோழிக் குஞ்சுகளைப் பொறித்தது(பெற்றெடுத்தது).பலநாட்கள் பஞ்சாரத்திலேயே மூடிவைத்திருந்த தாய் கோழியையும் அதன் கோழிக் குஞ்சுகளையும் பூவாத்தா ஒருநாள் திறந்து விட்டாள்.தாய்க் கோழியும் மனமகிழ்ச்சியில் இந்த அற்புத உலகத்தை தன் பிள்ளைகளுக்கும் காட்ட வேண்டுமென்ற ஆசையுடன் மெதுவாய் தனது கோழிக்குஞ்சுகளை அழைத்து சென்றது.செல்லும் போது வழியில் ஒரு குப்பைக் குழியை கடந்தது.அப்போது ஒரு கோழிக்குஞ்சு தாய் கோழியுடன் அம்மா அம்மா இது என்னது?ஒரே துர்நாற்றம் வீசுகிறது என்று தாய் கோழியுடன் கேட்டது.தாய்க் கோழியோ மகளே இதன் பெயர் குப்பைக்குழி என்பார்கள்.ஆடு மற்றும் மாடு ஆகியவற்றின் கழிவுகளை இதில் தான் சேர்த்து வைப்பார்கள்…பிறகு தேவையான போது விவசாயிகள் இதை அள்ளி தங்கள் வயலிற்கு உரமிடுவார்கள்.பயிர்களும் இதன் சத்துக்களை உறிஞ்சி நன்றாக வளரும் என்று விளக்கம் சொன்னது.அப்புறம் இன்னொரு கோழிக்குஞ்சு ஆடு,மாடு, வயல் அப்படினா என்னம்மா? என்று கேட்டது.அதற்கு தாய் கோழிக்குஞ்சு இதோ தூரத்தில் கீழே குனிந்து புற்களை மேய்கின்றனவே அவைகள் தான் மாடுகள்.அவைகள் மேயும் இடம் தான் வயல்.வயலின் கரையில் படர்ந்து கிடக்கும் கொடிகளை உண்ணுகின்றனவே அவைகள் தான் ஆடுகள்.கிராமத்தில் வெள்ளாடு என்று பேச்சு வழக்கில் அழைப்பார்கள் என்று விளக்கம் சொன்னது.அப்போது ஒரு கோழிக்குஞ்சு தாய் கோழியிடம் அம்மா அம்மா அதோ பாருங்கள் ஏதோ ஒன்று நம்மை நோக்கி ஊர்ந்து வருகிறது என்று சொல்லியது.அதைப் பார்த்த தாய் கோழி மகளே அதுதான் மண்புழு.உழவனின் நண்பன் என்று சொல்வார்கள்.மண்ணுக்குள் புதைந்து மண்ணை நன்றாக கிளறி மண்ணின் வளத்தை அதிகரிக்கும்.மழைக் காலங்களில் வெளியில் வரும் என்று பதில் சொல்லியவாறு தாய் கோழி தனது குஞ்சுகளை ஊர் குளக்கரைப் பக்கம் அழைத்து சென்றது… அப்போது ஒரு கோழிக்குஞ்சு அம்மா அம்மா இது என்னது பெரிய குழியா இருக்கே? என்று கேட்டது.அதற்கு தாய் கோழி மகளே இதுதான் குளம்.மழை பெய்யும் காலங்களில் இதில் மழைநீரை தேக்கி வைத்து தேவையான போது விவசாயிகள் பயிருக்கு தேவையான தண்ணீரை இங்கிருந்து குழாயின் மூலமாக வயலுக்கு எடுத்துச் செல்வார்கள் என்று விளக்கி சொல்லிக் கொண்டிருக்கையில் இன்னொரு கோழிக்குஞ்சு அம்மா அம்மா இந்த குளத்துக்குள்ள நிறைய மரங்கள் இருக்குதே இதோட பேரு என்னம்மா? என்று கேட்டது.அதற்கு தாய் கோழி மகளே இது மரம் இல்லை.இது ஒரு களைச்செடி.இதனை கருவேல(ம்) மரம் என்று அழைப்பார்கள்.ஒருகாலத்தில் வெளிநாட்டில் இருந்து நம் நாட்டிற்குள் எப்படியோ தப்பி வந்து விட்டது.இப்போது பாதி நிலங்களை இதுதான் ஆக்கிரமிச்சுருக்கு.கிடைக்கும் தண்ணீரை உடனே உறிஞ்சிக் குடிக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு என்று சொல்லியது.உடனே இன்னொரு கோழிக்குஞ்சு களைச் செடிகள் அப்படினா என்னம்மா? என்று கேட்டது.அதற்கு தாய்க்கோழி வயலில் விளைகின்ற பயிர்களின் வளர்ச்சிக்கு இடையூறாக வளரும் செடிகள் தான் களைச் செடிகள்.பயிர்களுக்கு இடும் உரம் மற்றும் தண்ணீரினை இவைகள் உறிஞ்சி பயிர்களுக்கு எந்த வித சத்துக்களும் போகாமல் தடுத்துவிடும் என்றது.பிறகு குஞ்சுகளிடம் வாருங்கள் நேரமாயிருச்சு நாம வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி குஞ்சுகளை அழைத்து வந்து கொண்டிருந்தது.அப்போது தாய் கோழி தீடீரென தனது குஞ்சுகளிடம் ஓடி வாருங்கள் வந்து எனது இறக்கைக்குள் ஒழிந்து கொள்ளுங்கள் என்று சத்தமிட்டது.குஞ்சுகளும் ஓடி வந்து தாய் கோழியின் இறக்கைக்குள் ஒழிந்து கொண்டன.அதில் ஒரு கோழிக்குஞ்சு தாய் கோழியிடம் ஏம்மா எங்களை வந்து ஒழியச் சொன்னீர்கள் என்று கேட்டது.அதற்கு தாய் கோழி பிள்ளைகளே அதோ மேலே பாருங்கள்…பருந்து ஒன்று நம்மையே வட்டமிட்டவாறு நோட்டமிடுகிறது.அது வந்தால் உடனே நீங்கள் ஓடி ஒழிஞ்சுக்கனும்.இல்லனா அது உங்கள தூக்கிட்டு போயி தனது பசிய போக்கிக்கும் என்று எச்சரித்தது.கோழிக்குஞ்சுகளும் சரிம்மா என்று தலையசைத்தது.பிறகு கழுகு சென்ற பிறகு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தன…கோழிக்குஞ்சுகளும் தாய் கோழியின் விளக்கத்தை கேட்டு எச்சரிக்கையுடன் இருந்தன…

நீதி/கதைக்கரு:பிள்ளைக்கு நல்வழி காட்டும் முதல் ஆசான் தாயன்றி வேறெவருமில்லை.

  • வரிகளின் வாரிசு ஜே.தினேஷ்கிஷோர்.

Aasaiyaaga valarthu vandhaal enbadhu podhumey… vaazhthukal