Community

குளத்தடி பிள்ளையார்

குளத்தடி பிள்ளையார்

தினமும் இரவு உறங்கும்போதெல்லாம் தாய் ஏதாவது ஒரு கதை கூறி உறங்க வைப்பது வழக்கம். அன்று அவள் கூறிய கதை இன்னும் என்னை பலநாள் தூங்கவிடாமல் செய்து கொண்டு இருக்கிறது.அந்த கதையில் ஹீரோவும் அவள்தான் ஹீரோயினும் அவள்தான். யார் அவள்? அவள் பெயர் என்ன? பாற்கடலை கடைவதற்கு கயிறாக மாறியவள், சிவனின் ஆபரணம் அவள், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சிக்கித் தவித்த அந்த நாகத்தின் பெயர்தான் இவளின் பெயர். ஆம், ‘’வாசுகி’’ என்பதேயாகும்.

புதுக்கோட்டை மாவட்டம் கும்பேஸ்வரனப்பிள்ளை – மனோன்மணிக்கு இளைய மகளாக ஜூன் 26, 1957ல் பிறந்தாள்.இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இவளுக்கு. சின்ன பிள்ளை மட்டுமல்ல வீட்டிற்கே செல்லப்பிள்ளை. கஷ்டத்தை அவள் கண்களால்கூட கண்டதில்லை பள்ளிப்பருவத்திலும் பல வேலைகளை முடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடுவாள். கண் நிறைய மை, இரட்டை ஜடை, முட்டி வரை பாவாடை, கையில் மஞ்சப்பை இதுதான் அவளின் தோற்றம். அவள் அதிக நேரம் செலவழிப்பது அந்த குளத்தடி பிள்ளையாருடன் மட்டுமே. யாரையும் நம்ப மாட்டாள். மனதில் உள்ளதை அந்த பிள்ளையாரிடமே போட்டு உடைப்பாள்.

அவள் உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஆனால், இவளை இன்னும் கல்யாணமாலை நெருங்கவில்லை.அவளின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலை. விரைவில், வாசுகிக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். அவளின் சகோதரிகளுக்கு வசதியான இடத்தில் நல்ல வாழ்க்கை அமைந்தது.

விதியோ! எதார்த்தமோ! இவளுக்கு பார்க்கப்பட்ட ஜாதகம் ஓர் பாமரனின் ஜாதகமாக அமைந்தது. அது பொருந்தக்கூடாது என்று அந்த குளத்தடி பிள்ளையாரிடம் கதறினாள். ஆனால், அவள் எண்ணத்திற்க்கு மாறாக ஜாதகமோ பத்து பொருத்தமும் முழுமையாகப் பொருந்தியது. இவள் வருங்கால கணவன் அந்த பாமரன் இருப்பதோ ஓர் குக்கிராமம். சட்டை பட்டன் கூட போடத் தெரியாதவனோடு எப்படி வாழ்வது? என்ற குழப்பத்தோடு இருந்தாள். வாசுகியின் தந்தை அவளது திருமணத்தை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கேற்ப ஏற்பாடுகளும் வேக வேகமாக நடந்தது. குளத்தடி பிள்ளையாரை கட்டிப் பிடித்து அழுத வண்ணமே இருந்தாள்.

எல்லாம் கையை மீறி சென்ற நிலையில், அவசர அவசரமாக திருமணமும் முடிந்தது. அவளின் கணவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அவருக்கு வேலை ஒன்றும் கிடையாது, திருமணம் முடிந்தும்கூட வேலைக்கு செல்லாமல் பொழுதை கழித்தார். திருமணம் முடிந்து ஆறு மாதம் வரை அவள் கணவருடன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. ஒரு நாள், அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் அவர்கள் இருவரையும் சினிமா பார்த்துவர சொல்லி தனியாக அனுப்பி வைத்தனர்.

படம் ஆரம்பித்துவிட்டது, மெதுவாக அவன் அவளின் தோள் மீது கையை போட்டான். திடீரென ஓர் அலறல் சத்தம். அங்கு ஓட்டத்தை ஆரம்பித்தவள் வீடு வந்ததும்தான் நிறுத்தினாள். பிறகு ஒரு நாள் மறுவீடு அழைக்க வாசுகியின் வீட்டிலிருந்து அவளின் வீட்டார் வந்திருந்தனர். அவர்கள் யாவரும் அவளின் கணவனை மதிக்கவில்லை, ஏளனமாகவும் பேசினர். அவரை கண்டதும் பத்தடி தள்ளியே நின்றனர். இருவரும் வந்த உறவினருடன் சேர்ந்து கீரனூர் சென்றனர். வாசுகி வழக்கம் போல குளத்தடி பிள்ளையாரிடம் தன் கஷ்டத்தைக் கொட்டித் தீர்த்தாள். ‘’ என் அக்காக்கு அழகான மாப்பிள்ளை, வசதியான இடமும் பார்த்து கட்டி வைத்துவிட்டு, என்னை மட்டும் ஏன் அப்பா இப்படி ஒருவனுக்கு மணம் முடித்து வைத்தார்??’’ எனக் கத்தி கதறினாள்.

காலப்போக்கில், அவள் மனம் சாந்தி அடைந்தது, இதுதான் நம் வாழ்க்கை இதை நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று தன் மனதை மாற்றி வாழத் தொடங்கினாள். பின், அவளுக்கு முதலாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு பாலமுருகன் என்று பெயர் சூட்டினாள். ஆனால் ஓரிரு மாதங்களில் அந்த குழந்தை உடல்நலக்குறைவால் இறந்தது. மீள முடியாத சோகம் வாசுகியின் மனதை ஆட்கொண்டது. பிறகு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தாள். அடுத்ததாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்பொழுதும் குடும்பம் கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலையிலே இருந்தது. இருப்பினும் வாசுகி பின்வாங்காமல், தன் கணவனை கொஞ்சம் கொஞ்சமாக அவரை மாற்ற தொடங்கினாள். அவரை ஊக்குவித்து அவருக்கு அவர்மேல் நம்பிக்கை வரும்படி செய்தாள். மனைவியின் சொல் கேட்டு அவரும் நெல் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை செய்தார். ஓரளவு வருமானத்துடன் வாழ்க்கையை இனிதாக தொடங்கினர்.

இந்த சூழ்நிலையில் வாசுகிக்கு மேலும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. அதிக வருமானம் இருந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்னும் நிலைமை. அப்பொழுது, அந்த ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு பின் அமைந்த ஒரு பெரிய வீட்டை, அதற்கு சொந்தக்காரனான ஒரு மூதாட்டி அதை விற்க முயற்சிக்கிறார். ஊரில் உள்ள அனைவரும் வாங்க முன் வந்தனர். ஆனால், ஏனோ அந்த மூதாட்டிக்கு அவர்களுக்கு விற்க மனம் வரவில்லை. அந்த நேரத்தில், வாசுகியின் கணவனை எதார்த்தமாக சந்தித்து இந்த விவரத்தைக் கூறினாள். அவரும் வாசுகியும் வந்த சந்தர்ப்பத்தை கைவிடாது பல போராட்டங்களைத் தாண்டி அந்த வீட்டை சுமார் ஒரு இலட்சத்திற்க்கு வாங்கினர்.

அடுத்த வேலையாக வீட்டில் உள்ள மர சாமான்களை அகற்ற முடிவு செய்தனர். அந்த பணியும்போதுதான் தெரிய வந்தது அங்கு இருந்த மரங்கள் எல்லாம் தேக்கு மரங்கள் என்று, அந்த மர சாமாங்களை விற்கவும் முடிவு செய்தனர். அவற்றை விற்ற பணமே ஒன்றரை இலட்சம் மதிப்பு வந்தது. அந்த பணத்தில் வயல், வீடு அலங்காரம், வாகனங்கள் என வாங்கி அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் ஆனார்கள். இன்பமான வாழ்க்கையும் அவர்கள் உழைப்பால் உண்மை ஆனது.

கிடைத்த வாழ்க்கையை குறை கூறாமல் அதனை விரும்பி ஏற்று வாழ்ந்தால் அந்த வாழ்க்கையே நம்மை விரும்பும் என்பதற்கு வாசுகியின் வாழ்க்கையே சிறந்த எடுத்துக்காட்டாகும்.

1 Like

Kadhaiyin vegam ok dhaan… justification enaku puriyala… konjam Roja pada saayalum ulladhu… romba ellimaiyaaga ezhudhirikeenga… swarasiyam thodakathil edhir paarthadhu Pol illai… vaazhthukal