Community

ஞாபகச் சாரல்

நினைவுகள் என்றுமே ஒரு பொக்கிஷம். சில நினைவுகள் கடந்து போனவர்களை கசப்புடன் திரும்பிப் பார்க்க வைக்கும்; சில நினைவுகள் ஏக்கத்துடன் அந்த நாட்கள் திரும்பி வராதா என்று ஏமாந்து எதிர்பார்க்கும். சஹானா இப்படி எண்ணி பெருமூச்சுடன் வாழ்க்கையின் இரகசியங்களை யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

என்ன ஆயிற்று இவளுக்கு என்று நான் நினைப்பது போல் தானே நீங்களும் நினைக்கிறீர்கள்?

சஹானாவிற்கு பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் பொழுது டைரி எழுதும் பழக்கம் உண்டு. தன் தாயின் பழக்கத்தைப் போலவே அவளும் தன் எண்ணங்களை, சந்தோஷங்களை ஏன் அவள் வேதனைகளையும் கூட அவள் டைரியில் பகிர்ந்து கொள்வாள். ஏனோ கல்லூரி முடிந்து வேலைக்குச் சென்று கொண்டிருப்பதால் இப்பொழுது எல்லாம் டைரி என்ற ஒன்று நினைவுக்கே வருவதில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று சஹானா தன் பழைய டைரிகளை எல்லாம் புரட்டினாள். அதன் வெளிப்பாடு தான் இவள் இவ்வாறு யோசிப்பதற்குக் காரணம். ஆனால் கண்டிப்பாக எல்லோருக்குமே என்றுமே மறக்க முடியாத நினைவுகளும், மறக்க வேண்டிய நினைவுகளும் இருந்து கொண்டே இருக்கும். சஹானாவைப் பற்றி ஒரு சில வரிகள் … அதற்குள் நீங்களும் உங்கள் நினைவலைக்குள் ஒரு சில நிமிடங்கள் சென்று விட்டு வாருங்கள்.

சஹானா 25 வயது நிரம்பிய இளந்தளிர். ஆசிரியையாக பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறாள். அன்பான அம்மா, அக்கா மற்றும் இவர்களுடன் செல்ல நாய்க்குட்டி டேனி. அழகான குடும்பம். இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்ன செய்வது என்று தெரியாமல் டைரியை புரட்டிக் கொண்டிருக்கிறாள். சரி, நீங்களும் இப்பொழுது உங்கள் நினைவலைகளில் இருந்து வெளியே வாருங்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஒரு சிறிது நேரத்திற்கு சஹானாவின் நினைவுகளின் ஓடங்களுக்குள் நாமும் பயணிக்கலாம்.

எல்லோருக்கும் கல்லூரிப் பருவம் என்பது ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியைப் போலவே மனம் பறந்து கொண்டே இருக்கும். சஹானாவும் விதிவிலக்கு அல்ல. முதல் நாள் கல்லூரி எவ்வாறு இருக்கும் எல்லோரும் எப்படி பழகுவார்கள் என்று பயந்த சஹானாவிற்கு நான் இருக்கிறேன் என்று புத்தம்புது ரோஜா மலராய் கை கொடுக்கிறாள் இராகவி. வெவ்வேறு செடியில் மலர்ந்த இரு மலர்கள் ‘நட்பு’ என்ற வேரில் பயணிக்கத் தயாராகி விட்டனர். சஹானாவிற்கு கல்லூரி நாட்கள் அழகாகவும், இராகவியின் நட்புடனும் வசந்த நாட்களாய் சென்று கொண்டிருந்தது. வகுப்பு, நண்பர்களுடனான அரட்டை, சிரிப்பு, கோபம், சண்டை மீண்டும் மீண்டும் என நினைக்கும் அளவிற்கு பறவை போல பறந்து கொண்டிருந்தாள் சஹானா. இராகவி சஹானாவின் வீட்டில் ஒருத்தியாகி விட்டாள். இராகவி சஹானாவின் அன்பில், தோழமையில் சந்தோஷமாக இருந்தாள். நாட்கள் சென்று கொண்டு இருந்தது இனிமையாக.
two-best-friends-
முதலாமாண்டு இரண்டாம் பருவத் தேர்வுகள் முடிந்து புது வருடம் ஆரம்பிக்கும் தருணம். தேர்வுகள் முடிந்து விடுமுறை சமயத்தில் எல்லோரும் ஒரு நாள் வெளியே செல்ல சஹானா தன் நண்பர்களுடன் திட்டமிட்டாள். ஊட்டி, கொடைக்கானல் என்று ஒவ்வொரும் தங்கள் விருப்பங்களைக் கூற முடிவாக ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டனர். சஹானாவும், இராகவியும் மகிழ்ச்சியாக ஊட்டிக்குச் செல்ல நண்பர்களுடன் தயாராயினர். இருபத்தி ஐந்து பேருடன் பஸ்ஸில் ஆட்டம், பாட்டம் என ஊட்டிக்கு வந்தனர். மலைகளின் அரசி உண்மையிலே கண்ணுக்கு அரசியாகவும், பச்சை பசேல் என்று குளுமையாகவும் இருந்தாள். நண்பர்களுடன் சஹானாவும், இராகவியும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டனர். நிறைய புகைப்படங்கள் மற்றும் மறக்க முடியாத பல இனிமையான தருணங்களையும் மனதில் நிறைத்து கொண்டு ஊட்டி விட்டு புறப்படத் தயாராயினர். இன்றும் அவற்றை அசை போடுகையில் சஹானாவிற்கு நினைத்தாலே இனிக்கும். தங்களின் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள நமக்காக ஒருவர் இருக்கிறார்கள் என்றால் அந்த மகிழ்ச்சிக்கு வார்த்தையே இருக்காது. அதை போல தான் சஹானாவிற்கு இராகவியும், இராகவிக்கு சஹானாவும்…

ஒரு அழகான நதி போல சென்று கொண்டிருந்த இவர்களின் நட்புக்குள் ‘காதல்’ என்ற வெள்ளம் வந்து விட்டது. ஆம் ,காதல் கல்லூரிப் பருவத்தில் சற்று ஆழமாக தளிர்க்க ஆரம்பிக்கும். அப்படித்தான் இராகவியின் காதல் சற்றே ஆழமாக வேரூன்றி விட்டது. இப்பொழுது எல்லாம் இராகவி சஹானாவுடன் செலவிடும் நேரம் குறைந்து விட்டது. நட்பு இருக்கிறது ஆனால் உயிர்ப்புடன் இல்லை. சஹானாவிற்கு இராகவியின் காதல் மற்றும் நட்பு புரியாமலில்லை ஆனால் தன் தோழியை மற்றொருவரின் காதலியாக பார்க்க மிகவும் வேதனைப்பட்டாள்.

நாட்கள் சென்று கொண்டிருந்தது ஒரு விரிசலுடன். இரண்டாமாண்டு படிக்கும் பொழுது இராகவியின் காதல் அவளின் பெற்றோர்களுக்குத் தெரிந்து பிரச்சினையாகி இராகவியை கல்லூரிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர். இராகவியின் பிரிவை சஹானாவால் தாங்க முடியவில்லை . கல்லூரிக்கு ஒரு வித இறுக்கத்துடனே சென்று கொண்டிருந்தாள்.ஒரு சில மாதங்களுக்குப் பிறகு இராகவி தொலைபேசியில் தான் காதல் திருமணம் செய்து விட்டதாக கூறினாள். பின்பு இரண்டொரு முறை சஹானாவுடன் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டாள். இன்றும் தொலைபேசியின் மூலமாக, அதுவும் அரிதாகவே அவர்களின் நட்பு தொடர்கிறது. இப்பொழுது இராகவி இரண்டு குழந்தைகளுடன் ‘அம்மா’ என்ற ஸ்தானத்தில் இருக்கிறாள். ஆனால் சஹானாவிற்கோ இராகவியை ஏழு வருடங்களாயினும், பாதைகள் மாறினாலும் பழைய இராகவியாகத் தான் பார்க்க முடிகிறது.

எல்லோருக்கும் முதல் நட்பு , முதல் காதல் மறக்க முடியாதல்லவா? வருடங்கள் தொலைந்தாலும் சஹானாவிற்கு இராகவியுடனான ஞாபகங்கள் திடீரென வரும் மழைத்துளி போல சந்தோஷத்தையும், ஏதோ ஒருவித கோபத்தையும் வரவழைக்கும். இன்றும் அப்படித்தான். டிரிங் டிரிங்… தொலைபேசியின் அலறல் கேட்டு நிகழ்காலத்திற்கு சஹானா வந்தாள். நாமும் நம் நிகழ்காலம் என்ற கரைக்கு வந்து விடலாமா? சஹானாவிற்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்விலும் மறந்துபோன நட்புகள், உறவுகளை மழைச்சாரலைப் போல கொஞ்சம் மகிழ்ச்சியுடன் நினைத்துப் பாருங்கள்.
பிரிவுகள் தொடர்கதை
நினைவுகள் அதன் கதை

4 Likes

Well written. Nice narration

1 Like