Community

கோடைகால விடுமுறை

‘பள்ளிப் பருவத்தின் காத்திருப்பு கோடைகால விடுமுறை. அந்த விடுமுறை முடிந்து நண்பர்களைப் பார்த்ததற்கு மற்றொரு காத்திருப்பு. காத்திருப்பிலேயே நாட்களை கழிக்க வேண்டுமா!’ என்று கவலை கொண்டிருக்கும் நந்து (எ) நந்தினி. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் ஆட்டு மந்தைகளில் ஓர் மந்தை நந்து.

அடுக்குமாடி கட்டிடங்களில் படிக்கட்டில் இருந்து ரோட்டை பார்ப்பது ஒரு சந்தோசம்; அப்பொழுது நண்பர்களின் முகம் தெரிந்தால் மற்றொரு சந்தோஷம். ஆனால் அங்கு தெரிந்தது நண்பரின் முகம் அல்ல; ஆண் பால் பெண் பால் வேறுபாடு இல்லாமல் யார் கண்டாலும் மனதை கொள்ளைக் கொள்ளும் வசீகரமான முகம்.

யார் அவர்! என்ற ஆவல் நந்துவிற்கு வர முதல் மாடியில் இருந்து எப்பொழுது கீழே இறங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. குழலூதும் கண்ணனின் அழகு கொண்ட உருவம் தன்னை நோக்கி வந்ததில் தாம் அவரை பார்ப்பது அவருக்குத் தெரிந்துவிட்டதோ என்ற பதப்பதைப்புடன் அங்கேயே ஸ்தம்பித்து நின்றாள்.

கையில் ஏதோ ஒரு தாளைக் கொடுத்து அந்த முகம் பேசிக்கொண்டிருந்தது. இவள் அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். கண்கள் மட்டுமே வேலை செய்தன செவிகள் சற்று ஓய்வெடுத்து கொண்டிருந்தது. அந்த உருவம் தன்னை விட்டு தொலைவில் சென்ற பிறகுதான் நினைவுக்கு வந்தாள்.

தன் கையிலிருக்கும் தாளுடன் வீட்டை அடைந்து அவரை பற்றிய நினைப்பில் ஆழ்ந்திருந்த நந்து தன் அம்மாவின் குரலால் திடுக்கிட்டு எழுந்தாள். மதிய உணவிற்கான கூக்குரல் அது. அந்தத் தாளை சோஃபா மேஜையில் வைத்துவிட்டு உணவருந்தச் சென்றாள். மதிய உணவிற்குப்பின் குட்டி தூக்கம் போட்டு மாலை விளையாட்டிற்காக தோழியின் அழைப்பிற்காக காத்திருந்தவளுக்கு அப்பா ஆச்சரியத்தை தந்தார்.

அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வந்தவர் “நந்து இங்க பாரு உனக்காக ஒரு கிப்ட் வாங்கி வந்திருக்கேன்” என்று கூற தன் அறை ஜன்னலிலிருந்து சோஃபாவிற்கு வந்தாள். அப்பாவிடமிருந்து வாங்கிப் பிரித்துப் பார்த்தால் அட்டை பொம்மைகள்!

“இது என்னது பா”

“எல்லாம் தனித்தனியா இருக்கா இத எல்லாத்தையும் சேர்த்து நம்ம வீடு மாதிரி கட்டணும்.”

அப்பொழுது தோழியின் குரல் கேட்க.

“அப்பா நான் போயிட்டு விளையாடிட்டு வந்துடுவா?”

“சரிமா நான் அம்மாவுக்கு ஒத்தாசை பண்ணிட்டு இருக்கேன் நீ போய் விளையாடிட்டு வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வீடு கட்டலாம்.”

நந்து விளையாட சென்றவுடன் அம்மா அடுப்பறையில் இருந்து “15 வயசு ஆகுது அவளுக்கு பொம்மையா?” என்று வினவ கை கால் அலம்பி வந்த அப்பா “அது விளையாட்டுக்கு இல்ல பாடம் புகட்ட. என்ன அடுத்த கேள்வி கேட்காமல் கொஞ்சம் காபி தரியா” என்றார்.

விளையாடி முடித்து வந்த நந்து ‘அப்பாடா’ என்று சோஃபாவில் சாய்ந்தாள். அந்தத் தாள் பார்த்தவுடன் அந்த நபரின் முகம் நினைவுக்கு வந்தது. அந்தத் தாளில் இருந்த வார்த்தைகளை படிக்கத் துவங்கினாள். அது ஒரு கோடைக்கால விரைவு கணினி வகுப்பிற்கான விளம்பரம். தொடர்புகொள்ள “க்ருஷ்”-ஐ அழைக்கவும் என்ற கைபேசி எண்ணும் அளிக்கப்பட்டிருந்தது.

கை கால் அலம்பி அப்பா-அம்மாவிடம் விரைந்தாள் நந்து. “நான் இந்த வகுப்புக்கு சேர்ந்துக்கலாமாப்பா?” என்ற வினாவிற்கு மற்றொரு வினா பதிலாக அமைந்தது. “நம்ம சாப்பிட்டு விளையாடிட்டு அதுக்கப்புறம் இதை பத்தி பேசலாமா?” என்றார் அப்பா.

மூவரும் இரவு உணவை முடிக்க அப்பாவும் மகளும் விளையாட்டு அறையில் அமர்ந்து அட்டை பொம்மையை பிரித்தனர். அட்டைகளில் எண்கள் குறிப்பிட எண்களுக்கு தகுந்தவாறு அதனை மகள் அடுக்க அப்பா கோந்து பூசு வீடாக கட்டினர். இவர்கள் கட்டி முடிப்பதற்கும் அம்மா அடுப்பறையில் வேலை முடித்து வரவும் சரியாக இருந்தது.

“நந்து உனக்கு ஏன் இந்த பொம்மை வாங்கி வந்தேன் தெரியுமா!”

“வீட்ல ரொம்ப வெட்டியா இருக்கேன் பொழுது போகம திண்டாடறேன் அதனால வாங்கி கொடுத்து இருப்பீங்க பா.”

“ஹா! அதனால இல்ல. எனக்கு சின்ன வயசுல ஆர்க்கிடெக்ட் ஆகணும்னு ஆசை ஆனா எங்க அப்பா என்ன பேங்க் எக்ஸாம் எழுத சொல்லி இப்ப நான் பேங்க் மேனேஜரா இருக்கேன். நீ ஆர்கிடெக்ட் ஆகணும்னு என்னோட ஆசை ஆனா என்னோட கனவ உன் மேல திணிக்க நான் விரும்பல. இந்த சமயம் உன்னோட ஃப்யூச்சருக்கு முக்கியமான சமயம். நீ எடுக்கப் போற படிப்பு உனக்கு பிடிச்சதாகவும் சாதிக்க வேண்டியதாகவும் இருக்கணும். படிப்பு வேலைங்கறது வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமான ஒண்ணு. இந்த ஆறிலிருந்து எட்டு வருஷம் ஒழுங்கா படிச்சு வேலை கிடைச்சிருச்சுனா பணத்த பத்தின கவலை இல்லாம இருக்கலாம். அதுவும் நமக்கு புடிச்ச மாதிரி இருந்தா இன்னும் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதனால உன் முடிவ உன் கைல நல்லா யோசிச்சு எடு.” என்று சொல்லி கையில் அந்த கணினி வகுப்பு தாளை வைத்தார் அப்பா.

தலை முழுவதும் எண்ணங்களுடன் கையில் தாளுடன் தன் அறைக்குச் சென்று உறங்க நினைத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. பதினோராம் வகுப்பில் எந்தப் பிரிவு எடுப்பது என்ற முடிவு கூட எடுக்காமல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கும் நந்துவிற்கு வயதிற்கு ஏற்ற உணர்ச்சிகள் வந்தால் மட்டும் போதுமா? அதற்கு தகுந்தார்போல் பொறுப்புக்கள் இல்லையே!

வயிறு கடுமையாக வலிக்க கழிப்பறையை அடைந்தாள் நந்து. கழிப்பறையில் இருந்து அம்மா என்ற கூக்குரல் பெற்றோரின் அறையை அடைய செம்பருத்தி மலர்ந்தது என்பது தெரிந்தது. மூன்று நாட்களுக்குப் பின் உறவினர்கள் வர வீடே கோலாகலமாக மாறியது. அனைவரும் கேட்ட முதல் கேள்வி ‘என்னமா படிக்க போற?’ இடைப்பட்ட அந்த மூன்று நாட்களில் அனைத்து படிப்புகளை பற்றிய தெள்ளறிவை தெரிந்துக்கொண்டு தன் வாழ்க்கைக்கான முக்கிய முடிவை மேற்கொண்டாள்.

மருத்துவம், பொறியியல், அறிவியல், கலை என பல பட்டப் படிப்புகள் இருக்க ஆர்க்கிடெக்ட் என்ற பட்டப் படிப்பு அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தன் அப்பாவின் கனவை தன் கனவாக கொண்டு ஆர்க்கிடெக்ட் படிக்க முடிவெடுத்தாள். அந்த கணினி வகுப்பு தாள் அவளின் அலமாரியில் பத்திரப் படுத்தப் பட்டது.

உறவினர்களிடம் சிரித்தே மழுப்பியவள் தன் தாத்தாவிடம் மட்டும் “என்னையும் வங்கித் தேர்வு எழுத சொல்லுவியா தாத்தா?” என்று மறைமுகமாக கேள்வியாக பதிலளித்தாள் நந்து.