பறத்தல் அதன் சுதந்திரம்…
முன்னொரு நாள்
வார இறுதி நாளில்…
வாய்க்கால் வயல்
எனத் தேடித் திரிந்ததுண்டு…
அந்தத் தேன்சிட்டைப் பிடித்துவர…
பலமுறை தவறவிட்ட சோகம் வெறுப்பாய் மாறுவதற்குள் பரிசாய் வாங்கி வந்தார் அப்பா…
பலதரப்பட்ட முயற்சிகள் முன்னெடுப்புகள்…
அந்தப் பறவைகளை என் சொல்லபடி நடத்த…பல பிரயத்தனங்கள்…
கிளியொன்றைப் பிடித்து வந்த மாமா…
பழுத்த மிளகாய் தந்து பேச வைத்தார்…
அம்மா அம்மா
என்று மட்டுமே
அழகாய் அழைத்தது…
தேன் சிட்டு வந்த போது மட்டும் ஏனோ ஐய்யோ ஐய்யோ
என்றது… சொல்லாதே என அதட்டினேன்…
இரவு உறங்குமுன் அம்மாவும் அப்பாவும் ஆழ்ந்த யோசனையில்…நான் பேசுவதைக் கேட்க ஏனோ யாரும் தயாராய் இல்லை…
அடுத்த நாள் காலையிலே ஏதோ பரபரப்பு…
ஊரடங்காம் ஒத்திவைப்பாம்
முகக்கவசம்,
தனிமைப்படுத்தல்,
கசாயம்,குடிநீர்
என்னதான் சொல்கிறார்கள் ஏனிந்த பதற்றமென
பரிதாபமாய்ப் பார்த்தேன்…
ஆளுக்கொரு அரைகுறை வைத்தியம் சொல்ல அம்மாவும் தந்தாள்…
கசப்பாய் ,புளிப்பாய்,
இனிப்பாய்…
இப்போது என் தெரு அடைப்பாம்…யாரோ காவலுக்கு நிற்க …நிசப்தம் நிரந்தரமாய் இருந்தது…கதவோரம் போனாலே திட்டுகிறாள் அம்மா…தெருவில் யாருமில்லை…தெருவேயில்லை…
தனித்தே இருக்கையில் அம்மா அம்மா என் கிளியோடு பேசலானேன்…
தேன்சிட்டு இப்போது
குஞ்சுகளோடு கூட்டில்…
இரவு நேரத்தில் மாடியில் உறங்கவும் வானை ரசிக்கவும் பழகினோம்…
வலசை போகிற பறவைகள் என் வீடு கடந்து பறந்தன…
அப்பாவின் அறிவு கொஞ்சம் என் கேள்விகளின் பதிலாய் வரும்…சில வேளைகளில் கோபமாய்…பறவையை வானை ரசித்த எனக்கு இன்று ஏதோ தனிமை வெறுமையைத் தந்தது…
அம்மா அம்மா என்றழைத்த கிளி தன் கூட்டிலேயே மூச்சையும் விட்டது…ஓடோடி திறந்துவிட்டேன் தேன் சிட்டை…பறத்தல் அதன் சுதந்திரம் என்றே…
கவிமுகில் அனு