Community

சிறுகதை-தையல் சொல் கேள்

தையல் சொல் கேள்

அனு…அனு…
எப்பவும் உன்னாலதா எனக்கு லேட் ஆகுது…
இப்படியே போனா நா லேட் ஆயிடுவேன் பாத்துக்க.
ஏங்க காலங்காத்தால ஏ இப்படி அப சகுனமாப் பேசுறீங்க? ச்ச…கேக்கவே சங்கடமா இருக்கு.
அப்பறமென்ன உன்னக் கொஞ்சச் சொல்றியா?
9 மணிக்கு எனக்கு பன்ச்சிங் டைம்.5 நிமிசத்துல மகாராணி நீங்க போயிருவீங்க.! எனக்கு அப்படியா? 1 ஹவர் ஆகும்.
என் வாழ்க்கை வண்டி ஓட்டியே முடிஞ்சுடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு…
சுரேஷ் ப்ளீஸ் ஸ்டாப் த நான் சென்ஸ்….
இருவரின் உரையாடலில் வாழ்க்கைக்கான ஏதோ ஓர் தேடல் மெல்ல நகர்வதை உற்று நோக்கியபடியே மௌனியாய் சூர்யா…
வண்டி அந்தத் தெருமுனைப் பள்ளிக்கூடத்தில் நின்றதும் அம்மா அப்பா பாய் பாய் ஈவினிங் சீக்கிரமா வாங்க என்றபடியே பள்ளியின் கதவுகளுக்கிடையே சீருடைகளில் கலந்துவிட….இருவரும் புறப்பட்டனர்.
எனக்கு நம்ம அப்பு வளர்ந்துட்டான்கிறத இன்னமும் நம்பவே முடியல என்ற அனுவிடம்….ம் என்றான் சுரேஷ்.
‘புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்’ என்ற அப்துல் ரகுமான் அவர்களோட கவித தா ஞாபகம் வருது….ம்…ம்… மறுபடியும் ம்…ம்… ஆ
சரி. நா போயிட்டு வரேன்…என்றபடி வண்டியிலிருந்து இறங்கி வானொலி நிலையத்தினுள் பிரவேசித்தாள் அனு.
சாயங்காலம் முன்னாடியே வந்து நில்லு லேட் ஆச்சு…சிடு சிடுவெனக் கூறிவிட்டு வண்டியைக் கிளப்பினான் சுரேஷ்…. பாவமாய்ப் பார்த்தாள் அனு.
பயணத்தின் நடுவே யோசனை பலமாக….ஒரு பெருமூச்சு விட்டபடி தனியே பேசத் தொடங்கினான்…
அவளப்பத்தி நாம யோசிக்கிறதே இல்ல. அவளும் நாமதா கதின்னு இருக்கா…
வாழும் போது சந்தேகப்பட்டு கரிச்சுக் கொட்டிட்டு…இல்லாத போது ஏங்குற அண்ணனப் பாத்தும் நமக்கு புத்தி வரலன்னா என்னத்த சொல்ல?
வாய் திறந்து அது வேணு. இது வேணும்னு கூடக் கேக்றதில்ல.நாம வாங்கித்தர்றது எதுன்னாலும் சந்தோசமா வாங்கிக்கிறா.என்ன மனுசி இவ? ஆபீஸ்ல அவதா கிங்…காலேஜ் படிக்கும் போது அவதா எல்லாத்துலயும் ஃப்ஸ்ட்…அப்புறம் எப்படி இந்தப் பொண்ணுங்க இப்படி மாற முடியுது?
நாம கொஞ்சம் மாறனும் என்றெண்ணியபடியே அலுவலகத்தின் உள் நுழைந்தான்.
குட்மார்னிங் சார்….
என்ற பட்டம்மா பாட்டி தான் கொண்டுவந்த ஃப்ளாஸ்க்கை மேசை மீது வைத்துவிட்டு சார் நா மத்தியானம் கொஞ்சம் லீவு போட்டுக்கவா? என்று கேட்டாள்.
ஏம்மா…எதுக்கு இத்தன லீவு போடறீங்க? என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டான் சுரேஷ்.
கோவிச்சுக்காதிங்க தம்பி என் பொண்ணுக்குத் தலப் பிரசவம் ஜி.ஹெச் ல சேத்திட்டு வந்தேன்.
அதா…. என்றிழுத்தவளை என்னம்மா சொல்றீங்க!! போங்க போயி பொண்ணப்பாருங்க என்று சொல்லிக்கொண்டே சட்டைப்பையிலிருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கையில் கொடுத்து கிளம்புங்கம்மா என்றவனை நீங்க நல்லா இருப்பீங்க என்று கண்ணீர் மல்க வாழ்த்தினாள் பட்டம்மா பாட்டி.
தாமு கம்பெனி வண்டில அம்மாவ ஜி.ஹெச் ல கொண்டு போய் விட்ரு என்றான்.
இருவரும் புறப்பட…
ரேடியோவை ஆன் செய்தான்.
இன்று உலக மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சிகளை உங்களுக்காய்த் தொகுத்து வழங்க இதோ உங்கள் பிரியமான தோழி அனு உங்களுடன் இணைகிறேன் என்ற குரல்… அட அனு தா… என்ன சொல்றா கேப்போம் என்றபடி சீட்டில் அமர்ந்தான்….
பெண் முதல்வருடன்,பாடகிகளுடன்,நடிகைகளுடன் என அந்த இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை அவனுக்கு….
இன்று அவளிடம் கேட்டே தீர வேண்டுமென முடிவு செய்தான்….
இடையே பட்டம்மா அலைபேசியில் பெண் குழந்தை பிறந்த சேதியையும் சொன்னாள்…பெண்ணா…என்றவனிடம் ஆணென்ன சார் பெண்ணென்ன சார் எல்லாமே இன்னிக்குச் சரியாத்தாம் போச்சு என்ற அவளது பெருமிதமான பதில் சுரேஷுக்கு…ஏதேதோ மேதைகளை நினைவூட்டியது….
உண்டான சந்தேகங்களை மார்பில் சுமந்தபடி அனுவின் வருகைக்காய் வானொலி நிலையத்தின் வாயில் காவலனாய்க் காத்துக்கிடந்தவனை நோக்கி ஓடோடி வந்தால் அனு…அவள் முகத்தில் ஒரு பதட்டம்…ஏய் ஏய்…பாத்து வா என்றான்…
சாரிங்க…
நீங்க வந்து ரொம்ப நேரமாச்சா….சாரி…சாரி….சாரி என்றாள் அனு.
அட…. அத விடு அனு….ரிலாக்ஸ் என்றான் சுரேஷ்…
சரி ஒரு கப் டீ சாப்பிடலாமா? நீயு டையர்டா இருப்ப என்றான்.
ம்ம்ம் போலாமே என்றவள்….
என்ன சார் இன்கிரிமென்ட்,இன்சென்ட்டிவ் ஏதாச்சும் உங்க ஆஃபிஸ்ல குடுத்துட்டாங்க போல என்றாள்.
சிரித்தபடி ஏ நீ வேற காமெடி பன்ற என்றவன்…அனு உங்கிட்ட ஒன்னு கேப்ப மறைக்காம சொல்லுவியா…
டீ குரல்வளையைத் தாண்டுவதை திடுக்கென நிறுத்தியவளாய் என்னங்க பிரச்சன நா ஏதாவது தப்புப் பன்னிட்டேனா? என்று தயங்கினாள்…
ஏய் என்ன இது நீ என்ன பன்ன…நாந்தா உனக்கு எதுவு பன்னல…
உன்னோட வலிகளை உன்னோட திறமையை உன்னோட விருப்பத்தை எதையுமே காது கொடுத்துக் கேக்கல…
எதுவும் புரியாதவள் போல மடத்தனமான ஒரு பார்வையைப் பார்த்தாள் அனு.
என்னங்க ஜூரம் ஏதாச்சும்….
கிண்டலடிக்காத அனு.
சொல்லுங்க என்ன தெரிஞ்சுக்கனு உங்களுக்கு?
அனு நீ இத்தன திறமைகளையும் வெச்சுகிட்டு ஒன்னு தெரியாத மாதிரி அடக்கம்,பெண்மை,பொறுப்பு,பண்பாடுன்னு ஏ வாழனு???
எங்க பிரச்சினையே நீங்கதாங்க…எங்கள பாதுகாக்கிறோம்கிற பேர்ல…நீங்க பலமாயிடறீங்க…எங்கள நாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியாம வெச்சிடுறீங்க…
பறவைகள் கூட குஞ்சுகளுக்கு சிறகு விரிக்கச் சொல்லித்தருமே தவிர எப்பொழுதும் கூடவே நா இருப்பேன்…உனக்கு காவல் நாந்தான்னு டைலாக் பேசாது…
இவ்வளவு ஏ வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில்லை…கேட்டா வாஷிங் மெசின்,கிரைண்டர்,மிக்‌ஷி வாங்கிக் கொடுப்பதே எங்களுக்கு நீங்க கொடுக்குற வரம் போல பேசுவீங்க…
எத்தனை வேலைகளுக்கிடையேவும் உங்ககிட்ட நாங்க சந்தோஷமாப் பேசணும்…நீங்க மனைவி பேசறத காது கொடுத்துக்கூடக் கேட்பதில்லை…
அவளுக்குப் பிடித்த கவிதை எது? ஹீரோ யாரு? அவளோட ஆசையென்ன இதெல்லாம் தெரிஞ்சுக்கக் கூட நேரமில்லை…
நிகழ்காலத்துல வாழாம எதிர்காலத்துல யாரு வாழுவா?..நம்ம பிள்ளைகளா?.. அவங்க வாழ்க்கையை எப்போ அவங்க வாழறது?..
உண்மைதா அனு…சொல்லு நா எப்படி இருக்கனும்னு நீ ஆசப்படற ? சொல்லு
என்றவனை வாஞ்ஜையோடு பார்த்துச் சொன்னாள் அனு….சொல்லு என்று எதிர் தரப்பின் வாதத்தைக் கேட்கத் தயாரான இதோ இந்த சுரேஷா வாழுங்க அதுவே போதும்….
டீ கடை ரேடியோ சிணுங்கியபடியே “ ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினந்தான்” என்றொலித்தது….
……………………………….முற்றும்……………………………………………….
முனைவர் கவிமுகில் அனு

1 Like