Community

பெண்ணா ? ஆண்ணா?

சேலத்தின் வட்டாரத்தில் உள்ள ஒரு ஏற்காடு எஸ்டேட்டின் பண்ணை வீட்டிலிருந்து கலகலப்பான சிரிப்புச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறது. அச்சச்சத்தின் சொந்தக்காரர்களாக ஒரு வயதான தம்பதியர், அவர்களுக்கு மகன் வயதில் இரண்டு பெயரும் , மருமகள் மட்டுமின்றி மகள்களாகவும் திகழும் இரண்டு பெண்களும் இருந்தனர்; சுருக்கமாக ஒரு அழகான குடும்பம்.
அதில், ஒரு இளம்பெண் , அழகான மேடிட்ட வயிறுடன் ஒரு தாயின் முகப்பொழிவுடன் சிறித்துக்கொண்டிருந்தாள். அந்தக் கலகல்ப்பானச் சூழலில் திடீரென்று ஒரு கேள்வி எழுந்தது. அந்த மேடிட்ட பெண்ணின் கணவனாகிய தரண், “அம்மு, உனக்கு என்ன கொழந்தை வேணும்? ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா?”. அப்பெண்ணோ , சிறு வெக்கம் கலந்த சிரிப்புடன் " எனக்கு எந்தக் குழந்தைனாலும் சந்தோசம் தான் மாமா. என் பட்டுக்குட்டி சீக்கிரமா என் கைல தவழ்ந்து விளையாடின போதும் மாமா “. அதற்கு மற்றோரு இளைஞனான விக்ரமோ , " என்ன அண்ணி நீங்க இப்படி சொல்லிடீங்க ? எனக்கு ஒரு அழகான குட்டி பையன் தான் வேணும் அண்ணி. அப்போ தான் எனக்கு தெரிஞ்ச எல்லா வித்தையும் கத்துக் கொடுத்து, என் செல்லத்தை நல்ல கம்பீரமான தைரியமான பையனா வழக்க முடியும் “. விக்ரம் சொல்லி முடிக்கும் போதே மற்றோரு இளம் பெண்ணான கீர்த்தி , கண்களில் ஒரு மெல்லிய கோபத்துடனும் கர்வத்தோடும் விக்ரமை நோக்கி , " அதென்ன ஆண்களால் தான் கம்பீரமாக தைரியமாக வாழ முடியுமா? பெண்களால் முடியாதா ? எத்தனை கண்ணியமான கர்வமான பெண்ணைகளை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும்?” என்று கூறியவாறு தன் இரு புருவங்களை உயர்த்தி , கைகளை நெஞ்சோடு கட்டியவாறு கேட்டாள். பிறகு, தன் அக்காவை நோக்கி ,“அக்கா, எனக்கு குட்டி தேவதை தான் வேணும். நான் என் தேவதையை நல்லா தைரியமா வளத்திக் காமிக்கிறேன் அக்கா” என்று, சற்று திமிராகவே விக்ரமை நோக்கி கூறினாள்.
விக்ரமோ ஒரு கணம் அவளின் துணிச்சலைக் கண்டு அசந்தான். அவள் அறியாத வண்ணன் அவன் கண்கள் பெருமையில் மிதந்தன. அடுத்த கணமே அவளைச் சீண்டும் எண்ணத்தில் ஒரு கள்ளச் சிரிப்புடன் , " அண்ணி, பேசுறதுல லாம் உங்க தங்கச்சி மிச்சம் வைக்கிறது இல்லை; ஆனா, வீட்டில் ஒரு சிறிய கரப்பாண்பூச்சி பாத்த உடனே கத்த வேண்டியது. இதுக்கு என்ன பதில் சொல்வாங்க உங்க தங்கச்சி?” என்று கேட்டு விட்டு சிரிக்கத் துவங்கினான் . கூடவே விக்ரமின் அண்ணி, அண்ணண் இணைந்து சிரிக்கத் துவங்கினர். கீர்த்தி பாவமான முகத்தைக் கொண்டு தன் அப்பா , அம்மாவுக்கு இணையாகிய தன் வருங்கால மாமனார், மாமியாரை துணைக்கு அழைத்தாள்.
அவர்கள் உடனே விக்ரமைக் கடிந்துக் கொண்டு, " அமைதியா இருடா விக்ரம். என் செல்லத்தை ஏன் வம்புக்கு இழுக்கற?". பிறகு, கீர்த்தியிடம் திரும்பி கண்ணடித்து விட்டு " கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை ? இவன் இப்படித்தான் சும்மா ஒளறிட்டு இருப்பான் கண்ணு , கண்டுக்காத " என்று சிரித்து விட்டு , கர்பமா இருந்த தாரகையை நோக்கி " நீ உள்ள வாம்மா ; பனி பொழிய ஆரம்பிச்சிருச்சு, உடம்புக்கு நல்லது இல்லை " என்று கூறி வீட்டை நோக்கி நடந்தார்; கூடவே அவரது கணவரும் " இரு லட்சுமி , நானும் வரேன் " என்று விரைந்து விட்டார். தாரகையும் அவளின் அன்புக் கணவனுமாகிய தரணும் உள்ளே போக எழுந்தனர் . கூடவே, " நீங்களும் உள்ளே வாங்க விக்ரம்" என்றாள்.
விக்ரம் சுதாரித்து விட்டு அண்ணனை நோக்கி ஒரு கெஞ்சும் பார்வையை வீசி விட்டு , " இல்லை அண்ணி, நீங்க முன்னாடி போங்க நாங்க பின்னாடியே வரோம் " என்றான். தரண் சிரித்துக் கொண்டே " நீ வா தாரா நம்ம போவோம், அவங்க வந்துருவாங்க " என்றான். அவர்கள் சென்றதை உறுதி செய்து விட்டு , கீர்த்தி எதிர் பாரத வண்ணம் விக்ரம் அவளை இழுத்துத் தன் மேல் சாய்த்து பிடித்துக் கொண்டே, " என்னடி பதிலே காணோம் ?" என்றான் . அவள் அவன் கைகளை தள்ளி விட்டு முறைத்தக் கொண்டு , " நீங்க என்ன பெண் குழந்தை வேணா சொல்றீங்க? எல்லா தொழிலையும் பெண்கள் தைரியமா ஆளுமைத் திறனுடன் வேலை செய்து வெற்றி வாகை சூடுறாங்க. வீட்டிலும் செரி வெளிலையும் செரி , ஒரு பெண் தான் விட்டு கொடுத்து பொறுமையா …" கீர்த்தி முடிக்கும் முன்னரே அவளின் வாயை தன் கைகளைக் கொண்டு மூடி விட்ட விக்ரம் , " என்னடி நா சும்மா சொன்னதுக்கு இப்படி கோச்சிக்கிட்டு பேசுற ? நானே எப்போ டா தனியா பேசி ரொமான்ஸ் பண்ண டைம் கிடைக்கும்னு பாத்தா நீ இப்படி சொதப்புறியேடி? " கீர்த்தி வெக்கத்தில் சிரித்தாலும் அதை மறைத்துக்கொண்டு விக்ரம் எதிர்பாராத நேரத்தில் தன் வாயில் மேல் உள்ளே விக்கிரமின் கையைக் கடித்து விட்டாள். அவன் உடனே கைய எடுக்கவும் , கீர்த்தி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். மேலும், அவனை உசுப்பேத்தும் வகையில், " பாருயா ஆண் சிங்கத்தின் பலத்தை " என்று கேலி வேறு செய்தாள். தன் ஆண் சிங்கத்தை தட்டி எழுப்பிய கீர்த்தியை நோக்கி ஒரு ஆழ்ந்த பார்வை பாத்து வைத்தான். பிறகு, சடாரென்று வீட்டை நோக்கி திரும்பி நடக்க எத்தனித்தான். அதை உணர்ந்த கீர்த்தி சற்றும் யோசிக்காமல் ஓடி சென்று அவனை பின்னோக்கி கட்டிக் கொன்டாள். அவன் முகம் உடனே மலர்ந்து விட்டது. அப்டியே திரும்பி கீர்த்தியின் தலையில் ஒரு முத்தத்தை பதித்து விட்டு , " நானே உன்ன நிச்சியதாரத்துக்கு அப்புறம் இப்போ தான் பாக்குறேன். அதை புரிஞ்சிக்காம சும்மா சண்டை போட்ட எப்படிடி ? பாத்தாலும் தனியா பேச அஞ்சு நிமிஷம் கிடைக்கிறது இல்லை . அப்படி கிடைச்சாலும் நீ அதைக் கடிச்சி வெச்சு கெடுக்கற"என்று குறைபட்டுக்கொண்டான் . மேலும், " எனக்கு எப்போவுமே பொண்ணுங்க குறைவு என்ற எண்ணம் கிடையாதுடி. எல்லாருமே சாதிக்க முடியும் . ஆணும் பெண்ணும் என்றைக்கும் சமம் தான். நீ சொன்ன மாதிரி எப்போவுமே பெண் தான் அதிகம்மா விட்டும் கொடுப்பாங்க. நான் என்னைக்கு இல்லைனு சொன்னேன் ? ம்ம் ??" என்றான் அவளின் கண்களை நோக்கி. கீர்த்தி பெருமையாக அவனை பார்த்துக்கொண்டே " உங்களை மாதிரியே எல்லா ஆண்களும் யோசிச்ச நம்ம இந்திய எப்போவோ வல்லரசு ஆகி இருக்கும் " என்று சிரித்துக்கொண்டே , எட்டி அவனின் இதழ்களை நோக்கி முத்தம் கொடுத்தாள். உடனே பளிச்சிட்ட அவனின் கண்கள் " ஒன்னு தானா?" என்று விஷமமாகக் கேட்டான். அவளோ,“இதுவே அதிகம் நீங்க அப்படி என்னை சீண்டுனதுக்கு” என்று சிரித்தாள். விக்ரம் பாவமாக ஒரு முகத்தை வைத்துக்கொண்டு ," பரவால்லை , நான் உனக்கு நிறைய தரவா?" என்று கிசுகிசுத்தான். அவள் வெக்கத்துடன் , " ச்சீ…ச்சீ…போங்க … அம்மா அப்பா தேடுவாங்க … உள்ளே போகலாம் " என்றவாறு அவன் அணைப்பில் இருந்து விலகினாள். அவனும் ஒரு பெரு மூச்சி விட்டுவிட்டு " செரி வா போலாம் " என்றான். நடக்கும் போது " நீ சொன்னது ஒரு நாள் நடக்கும் பாருடி , எல்லாரும் பெண்கள் ஆண்களுக்கு சமம் னு புரிஞ்சி நடந்துப்பாங்க. அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்லை " என்று மனமார சொன்னான். கீர்த்தியும் மன நிறைவுடன் அவனை பார்த்து சிரித்தாள்.
இது போன்ற கருத்து பரிமாற்றங்கள் இருவருக்குள்ளும் எப்போதும் வருவது உண்டு. அவர்கள் அவரவரின் கருத்தை பகிர்ந்து விடுவார்கள்.

நம் கீர்த்தி விக்ரமை போல் எத்தனை பேர் இப்படி ஆண் பெண் சமம் என்று வாழ்கிறார்கள் ? இன்று கண்டிப்பாக அந்த நிலை இல்லை என்றாலும் ஒரு திருநாளில் அனைவரும் உணர என் மனமார்ந்த வேண்டுதல்கள்.