ஒத்த இரட்டையர்கள் போலவே
உங்களுக்கும் எனக்குமான வித்தியாசம் - சில மட்டுமே
…என்று ஆரம்பித்தான் திருடன்
நீங்கள் உங்களுக்கானதை வெளிச்சத்தில் தேடுகிறீர்கள்
நான் இருளில் தேடுகிறேன் அவ்வளவே
அதனால்
நான் நிலவின் ஒளியில் அகப்பட்டு விடுகிறேன்
நீங்கள் சூரியனின் பிரகாசத்தில் புலனாகாது விடுகிறீர்கள்
நான் கத்தியை ஏந்தி திருடுகிறேன்
நீங்கள் புத்தியை ஏந்தி திருடுகிறீர்கள்
நீங்கள் பேராசையின் பிடிப்புற்கு திருடுகிறீர்கள்
நான் வயிற்றின் துடிப்பிற்கு திருடுகிறேன்
நான் குடிசையின் ஒழுகலை அடைக்க திருடுகிறேன்
நீங்கள் வசதியின் பருமனை பெருக்க திருடுகிறீர்கள்
நான் திட்டத்தை பகுத்து திருடுகிறேன்
நீங்கள் சட்டத்தை வகுத்து திருடுகிறீர்கள்
நான் ஆயுதத்தை கொண்டு திருடுகிறேன்
நீங்கள் அதிகாரத்தை கொண்டு திருடுகிறீர்கள்
நான் உங்களின் நீதிக்கு பிடிபடுகிறேன்
நீங்கள் இயற்கையின் நீதிக்குள் பிடிபடுவீர்கள்
உன் பார்வைக்கு நான் எப்படி தெரிகிறேனோ
அட அற்ப மானிட
என் பார்வைக்கும் நீ அப்படித்தான் தெரிகிறாய்
…என்று முடித்தார் திருடர்
#withdrawEIA2020 #manidhamvidhaippom