Community

கண்கள் எனும் காந்தம்

ஒரு அழகான பனிமூடிய மலைப்பாதையில் சாதனா பயணித்துக் கொண்டு இருந்தாள். அது மலைகளின் அரசியாம் உதகமண்டலம் தான். அருகில் உள்ள சகத் தோழியோடு கதையளந்து கொண்டு இருந்தாள்.

“ஏண்டி சாது ஊட்டி செம குளிரா இருக்குல்ல” என்றாள் வினோதினி

“ம்ச்ச்ச் ஆமாடி” என்றாள் வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த சாதனா

“ஏண்டி சளிச்சுக்குற” என்றாள் வினோ

“அதா… இது மாதிரி ப்ளேஸ்க்கு என் பாய் ஃபிரெண்ட் கூட வந்தா நல்லாருக்கும். போயும் போய் உன் கூட வரேனேனு தான் கவலையா இருக்குடி” என்றாள் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு

“ஏன் சொல்ல மாட்ட. உன் பக்கத்துல வந்து உக்காந்தேன் பாரு என்ன சொல்லணும். ஆமா அம்மணிக்கு தான் லவ்வரே இல்லயே. அப்பறம் எங்க இருந்து சோடி போடுவீங்க” என்றாள் வினோ

“அதெல்லாம் அப்டியே ரோட்ல போற நல்ல அழகான பையனா பாத்துப் பேசி கரெக்ட் பண்ணிட வேண்டியது தான்” என்றாள் சாதனா

“அதுக்கு தான் விண்டோவ் சீட்க்கு அடம்பிடிச்சியா. சரியான கேடி. பேச்ச பாரு” என்றாள் வினோ

“ஈஈஈஈஈ அப்டியே இந்த ஊட்டி குளிருக்கு எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் இருந்தா கட்டிப் பிடிச்சுட்டு முத்தம் கொடுத்துட்டு” என்று சாதனா ரசனையோடு தொடர

“யம்மா ஆத்தா. போதும் நிறுத்து. நல்லா இருக்கறவளையும் சொறிஞ்சு விட்ருவ போல” என்று அவள் வாயை மூடினாள் வினோ

“டீடீ அப்டியே சூடா காஃபி குடிக்கணும்னு சொன்னேன்டி” என்றாள் வேற என்றாள் சாதனா

“ஓஓஓஓஓ” என்று நிம்மதி அடைந்தாள் வினோ

“நீ என்ன நினைச்ச” என்றாள் சாதனா

“ஒ… ஒன்னும் இல்லையே” என்று சாமாளித்தாள் வினோ

“ஆமா நீயும் தான் லவ்வர் வச்சிருக்கியே. அவன இழுத்துட்டு வர வேண்டி தான” என்றாள் சாதனா

“ஏன் எதுக்கு. நம்மாளலாம் சமாளிக்க முடியாது. நான் தனியா வந்ததுக்கே தான் ஒப்பாரி வைக்கிற. இதுல நாங்க ஜோடியா வந்தோம். உன் தொல்லை என்னால தாங்க முடியாது” என்றாள் வினோ

“நான் என்னடி பண்ண போறேன். நான் டீசண்ட்டா ஒதுங்கிப்பேன்” என்றாள் சாதனா

“நீ அப்டியே ஒரு வார்த்த தான் சொல்லுவ. உனக்கென்ன மச்சி ஜாலியா இருக்கனு… அதுவே கடப்பாரய எடுத்து காதுக்குள்ள விட்ட மாதிரி இருக்கும்” என்றாள் வினோ

“பே… குரங்கு” என்று திரும்பிக் கொண்டாள் சாதனா

இவர்கள் பயணிக்கும் பேருந்து மேல் ஏற மேலிருந்து பல வாகனங்கள் கீழே இறங்கிக் கொண்டு இருந்தது. பேருந்து ஒரு கட்டத்தில் நின்று விட காதுகளில் இயர்ஃபோன்களை எடுத்து மாட்டிக் கொண்டாள் சாதனா. காதுகளில் ‘நீயே சொல் உன் முத்தம் விழுந்து என் மோகம் அடங்குமா… நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா…’ என்ற பாடல் ஒலித்து அவள் தனிமையை அனலாக்க வேறு பாட்டை வைத்தாள்.

அடுத்தப் பாட்டாக ‘மாலை மங்கும் நேரம்… ஒரு மோகம் கண்ணின் ஓரம்… உன்னைப் பார்த்துக் கொண்டு நின்றாலே போதும் என்று தோன்றும்… மாலை வந்தால் என்ன… வெயில் எட்டிப் பார்த்தால் என்ன…’ என்று மோகத்தின் உட்சஸ்தாபத்தில் காதினுள் சங்கீதம் நுழைய “அடப் போங்கயா” என்று பாட்டை நிறுத்தினாள் சாதனா.

“ஏண்டி பாட்டு கேக்கலயா” என்று வினோ கேட்க

“மூட் சரி இல்ல” என்றாள் சாதனா

“அய்யா ஹெட்செட் கிடைச்சாச்சு” என்று அவளிடம் இருந்து பறித்துக் கொண்டாள் வினோ

“பக்கி பரதேசி” என்று சாதனா வசைகளைத் தொடந்து கொண்டு இருக்க செவி வழியை இயந்திரக் கருவியால் அடைத்தாள் வினோ

இப்போது வினோ “ஆரிய உதடுகள் உன்னது… திராவிட உதடுகள் என்னது… ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே…” என்று முணுமுணுக்க

“முண்டம் முண்டம் உனக்கு வேற பாட்டே கிடைக்கலயா. ஏற்கனவே இத்தன வயசாச்சே சிங்கிளாவே சாகப் போறோமானு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். இப்போ தான் வந்துட்டா” என்று டென்ஷனாகிக் கத்தினாள் சாதனா

“தெரியாம பாடிட்டேன்” என்று வாயை மூடிக் கொண்டாள் வினோ

இப்போது பேருந்து முன்னேறத் துவங்கா இருந்தது. அப்போது தான் மேலிருந்து ஒரு இளைஞன் பைக்கில் கீழே இறங்கிக் கொண்டு இருந்தான். கொண்டை ஊசி வளைவு அவர்களை அருகருகே வைத்தது. வினோ ஹெல்மெட் போட்டிருந்த அவனையே ஒரு நிமிடம் பார்த்திருக்க, அவனும் அந்த காந்த சக்தியின் விளைவாக அவனது இடப்புறமாகத் திரும்பிப் பார்த்தான். இரு ஜோடி கண்களும் ஒன்றையொன்று இமைக்காமல் பார்த்தது.

அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது. சொல்ல முடியா வார்த்தைகளால் நிரம்பி இருந்தது. நெருங்க முடியா தருணங்களால் கருப்பு வெள்ளை வண்ணமிடப் பட்டு இருந்தது. சில நொடிகள் பேருந்து மேலாநோக்கியும் அவனது இருசக்கர வாகனம் கீழ்நோக்கியும் நகர்ந்தது. அது காலத்தின் கட்டாயம் யாராலும் மாற்றுவதற்கில்லை. இவ்வாறு அழகான நிமிடங்களாலும் ருசியான மனிதர்களாலும் ஒப்பற்கரிய இயற்கையாலும் நிரம்பிய இதானே வாழ்க்கை.

சாதனா கண்களை மூடி அவனது பார்வையை கண்களுள் சிறையெடுத்துக் கொண்டாள். இந்த ஊட்டி குளிரினாலும் இனி அவளது உள்ளத்தைச் சீண்டி விளையாட முடியாது. உடலால் நெருங்கி இருப்பது மட்டும் காதலில்லை. இது போல் ஒரு விநாடி பார்வையில் அன்பைப் பரிமாற்றுவது தான் காதல். அப்படிப் பட்ட ஒருவன் வரும் வரை சாதனா காத்திருக்கத் தாயாரானாள். இப்போது வினோ “காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னும் காணும் வரை உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்” என்று தன்னையும் மறந்து பாடிக் கொண்டு இருந்தாள்.

1 Like

Vegulithanamaa irukku kadhai… vaazhthukal

1 Like