Community

வேண்டியது கொழுக்கட்டை .... ஆனால் கிடைத்தது....?

கொழுக்கட்டை

சனிக்கிழமை விடுமுறையை மகிழ்ச்சியாக செலவழிக்கலாம் என்ற ஆசையிலிருந்த திவ்யாவிற்கு அன்று ஏமாற்றமே மிஞ்சியது. இரு கன்னங்களிலும் கை வைத்துக்கொண்டு அடி வாங்கி அழுது வீங்கிய கண்களுடன் வீட்டின் உள் முற்றத்தில் அமர்ந்திருந்தாள்.
" ஏட்டி… இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி கப்பல் கவுந்து போன மாதிரி கன்னத்துல கை வச்சிட்டு உக்காந்துட்டு இருக்க…? வா… வந்து சாப்பிடு…" சற்று கோபத்துடன் அழைத்த அம்மாவை சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தாள் திவ்யா .
" இப்ப நீ வரப்பொறியா இல்ல மறுபடியும் அடி வங்குறியா.? " மறுபடியும் அழைத்த அம்மாவிற்கு பதிலுரைத்தாள் திவ்யா, " எனக்கு ஒன்னும் சோறு வேண்டாம்… நீங்களே நல்லா சாப்பிடுங்க… எனக்கு கொழுக்கட்டை தான் வேணும் . கொழுக்கட்டை செஞ்சி தந்தா தான் சாப்டுவேன் என்று கூறிவிட்டு கிளியுடன் பேசி விளையாடினான் திவ்யா.
“இன்னைக்கு ஏன் உன்ன இப்பிடி இந்த கொழுக்கட்ட மேல் ஏவி விட்டுருக்கு.”
“எனக்கு வேணும் அவ்ளோதான்”
“அப்ப நீ சாப்டவே வேண்டாம் இப்டியே பட்டினி கெட” என்று கூறிவிட்டு வேறு வேலைகளைக் கவனிக்க அம்மா சென்று விட்டாள்.
திவ்யாவிற்கு கொழுக்கட்டை என்றால் கொள்ளை பிரியம் தான், அதுவும் அவள் அம்மா சர்க்கரை சேர்க்காமல் செய்து கொடுக்கும் பிடி கொழுக்கட்டை தான் அவளுக்கு உயிர்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் திவ்யா நேற்று பள்ளியில் அவள் வகுப்பு தோழி ஒருத்தி வைத்திருந்த கொழுக்கட்டையை பார்த்து வந்த ஆசையால் தான் இன்று இவ்வளவும் நடந்தேரியிருக்கிறது. வெள்ளிக்கிழமை பள்ளியிலிருந்து வந்த உடனேயே ஆரம்பித்துவிட்டாள்.
“அம்மா… அம்மா…”
“என்னட்டி…” என்று பதறியவாறே வெளிப்பட்டாள் அம்மா.
“அம்மா… எனக்கு கொழுக்கட்டை வேணும் அதுவும் சீனி,கருப்பட்டி போடாம, தேங்கா பூ போட்டு கையில பிடிச்சி செஞ்சி தருவல்ல,அந்த கொழுக்கட்டை வேணும்.செஞ்சி தாம்மா…”
“என்ன இன்னைக்கு கொழுக்கட்டை மேல அவ்ளோ ஆச”
“அந்த ரென்ஸி இருக்கால்ல… அவ ஸ்கூல்க்கு கொண்டு வந்தா இன்னைக்கு கொழுக்கட்டை… என்கூட சண்டை போட்ட சுனிதா கூட சேர்ந்து கிட்டு எனக்கு காட்டி காட்டி சாப்பிட்டாங்க.எனக்கு ஒரே ஆசையா ஆயிடுச்சுமா… செஞ்சி தாம்மா…” சற்று கெஞ்சலாகவே கூறினாள்.
“சரி.அம்மாக்கு இன்னைக்கு நெறய வேல இருக்கு.நாளைக்கு லீவு தான.நாளைக்கு எம்பிள்ளைக்கு செஞ்சி தாரேன்…சரியா…” அம்மா அவள் நெற்றியில் முத்தமிட்டவாறே கூறினாள்.
திவ்யாவும் நாளை கொழுக்கட்டை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விளையாடச் சென்று விட்டாள்.
கொழுக்கட்டையை எதிர்பார்த்தவாரே இரவில் நன்கு உறங்கிப் போனால்.காலையில் எழுந்தவுடன் “அம்மா…‌… கொழுக்கட்டை செஞ்சிட்டியா… எங்க இருக்கு?” என்று கேட்டவாறே அடுப்பங்கரை முழுக்க ஒவ்வொரு பாத்திரமாக தேடினாள்.ஏமாற்றமே மிஞ்சியது.வருத்தமும் ஏக்கமும் நிறைந்த முகத்துடன் அம்மாவிடம் ஓடி வந்து “அம்மா ஏம்மா இன்னும் கொழுக்கட்டை செய்யல செஞ்சி தாம்மா… எப்போ செஞ்சி தருவ” என்று நச்சரிக்க தொடங்கினாள்.
அவள் நச்சரிப்பில் அம்மாவிற்கு கோபமும் எரிச்சலும் வந்து அவளை அடித்து விட்டார்.எனவே தான் அழுத கண்களுடன் அமர்ந்திருந்தாள் திவ்யா.
அம்மாவிற்கு கொழுக்கட்டை செய்து கொடுக்க ஆசை தான்.செய்யலாம் என்று பச்சரிசி பாத்திரத்தை எடுத்த போது தான் ஞாபகம் வந்தது பச்சரிசி தீர்ந்து போனது என்று.சரி இன்னொரு நாள் செய்து கொடுக்கலாம் என்றால் திவ்யாவின் அடம் தாங்க முடியவில்லை.
அவளை முறைத்து பார்த்துவிட்டே கடந்து சென்று தனது மகன் ஜீவாவை அழைத்தார்.அவன் மட்டைப்பந்து விளையாட ஓடைப் பக்கமுள்ள தோட்டத்ற்கு சென்று விட்டதாக அவனது நண்பன் பென்னி கூறினான்.அவனிடம் ரைஸ்மி போய் பச்சை நெல்லை குத்தி பச்சரிசி வாங்கி வரச் சொல்லலாம் என்று நினைத்திருந்த அம்மாவிற்கு எரிச்சல் உண்டானது.அவனை அழைத்து வரும்படி பென்னியிடம் கூறினாள்.அரை மணி நேரம் காத்திருந்தாள்.அழைத்து வரச்சென்ற பென்னியும்‌ வரவில்லை.அவனும் அவர்களுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருப்பான் என்பது அம்மாவிற்கு நன்றாகவே புரிந்தது.நல்ல வேலையாக பக்கத்து வீட்டு ஜாக்சன் கண்ணில் பட்டான்.அவன் தனது மிதி வண்டியில் ஒரு மூடையை கட்டிக்கொண்டிருந்தான்.பக்கத்தில் சென்று என்ன என்று விசாரித்தாள்.அவனது அம்மா சரோஜா,
“நெல்லு அவிச்சு காய போட்டிருந்தேன் சரியா இன்னைக்கு அரிசியும் தீந்து போச்சி அதான் ரைஸ்மில்லுக்கு போகச் சொன்னேன்” என்று கூறினார்.
“எனக்கும் நெல்லு குத்தனும். எங்க வீட்டு பயல தேடினா ஆளயே காணும்.சின்னவா வேர வேணும்னு நிலையா நிக்குறா‌.”
உடனே ஜாக்சன் “பெரியம்மா,நான் வேணும்னா அவள கூட்டிட்டு போறேன்.அவகிட்ட குடுத்து விடுங்க” என்று கூறினான்.
“சரிப்பா,இப்பவே குடுத்து விடுறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட திவ்யாவின் அம்மா, ஐந்து பக்கா நெல்லை ஒரு பையில் போட்டு கட்டி திவ்யாவின் மிதிவண்டியில் பையைக் கட்டினார்.
“ஏட்டி… ஜாக்சன் அண்ணே ரைஸ்மில்லுக்கு தான் போரான்.நீயும் அவன் கூட போய் இந்த நெல்ல குத்திட்டு வா.சாயங்காலம் கொழுக்கட்டை செஞ்சி தாரேன்.” கூறியது தான் தாமதம்.உடனே திவ்யாவின் முகம் நூறு வாட்ஸ் பல்ப் மாதிரி பிரகாசம் ஆனது. “சரிம்மா” என்று கூறி உற்சாகமாய்க் கிளம்பினாள்.
திவ்யாவிடம் நெல்லு குத்த கூலி முப்பது ரூபாய் கொடுத்துவிட்டு " பாத்து கவனமா போணும் சரியா. வண்டி ஏதாச்சும் வந்தா இறங்கி நின்னு வண்டி போன அப்புறம் சைக்கிள் மிதிச்சி போ சரியா" என்று சில அறிவுரைகளைக் கூறினார்.
ஜாக்சனிடமும் " அவள கொஞ்சம் பாத்துக்கப்பா. அவள முன்னாடி விட்டு நீ பின்னாடி போ. மெதுவாவே போங்க" என்று கூறி வைத்தாள்.
திவ்யாவி்ற்கு இரட்டை சந்தோஷம். ஒன்று கொழுக்கட்டை கிடைக்கும். மற்றொன்று மிதிவண்டிப் பயணம். பக்கத்து ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவு மிதிவண்டிப் பயணம் என்பது அவளைப் பேரானந்தம் கொள்ளச் செய்தது. மூன்றாம் வகுப்பிலேயே தானாகவே மிதிவண்டி மிதிக்கப் பழகி விட்டாள் திவ்யா. இது தான் முதன்முறை தொலைதூர பயணம் மிதிவண்டியில்.
இருவரும் புறப்பட்டாயிற்று. அதுவரை பேருந்து பயணத்தின்போது பார்த்த இடங்கள் தற்போது மிதிவண்டிப் பயணத்தில் வித்தியாசமாக தெரிந்தது. ஊர் எல்லையில் இருக்கும் பள்ளியில் இன்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அதைப் பார்த்து நகைத்தபடியே சென்று கொண்டிருந்தாள் . ஜாக்சன் அண்ணன் எவ்வளவு தூரத்தில் வருகிறான் என்பதைப் பார்க்க ஆவல் கொண்டு பின்னிட்டுத் திரும்பினாள். ஜாக்சன் அண்ணன் முறைத்தபடி " முன்னாடி பாத்துப் போ " என்று சைகை காட்டினான். அதையும் ரசித்தவாறே பயணப்பட்டாள். ரைஸ்மிலை நெருங்கும்போது ஜாக்சன் திவ்யாவி்ற்கு முன்சென்று வழிகாட்டியாய் சென்றான்.இடம் வந்ததும் இறங்கி அவள் மிதிவண்டியில் இருந்து பையை எடுத்துக் கொண்டு உள்ளே போனான் .
அங்கே அலுவலக அறையில் பெரிய மீசையுடன் , வெள்ளை வேட்டி சட்டையுடன் பருமனான மனிதர் அமர்ந்திருந்தார் . ஐந்து பக்கா பச்சரிசி என்று கூறி பையை வைத்தான். இயந்திர அறையில் இருக்கும் நபர் வந்து அதை எடுத்துக் கொண்டு போய் இயந்திரத்தில் போட்டார். பின், தன் மிதிவண்டியில் இருந்த மூடையை இறக்கினான் ஜாக்சன். அதற்குள் பச்சரிசி தயார் ஆனது. புழுங்கல் அரிசி , இருபத்தைந்து கிலோ என்று தன் மூடையை வைத்துவிட்டு திவ்யாவின் பையை அவள் மிதிவண்டியில் காட்டினான்.
திவ்யாவி்ற்கு அந்த ஆளைப் பார்க்க சற்று பயமாகவே இருந்தது. அவர் திவ்யாவையே கூர்மையாகப் பார்த்தார் . அவள் ஜாக்சன் அண்ணன் பின்னால் போய் மறைந்தாள். அவர் திவ்யாவிடம் ,
" ஓய் … உன் பேரு என்ன…? " என்று விசாரித்தார்.
“திவ்யா” அவள் பயந்து கொண்டே பதிலளித்தாள்.
அவர் இன்னும் கூர்மையாக பார்த்துவிட்டு " நீ நாடாச்சியா ?" என்று கேட்டார்.
அவள் " நான் திவ்யா " என்றாள்.
ஜாக்சன் அவளிடம் " அவரு உன் ஜாதிய கேக்காரு" என்றான்.
" ஜாதியா…? அது என்னது ??" என்றாள் புரியாதவளாக.
ஜாக்சனுக்கும் எப்படி திவ்யாவி்ற்கு விவரிக்க என்று தெரியவில்லை. உடனே அந்த பருமனான ஆள் " உங்க அப்பா பேர் என்ன ?" என்றார்.
“ஆசீர்வாதம்” என்றாள் திவ்யா.
" சரி உங்க தாத்தா பேர் என்ன ? " என்று கேட்டார் மறுபடியும்.
அவள் சற்றும் தயங்காமல் " பரமானந்தம் நாடார் " என்று கூறினாள்.
“ஜாதின்னா என்னன்னு கேட்ட . இப்போ உன் தாத்தா பேர் கூட ஜாதி பேரையும் சேர்த்து சொல்லுற.” என்று சிரித்தார்.
" அது என் தாத்தா பேரு தான்"
" உன் தாத்தா பேரு பரமானந்தம் மட்டும் தான். நாடார்ங்குறது உன் ஜாதி பேரு" என்று அவர் கூறிய பிறகே திவ்யா, நாடார் என்பது ஜாதியின் பெயர் என்பதைத் தெரிந்து கொண்டாள்.
ஒன்றும் பேசாமல் அமைதியாய் நின்றாள் திவ்யா. ஜாக்சனுக்கும் அரிசி தயாராகி விட்டது. பணத்தை கொடுத்து விட்டு இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர்.
வீட்டிலிருந்து வரும்போது ரசித்த எதுவும் இப்போது திவ்யாவின் கண்களுக்கு தெரியவில்லை. அவள் மனதில் அந்த பருமனான நபர் கூறியதே ஓடிக்கொண்டிருந்தது. குழப்பமாயும் இருந்தது. "ஏன் தாத்தா பெயருக்குப் பின்னால் ஜாதி பெயரையும் இணைத்து சொல்லிக் கொடுத்தார்கள்? எல்லாருடைய தாத்தா பெயருக்குப் பின்னாலும் இப்படி ஜாதி பெயர் இருக்குமா? ஜாதி அவ்வளவு முக்கியமா? நாம் நாடாச்சி என்றால் ஜாக்சன் அண்ணன் யார்? " என்றெல்லாம் பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தது.
வீட்டிற்கு வந்ததும் பச்சரிசியை அம்மாவிடம் கொடுத்து விட்டு எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்று விட்டாள். அன்று விளையாடச் செல்லவுமில்லை திவ்யா. அவள் முழிப்பதற்குள் கொழுக்கட்டை செய்து கொடுக்க வேண்டும் என்று அம்மா வேலையில் மும்முரமானாள். பச்சரிசியை ஊற வைத்து, பின் காய வைத்து வீட்டிலேயே அரைத்து திவ்யாவிற்கு பிடித்த மாதிரி தேங்காய்ப்பூ சேர்ந்தது இனிப்பு சேர்க்காமல் கொழுக்கட்டை செய்து வைத்தாள் அம்மா. உறங்கிக் கொண்டிருந்த திவ்யாவை எழுப்பும் போது மணி நான்கரை ஆகியிருந்தது.
"திவ்யா மக்களே… எழும்பு… பாரு உனக்கு பிடிச்ச கொழுக்கட்ட வந்து சாப்பிடு வா மக்களே… " என்று எழுப்பினாள்.
எந்த ஆரவாரமும் இன்றி எழுந்த திவ்யா உடல் உபாதைகளை கழித்துவிட்டு,முகம் கழுவி பிரகாசமான முகத்துடன் வந்தாள். ஆனால் அவள் முகத்தில் கொழுக்கட்டை கிடைத்த சந்தோஷம் இல்லை.
“இந்தா…சாப்பிடு” என்று ஒரு கிண்ணத்தில் ஐந்தாறு கொழுக்கட்டையை வைத்துக் கொடுத்தாள் அம்மா.
திவ்யா கொழுக்கட்டையைக் கையில் வைத்துக் கொண்டு அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். திவ்யாவின் அம்மா அவளை கையில் தட்டி.,
“கொழுக்கட்டைக்கு அந்த நெல நின்ன, இப்போ சாப்பிடாம இப்படி பாத்துட்ருக்க, சாப்பிடு” என்று அதட்டினாள்.
திவ்யாவிற்கு ரென்சி ஞாபகம் வந்தது. கொழுக்கட்டை சாப்பிடும் போது வந்த ரென்சி ஞாபகத்தில் ஒரு கேள்வியும் எழுந்தது, "ரென்சி நாடாச்சியா? " என்று.

எழுதியது…
நான்
தே. ஆக்னஸ் ஃபிரீடா

1 Like

Kuzhakattaikaaga yen kiliyudan pesa vendum? Ezhuthu pizhaigal niraiya ulladhu… nalla muyarchi… vaazhthukal

1 Like

Aval veettil irukum kiliyudan pesuvathil thavarillaye… …

Nantrii :pray:

1 Like

சிறந்த அனுபவ பகிர்வு

1 Like