Community

மனிதம் வெல்லும்!

அதோ அவன் நிற்கிறான். பல வருடங்களுக்கு முன் நாம் அவனை கண்டிருக்கலாம். கண்டும் காணாமல் சென்றிருக்கலாம். எதேச்சையாக அவனை சந்தித்த போது பார்த்து புன்னகைத்திருக்கலாம். எங்காவது பேசியிருக்கலாம்.

ஆனால் இப்போது அவன் தனியே இருக்கிறான். தன்னருகே யாரும் இல்லாமல் தனியாக நிற்கிறான். அருகில் மனிதர்கள் யாரும் இல்லாத உலகம். இந்த அனுபவம் அவனுக்கு ரொம்ப புதியதாக இருந்தது.

யாரிடம் போவது, என்ன பேசுவது, எவ்வாறு கேட்பது, எதுவும் புரியவில்லை. இனிமேல் நான் முன்பு போல் அனைவரிடமும் சகஜமாக பேச முடியாது, பழக முடியாது என்று நினைக்கும் போதே மனதிற்குள் ஏதோ செய்தது.

திடீரென்று காலை எழுந்து பார்த்தால் மனிதர்கள் யாரும் நம் அருகில் இருக்க கூடாது என்று பலமுறை நாம் நினைத்திருப்போம். நம்மை கண்டு கொள்ள கூடாது, நம்மிடம் வேலை சொல்ல கூடாது, தொந்தரவு செய்ய கூடாது என எண்ணியிருப்போம். ஏன், நம்மிடம் பேசவே கூடாது என கூட ஆசைப்பட்டிருப்போம். ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்படும் போது நிதர்சனம் வேறாக இருக்கிறது.

தூரத்தில் சில மனிதர்கள் நின்றிருந்தனர். அருகில் சென்று பேசலாமா என யோசித்தான். எங்கே தான் சென்று பேசினால் திட்டி விடுவார்களோ என பயந்தான். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என மனம் ஒரு புறம் சொன்னாலும் மற்றொரு புறம் மூளை அதனை கேட்பதாக இல்லை.

எல்லாம் நடந்து முடிந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. வீட்டில் நிலைமை இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக சரியாகி வருகிறது. இனிமேல் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என மனதுள் ஒரு சின்ன நம்பிக்கை.

இரண்டு மாதத்திற்கு முன்பு நிலைமையே வேறாக இருந்தது. வெகு விமரிசையாக நடந்து முடிந்த தன் குழந்தையின் பிறந்த நாளும், மனைவியுடன் கொண்டாடிய திருமண நாளும் நினைவிலே நிற்கின்றன. எவ்வுளவு இனிமையான நாட்கள்! அந்த நாட்களை மறுபடியும் கொண்டு வர முடிந்தால் எவ்வுளவு நன்றாக இருக்கும்!

ஆனால் இப்போது தான் எந்த கொண்டாட்டமும் இல்லை என்றாகி விட்டதே! கொண்டாட்டம் இல்லை என்பதை விட கொண்டாட்டம் தேவை இல்லை என்பதே சரியாக இருக்கும். இவ்வாறாக யோசித்து கொண்டிருக்கையில் மனம் பழைய நினைவுகளை அசை போட்டது.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாளில் இருந்து அவனும் பாதுகாப்பாக தான் இருந்தான். காலை இஞ்சி டீயில் ஆரம்பித்து இரவு கபசுர குடிநீர் வரை எல்லாவற்றையும் குடித்தான். கிருமிநாசினி, கை கழுவும் திரவம் என அனைத்தையும் வாங்கி அடுக்கினான்.

எல்லாம் சரியாகத்தான் செய்தான். வீட்டில் குழந்தை இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சற்று அதிகமாகவே இருந்தது. இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு நாள் கொரோனா வைரஸ் அவனையும் தாக்கியது.

அலுவலகம் ஷிப்ட் முறைப்படி செயல்படுவதால் அன்று காலை அவனும் இயல்பாக தான் கிளம்பி சென்றான். ஏதோ பக்கத்து பிரிவுல யாருக்கோ கொரொனாவாம் என்று எல்லாரும் சொல்லும் போதும் இயல்பாக தான் கேட்டான். எல்லாரையும் பரிசோதிக்கணுமாம் என்று சொன்ன போதும் இவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

சளி இல்லை, காய்ச்சல் இல்லை, இருமல், தும்மல், உடல் அலுப்பு இப்படி எதுவுமே இல்லை. சாதாரணமாக பரிசோதித்து கொண்டான். 3 நாட்கள் கழித்து முடிவு தெரிந்த போது, அவனை சுற்றி இருந்த மொத்த உலகமும் ஓரிரு நொடிகளில் உடைந்து போனது. ஆம், அவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

அறிகுறி அற்ற கொரோனாவாம். பெரிதாக பயப்பட தேவையில்லை என அனைவரும் கூறினர். வீட்டிலே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள், தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு வரலாம் என்று ஆலோசனை வேறு தந்திருந்தனர்.

வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வசதி ஏது? குழந்தை வேறு இருக்கிறது. வேறு வழியின்றி மருத்துவமனை சென்றான். 14 நாட்கள் அங்கு இருந்தான். வீடியோ காலில் பார்த்து பேசி, வீட்டிற்கு தேவையானவற்றை செய்ய முடியாமல் போய், தன் குழந்தையை கூட பார்க்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டான். ஓரு வழியாக எல்லாம் முடிந்தது என வந்து பார்த்தால், அப்போது தான் எல்லாமே ஆரம்பமாகி இருந்தது தெரிய வந்தது.

வீட்டு ஓனரில் ஆரம்பித்து பக்கத்து தெரு கடைக்காரர் வரை எல்லாருமே அவனை பார்த்த பார்வை மாறியிருந்தது. அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவருமே தன்னை எங்கே விலக்கி வைத்துவிடுவார்களோ என பயந்தான்.

வீட்டிற்கு வந்த பின்பும் ஒரு வாரம் தனிமை படுத்தி கொண்டு, இதோ இன்று தான் வெளியே வந்திருக்கிறான். தொலைபேசி உரையாடல்களை கேட்டு கேட்டு நிஜமாக மனிதன் பேசும் குரலே மறந்திருந்ததது அவனுக்கு.

வீட்டை விட்டு வெளியே வந்த போது வீட்டு ஓனர் தன் குழந்தையை அழைத்து கொண்டு உள்ளே போனது தன்னை பார்த்து தானோ என பயந்தான். டீ கடைக்கு சென்ற போதும் கடைக்காரர் முன்னை போல் பேசாமல் சட்டென விலகி சென்றாற் போல் இருந்தது.

வைரஸ் கொடுமையானது தான். எல்லாருக்கும் ஆபத்தை விளைவிப்பது தான். ஆனால் நான் தான் குணமடைந்து விட்டேனே? மருத்துவரும் சொல்லிவிட்டாரே? வேறு என்ன வேண்டும் இவர்களுக்கு? நானும் பாதிக்கப்பட்டவன் தானே? மனிதன் தானே?

வைரஸை விட கொடுமையான விஷயம் மனிதனே மனிதனை வெறுப்பது. மனிதனே மனிதனை பார்த்து விலகி ஓடுவது. உதவ மறுப்பது. எங்கே இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மனிதமும் காணாமல் போய் விடுமோ என எண்ணுகையில் மனம் பாரமானது.

அப்போது எதிரே வந்த துப்புரவு பணியாளர் அவனை பார்த்தார். “என்ன அண்ணே பார்த்து எவ்ளோ நாளாச்சு? இப்போ உடம்பு தேவலையா? அதெல்லாம் சரி ஆயிடும். ஒன்னும் பயப்படாதீங்க. இதெல்லாம் கொஞ்ச நாள் தான், எல்லாம் சரி ஆயிடும். நம்பிக்கை வைங்க. நாங்க எல்லாரும் இருக்கோம்ல” என கூறியபடியே நகன்றார்.

இல்லை, மனிதம் இன்னும் மரிக்கவில்லை. இது போன்ற மனிதர்கள் இருக்கும் வரை மரிக்கவும் செய்யாது. இவ்வாறு எண்ணியபடியே புத்துணர்ச்சியுடன் சென்றான்.

அவனை பற்றி கவலைப்படுபவர்கள் இருக்கும் வரையில் அவனை யாராலும் அசைக்க முடியாது.

வைரஸை விட கொடுமையான விஷயம் மனிதனே மனிதனை வெறுப்பது. அனைவரிடமும் அன்பாக இருப்போம். இதையும் கடப்போம். நோயாளிகளும் மனிதர்களே! முடிந்த வரையில் அவர்களுக்கு ஆறுதலாக இருப்போம்! நம்மால் இயன்றவரை அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்போம்!

இதையும் கடப்போம்! வெல்வோம்!