கல்லாகும் கடவுள்தன் கைபோட்டுத் தாங்கினால்
கல்லாத நான்கூடச் சாகரம் கடப்பேனே
சொல்லாலே வழிகாட்டி சொந்தமாய்க் கொண்டாலே
செல்லாத வழிகளிலும் சீக்கிரமாய் நடப்பேனே
நீந்தவே தெரியாத மீன்குஞ்சை எடுத்தவன்
நிலமிசை போட்டபின் நீந்திவா என்கிறான்
சீந்தவே இல்லைபின் எத்தனை அழைக்கினும்
சிந்தித்துச் செயல்படு, அவ்வளவே, என்கிறான்
நீந்திப் பார்த்தது நெடுநாள் முயற்சி
நடக்கக் கற்றது பரிணாம வளர்ச்சி
ஏங்கி விழுந்தது என்னுடை தளர்ச்சி
என்னிறை அருளின்றி நீங்குமா அயர்ச்சி?
காலத்தின் கட்டளைகள் மாறிடக் கூடுமோ
காலத்தைச் செய்தவன் விருப்பென்ன கூறுமோ
ஞாலங்கள் மாறுமென ஞானமது கூறுமே
நானென்ன சொல்வது? நடைபெறக் கூடுமே!
காலின்றிப் போனாலும் கல்தரையில் நகர்வேன்
கைகொஞ்சம் தளர்ந்தாலும் மனதினால் உயர்வேன்
காலமும் மாறும்வரை காத்திருக்கக் கடவேன்
கவியுண்டு இறையுண்டு; நான்வென்று விடுவேன்!