Community

தடயம் (சிறுகதை)

தடயம் (சிறுகதை) .
நி.அமிருதீன்
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத் துறை
ஜமால் முகமது கல்லூரி
திருச்சி 20

காலை பதினோரு மணிக்கே பாரத் மருந்து நிறுவனம் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஊழியர்களின் முகத்தில் கவலை தோய்ந்த ரேகை பரவியிருந்தது.சிலர் பதட்டமாக இருந்தார்கள். சிலர் உச் கொட்டிக் கொண்டிருந்தார்கள். காலங்காத்தால இப்படி ஆயிருச்சு என்று சிலர். என்ன இருந்தாலும் நம்ம அருணுக்கு இந்த நிலமை வந்திருக்கக் கூடாது பாவம் அருண் இது வாட்ச்மேனின் ஆதங்கம்.

இந்த அருண் யார்? அருணுக்கு என்ன நேர்ந்தது? சரியாக ஒரு மணி நேரத்திற்கு முன்பு…… ………

காலை பத்து மணி. பாரத் மருந்து நிறுவனத்தின் மெயின் கேட் திறக்கப்பட்டு ஊழியர்கள் வேகவேகமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். காற்றில் சிலுசிலுத்த தலைமுடியை கோதியவாறு அலுவலகத்திற்குள் நுழைந்தான் மருந்து விற்பனை பிரதிநிதி அருண். அந்த அலுவலகத்தில் அனைவருக்கும் அருணை பிடிக்கும். ஏனெனில் எல்லா ஊழியர்களிடமும் வித்தியாசம் பார்க்காமல் அருண் அன்பாக பழகுவான். காவலாளி முதல் மேலாளர் வரை அனைவரும் அருண் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.அருண் இருக்கும் இடத்தில் எப்போதும் கலகலப்பு மிகுந்திருக்கும். சோகமானவர்களை கூட சிரிக்க வைத்து விடுவான்.

அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் கையெழுத்து போட்டுவிட்டு தன் நாற்காலியை நோக்கி நடந்தான் அருண். குணா,சேகர்,ரமேஷ் ஆகிய மூவரும் அருணின் சக ஊழியர்கள்…அவனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஒரே பேட்ஜை சேர்ந்த பணியாளர்கள்.இதில் அருணும் சேகரும் மிக நெருங்கிய நண்பர்கள். இருவரின் வீடுகளும் அடுத்தடுத்த தெருக்கள் என்பதால் சிறுவயது முதலே இருவரும் நல்ல நண்பர்கள். குணா ரமேஷ் ஆகிய இருவரும் இந்த அலுவலகத்திற்கு வந்த பின்னர் அருணுக்கு நண்பர்கள் ஆனார்கள். இந்த நால்வரும் தான் இந்த அலுவலகத்தின் கதாநாயகர்கள். எந்த புதிய மருந்து மாத்திரை வந்தாலும் அதை எப்படியாவது மருத்துவரிடம் ஒப்படைத்து, விற்று விட்டு வந்து விடுவார்கள். ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு விற்பனையில் முதலிடம் பிடிப்பார்கள். ஆனாலும் அதிகமுறை முதலிடம் பெற்று அனைவரிடமும் பாராட்டு பெற்றவன் அருண் தான். எளிதாக மருத்துவரைச் சந்தித்து நயமாகப் பேசி 1000, 2000 இருமல் மருந்து புட்டிகளை விற்று விடுவான்.
சேகருக்கு அருண் மீது சற்று பொறாமை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாம் எப்படியாவது விற்பனை புள்ளிகளில் அருணை முந்தி விடவேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு அருணோடு நட்புறவு கொண்டாடுபவன்.

   இன்று புதிதாக ஏதாவது மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா? அதற்கான கடிதங்கள் உள்ளதா என தன் மேசை மீது உள்ள காகிதங்களை புரட்டிப் பார்த்தபடியே சுற்றும் முற்றும் பார்த்தான் அருண். அருகில் இருக்கும் நண்பர்கள் மூவரின் இருக்கைகளும் காலியாகக் கிடந்தன. இன்று திங்கட்கிழமை அதனால் வெளியூரிலிருந்து வரும் ரமேஷ் குணா ஆகிய இருவரும் தாமதமாகத்தான் வருவார்கள். உள்ளூரில் இருக்கும் சேகருக்கு என்ன ஆனது ஏன் இன்னும் வரவில்லை என்ற சிந்தனையோடு கையில் கிடைத்த மருந்துகளின் பட்டியலை படிக்க ஆரம்பித்தான்.

    20 நிமிடங்கள் கடந்திருக்கும். அவனுக்கு நன்கு புரிந்து விட்டது இன்றைய என்னுடைய இலக்கு மூன்றாயிரம் இருமல் டானிக் மருந்து புட்டிகளை விற்க வேண்டும் என்று. கவுண்டருக்கு   சென்று சாம்பிள் புட்டிகளை வாங்கி பையில் அடக்கிக்கொண்டு கிளம்ப நினைத்தபோது லேசாக தலை வலித்தது. பையை மேசை மீது வைத்துவிட்டு அலுவலகத்தின் எதிரே உள்ள நாயர் டீக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அருண். அவன் மண்டைக்குள் மூன்றாயிரம் மருந்து புட்டிகளை இன்று எப்படி விற்பனை செய்வது என்ற கேள்வி குடைந்து கொண்டிருந்தது

     நண்பர்கள் நால்வரும் தினந்தோறும் பதினோரு மணிக்கு நாயர் கடையில் டீ வடை சாப்பிட்ட பின்னர் தான் வெளியே கிளம்புவார்கள்.  பிறகு மீண்டும் அடுத்தநாள் மீட்டிங் நாயர் கடையில் தான். அலுவலகத்திற்கு உள்ளே ஓடும் அரசியல் வெளியே உள்ள அரசியல் என அனைத்து செய்திகளும் நாயர் டீக்கடை வாசலில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்.

      டீக்கடையை நெருங்கும் முன் அவன் அலைபேசி சிலுசிலுத்தது. எடுத்துப் பார்த்தால், மறுமுனையில் மருத்துவர் ரவீந்திரன்….. "குட்மார்னிங் அருண் எப்படி இருக்கீங்க எனக்கு காப் சிரப் 2000 பாட்டில் வேணும். என்ன ஆஃபர் வச்சிருக்கீங்க…" என்று பேச ஆரம்பித்தார். அருணுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. இப்பொதே 3000 பாட்டில் ப விற்ற மாதிரிதான். இவருக்கு கொஞ்சம் ஆஃபரை கொடுத்தால், இவரே அனைத்தையும் வாங்கிக் கொள்வார்... என்று எண்ணியவன் ஆக தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.


      பேச்சு மும்முரத்தில் தன் நண்பர்களில் ஒருவன் டீ கடையில் இருந்ததையும், அவன் தன் கையால் டீ வடை வாங்கித் தந்ததையும் அருண் கவனிக்கவில்லை. அவனுடைய எண்ணம் முழுவதும் அவனுடைய இலக்கு நோக்கியே இருந்தது.

    டீ வடை சாப்பிட்டுவிட்டு திரும்பி, நேராக தன்னுடைய நாற்காலிக்கு வந்து அமர்ந்தான் அருண். தன் கைப்பையில் அனைத்து ஆர்டர் காப்பிகளும் சரியாக உள்ளதா? என சரிபார்த்தவனாக எழுந்தவன் அப்படியே நிலைதடுமாறி கீழே விழுந்தான். விழுந்தவன் வாயிலிருந்து நுரை தள்ள ஆரம்பித்துவிட்டது. அது மருந்து நிறுவனம் என்பதால் உள்ளே ஒரு மருத்துவர் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். யாரோ அவரை அழைத்துவர அவர் பார்த்தவுடன், அருண் விசம் சாப்பிட்டுள்ளார் என்று கூறி, விஷ முறிவுக்கான ஒரு ஊசியை செலுத்தி ஜி ஹெச் க்கு அனுப்பி வைத்தார். சற்று நேரத்திற்கெல்லாம் காவல்துறைக்கு தகவல் தெரிந்து காவலர்கள் வந்துவிட்டனர்.

      காலையில் மிகவும் மகிழ்ச்சியோடு, சுறுசுறுப்பாக அலுவலகத்திற்கு வந்த அருண் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்ற எண்ணத்திற்கு அலுவலக மேலாளர் வந்ததால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

    அருணின் நெருங்கிய நண்பர்களை விசாரித்தால் நிச்சயம் ஏதாவது தடயம் கிடைக்கும் என்றவாறு இன்ஸ்பெக்டர் ரவி அலுவலக வாசலில் நின்று நாயர் கடையை உற்றுப் பார்த்தார். சற்று நேரத்தில் நாயர் கடையில் உள்ள வடைகள் எல்லாம் பாரன்சி லேப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

      ஜி ஹெச் இல் இருந்து தகவல் வந்தது. அருண் பிழைப்பது கடினம். அவர் அபாய கட்டத்தில் உள்ளார். இச்செய்தியை கேள்விப்பட்ட உடன் தான் அந்த பாரத் மருந்து நிறுவனமே மேலும் அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது…. இந்த இடத்தில் இக்கதையின் முதல் பாராவை படித்துக்கொள்ளுங்கள்…..

       குற்றவாளி நிச்சயமாக ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச்சென்றிருப்பான் என மனதுக்குள் எண்ணியவாறே இன்ஸ்பெக்டர் ரவி நாயர் டீக்கடை வாசலிலே அங்குலம் அங்குலமாக பார்வையைச் செலுத்தினார். அங்கு இருந்த வித்தியாசமான ஒன்று அவரை கவரவே, அவர் வேகமாக அதை ஒரு பாலித்தீன் பையில் எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேசன் திரும்பினார்.

   மதியம் ஒரு மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் நிருபர்கள் கூட்டம். இன்ஸ்பெக்டர் ரவி பேசுவதற்கு தயாரானார். நம் நகரின் பிரபல மருந்து நிறுவனத்தில் பணியாற்றும் அருண் என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக, அவருடைய நண்பர் சேகர் என்பவரை கைது செய்து இருக்கிறோம். குற்றம் நடந்து 3 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து இருக்கிறோம். பாதிக்கப்பட்ட அருண் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். எந்நேரத்திலும் மரணம் நேரிடலாம். அப்போது இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் என்று பேசிக்கொண்டிருக்க,ஒரு நிருபர் இடைமறித்து உங்களுக்கு கிடைத்த தடயம் என்ன? என்று கேட்க, இன்ஸ்பெக்டர் ரவி விளக்கமாக பேச ஆரம்பித்தார்.

    அருணுடைய அலுவலக மேலாளர், அருண் மிகவும்  திறமைசாலி, தைரியமானவன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றும், தொழில் போட்டி காரணமாக சக ஊழியர்கள் யாராவது செய்து இருப்பார்கள் என்றும் கூறி இருந்தார். அதனால் எங்கள் சந்தேகம் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மூவர் மீது இருந்தது. ஆனால் இச்சம்பவம் நடக்கும்போது மூவரும் அருகில் இல்லை. அதாவது அலுவலகத்துக்கு வரவில்லை.

   ஏதாவது தடயம் கிடைக்குமா? என நான் தேடிப் பார்த்துக்கொண்டிருந்த போது…... நாயர் டீக்கடை வாசலில் வடை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியப்படும் காகிதங்களில் எல்லாம் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்க, ஒரு காகிதத்தில் அருகில் எறும்புகள் செல்லாமல் வளைந்து செல்வதை பார்த்தேன். மேலும் அக்காகிதத்தின் மேல் நிறைய எறும்புகள் இறந்து கிடந்ததையும் பார்த்தேன். மெதுவாக காகிதத்தை எடுத்து பாலிதீன் பையில் இட்டு ஆய்வு செய்து பார்த்தபோது, அந்த காகிதத்தில் விஷம் தடவப்பட்டு இருந்ததை அறிந்தோம் மேலும் காகிதத்தின் மீது ஒர் அலைபேசி என்னுடைய அச்சு இருப்பதையும் பார்த்தோம் உடனே அந்த அலைபேசி எண்ணுக்கு சொந்தக்காரர் சேகர் உடைய அண்ணன் என்பதையும் அறிந்தோம். பிறகு சேகரை பிடித்து கவனித்த போது அவர் முழு உண்மையும் சொல்லிவிட்டார். இப்போது குற்றவாளி உங்கள் முன்னால் உண்மைகளை சொல்ல போகிறார்..

     அடிவாங்கி முகம் வீங்கியிருந்த சேகர் அழுதவாறே பேச ஆரம்பித்தான். நானும் அருணும் அருகருகே உள்ள தெருக்களில் குடியிருந்து வருகிறோம். சிறுவயது முதல் அருண் சூட்டிப்பாகவே இருந்தான். எல்லாவற்றிலும் அவனுக்கே வெற்றி. அவனுக்கே முதலிடம், எனக்கு இரண்டாமிடம். குறிப்பாக எல்லா மருத்துவர்களிடமும் அன்பாக பேசி அனைத்து ஆடர்களையும் அவனை பெற்றுக் கொள்கிறான். இது எனக்கு எரிச்சலூட்டியது. அவனை எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அழித்து விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
   இதற்காக சனிக்கிழமை அன்று நாயர் கடையில் டீ குடித்துவிட்டு வடை வைக்க பயன்படும் சிறு காகிதத் துண்டுகள் இரண்டை எடுத்து என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். என்னுடைய உறவினர் என் அண்ணனின் அலைபேசி எண்ணை கேட்டபோது அவருக்கு ஒரு காகிதத்தில் நான் எழுதிக் கொடுத்தேன். நான் எழுதிக் கொடுத்த காகிதத்திற்கு கீழே இந்த சிறு காகிதம் இருந்ததையும், அலைப்பேசி எண்ணின் அச்சு இதன்மீது விழுந்ததையும் நான் கவனிக்கவில்லை. பிறகு இந்த சிறு காகிதத்தில் விஷத்தை தடவி காய வைத்தேன். எப்போது இதன்மேல் ஈரமாக உணவுப்பொருள் படுமோ அப்போது அந்த உணவுப் பொருள் விசமேறிவிடுவதுபோல் தயார் செய்து, என் கை படாமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். 
    திங்கள் கிழமை அலுவலகத்திற்கு விடுமுறை கூறிவிட்டேன். என் திட்டப்படி நாயர் டீக்கடை வாசலில் காத்திருந்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் அருண் யாரிடமோ மிகவும் மகிழ்ச்சியாய் சுவாரசியமாய் பேசிக்கொண்டே வந்தான். என்னை பார்த்தான், நான் கொடுத்த டீ வடையை வாங்கிக்கொண்டான். ஆனால் என்னிடம் பேசாமலேயே திரும்பி சென்று விட்டான்.
      நான் வந்ததையே கண்டுகொள்ளாமல் அலைப்பேசியிலேயே மும்முரமாய் இருந்தது எனக்கு சாதகமாய் அமையும் என நினைத்தேன். இறுதியில் இன்ஸ்பெக்டர் என்னை கண்டுபிடித்து விட்டார். நான் செய்த தவறு என்னை, என் வாழ்க்கையை அழித்துவிட்டது என்று அழ ஆரம்பித்து விட்டான்

    இரண்டு நாட்களுக்கு பிறகு அபாயக் கட்டத்தில் இருந்து அருண் விடுபட்டு மெல்ல மெல்ல தேற ஆரம்பித்தான். சேகரின் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

தடயங்கள் இல்லாமல் குற்றங்கள் இல்லை…தடயங்கள் இல்லாமல் தண்டனைகள் இல்லை…by
நி.அமிருதீன், உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-20 அலைபேசி:9362940095

Aasiyarukku vanakkam… nalla kadhai… swarasiyamaaga irukkiradhu… aanaal kadhai kalam enaku avalavu eerpu tharavillai… aanaal sindhikka vaithadhu… unmaiyaa illai pradhipalippa endru yosikkum vannam ulladhu…

1 Like