Community

என்ன தான் நடந்துவிடும்?

“நில்லு நில்லு ஓடாத!” என்று கூறிக்கொண்டே ஜனனியை துரத்திச் சென்றான் இனியன்.இருவரும் விளையாடுவதை வீட்டின் முற்றத்தில் போடப்பட்டிருந்த மர நாற்காலியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் அவர்களின் தாத்தா நடராஜன்.அவருக்கு வயது அறுபத்தைந்து.கடந்த ஆண்டு தனது மனைவி மீனாட்சியை இழந்த அவர், தன்னுடைய ஒரே மகன் மாதவன்-லட்சுமி தம்பதியரின் பிள்ளைகளான இனியன் மற்றும் ஜனனி அவர்களுடன் தனது வாழ்வைத் தொடர்கிறார்.
நடராஜன்,எப்போதும் பேரப்பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவார்.அவர்களோடு விளையாடுவது,வீட்டுப்பாடம் செய்ய வைப்பது,சாப்பிட வைப்பது என அவர்களை முழுவதும் கவனித்துக்கொள்வது அவர்தான்.
நடராஜன்,தற்போது வசிக்கும் நகர்பகுதிக்கு மூன்று மைல்கல் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர்.அவருடைய தந்தை ஒரு விவசாயி.அவருடன் சேர்ந்து சிறு வயது முதல் நடராஜனும் விவசாயம் புரிந்தார்.பிறகு,திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகள் கழித்து,வேலைக்காக வெளிநாடு புறப்பட்டார்.அப்போது,அவரது மகனுக்கு ஒரு வயது.அவர்,தங்கள் வாழ்வின் மேன்மைக்காக அவர் தந்தையின் சொற்படி வெளிநாடு செல்ல ஆயத்தமானார்.அவர் வெளிநாடு சென்று
ஒரு தொழில்நிறுவனத்தில் பதினொறு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், சொந்த ஊர் திரும்பினார். அங்கு, அவர்களின் பரம்பரை நிலங்கள் மட்டுமின்றி பல்வேறு நிலங்களை வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கினார். அதுமட்டுமின்றி, தற்போது வசிக்கும் வீட்டின் நிலத்தையும் அவர் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தனதாக்கினார்.
தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர்களின் கிராமத்தை விட்டு இப்போது வசிக்கும் நகர்ப்புறத்திற்கு வந்து சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு வாழ வந்தார்.
தன் வெளிநாட்டு வருமானத்தை பல்வேறு முதலீடுகளில் ஈடுபடுத்தி குடும்ப வாழ்வை இன்பமாக வாழ ஆரம்பித்தார். தன்னுடைய மகனை பட்டதாரி படிப்பு வரை படிக்க வைத்தார். அவனும் நல்ல முறையில் படித்து தற்போது ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகின்றான்.
தன் மகனுக்கு நல்ல எதிர்கால வாழ்க்கைத் துணையை உருவாக்கும் பொருட்டு நல்ல மருமகளை மகளாக எண்ணி லட்சுமியை நடராஜனும் அவரது மனைவி மீனாட்சியும் தேர்ந்தெடுத்தனர்.
அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, அவளும் நல்ல மனைவியாகவும், மருமகளாகவும் மகளைப் போலவும் அவர்களை கவனித்து வந்தாள். ஆனாலும், அவர்களுக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகள் கழித்துத்தான் பிள்ளைவரம் கிடைத்தது. அதுவரையில் இச்சமுதாயம் அவளை வாட்டி வதைத்தது மலடி என்ற சொல்லை நேரடியாக கூறாமல் விஷேசம் இல்லையா? என்று.
அக்குறை தீர, முகிலன் பிறந்தான்.அவள் இச்சமுதாயத்தால் பல சமயம் காயப்பட்டாலும் “காலம் கனியும்” என்று அவளும் அவள் குடும்பத்தாரும் எண்ணினர்.அவள் எண்ணியது பெரிதல்ல. அவர் குடும்பம் உறுதுணையாய் நின்றதுதான் பெரிது. பின்னர், ஜனனியும் இரு ஆண்டுகள் கழித்துப் பிறந்தாள்.
தன்னுடைய மாமியார் தன்னை மகளைப் போல கவனித்துக்கொள்வதை எண்ணி அவளும் பெருமிதம் கொண்டாள்.நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்கவும் அவள் மாமியார் மூலம் கற்றுக்கொண்டாள்.
‌அவர்களின் முதுமைக்காலத்தில் லட்சுமியும் நல்ல முறையில் அவர்களைப் பார்த்துக்கொண்டாள்.நடராஜனும் அவரது குடும்பமும் இன்பமாக வாழ்ந்துவந்தார்கள்.
பேரப்பிள்ளைகளுடனான வாழ்வும், மகனின் வருமானமும், அவர்களின் வங்கி இருப்பும் நல்ல முறையில் வாழ வழி செய்தது.
மனைவி மீனாட்சியை இழந்த பிறகு,மருமகளின் கவனிப்பு அவரை அரவணைத்தது.பேரப்பிள்ளைகளுடனான வாழ்வு அவரை மனதளவில் தேற்றியது.
தினந்தோறும் அதிகாலை எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டு, பின்னர் சக வயது நண்பர்களுடன் பூங்காவில் சிறிது நேரம் பேசிவிட்டு வீடு திரும்புவார் நடராஜன். வீடு திரும்பியவுடன், குளித்து முடித்து விட்டு, பேரப்பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வார். அவர்களை பள்ளியில் விட்டு விட்டு வந்த பின்னர், மகன் பணிக்கு கிளம்பும்போது, அவனோடு இவரும் சேர்ந்து உணவு உண்பார். மருமகளின் சமையலைப் பாராட்டி மகனுடன் உணவருந்தி முடிப்பார். பிறகு, தனது மர நாற்காலியில் அமர்ந்து கொள்வார். கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவது போன்ற சிற்சில உதவிகளைச் செய்வார் நடராஜன். மதிய உணவு உண்ட பிறகு சிறிது நேரம் உறங்குவார்.பள்ளி முடியும் சமயத்தில் சென்று பேரப்பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வருவார்.
அவர்களின் வீட்டுப்பாடங்களை முடித்த பிறகு, தாத்தாவிடம் வந்து அன்றைய பள்ளி நிகழ்வுகளை இருவரும் கூறுவார்கள். அவர்களின் தாத்தா நடராஜனும் அதை கண்கொட்டாமல் கேட்டுக்கொண்டிருப்பார். இரவு உணவு உண்ட பிறகு, மகனுடன் சிறிது நேரம் பேசி விட்டு உறங்கச் செல்வார் நடராஜன்.
பள்ளி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இனியனும் ஜனனியும் தாத்தாவுடன் நேரம் கழிப்பார்கள்.அவரும், தன் சிறுவயது அனுபவங்களையும் கதைகளையும் அவர்களுக்கு சொல்லி மகிழ்வார். மாலை நேரத்தில் இருவரையும் பூங்காவிற்கு சென்று விளையாடி மகிழ்ந்த பின்னர் வீட்டிற்குத் திரும்புவார் நடராஜன்.
அவ்வாறு ஒரு முறை பூங்காவில் இனியனும் ஜனனியும் விளையாடிக்கொண்டிருந்த போது, அங்கு ஒரு குழந்தையின் பொம்மையை இனியன் ஒளித்து வைப்பதை நடராஜன் கவனித்தார்.சிறிது நேரத்திற்குப் பிறகு, அக்குழந்தை பொம்மையினைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது, இனியன்" நான் பார்க்கவில்லை" என்று கூறினான். இதையும் கவனித்த நடராஜன்,திடீரென கோபப்பட்டு இனியனை அடித்து விட்டார். அக்குழந்தைக்கு பொம்மையைப் பெற்றுத் தந்த பிறகு, இருவரையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார்.
தாயிடம் கூட நடந்ததை கூறாமல் இருவரும் உணவு உண்ட பிறகு உறங்கச் சென்றனர். வழக்கம் போல் அடுத்த நாளும் விடிந்தது. அதிகாலையிலேயே உறவினரின் திருமணத்திற்காக மாதவனும் லட்சுமியும் வெளியூர் சென்று இருந்தனர்.
இனியனும் ஜனனியும் எழுந்தது முதல் தாத்தாவிடம் பேசவே இல்லை. இது நாள்வரையில் தங்கள் மீது கோபம் கூட கொள்ளாத தாத்தா “நேற்று திடீரென கோபம் கொண்டு அடிக்க என்ன காரணம்? சிறு பொய்க்காகவா!!!” என இருவரும் யோசனை செய்தனர்.
தாத்தாவிடமே கேட்டு விடலாம் என்றெண்ணி, "ஏன் தாத்தா நேற்று நான் செய்தது மிகப்பெரிய‌ தப்பா?"என்றான் இனியன்."பொம்மையை ஒளித்து வைத்து இல்லை எனக் கூறியது பெரிய தப்பா தாத்தா!!!"என்றாள் ஜனனி.
‌ “‌நானும் உங்களைப் போன்ற சிறுவயதில் சுட்டித்தனமாக இருப்பேன். எந்த வேலை எனக்கு சொன்னாலும் அதை செய்துமுடித்தாலும் செய்யவில்லை என்று கூறுவேன். அனைவரும் என்னைக் குறும்புக்காரன், சுட்டிப்பையன் என்பார்கள். ஆரம்பத்தில் நான் இதை ஆனந்தமாக எண்ணினேன். ஆனால்,என்னுடைய பதினெட்டாம் வயதில் நான் செய்த செயல் என்னை மிகவும் வருந்தச் செய்தது.அது என்னவென்றால், என் பெரியப்பா ஒரு நாள் வெளியூர் செல்ல ஆயத்தமான போது அவர், என்னிடம் ஓர் பையைக் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொன்னார். நானும் அதை பத்திரமாக வைத்திருந்தேன்.அவர், ஊருக்குத் திரும்பி வந்தபோது விளையாட்டுத்தனமாக, அந்தப்பை தொலைந்து விட்டது என்றேன்.அதனால், அவர் பெரிதும் மனக்குழப்பம் அடைந்துவிட்டார். தன் மகனின் படிப்புக்காக விவசாய நிலங்களை விற்று சேர்த்த பணம் தொலைந்து விட்டது என்றதும் அவருக்கு சில வருட காலம் சுயநினைவே இல்லாமல் போய்விட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சுயநினைவைப் பெற்றார்.”
“இச்சம்பவம் என்னையும் மனதளவில் பெரிதும் பாதித்தது. எனவேதான், நேற்று இனியனிடம் கோபப்பட்டேன். நாம் கூறும் சிறு பொய் கூட ஒருவரின் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும்.”
“இனி நாங்கள் விளையாட்டாக கூட பொய்பேச மாட்டோம்” என்றனர் இனியனும் ஜனனியும்.

        "நாம் சில சமயங்களில் விளையாட்டாக கூறும் பொய்கள் கூட மற்றவர்களின் வாழ்வில் வினையாகி விடலாம்" என்பதற்கே இச்சிறுகதை.


  இப்படிக்கு:
             ப.சங்கர்,
             இளம் அறிவியல் (இயற்பியல்) இரண்டாம் ஆண்டு,
             மாநிலக் கல்லூரி,
             சென்னை - 600005.

Blockquote

Kadhaiyil avar endru Pala murai payanpaduthirkeergal…vaasagaruku instructions kodakoodathu… kadhai dhaanaga nagara vendum… katturai saayalum ulladhu… vaazhthukal