கிள்ளை
கடுஞ்சினமாய் மாறியது
கடவுளின் கருணை, அன்று -
பெருமழை, புயற்காற்று.
அச்சினம் தாளாச் –
சிறுமரத்தின்,
மனமுறிவு – கிளைமுறிவு !
விழுந்த அக்கிளையினூடே –
சிதறிப்போன சிறுகூட்டில்,
சின்னதொரு சதைப்பிண்டம் –
என் சிறுகிள்ளை,
நான் பெறாப்பிள்ளை – நீ !
விட்டுச்செல்ல மனமில்லை.
அதனால், சிறையெடுத்தேன் –
உன்னை, இச்சிறியமனிதி –
உனைப்போலொருத்தி !
குறையேதுமறியாக் கோலமயிலாய்,
நீ வளர்ந்தாய் – கூண்டில் !
பரபரக்கும் காலைச்சந்தடியில்,
நானுமிருக்கிறேனடி என்று,
நாசூக்காய் உன் இருப்புரைக்கும் –
கீச்சு கானம் – என் தினசரி !
சத்தம் போடாதே!, சும்மாயிரு –
என்றாலோ,
வேகமெடுக்கும் – உன் இராகம்.
குறும்புக்காரி நீ !
வாகாய் வந்தமர்வாய்,
என் தோளின் மீது –
ஏதுமறியாச் சிறுபிள்ளையாய் !
சிலநேரம் –
நானும் கூட சிறுபிள்ளை –
உனதன்பினால் –
என் சிறுகிள்ளையே !
கால்முளைத்த காலம் –
நிற்குமா ? – ஓடியது !
உன் மனமதுவோ –
சுதந்திரத்தை நாடியது !
என்னகம் துறந்தாய்,
பறந்தாய் – நீ,
உன்னகம் நானுணர்ந்ததினால் !
எத்தனை நாட்கள் ஏங்கினாயோ !
பிள்ளையே !
என் சிறுகிள்ளையே !
இவ்வகண்ட பெருவெளியை
அளந்து பார்ப்பதற்கு !
இன்று,
உன் கானம் சுமந்த காற்றதுவோ –
நிசப்தப் பெருவெளி !
அமர்ந்திருந்த தோள்களும்,
சுற்றித் திரிந்த வீடும் –
நீ விட்டுச் சென்ற சுவடுகள் !
வீட்டுச்சிறை விடுத்த இந்நாளில்,
அடைபட்டாயடி நீ,
மீண்டும் ஒருமுறை –
மீளாச்சிறையினுள் !
இம்முறை,
உன் சிறை – என் மனம் !
நீயோ –
என்னகம் – அகலா நினைவு !
**ந. வெண்ணிலா**