Community

இளமையைத் தேடி

இளமையைத் தேடி

திடீரென கண் விழித்தார் மூர்த்தி – அவரால் நம்ப முடியவேயில்லை வந்தது யார் ? பேசியது யார் ? ஒன்றுமே புரியவில்லை ! கதைகளில் வருவதுபோல தன கையைக் கிள்ளிப்பார்த்தார். வலிப்பது போல இருந்தது .

வந்தவர் சொன்னதை நினைத்துப் பார்த்தார். “மூர்த்தி நீ ரொம்ப நாளா ஆசைப்பட்ட்டாயே , அது கிட்டும்” சொன்னவர் முகம் கூடத் தெளிவாக நினைவில் இல்லை -ஞானியா ? சித்தரா ? இல்லை அந்த இறைவனா ? புரியவில்லை மூர்த்திக்கு.

ஆனால் ரொம்ப நாளாக ஆசைப்பட்டது மட்டும் நினைவிலேயே நின்றுகொண்டிருக்கிறது.மறக்கமுடியுமா ? மறக்கக் கூடியதா ?

வயதாக வயதாக அவர் இழக்கும் “நேற்று” தான் அவர் ஆசைப்படுவது. எந்த நாளுமே இது என் கடைசி நாளாக இருக்கக் கூடாதா எனப் புலம்புவார். அன்றோடு இவ்வாழ்க்கை முடிய என்று இல்லை -அதற்குமேல் வயது ஆகக் கூடாது என்ற எண்ணம் தான் அது. எந்த ஒரு கல்லூரி மாணவனை கண்டாலும் தான் தஞ்சையில் பயின்ற மன்னர் சரபோஜி கல்லூரி நாட்கள் அவரது நினைவிற்கு வரும். சென்னை வந்த பிறகு கல்லூரி மாணவர்கள் புல்லட்டில் வேகமாக பறக்கும் பொழுது தன்னால் அது முடியவில்லையே என்ற எண்ணம் மனத்தினைச் சூழும் . நாளாக நாளாக கோடம்பாக்கம் ,மாம்பலம் ரயில் நிலையங்களில் ஆண் , பெண் ஜோடியாக நின்று ,சேர்ந்து பிரயாணிப்பது மனதை கஷ்டப்படுத்த ஆரம்பித்தது.-அது என்னவோ தெரியவில்லை- எந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் இன்னொரு மாணவி நண்பியாக இருப்பதில்லை இப்போதெல்லாம். அதன் காரணம் விளங்காவிடினும் மனதில் ஏக்கம் மட்டுமே நிலைத்தது. ஆண்கள் மட்டுமே படித்த தன் மன்னர் சரபோஜி கல்லூரி மீது கோபம் வரும் -முந்திரி காட்டின் நடுவில் அமைந்த அந்த கல்லூரி அவருக்கு இப்போதெல்லாம் அடிக்கடி மனத்தை வருத்தியது. ஆனால் இப்போது பல ஆண்டுகளாக இருபாலரும் படிப்பதாக அவருக்கு செய்தி காற்று வாக்கில் அவர் காதில் விழுந்ததும் அவருக்கு தானும் திரும்ப கல்லூரியில் படிக்க மாட்டோமா என்கிற ஏக்கம் மனத்தை வாட்டியது.அந்த நினைவை விட்டு அகல முடியவில்லை மூர்த்தியால்.

ஆண்டவனை அனைவரும் வேண்டிக்கொள்வது “நல்ல உடலைக் கொடு “ என இந்த வயதுக் காரர்களின் பிரார்த்தனையாக இருக்கும்.ஆனால் மூர்த்தி எப்போதுமே இறைவனை வேண்டுவது “என் இளமை எனக்கு கிடைக்குமா ? ” என்பதுதான். தன்னையே ஒரு யயாதியாக கற்பனை செய்துகொண்டு தன் வாழ்நாளைக் கழிக்க முயன்றார். யயாதி கதை உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்

யயாதியின் கதை மகாபாரதத்தில் வருகிறது. அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் தேவயானியை யயாதி திருமணம் செய்து கொள்கிறான். யயாதிக்கு -தேவயானி மூலம் யது , துர்வசு என இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறன. ஆனால் சில ஆண்டுகட்குப் பின் அவன் தேவயானியின் வேலைக்காரி சர்மித்தை இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான். அவள் மூலமாக துருயு , அனு மற்றும் புரு எனும் மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர்.இதனால் கோபம் அடைந்த தேவயானி தனக்கு தன் கணவன் யயாதி இழைத்த அநீதி குறித்து தன தந்தையிடம் முறையிட்டாள். உடன் சுக்கிராச்சாரியார் , யயாதிக்கு கிழட்டுத்தன்மை அடைய சாபமிட்டார். யயாதியும் அடுத்த நொடியிலே இளமை நீங்கி கிழட்டுத் தன்மை அடைந்தான். பின் அவரிடம் மன்னிப்பு கேட்டு, தான் அடைந்த கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான். அதற்கு அவர், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனின் இளமையை நீ அடைவாய் என்று கூறினார்.

யயாதியும் தன மகன்கள் அனைவரிடம் தன கிழட்டுத்தனமையை ஏற்று தனக்கு இளமை தர வேண்டினான் கடைசி மகனான புரு மட்டுமே யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டு , தனது இளமையை கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி முதுமை நீங்கி இளமை அடைந்து ஆயிரம் ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் இன்பம் துய்த்தான்.

இப்படி ஆயிரம் ஆண்டு வாழ தன் மகனைத் தேடினார் மூர்த்தி. ஆனால் அந்த கொடுப்பினையும் அவருக்கு இல்லை மூர்த்திக்கு குழந்தை பாக்கியமும் கிடையாது. அவருக்கு அவர் மனைவி துணை மனைவிக்கு அவர் துணை இருவருக்கும் தொலைகாட்சி யில் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒளிபரப்பப்படும் திரைப்படங்களே துணை ,அதுவும் இரண்டாண்டுகட்கு முன் அவர் மனைவி மறைந்ததும் அத்துனையும் சலிப்பாயிற்று. ஆனால் தனிமையின் கொடுமை அவருக்கு இளமையையே தேட வைத்தது. மூர்த்தியும் தேடினார் தேடினார் இளமையைத் தேடி தேடி அலைந்தார் .இளமையைத் தேடி என்பதைவிட முதுமையை இழக்க அலைந்தார் எனலாம் .

.இன்றுதான் அதற்கு விடிவு கிடைத்தது.

வந்த அவர் அனைத்தும் அறிந்த ஞானியா ? அனைத்தையும் செய்யக்கூடிய சித்தரா ? எல்லாம் வல்ல இறைவனா? ஒன்றுமே புரியவில்லை. ஒன்றுமட்டும் புரிந்தது, அவர் சொன்னபடி அவரது இளமை திரும்பும் நேரம் வந்துவிட்டதோ ?

விடிந்தது , மூர்த்தியின் கனவுக்கும் ஒரு விடிவு பிறந்தது.

விரைவிலேயே அவருக்கு கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது ஆனால் சென்றார் -வென்றார் என்று கூற முடியவில்லை.

அவர் அன்று படித்த கல்லூரி வாழ்க்கைக்கும் இன்றைய கல்லூரி வாழ்க்கைக்கும் எத்தனை வேறுபாடு ? மாணவர்களின் நடை உடை போன்ற புற வழக்கங்களைப் பற்றி மூர்த்தி கண்டுகொள்ளவில்லை. எண்ணங்களிலேதான் எத்தனை வித்தியாசம்? தான் படித்த போது சக மாணவர்களின் அறிவுத்திறன் பன் மடங்கு என்பதை காணமுடிந்தது. அன்று மாதா ,பிதா குரு தெய்வம் என்று இருந்தோம் .இன்றோ மாதா ,பிதா குரு கூகுள் தெய்வம் என்று மாணவர்கள் உள்ளனரே.அனைத்தும் விரல் நுனியில் .இந்த சவாலில் – நீரோட்டத்தில் தான் மூழ்குவது உறுதி என்பது புரிந்தது!

ஒரு நாள் திடீரென நான்கு மாணவர்கள் ஒ என்ற சப்தத்துடன் கிளம்பினர்.”என்னடா , அவன் கொம்பனா? இந்த ரூட் நம்ப கன்ட்ரோல் தான் அவன் யாரு தல ? “ என்று கோபமாக புறப்பட்டான் மாணவன் ஒருவன். கையில் பட்டாக் கத்தி. வீட்டில் அரிவாள்மனையைத் தாண்டி அரிவாளைக் கூட கண்டிராத மூர்த்திக்கு “குப்” என்று வியர்த்தது,

அலறிக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தார் மூர்த்தி தன்னைக் கிள்ளிப்பார்த்தார் .வலித்தது.