Community

சிறுகதை போட்டி - புதிரும் புன்னகையும்

சிறுகதை - புதிரும் புன்னைகையும்

“டேய் எத்தனை தடவை தான் சொல்லிக் கொடுக்கிறது, இந்த எண்கள் புதிரை உன் இஷ்டத்துக்குப் பண்ணிட்டு இருக்க?”
“ம்மா!” என்றான் மழலைக் குரலில் துருவன்.
“துருவ்!இன்னும் ஒரு தடவை அம்மா செய்யறேன் பாரு!நல்லா கவனிடா ப்ளீஸ்டா கண்ணா”
கலைந்து கிடந்த புதிர் துண்டுகளை எடுத்து ஒன்றாக சேர்த்தாள் ஓவியா. அவளின் பொறுமையும் குறைந்து கொண்டே வந்தது. கிட்டத்தட்ட இருபது முறைக்கு மேல் அந்தப் புதிரினை எப்படி இணைப்பது என்று அவனுக்குச் சொல்லித் தந்து விட்டிருந்தாள்,
அவன் பயிலும் தனியார் மழலைப் பள்ளியில், கொரோனா லாக்டவுன் என்றாலும் ஆன்லைன் வகுப்புகள் நடந்ததுடன், வீட்டுப் பாடங்களும் கொடுக்கப் பட்டு வந்தன. செயல்வழிக் கற்றல் என்பதால், நிறைய செய்முறைப் பயிற்சி வேலைகள் கொடுத்து வந்தனர். அதில் ஒன்று தான் இந்த புதிர் துண்டுகளைச் சரியாக இணைப்பது; ஒன்று முதல் பத்து வரை எண்கள் எழுதப்பட்ட அந்த நத்தையை வரிசைப்படி சேர்க்க துருவனுக்கு சொல்லித் தரத்தான் ஓவியா படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள். பொறுமையெல்லாம் சுத்தமாகப் போய்விட அவனை அடித்து விடுவோமா என்றளவு அவளுக்கு ஆத்திரம் வந்தது. மூன்றரை வயது குழந்தைக்கு இருக்கும் பல்வேறு திறன்களில் துருவனுக்கு சராசரியை விடக் குறைவுதான். எனினும் அந்தப் புதிரை எப்படியாவது சரியாக செய்ய வைத்துவிட மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள். மாணவர்கள், புதிர் துண்டுகளை வரிசைப்படி இணைத்து சரியான உருவத்தைக் கொண்டுவரும் முறையை ரெக்கார்ட் செய்து வீடியோவாக வாட்சப்பில் அனுப்ப வேண்டும் என்று பள்ளியில் இருந்து வாட்சப் குழுவில் மெசேஜ் வந்திருந்தது. எனவே, ஒவ்வொரு முறையும் அவன் செய்யும் போது நம்பிக்கையுடன் தனது செல்போனில் வீடியோ எடுப்பதும் அதை அழிப்பதுமாக இருந்தாள்.
நேரம் சென்றதுதான் மிச்சம். துருவனோ விளையாட்டு மும்முரத்திலேயே இருந்தான். எத்தனை முறை சொல்லித் தந்தாலும், தன்னிஷ்டம் போலவே அந்த புதிரை வெவ்வேறு வடிவங்களில் சேர்த்துக் கொண்டு இருந்தான். அவனின் பொறுமையும் குறைய, புதிர் துண்டுப் பகுதிகளைத் தூக்கி ஹாலின் நாலாபுறமும் வீசி விட்டு தனது குட்டி சைக்கிளை எடுத்து வீட்டுக்குள் வட்டமடிக்கத் துவங்கினான்.
வாசல் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கவும், அப்பா என்று கத்திய துருவன், உள்ளே நுழைந்த இன்பனை சைக்கிளில் வட்டமடிக்கத் துவங்கினான்.
ஆபிசில் இருந்து வந்த அவளின் கணவன் இன்பன், அவள் தலையில் கைவைத்தபடி உக்கார்ந்து இருந்ததைக் கண்டவன், ஒன்றும் பேசாமல், மாஸ்க், காலணிகளை அகற்றி விட்டு, குளியலறைக்குள் புகுந்தான். குளித்துவிட்டு, மாற்றுடை அணிந்து ஹாலுக்கு வரவும், என்ன ஆச்சு ஓவியா? ஏன் இப்படி உக்கார்ந்திருக்க? எனக் கேட்க, மௌனமாகவே இருந்தாள்.
துருவா! அம்மா ஏன் சோகமாக இருக்காங்க! என்று அவனைப் பார்த்துக் கேட்கவும்,
துருவன் சிரித்துக் கொண்டே, அப்பா அம்மாக்கு ஸ்நெய்ல் பஸ்ஸில் செய்யத் தெரியல அதான் சோகமா இருக்காங்க என்றான்.
ஆமாடா, எனக்குத் தான் செய்யத் தெரியல என்றவள்,
என்ன சொல்றான் அவன்? என்று நடப்பது புரியாமல் இன்பன் கேட்கவும், ஸ்கூலில் செய்ய சொன்னதையும் துருவன் செய்ததையும் காட்டினாள்.
அவன் செய்தது என்னவென்று அவனை அழைத்து அந்த வீடியோவைக் காட்டி கேட்டான் இன்பன், அப்பா இது கம்பளிப்பூச்சிப்பா, கேட்டர்பில்லர், பாட்டி வீட்ல ட்ரம்ஸ்ட்ரிக் ட்ரீல போச்சே! நீங்க அன்னிக்குக் காட்டினீங்கள்ள அது!
நான்கு மாதங்களுக்கு முன் ஊரில் பாட்டி வீட்டில் பார்த்ததை மகன் நினைவுபடுத்திக் கூறியது இன்பனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
நீ ஒரு தடவையாவது அவன் என்ன செய்ய ட்ரை பண்றான்னு கேட்டியா ஓவியா? இன்பன் கேட்கவும்,
ஹ்ம்ம் இல்ல! என்றாள் ஓவியா.
அதான்! இங்கே பாரு, அவன் நத்தையப் பார்த்ததில்ல, நீ சொன்னது அவனுக்குப் புரியல. அவன் பார்ததத அவனுக்குத் தெரிந்த மாதிரி செஞ்சிருக்கான்.
நாம எப்பவும் இப்படித்தான், நம்ம விரும்பிற மாதிரி நம்ம குழந்தைங்க இருக்கணும்னு கட்டாயப்படுத்திட்டே இருக்கோம். அவங்களுக்கான புதிய சிந்தனைகளுக்குக் கூட சுதந்திரம் தர்றதே இல்ல.
சரி விடு, அவனுக்கு நான் சொல்லித் தரேன்.
துருவன், நம்ம நத்தை செய்வோமா? என்று அழைத்தவன். சிதறிக் கிடந்த புதிர் பகுதிகளை சேகரித்தான். துருவனைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு, “நத்தையாரே நத்தையாரே எங்கே போறீங்க, நாலு குடம் தண்ணி கொண்டு வரப் போறேங்க!” என்று விளையாட்டாகப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டு அந்த புதிர் துண்டுகளை இணைத்து நத்தையைச் செய்தான்.
அதை நன்கு கவனித்த துருவன், தானும் முயற்சி செய்ய ஆரம்பிக்க, இன்பனுக்கு டீ போட்டுக் கொண்டு வர சமையலறைக்குச் சென்றாள் ஓவியா.
பாதி வரை முயன்றவன், மறுபடி கேட்டர்பில்லர் செய்தான். அப்பா எனக்கு இது தான் பிடிச்சிருக்கு. நான் இதே செய்யறேன்பா என்றபடி ஓடிவிட்டான்.
டீயைக் கொண்டுவந்தவள், பார்த்தீங்களா இப்படியே தான் இவன் செய்றான் என்றாள்.
சின்னப்பையன் தானே ஓவியா, பெரியவங்க நாமே எல்லாத்தையும் சரியா செய்றோமா என்ன? அவன் இதையே செய்யட்டும், இந்த வீடியோவையே அனுப்பு. மிஸ்கிட்ட துருவன் வித்தியாசமா யோசிசிருக்கான்னு சொல்லு. அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.
அரைமனதாய் அவளிடம் ஒரு தலையசைப்பு. பின்னர் அதையே அவனின் வகுப்பாசிரியையிடம் அனுப்பி வைத்தாள். மற்ற பிள்ளைகள் சரியாக செய்திருப்பதாகவும், துருவன் சரியாக செய்யவில்லை என்பதால் மறுமுறை முயற்சி செய்யவும் என்று பதில் அனுப்பி இருந்தார்.
இப்படி தான் பதில் வரும்னு நினைச்சேன் என்று புலம்பியவளிடம், இது என்ன நீட் எக்ஸாம் ரிசல்ட்டா இல்ல ஐ. ஏ. எஸ். ரிசல்ட்டா இப்படி புலம்புற. விடு ஓவியா!" என்று சமாதானப்படுத்தினான்.
இரவு உணவை முடித்து விட்டு, படுக்கையறைக்குச் சென்றனர். “மிகவும் பசியோடு இருந்த கம்பளிப்பூச்சி” என்ற கதையை அப்பாவிடம் சொல்லுமாறு கேட்ட துருவன், அப்படியே தூங்கிப் போனான். அவன் கனவுகள் எல்லாம் வண்ண வண்ண கம்பளிப்பூச்சிகள். தூக்கத்தில் சிரித்தான். அதை ரசித்த இன்பன் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டுத் தானும் தூங்கினான்.
மறுநாள் காலை, துருவனின் கிளாஸ் மிஸ், தனியாக ஒரு செய்தி அனுப்பி இருந்தார். "மேம். பள்ளியில் இருக்கையில் சிலபஸ், அட்டவணைப்படி என்று மட்டும் தான் வகுப்புகளைக் கொண்டு செல்ல முடியும்.
நேற்று அந்த புதிர் துண்டுகளை இணைப்பதில் துருவன் மட்டுமே வித்தியாசமாக முயற்சி செய்திருந்தான். அதுவே க்ரியேடிவ்வாக அவன் யோசித்ததின் அடையாளம். இதுவே அவன் செயல்வழிக் கல்வியில் கற்ற பாடம். அவனைக் குழுவில் என்னால் பாராட்ட இயலவில்லை. எனினும், புதிரை இணைக்கும் சரியான முறையையும் அவன் கற்றுக் கொள்ளட்டும். துருவனுக்கு வாழ்த்துக்கள்!"அவன் ஆசிரியையின் செய்திக்கு, நன்றி என்று பதில் அனுப்பியவள் உற்சாகமானாள். இம்மாதிரி ஊக்குவிப்பே புதிய முயற்சிகளைக் குழந்தைகள் செய்யத் தூண்டுகோலாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டவள், துருவனின் நெற்றியில் முத்தமிட்டாள். தூக்கத்தில் அவன் புன்னைகைக்க, அவளும் புன்னகைக்க, தெளிவான ஓவியாவின் முகத்தைக் கண்ட இன்பனும் புன்னைகைத்தான். அவர்களின் அன்றைய நாளும் இனிதே துவங்கியது.

1 Like

Order of the story is not good… aarambam sorvaaga ulladhu… kattamapai maatrikolungal… Vaazhthukal… nandri…