"என் பிறந்தநாள்"
இன்று என் பிறந்தநாள்
ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள்
வரும் போது என் இளமையை இழக்கிறேன் ;
இழப்பது புதிதல்ல
பிறந்த போது தாயின்
கருவறையை இழந்தேன் ;
நடக்கும் போது
தவழ்ந்ததை இழந்தேன்
தொட்டில் தாலாட்டை இழந்தேன் ;
தகப்பன் நெஞ்சில்
உறங்கிய நாட்களை இழந்தேன் ;
நிலாச் சோறினை இழந்தேன்
உலாச் சென்ற மூன்று சக்கர
மிதிவண்டியை இழந்தேன் ;
முதல் முதலாக பள்ளிக்கு
சென்ற போது அழுத
அழுகையை இழந்தேன் ;
கல்லூாிக்கு சென்ற பின்
பள்ளியை இழந்தேன்
பள்ளி நண்பனை இழந்தேன் ;
வேலைக்கு சென்ற பொழுது
கல்லூரியை இழந்தேன்
சிரித்த நாட்களை இழந்தேன் ;
நாட்கள், மாதங்கள், வருடங்கள்
நகர நகர பெற்றெடுத்த
தாயை இழக்க நேரும்
தந்தையை இழக்க நேரும் ;
ஒவ்வொரு ஆண்டும்
பிறந்தநாளில் இளமையை
இழக்கும் நான் ;
தாய் மடியில் உறங்கியபடி
என்னை இழக்க வேண்டும் ;
இழப்பதற்கே கருவில் பிறந்து
கல்லறை செல்கிறோம்…