Community

மூனாவது மனுஷன்

அப்போதுதான் முகம் கழுவிக்கொண்டு வந்த புவனாவுக்கு குப்பென்று வேர்த்தது அவள் செல்போன் சிணுங்குவது கேட்டு, பதடத்துடன் கையில் எடுத்து பார்த்தாள். அதே எண்ணிலிருந்து அதே மாதிரி குறுஞ்செய்தி. சட்டென்று டெலீட் செய்துவிட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த அவளை ’ ஆண்ட்டி… ’ என்ற எதிர் வீட்டு குழந்தை அம்முவின் குரல் தட்டி எழுப்பியது. ’ வா அம்மு… ஸ்கூல் போய்ட்டு வந்துட்டியா? உக்காரு… பப்பு சாப்பிடுறியா? ’ என்றவாறே ஒரு குட்டி கிண்ணத்தில் பொட்டுக்கடலை போட்டு தந்தாள் புவனா. அம்முவுடன் பேசிக்கொண்டு இருந்ததில் அந்த வாட்ஸ் அப் விஷயத்தை கொஞ்சம் மறந்திருந்தாள்.

அலுவலகம் முடிந்து வந்த பிரகாஷை பாத்தவுடன் அம்மு பப்பு கிண்ணத்தை கீழே வைத்துவிட்டு ‘பை ஆண்ட்டி’ என்று ஓடியே விட்டால். 'எல்லாரையும் வீட்டுக்குள்ள சேக்காதேன்னு சொன்னா கேக்கவே மாட்டியா புவனா ’ என்று கோவமாக கத்தினான் பிரகாஷ். 'இல்லீங்க… பாப்பா… அவளேதான் வந்தா… நான் கூப்பிடல ’ என்றவாறே காபி கொண்டு வந்தாள் புவனா. காபி குடித்து முடித்தும் ப்ரகாஷுக்கு டென்ஷன் குறையவில்லை. ’ புவனா… இது உன் கிராமம் இல்ல. சென்னை. வீட்ட பூட்டி வை. வெளி ஆளுங்கள வீட்ல சேக்காத. மூனாவது மனுஷங்களோட பேசாத. புரியுதா… ’ என்று வெடித்து முடித்தான்.

இரவு உணவு தயாரிப்பதில் முனைப்பாயிருந்த புவனாவை மீண்டும் செல்போன் சத்தம் அதிர வைத்தது. அதே எண்… அதே போன்ற குறுஞ்செய்தி. டார்லிங்குகளும்… டியர்களும்… இதயக்குறிகளும்… உதட்டுச்சுழிப்புகளும் நிரம்பி வழிந்தன.
போன வாரத்தில் ஒரு நாள் ப்ரகாஷுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது சட்டென்று அழைப்பு துண்டிக்கப்பட க்க்ஷண நேரத்தில் வந்த அடுத்த அழைப்பை சரியாக கவனிக்காமல் எடுத்து ‘என்னங்க… ’ என்று கொஞ்சம் கொஞ்சலாக இவள் பேச, ‘ஸ்வீட் வாய்ஸ்’ என்றது மறுமுனை. பதட்டத்தோடு ’ ராங் நம்பர்ங்க…’ என்று போனை துண்டித்தாள் புவனா. அன்றிலிருந்து தான் இந்த தொல்லை.

பிரகாஷ் சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டான். புவனாவால் சாப்பிடவும் முடியவில்லை… தூங்கவும் முடியவில்லை. ப்ரகாஷிடம் சொல்லி விடலாமா என்றுகூட யோசித்தாள். அவன் அதை எப்படி எடுத்துகொள்வானோ? கண்டிப்பா சாதாரணமா எடுத்துக்க மாட்டான் என்ற உறுதிப்பாட்டுடன் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். விடிந்தே விட்டது.

அடுத்த நாள் சனிக்கிழமை. பிரகாஷ் அலுவலகம் கிளம்பியவுடன் எதிர் வீட்டு அம்முவின் அண்ணன், ஆறாங்கிளாஸ் படிக்கும் ஆகாஷை வீட்டுக்கு கூப்பிட்டாள் புவனா. 'ஆகாஷ்… ! எனக்கு ஒரு நம்பர்ல இருந்து சும்மா சும்மா மெசேஜ் வருது. நான் please dont send message ன்னு அனுப்பிட்டேன். அப்பவும் வந்துகிட்டே இருக்கு. என்னடா பண்ணலாம் ’ என்று அப்பாவியாக கேட்டாள். ‘பிளாக் பண்ணிடுங்க ஆண்ட்டி’ என்றான் ஆகாஷ். 'எப்படிடா பண்ணனும்? நீயே பண்ணிக்குடு என்று போனை கொடுத்தாள் புவனா. 'இந்த நம்பர் தானே… பண்ணிட்டேன் ஆண்ட்டி என்ற ஆகாஷுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பிவைத்தாள்.

புவனாவுக்கு அப்பாடா என்றிருந்தது. சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளை முடித்தாள் … சமைத்தாள்… குளித்தாள்… சாப்பிட்டுவிட்டு தூங்கிபோனாள். எழுந்து போனை பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி. வரிசையாக பத்து குறுஞ்செய்திகள். வேறு எண்ணிலிருந்து. முன்பைவிட மோசமாக. டெலீட் செய்தாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. ஓவென்று கத்தி அழுதாள். அவள் அழுது கொண்டிருக்கும்போதே பிரகாஷ் வந்துவிட்டான். மிரண்டு போனாள் புவனா. 'என்ன ஆச்சு… ஏன் இப்படி அழுவுற… 'என்று அதட்டினான் பிரகாஷ். 'அது… வந்து… வந்து… ’ என்று அவள் விம்மி கொண்டிருக்க அவள் போனுக்கு மறுபடியும் ஒரு மெசேஜ் வந்து விழுந்தது. பிரகாஷ் போனை எடுத்து பார்க்க Good eve baby என்றிருந்தது.

'சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுங்க… ஒரு வாரமா இப்படி மெசேஜ் வருது… யாருன்னே தெரியல ’ என்று தேம்பி தேம்பி அழுதாள் புவனா. ’ ஏய்… நடிக்காதடீ… நீ நம்பர் குடுக்காம எப்படி மெசேஜ் வரும்.? நீதான் எல்லார்கிட்டயும் பல்லக்காட்டி பேசுவியே…! உனக்கு தெரிஞ்சவன்… உன் ஊர்க்காரன் எவனாவது இருப்பான். இதெல்லாம் இங்க கூடாது… உன்ன பஸ் ஏத்தி ஊருக்கு அனுப்பினாதான் சரியவரும்… ’ என்று கத்திவிட்டு வெளியே போய்விட்டான் பிரகாஷ்.

அழுதழுது ஓய்ந்துபோன புவனா ஒரு முடிவுக்கு வந்தவளாய் போனை கையில் எடுத்தாள் . அந்த நம்பருக்கு போன் செய்தாள். அதை எதிர்பார்த்து இருந்தவன் போல அவன் உடனே போனை எடுத்து ஹலோ… என்றான் உற்சாகமாக. ’ அண்ணே! நீங்க யாருன்னு தெரியல… எங்கப்பா எனக்கு வீட்ட வித்து பனம்பொரட்டி கல்யாணம் பண்ணிவைச்சாரு… நீங்க இப்படி மெசேஜ் அனுப்பிகிட்டே இருந்தா என் வீட்டுக்காரரு என்ன வீட்டைவிட்டே தொரத்திடுவாரு… அப்புறம் என் குடும்பமே தற்கொலை பண்ணி சாகவேண்டியது தான். என்ன உன் தங்கச்சியா நெனச்சிக்கண்ணே… please… ’ என்று வெடித்து அழுதாள். Sorry மா என்று எதிர் முனை துண்டிக்கப்பட்டது.

இரவு நீண்டநேரம் கழித்தே பிரகாஷ் வீட்டுக்கு வந்தான்.’ இந்தாங்க… இனிமே எனக்கு போனே வேணாம்… நீங்களே வச்சிக்கோங்க ’ என்று நீட்டினாள் புவனா. 'ம்ம்… நான் வெளியவே சாப்டுட்டேன்… எனக்கு எதுவும் வேணாம்… ’ என்று அவள் அருகில் சென்ற பிரகாஷ் 'இனிமே ஜாகிரதையா இரு… முன்னபின்ன தெரியாத மூனாவது மனுஷங்ககிட்ட பேசாத… புரியுதா? ’ என்று புவனாவை மெதுவாக அணைத்துக்கொண்டான். பிரகாஷ் மார்பில் சாய்ந்து கண்களை மூடிய புவனாவுக்கு தான் இதுவரை பார்த்திராத யாரோ ஒரு மூனாவது மனுஷனான அந்த சகோதரனின் முகம் மங்கலாக தெரிந்தது.

  • இரா. ஹரிப்ரியா
1 Like