ஆசிரமக் குழந்தையின் அழுகுரல்
தாலாட்டித் தலைகோத தாயு மில்லை
தட்டித் திருத்திட தந்தையு மில்லை
நினைத்ததை என்றும் செய்தது மில்லை
நேரத்திற்கு எப்போதும் உண்டது மில்லை
கதறி அழும்போது கட்டியணைக்க யாருமில்லை
கைபிடித்து கதைபேச கனிவுடன் யாருமில்லை
கொசுவின் கடியில் குருதி குறைகிறது
பசியின் பிணியில் வயிறு காய்கிறது
உலகம் எதுவென உணரும் முன்பே
உலகத்தால் ஒதுக்கப்பட்ட ஊமை நான்
ஊரார் பிறந்தநாளை உற்சாகமாய் கொண்டாடும்
பிறந்ததன் அர்த்தம் புரியா புதிரும்நான்
பத்தோடு பதினொன்றாய் மொட்டைத்தரையில் கிடக்க
படைத்தவனுக்கும் என்மீது முன்பிறவிப் பகையிருக்கோ?
– பாரதிப் பிரியன்