Community

பூவே! பெண் பூவே!

மதுரை மத்திய சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தான் கதிரவன். சுதந்திரமான வெளிக் காற்றை சுவாசித்து இழுத்து மூச்சு விட்டான். கை கால்களைச் சோம்பல் முறித்து விடுதலையான அந்த முதல் நொடியை ஆனந்தமாக அனுபவித்தான். அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயல்களை மனம் பட்டியல் போடத் தொடங்கியது.

ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டை அடைந்து வாடிப்பட்டி போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தான். கயல் எப்படி இருக்காளோ தெரியவில்லை! கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போது தானே இவன் ஜெயிலுக்கு வந்து விட்டான்! பாவம், கல்யாணமும் நின்று போனது!. என்ன செய்யறாளோ என்னவோ?

சிறைத்தண்டனை கிடைத்த புதிதில் இரண்டு மூன்று தடவை பார்க்க வந்தாள். அதுக்கப்புறம் தான் மகராசி வரவேயில்லை. என்ன ஆச்சுன்னு தெரியலை?

கதிரவன் பிறந்ததில் இருந்து அனாதையாக வளர்ந்தவன். ஊர் மக்கள் எல்லாம் உதவியதில் அரை வயிறு சாப்பிடக் கிடைத்தது. எல்லார் வீட்டிலும் போய்ச் சொன்ன வேலையை மாடு மாதிரி செய்வான். சில சமயம் கூலியாகக் கொஞ்சம் பணம் கிடைக்கும். சில சமயம் வயிறு நிறையச் சாப்பாடு கிடைக்கும். ஸ்கூலில் கூடச் சில நல்லவர்கள் முயற்சி எடுத்துச் சேர்த்து விட்டார்கள். படிக்க வணங்கவில்லை‌. ஐந்தாம் வகுப்போட நிறுத்தி விட்டான். அதுவும் ஸ்கூலுக்குப் போனதே மதிய உணவுச் சாப்பாட்டுக்காகத் தான்.

அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகர் அந்த ஊரில் நிறையச் சொத்துக்களை வாங்கிக் குவித்தார். அந்த ஊரில் தனது கட்சி அலுவலகத்தையும் ஆரம்பித்து வைத்தார். அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டனாகக் கதிரவன் சேர்ந்து விட்டான். பேரே இல்லாமல் ‘எடுபிடி’ என்று எல்லோராலும் அழைக்கப் பட்டவனுக்குக் கதிரவன் என்று பேர் சூட்டியதே அந்தப் பிரமுகர் தான். கதிரவனுக்கு அதற்கப்புறம் வேளாவேளைக்குச் சாப்பாடு, குடிக்க சாராயம், கள் என்று தங்குதடையில்லாமல் கிடைக்கக் கட்சி ஆஃபிஸே கதியாகக் கிடந்தான். எள் என்று சொல்வதற்குள் எண்ணெயைக் கொண்டு வந்து காய்ச்சி அதில் பலகாரமும் சுட்டுக் கொடுக்கும் கதிரவன் போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை அரசியல் தலைவர்களுக்குக் கவலையேயில்லை.

அந்த சமயத்தில் தான் கயல்விழியைச் சந்தித்தான். பூ வியாபாரம் கயலுக்கு. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அவளுக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று இருந்தது. அதில் பூச் செடிகளை வைத்து வியாபாரம் செய்து பிழைத்த ஏழைக் குடும்பம் அவளுடையது. கயல்விழி, வயதான நோய்வாய்ப்பட்ட அம்மா இரண்டே பேர் தான் அவர்கள் வீட்டில். ஊருக்குள் ஒரு சிறிய ஓட்டு வீடு இருந்தது அவர்களுக்கு.

கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பாள் கயல். இளமை கொஞ்சும் வனப்பான தேகம். பெரிய பெரிய கண்கள் கருவண்டுகள் மாதிரி. நல்ல உழைப்பாளி. தோட்டத்தையும் கவனித்துப் பூந்தோட்டத்தையும் கவனித்துக் கொண்டு அம்மாவையும் அக்கறையாகப் பார்த்துக் கொண்டாள். விதியின் விளையாட்டால் பூமாலைகள் வாங்கும் சாக்கில் அடிக்கடி அவளுடைய கடைக்கு வந்து கயல்விழியைச் சந்தித்த கதிரவன் அவளுடைய அழகில் மயங்கினான்.

கயல்விழிக்கும் அவனுடைய வெள்ளந்தியான குணமும் பெண்களை ஏறேடுத்தும் பார்க்காத கண்ணியமான நடத்தையும் பிடித்துப் போயின. பெண்கள் மட்டுமே இருந்த அவளுடைய வீட்டில் கதிரவன் மாதிரி வலுவான ஆண் ஒருத்தன் துணையாக இருந்தால் மோசமான பெண்பித்தர்கள் இருக்கும் இந்த உலகத்தில் தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழலாம் என்று அவளும் மனதில் கணக்குப் போட்டு அவனுடன் பிரியமாகப் பழக ஆரம்பித்தாள்.

கயல்விழியின் அம்மாவும், தான் கண்ணை மூடுவதற்கு முன்னால் மகளின் வாழ்க்கையும் நல்லபடியாக அமையும் என்று எண்ணி அந்தத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாள். அவளால் எங்கே மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க முடியும்?

கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது கதிரவன் சார்ந்த கட்சியின் தலைவர் ஊழல் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட மாநிலமெங்கும் கலவரம் வெடித்தது. கல்லூரி மாணவிகள் சென்ற ஒரு பஸ் எரிக்கப்பட்டது. நிறைய மாணவிகள் உயிரிழந்தார்கள். அந்தச் சம்பவத்தைச் செய்தது கதிரவன் கட்சிப் பிரமுகரின் மச்சானும் அவனுடைய அடியாட்களும். ஆனால் அந்தப் பிரமுகர் கதிரவனைக் கெஞ்சிக் கூத்தாடி அந்தக் குற்றத்தை அவன் மேல் ஏற்றுக் கொள்ள வைத்தார்.

" நான் எப்படியும் உன்னை ஜாமீனில் வெளியே எடுத்து விடுவேன். அதுக்கப்புறம் உன் கல்யாணமும் என்னுடைய தலைமையில் சிறப்பாகச் செய்து வைக்கிறேன்" என்று உறுதியளிக்கக் கதிரவனும் அப்பாவியாகக் குற்றத்தை ஏற்றுக் கொண்டு சிறைக்குப் போனான். கேஸ் பதியப்பட்ட பின்னால் அந்தப் பிரமுகர் கதிரவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. கயல்விழியும் தன்னால் முடிந்தவரை போராடிப் பார்த்தாள். அவளிடம் இருந்த சொற்பப் பணத்தால் ஒன்றுமே சாதிக்க முடியவில்லை. பத்து வருடக் கடுங்காவல் தண்டனை அனுபவித்து விட்டு இப்போது தான் விடுதலையாகி வருகிறான்.

பஸ்ஸில் போய் இறங்கி ஊருக்குள் செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தான். சிறையில் இருந்த போது வேலை பார்த்து சம்பாதித்த பணம் கணிசமாகப் பையில் இருந்தது. அவனுடைய சட்டைப் பையில் அவன் தனது தற்காப்புக்காக எப்போதும் வைத்துக் கொள்ளும் கத்தி ஒன்றும் இருந்தது.

இருட்ட ஆரம்பித்திருந்தது. ஊருக்குப் போகும் ஒற்றையடிப் பாதை ஆள் அரவமற்றுக் காலியாகத் தெரிந்தது. நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரத்தில் ஆணும் பெண்ணுமாக ஒரு ஜோடி கண்ணில் பட்டார்கள். சிறுவன் ஒருத்தனைக் கையில் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

இன்னும் கொஞ்சம் பக்கத்தில் போனதும் தெரிந்த உருவங்களாக மங்கலாகத் தெரிந்தன. குரலும் கேட்ட குரலாக இருக்கவே கூர்ந்து கவனித்தான்.

" அட, நம்ம கயல் கொரல் மாதிரி இருக்கே! கூட யாரு நம்ம ஃப்ரண்ட் குமரன் மாதிரி இருக்கே! இப்படி சிரிச்சு சிரிச்சு பேசிட்டுப் போறாங்களே! கூட ஒரு சின்னப் பையன் வேற. அடப் பாவி, நாம ஜெயிலில இருந்தப்ப இது ரெண்டும் கல்யாணம் கட்டிக்கிடுச்சுங்களா? என்னை ஏமாத்திட்டு இன்னொருத்தனைக் கட்டிக்கிட்டுக் கொழந்தையும் பெத்துக்கிட்டாளா? எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக் கூட முடியலையா உங்களுக்கு?"

மனதில் வன்மம் பொங்கி வந்தது கதிரவனுக்கு. முன்னால் சென்ற இரண்டு பேரும் கயலின் பூந்தோட்டம் இருக்கிற பக்கம் திரும்பினார்கள்.தோட்டத்திற்கு நடுவில் புதியதாக ஒரு குடிசை. குடிசைக்கு வெளியே ஒரு கட்டில் போடப் பட்டிருந்தது.

" புதுசாக் கல்யாணம் கட்டிக்கிட்டுப் புதுசாக் குடிசை வேறயா? பாவிகளா,நல்லா இருப்பீங்களா நீங்க?"

வயிறார சாபமிட்டான் கதிரவன். பையில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்த குமரனின் மேல் பாய்ந்தான்.

உள்ளே இருந்து அப்போது தான் வெளியே வந்த கயல் அவன் கையிலிருந்த கத்தியைத் தட்டி விட்டாள். பத்ரகாளி போல அவன் முன்னே நின்றாள்.

" என்ன கேவல புத்தி ஒனக்கு!. எதுக்குய்யா அண்ணனைக் கொல்லப் பாக்கறே? எனக்கு வயத்தில கொழந்தையைக் குடுத்துட்டு நீ ஷோக்கா ஜெயிலுக்குப் போயிட்ட. ஊரில என்னை ஒதுக்கி வச்சுட்டாங்க. என்னோட ஆத்தா என் கவலையிலேயே போய்ச் சேந்தா. கொமரன் அண்ணன் மட்டும் இல்லைன்னா நானும் கெணத்தில குதிச்சிருப்பேன்யா. அண்ணன் எனக்குக் குடிசை போட்டுக் கொடுத்துக் காவல் தெய்வமா எங் கூட நிக்குதுய்யா. எங்களைப் பாத்து ஒன்னோட கேவலமான புத்தியில சந்தேகம் வேறயா?"

என்று புலம்பித் தள்ளினாள்.

" அப்படின்னா இது என்னோட மகனா?"

" ஆமாய்யா! ஒன்னோட‌ மகனே தான்! பாரு பாரு நல்லாப் பாத்துக்க. எங்களைக் கொன்னு போட்டுட்டு நீ திரும்பவும் ஜெயிலுக்குப் போ. இவனும் ஒன்னை மாதிரியே இன்னொரு அனாதையா வளரட்டும்!"

வாயடைத்துப் போய் நின்ற கதிரவன் தன் தவறை உணர்ந்து தலை குனிந்து நின்றான்.

புவனா,
25/072020.

1 Like

Subramaniyapuram kadhai maari irukku… vaazhthukkal

1 Like

நன்றி. நான் அந்தப் படம் பார்த்ததில்லை. மதுரை பற்றிய படம் என்பதால் கேள்விப் பட்டிருக்கிறேன்.

புவனா

2 Likes