Community

இமையும் சுமை

தினம் தினம் வசந்தமாய்…

இதழோரப் புன்னகையும்… எதிலும் இன்பம் காணும் எண்ணமும் அவளோடு அழகாய்!

ஆண்டுகளாய் எதிர்பார்த்திருந்தது இன்று எதிர்பாரா நேரத்தில்…

அவளின் செல்லிடப்பேசி ஏதோ சொல்லிட அவள் இரசித்து வைத்த ஏ.ஆர்.இரகுமானின் பாடலோடு ஒலித்தது.
இதுவரை கண்டிடா எண்கள்… அழைப்பை ஏற்று காதோடு வைக்க கேட்டு கேட்டு இரசித்த அவனோட குரல்…
நான் கொஞ்சம் உன்னிடம் பேச…
என்று அவன் உரைப்பதற்குள் எங்கு சந்திக்கலாம் என்றவளுக்கு புன்னகையோடு அவன் பதிலளித்தான் ஓரிடத்தை!
இதுவரை அவளுடையதே, இன்றென்னவோ கையிலிருந்த கைப்பேசியை இரசித்துப் பார்த்தபடி அவளருகே வைத்தாள்.

அவளின் அந்த மாலை…
ஜன்னலோர தென்னங்கீற்றும், சூழ்ந்து நின்ற இருளும், குளிர் தென்றலோடு நிலவும் அவளோடு கதைப்பது போல்…
“சீக்கிரம் தூங்கம்மா”…என்ற அவள் அன்னையின் குரல் கேட்காத காதுகளிருக்க, விளக்கணைத்த அந்த நொடி உணர்த்தியது இரு விநாடிகள் முன் கூறிய உறங்கு என்ற வார்த்தைகள்!
பலநாள் கனவுப் பழித்திருக்க உறக்கத்தில் கனவாப் பிடிக்கும்!
மூட மறுத்த இமைகளும், இடி போல் துடிக்கும் இதயமும் உறங்க விடாமல்…
தனி ஒரு படுக்கையில் இக்கணம் இவ்வுலகின் மிக மகிழ்ச்சியான ஒரு படைப்பாய் தன்னை நினைத்துப் பெருமைக் கொண்டாள்.
இத்துணை ஆவல்… அவனது ஐந்தாறு நொடி வார்த்தைகளில்,
இல்லாமலா…
பேச நினைத்துப் பார்த்து மட்டுமே கொண்ட காலங்கள்.
திங்கள்கள் கடந்து திகைத்துப் பார்க்கும் வருடங்களாய்…
"நேரில் பார்த்து பேசும் காதல்
ஊரிலுண்டு ஏராளம்
நெஞ்சின் உள்ளில் பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்…
இச்சொற்களே சாசனமாய்!
அவனோடு இவள் கடந்த நாட்கள்…
நிஜத்தின் நிழலாய்
ஒளியின் இருளாய்
மொழியின் மௌனமாய்
பனியின் வெயிலாய்
உயிரின் உயிலாய்
எது, எங்கு, எவ்வளவு தொலைவில் எப்படி இருப்பினும் நமக்கென்பதானால் நமக்காய் காத்திருக்கும் என்ற அவளின் நம்பிக்கைக்கு உயிர் கொடுத்தாற்போல் அவனது அந்த அழைப்பு…
விடியலுக்காய் விடியும் வரை விழித்திருந்து அவளை மறந்து உறங்கிப் போனாள்…
கனவிலும் அவனே தான் இருப்பான் என்பதனால்…!
சூரியன் விழிக்க விடியலுண்டு… இன்று மட்டும் இவள் எழுந்து சூரியனை விழிக்கச் செய்தாள்…
என்னவோ அவனே வந்து இவளிடம் கூறியது போல் அந்த வண்ண உடை… அவனும் அந்நிற ஆடையிலேயே வருவான் என்ற நம்பிக்கை வேறு!
ஆயிரத்து ஒன்றாம் முறை என முகக்கண்ணாடியும் கணக்கெடுத்துக் கொண்டிருந்தது.
அவன் சொன்னதை விட அரை மணி நேரம் முன்பே அவ்விடம் அடைந்தாள்.

பார்த்த இடம்… இன்று புதிதாய்…
காய்ந்த மரத்தின் இலை பனிமலர்களாய் உதிர்வது போல் அவளுக்கு!
“உன்னைக் காணும் முன்னே
கடவுள் வந்தாலும் கடவுளைத்
தொழ மாட்டேன்…”
என்றாற்போல் அமர்ந்திருந்தாள் ஆர்வமாய் அவனுக்காக…
திரை விலக்காமல் வீட்டினுள் இருந்தே அவள் கண்டறிந்து விடும் அவனது பல்சரின் சப்தம் இவளின் இதயத்துடிப்பை அதிகமாக்கியது.
வரட்டுமே என மனம் நினைத்தாலும் தானாய் எழுந்து நின்றன அவள் கால்கள்.
தன் மனம் அவனோடே பயணிப்பதையும் உணர்த்தியது அவள் அணிந்த அதே நிற அவனது ஆடை!
அவன் மேலான காதலை மேலும் மேலும் உயரச்செய்தது ஒன்றுமில்லா அந்த வண்ணமும் கூட…
ஆவல் அனைத்தையும் அமைதிக் காக்கச் செய்து அழகாய் புன்னகைத்து நிற்க அவன் சொன்ன Hi என்பதற்கு பதிலும் புன்னகையாய்!
கனவு போல் உள்ளது உன்னருகே நான்… எனத் தொடங்கினான்.
இவள் மனதின் குரலை அவன் கொண்டது போல் இருந்தாலும் இவள் அறிவாள் அவன் மனதையும் கூட…
உரைக்க நினைத்து வந்த பாதியை அவன் உரையாய் கேட்டுறைந்தாள்.
“கடந்துப் போவது தானே வாழ்க்கை”
என்பது மட்டும் முரணாய்!
அவனது வார்த்தைகள் அனைத்தும் அவளைக் கடத்திச் சென்றன கடந்த காலத்திற்கு.
நிகழ்பொழுதிற்கு வரும் முன் அவன் நீட்டிய அவனது திருமண அழைப்பிதழ்!
அசையும் கிளையும்… பறக்கும் பறவைகளும்… அவளது இரத்த ஓட்டமும் ஒரு நொடி நின்றது அவள் கண்களை இருளச் செய்தது.
முதன்முறை அவன் கண்களைப் பார்த்தபடி அழைப்பிதழை வாங்கிய அவள் கிழித்து கீழ் எறிந்து " அதெல்லாம் இல்லை…நீ என்பது நானாகி நாட்களாகின… இதெல்லாம் நடந்தேற வாய்ப்பே இல்லை… உன்னால் முடியாது இவ்வாறு செய்ய… செய்தாலும் நான் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன்" என்று கண் சிவக்க கத்தத் தோன்றியது.
ஆனால் கலங்கத் துடிக்கும் கண்களை கலங்க விடாது உயிர் உறைய புன்னகையை மட்டும் நீட்டித்துக் கொண்டு அவன் நீட்டிய அழைப்பிதழைப் பெற்றாள்.

" நடப்பதெல்லாம் நன்மைக்காகவே இருக்கும் என்ற அவனின் ஆறுதல் இவளை இன்னும் உடையச் செய்தது.

விடைபெற்று அவன் சென்றாலும் விடையற்ற வினாவாய் இவள்!
இரசித்த அதே இடம் நரகமாய்…
கால்கள் நகர்ந்தன…

இருப்பினும் அவன் விட்டுச் சென்ற அதே இடத்தில் என்றும் அவள்!

சுபா நாகராணி.,