Community

நான் வெஜிடேரியன்

இன்னைக்கு ராத்திரி தூங்க முடியுமா என்று தெரியவில்லை. வேலைக்கு சேர போற முதல் நாள் நாளைக்கு. அதனால் தான் தூக்கம் வரவில்லை போல.இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் வேலை இல்லாமல் அழைந்து திரிந்த பொழுதெல்லாம் கிடைக்காத வேலை. என் சொந்தக்காரர் சிபாரிசு மூலமா கிடைத்தது. அவர் எனக்கு பங்காளி முறை உறவுக்காரர். அவரும் கம்பெனி ஹெச் ஆரும் நண்பர்கள். என்னோட ரெசுமை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது தான் அவர் செய்த பேருதவி. அதன் பிறகு நமது திறமை தான். அடுத்தடுத்து மூன்று நிலைகள். அதில் முதல் நிலை ஹெச் ஆர் ரவுண்டு. இரண்டாம் நிலை டெக்னிக்கல். மூன்றாம் நிலை நிர்வாக இயக்குநருடனான கலந்துரையாடல். இரண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப இண்டர்வியூவிற்கு அழைக்கப்பட்டவர்கள் வெறும் மூன்று பேர். அனைவரும் சிபாரிசு மூலம் தான்.

இரண்டாம் நிலையில் மனோகர் என்ற அந்த ஒரு ஆள் வெளியேறிவிட்டார். அதனால் மூன்றாம் நிலைக்கு நானும் இன்னொருத்தரான ராதாகிருஷ்ணனும் பயமின்றி சென்றோம்.

முதல் மாடியில் நிர்வாக இயக்குநருடனான அறை. வெளியில் எங்களைக் காத்திருக்கச் சொல்லி ஹெச் ஆர் பொது மேலாளர் அறையினுள் சென்றார்.

இதுவரை இண்டர்வியூ பயத்தினால் நானும் ராதாகிருஷ்ணனும் பேசியதில்லை. எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையினால் முதலில் பேச்சு கொடுத்தேன்.

நான் நந்தக்குமார். பி.இ மெக்கானிக்கல்

சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டியில. உங்க பேர்?

என் பேரு ராதாகிருஷ்ணன். திருச்சி அண்ணா யுனிவர்சிட்டி.நானும் மெக்கானிக்கல் தான்.

எவ்வளவு பர்சண்ட்டேஜ்‌ நான் 64.4 செகண்ட் கிளாஸ் தான்.ஹிஸ்டரி ஆப் அரியர் மட்டும் பதினொன்னு‌. ஆமா! பத்தோட பதினொன்னு சொல்லி சிரிச்சேன்.

சிரிச்ச உடனே ரெண்டு பேரும் பதட்டமானோம் யாராச்சும் பாக்குறாங்களானு.நல்ல வேளை யாரும் கவனிக்கவில்லை. அந்த மாடியில் இருந்த எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

நான் 86 வித் டெஸ்டின்ங்சன் னு அவன் சொன்னதும் ஆச்சரியம் எனக்கு.

நல்லா படிக்கிற புள்ள ‌போல பாத்தாளே தெரியுது. நீங்க போட்ருக்குற நாமமே சொல்லுது. படிக்கிற புள்ளனு. பேரு வேற ராதாகிருஷ்ணன். கேட்கவா வேணும் என்றேன்.

அட நீங்க வேற என்ன ரெக்கமண்டேசன் பண்ணவரு நாமம் போட்டு தான் வர சொன்னார். அப்போ தான் நா பிராமின்னு தெரியும்னு. இந்த சைடு கடைசியா இருக்கார்ல அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல அவர் தான் ரெகமண்ட் செஞ்சவர். அவர் பேரு மதன கோபால் காடபள்ளி. என் அப்பாவோட ப்ரண்டு. எங்க ஊர் சர்வபள்ளிகாரர் தான் என்றான்.

நானும் ரெக்கமண்டேசன் தான். சர்வபள்ளினா எங்க இருக்கு என்றேன்.

சர்வபள்ளி ஆந்திரா நெல்லூர் டிஸ்டிக். எக்ஸ் பிரசிடன்ட் ராதாகிருஷ்ணன் பிறந்த ஊர் அது. அதான் அவர் பேரு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

அப்போ பொறந்தது சர்வபள்ளி படிச்சது திருச்சிராப்பள்ளி. நல்லா கவிதை மாதிரி இருக்குல. எப்படி தமிழ் நல்லா பேசுறீங்க என்றேன்.

நான் பொறந்தது எல்லாம் திருச்சி ல தான். அப்பா தாத்தா பொறந்தது தான் சர்வபள்ளி.அப்பா நியோகி பிராமின் அம்மா திராவிடுலு பிராமின். இரண்டு பேரும் தெலுங்கு தான். கல்யாணத்துக்கு அப்புறம் அப்பாவுக்கு பெல்லுல வேலை கெடச்சு திருச்சி வந்துட்டாங்க. வருசத்துக்கு எப்பவாவது ஒரு முறை திருப்பதி போயிட்டு அப்படியே ஊருக்கு போயிட்டு வருவோம்.என்றான்

அப்பா பெல்லுல வேலைனா அங்க போலாம்ல இங்கே விட அங்கே அதிக சம்பளம் கிடைக்குமே என்றேன்.

கேட் ஸ்கோர் கம்மி அதனால போக முடியல என்றான்.

அப்படியே என்னைப் பற்றி கேட்டான்.

நீங்க எந்த ஊரு. நான் கும்பகோணம் பக்கத்துல ஆதனூர். இங்க தான் ரூம் எடுத்து தங்கப் போகிறேன் என்றேன்.

திடிரென நிர்வாக இயக்குநர் அறையில் இருந்து நிர்வாக மேலாளர் வெளியே வந்தார்.

முதல் ஆளாக என்னை நிர்வாக இயக்குநரிடம் அழைத்து சென்றார்.

பரஸ்பர அறிமுகங்களுக்கு பிறகு அங்கையே அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டது.

என்னைக்கு வேலைல ஜாயின் பண்றிங்கனு நிர்வாக மேலாளர் கேட்க திடிரென வீட்டில் சொல்லிவிட்டது ஞாபகம் வந்தது. அடுத்த மூன்று நாட்கள் அஷ்டமி நவமி தசமி ஆகையினால் நாலாவது நாள் சேர்ந்து கொள்வதாக சொல்லிட்டு வந்தேன்.

அது ஒரு மல்டி நேஷனல் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம். வருடத்திற்கு 5000 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனம் அது‌. அதில் எனக்கு மாதம் பதினொராயிரம் சம்பளம். வருடாவருடம் ஊதிய உயர்வும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பதவி உயர்வு என்று பச்சை நிற வலுவலுப்பான நிறுவன முத்திரை பதித்த அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரில் போட்டிருந்தது. ஒரு வருடம் காத்திருந்தமைக்கு முருகனின் அருளால் கிடைத்த வேலை என்று நினைத்து கொண்டேன். ஆமாம் அந்த கம்பெனி இருப்பது விராலிமலையில் தான்.

விராலிமலையில் இருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். மூன்று நாட்கள் ஒரு அறுபது வயது முதிர்ந்த மனிதனின் இளமைக் காலம் போல சென்றது.

சரியாக மதியம் ஊரில் இருந்து கிளம்பி விராலிமலை வந்து முன்னமே தரகர் மூலம் தேரடி வீதியில் வீடு எடுத்திருந்தேன். மதிய உணவை வீட்டில் சாப்பிட்டுவிட்டதால் பசி எடுக்க இரவு எட்டு மணி ஆனது. எது எக்கேடு கெட்டாலும் ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவை உண்டு முடித்துவிடும் நல்ல பழக்கம் எனக்குண்டு. இரவு உணவை உண்ண அப்படியே கூகுள் மேப் உதவியுடன் என் தெரு முக்கில் உள்ள ஓட்டல் ஆரியாஸில் இரண்டு தோசை திண்ணுட்டு வந்தேன். தோசை நல்ல முறுகல் நிலையை அடைந்திருந்தது. கை பட்டால் காதல் தோல்வியில் உடையும் இதயம் போல நொறுங்கும்‌ பதத்தை எட்டியிருந்தது. தோசை தமிழர் உணவா ஆரியர் திராவிடர் உணவா என்று எந்த ஐயமுமில்லை. தேங்காய் சட்னி கூட தக்காளி சட்னி முதலில் வந்தது. தேங்காய் சட்னி மீது அழகிய பெண்ணின் வெண் முகத்தில் உள்ள பரு போல தாளித்த கடுகுகள் இருந்தன. நொறுங்கிய தோசையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தேங்காய் சட்னியில் தொட்டு நாக்கில் வைத்தேன். நல்ல முத்திய தேங்காய், விளைந்த பச்சை மிளகாய் உடன் பொரிகடலை வைத்து அரைத்த சட்னி போல மெல்லிய இனிப்புடன் உரைப்பு கலந்திருந்தது.!

inbound8947608092128971168|690x271

அடுத்த வாய் தக்காளி சட்னி மீது. தோசையை தக்காளி சட்னி மீது முக்கி எடுத்து வாயில் வைத்தேன். தக்காளியுடன் பெரிய வெங்காயம், நல்ல நெத்து தேங்காய் உடன் வறுத்த உருட்டு உளுந்து சேர்த்து தாளித்த பின் அரைத்த சட்னி. காவி நிறத்தில் இருந்தது. தோசைக்கு தேங்காய் சட்னியை விட தக்காளி சட்னி தான் நல்ல காம்பினேஷன் என தோன்றியது. எனக்குள் எப்போதும் வெள்ளை தேங்காய் சட்னிக்கும் காவி தக்காளி சட்னிக்கும் இடையே நடக்கும் சண்டையில் தக்காளி சட்னியே ஜெயிக்கும். இரண்டு வாய் திண்பதற்குள் சாம்பார் வந்தது. சட்னி தீரும் வரை சாம்பாரை தொடுவதில்லை நான். முதல் தோசை முழுவதும் சட்னிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அடுத்த தோசை வந்தது இந்த தோசை முழுவதும் சாம்பாருக்காக மட்டும்.

தோசையில் சாம்பாரை தொட்டு திண்பதை விட, தோசை மீது சாம்பாரை ஊத்தி சில நொடிகள் ஊர விட்டு திண்பது அலாதியானது.

இரவு உணவை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து படுத்து கொண்டு இருந்தேன். தூக்கம் வரவில்லை இன்னும்.

விடிந்தது

மணி 5.30 கந்த சஷ்டி கவசம் ஒலிக்க எழுந்து எல்லா வேலைகளையும் முடித்து தயாராக 8 மணி. அப்படியே மலையடிவாரம் சென்று முருகனை வணங்கி காலை உணவை உண்ண மீண்டும் ஆரியாஸ் சென்றேன். ஓட்டலுக்கு சென்றால் எக்காரணம் கொண்டும் இட்லி திண்ண கூடாது என்பது என் கொள்கை. ஆதலால் மீண்டும் தோசை.

பேக்டரிக்கு வரும் வழியில் மஜித் அருகில் இரவு நேர பீப் - புரோட்டா கடைகள் இருப்பதற்கான அடையாளமாக உணவு வகைகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஒரே குஷி! இன்னைக்கு இரவு பீப் வித் புரோட்டா தான் என்று செரிமான சுரப்பிகளுக்கு முன் தகவல் கொடுத்தேன்.

பேக்டரியில் முதல் நாள். நானும் ராதாகிருஷ்ணனும் மேனேஜர் மற்றும் டெபுட்டி, அசிஸ்டென்ட் மேனேஜர்களிடம் அறிமுகமானோம்.

இன்னைக்கு உங்களுக்கு வேலை பேக்டரிக்கு வெளியே தான் இருக்கும் என்றார் மேனேஜர்.

இன்னைக்கு பிபாப் ஆடிட் ஹோண்டா கார்ஸ் அண்ட் ரெனா நிஸான்ல இருந்து இன்ஜினியர் வராங்க. நந்தகுமார் நீங்க ஹோண்டா கார்ஸ் புனித் சர்மாவை திருச்சி எஸ்ஸாரம் ஓட்டல்ல பிக் அப் ‌பண்ணிட்டு ராமேஸ்வரம் கூப்ட்டு போயிட்டு வரனும். ராமேஸ்வரம் போனதும் இந்த போலிஸ்காரர் நம்பருக்கு போன் பண்ணா அவர் தரிசனம் பண்ண ஏற்பாடு செய்வார்.

நாளைக்கு ஹோண்டா கார்ஸ் ஆடிட். ராதாகிருஷ்ணன் நீங்க ஓட்டல் திருச்சி ரெட் பாஃக்ஸ்ல ரெனா நிஸான் சதீஷ் குமாரை கூப்பிட்டுட்டு பேக்டரிக்கு வாங்க. பதினொரு மணியில் இருந்து ரெனா நிஸான் ஆடிட். இரண்டு காரும் வெளியே நிக்குது. நம்ம கம்பெனி கார் தான். இந்தாங்க கார்ட் இதுல டெலிகேட்ஸ் ஓட கான்டாக்ட் நம்பர் ‌இருக்கு. பணத்தேவைக்கு பெட்டி கேஷ் இரண்டாயிரம் கொடுத்துவிட்டு ‌சீக்கிரம கெளம்புங்க என்று சொல்லி கான்பரன்சிங் ரூமுக்குள் நுழைந்தார் மேலாளர்.

எங்க இரண்டு பேருக்கும் திக்கும் தெரியல திசையும் தெரியல.

வெள்ளை நிற இன்னோவா கார்ல் ஏறி எஸ்ஸாரம் ஓட்டல் போய் புனித் சர்மாவை பிக் அப் பண்ண மணி பத்தரை ஆனது. மேனேஜர் வெங்கட்ராமன் வரலயா என புனித் சர்மா கேட்க என்ன சொல்வதென தெரியாமல் நான், அவர் வர‌முடியாத சூழல் இன்னைக்கு இன்னொரு ஆடிட் அதனால வரலனு சமாளித்தேன்.

கூகுள் மேப் உதவியுடன் ராமேஸ்வரம் போக ஆகும் நேரத்தை பார்த்தேன். நான்கரை மணிநேரம் ஆகும் என்று காட்டியது. சரியாக மூன்று மணிக்கு ராமேஸ்வரம் போகலாமா என்று டிரைவரிடம் கேட்க. போயிடலாம் தம்பி என்றார். உடனே ராமேஸ்வரத்தில் உள்ள போலிஸ்காரருக்கு போன் செய்து மூன்று மணிக்கு வருவதாக தகவல் கொடுத்தேன்.

இடையில் காரைக்குடி இல்லை தேவகோட்டையில் வண்டிய நிறுத்தி சாப்பிடனும் என்று டிரைவரிடம் சொல்லிவிட்டேன்‌. பன்னிரண்டிலிருந்து ஒரு மணிக்குள் சாப்பிட்டு இருக்க வேண்டும் எனக்கு.

புதுக்கோட்டை கடக்கும் வரை யாரிடமும் எதுவும் பேசவில்லை. எனது சிந்தனை எல்லாம் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே எப்படி ஒரு கஸ்டமர் ஓட வெளியே அனுப்புறாங்க ? என்னவா இருக்கும் ‌என்றே இருந்தது.புனித் சர்மா காரிலேயே தூங்கிவிட்டார்.

மதியம் பன்னன்டரைக்கு காரைக்குடி வந்தோம். புனித்தை எழுப்பி லஞ்ச் சாப்பிடலாம் என்றேன்.

ஃபோனில் நேரத்தை பார்த்து அதுக்குள்ளவா இன்னும் ஒரு மணிநேரம் ஆகட்டும் என்று சொல்லிட்டார்.

எனக்கு அதை மறுக்கவும் முடியாமல் அதை ஒத்துக்கொள்ளவும் முடியாமல் சரி என்று சொல்லி விட்டு டிரைவரிடம் திருவாடானைல சாப்பிடலாம் என்றேன்.

திருவாடனைல சாப்பாடு நல்லாருக்காது அதனால ராமநாதபுரம் போயிடலாம் என்றார் டிரைவர். சரி முன்அனுபவம் உள்ள டிரைவர் என்பதால் ஒத்துக்கொண்டேன். நிறைய பேர் சொல்வார்கள் பசி ருசி அறியாது என்று ஆனால் என் பசி ருசி அறியும்.

ராமநாதபுரம் பைபாசை கடந்து ஊருக்குள் நுழையும் போது புனித்திடம் வெஜ்ஜா நான்வெஜ்ஜா என்றேன்.

கேட்டு முடிப்பதற்குள் டிரைவர், தம்பி சர்மா பேரு பிராமின் தான் வைப்பாங்க தம்பி வெஜிடேரியன் தான்.

டிரைவர் தமிழில் சொன்னது புனித்திற்கு புரியவில்லை.

புனித் இப்போ வெஜ். கோயிலுக்கு போயிட்டு வந்த பின்ன இரவு உணவு நான் வெஜிடேரியன் என்று சொல்ல எனக்கு அதிர்ச்சி.

உடனே டிரைவரிடம் நான், அண்ணா இவரு நான் வெஜிடேரியனாம் என்றேன்.

டிரைவர் எதுவும் பதில் பேசவில்லை. நமட்டு சிரிப்பு மட்டும் வந்தது.

ஓட்டல் ஐஸ்வர்யாவில் மதிய உணவை உண்ண தயாராகி மூன்று சாப்பாடு ஆர்டர் செய்தோம். நார்த் இந்தியன் தாலி அங்கு அப்போது இல்லை. அதனால் புனித்தையும் தமிழ் நாட்டு மதிய விருந்துக்கு ஆட்படுத்தினோம். தமிழகத்தின் அனைத்து சராசரி ஓட்டல்களின் சுவையே அங்கும் இருந்தது. புனித் சர்மா மட்டும் இரண்டு அப்பளம் வாங்கினார். அப்பளத்தின் உப்பு சுவை அவருக்கு மிகவும் பிடித்திருந்திருக்கும் போல.மதிய சாப்பாட்டை முடித்து கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டோம்.

மண்டபத்தை தாண்டி பாம்பன் பாலத்தில் கார் நுழைந்ததும் புனித் சர்மா பேராச்சரியத்தில் மூழ்கினார். அந்த கடல் காட்சிகள் அவருக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தது.

டிரைவர் உடனே என்னிடம் வட இந்தியர்கள் கடலையெல்லாம் பாததுருக்க மாட்டாங்க. வண்டிய ஓரத்தில் நிறுத்தி பாலத்தை சுத்தி பாத்துட்டு அப்பறம் போகலாம் என்றார்.

நான் உடனே புனித்திடம் இதுக்கு முன்ன கடலை பாத்துருக்கீங்களா என்று கேட்க,

இதான் முதல் தடவை. பிறந்தது படிச்சது எல்லாம் அரியானா தான் என்றார். வேலை பார்ப்பது கிரேட்டர் நொய்டாவில் என்றார்.

காரை நிறுத்தி விட்டு பாம்பன் பாலத்தை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தோம்.

புனித் சர்மா என்னிடம் வந்து ஒரு பேரார்வத்துடன் , இங்கே கடல் உணவு எங்க கிடைக்கும். சாமி தரிசனம் முடித்து விட்டு சாப்பிடலாமா என்றார் பவ்யமாக.

என் வயது 22. என்னை விட சில வருடங்கள் மூத்தவர் அவர். அவர் அப்படி கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவருக்கு கடல் உணவு என்பது சிறுவயது ஆசையாக இருந்திருக்கலாம். அதை நிறைவேற்ற ஆசைப்படுகிறார் என்று நினைத்தேன். உடனே டிரைவரிடம் கேட்க அவர் நிறைய ஓட்டல் இருக்கிறது என்றார்.

அப்படியே போலிஸ்காரருக்கு போன் போட்டு தகவல் கொடுத்தேன்.

பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தை வெளியில் இருந்தே பார்த்துவிட்டு நகர்ந்தோம். நினைவிடம் உள்ளே செல்ல அவருக்கு ஆர்வம் இல்லை.

சன்னதி தெருவில் போலிஸ்காரரை ஏற்றி வண்டியையும் டிரைவரையும் பார்க்கிங்கில் விட்டு மூன்று பேரும் கோயிலுக்குள் சென்றோம். மணி அப்போது மாலை 3: 30 ஆனது.

தீர்த்தம் ஆடலையா என்றார் போலிஸ் காரர். இல்லை ரொம்ப லேட் ஆகிடும் என்று சொன்னேன். எப்படி உங்களுக்கு எங்க கம்பெனியோட பழக்கம் என்று கேட்டேன். அவர் சிரித்தார். நான் மேலும் போலிஸா இருந்துக்கிட்டு எப்படி ஒரு கைட் மாதிரி வறீங்க என்றேன்.

அவர் முகம் கொஞ்சம் சோகமானது. அவருக்கு ஒரு 40 வயது இருக்கும். நரைத்த தலை. சற்றே கூன் வளைந்த முதுகு. வலுக்கை அற்ற தலை. தொப்பை அறவே இல்லை.

தம்பி, நான் வேலைக்கு சேர்ந்து 12 வருடம் ஆகுது. என் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் நீர் பழனி. உங்க கம்பெனி பி ஆர் ஓ மூலம் என் டிரான்ஸ்ஃபர்க்கு மூவ் பண்றேன். அதனால இந்த ஹெல்ப். டூட்டில இருக்கும் போது வந்தா தான் தப்பு. இப்போ மப்டில தான் இருக்கேன்னு சொல்லி சிரிச்சார். கட்டண தரிசனம் 100 ரூபாய் என இருந்தது. டிக்கெட் எடுக்க போகும் போது போலிஸ்காரர் அதெல்லாம் எடுக்க வேண்டாம் என்று கூறி நேரடியாக சன்னதிக்கே அழைத்து சென்றார். அங்கு பணிபுரியும் அறநிலையத்துறை ஊழியர்கள் அனைவருடனும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது.

சாமி தரிசனம் முடித்து சரியாக 4:10 ற்கு கோயிலை விட்டு வெளியேறினோம்.

டிரைவருக்கு போன் செய்து கோயில் வாசலுக்கு வர சொல்லி மூவரும் காரில் ஏறினோம்.

அடுத்து என்ன பிளான் என்றார் போலிஸ்.

கடல் உணவு சாப்பிட நல்ல ஓட்டல் போகனும் என்றேன்.

உடனே போலிஸ்காரர் ராமேஸ்வரம் சீ புட் மாதிரி உலகத்தில எங்கையும் சாப்பிட முடியாது என்றார்.

ஏன்? என்றேன்.

இந்தியாவுல இருக்கும் மீன்களில் கால்வாசி ராமேஸ்வரத்தில் மட்டும் தான் கிடைக்கும். பாண்டிச்சேரி, சென்னை, கொல்கத்தா, பூரி, விசாகப்பட்டினம், தொண்டி, கன்னியாகுமரி, கொச்சி, கோழிக்கோடு, கோவா, மங்களூர் னு எந்த ஊர்லயும் கிடைக்காத மீன் எல்லாம் இங்கே மட்டும் தான் கிடைக்கும். பியூசன் புட் ல குறிப்பாக இந்தியன் ஸ்ரீலங்கா சவுதி பெர்சிய பியுசன் இங்க மட்டுமே கிடைக்கும் என்றார்.

ஓட்டல் தமிழ் நாடு போகலாம் என்றார் டிரைவர்.

திடிரென பலத்த சிரிப்பு போலீஸ்காரரிடம் இருந்து.

ஏன் சிரிக்கிறீங்க என்றேன்

ராமேஸ்வரம் கடல் உணவுக்கு மிக முக்கியமான ஊரு. ஓட்டல் தமிழ் நாடு தமிழக அரசு சுற்றுலா துறையின் கீழ் இயங்குற ஒரு நிறுவனம். மீனவர்கள் மிகுதியாக வசிக்கும் நகரம் இது. அப்படி இருக்கும் போது இந்த நகரத்தில் இயங்கும் ஒரு அரசு நிறுவனத்தில் கடல் உணவே கிடையாது. கடல் உணவு என்று இல்லை அசைவ உணவுகளே கிடையாது என்றார்.

கோயில் இருக்கு அதனால இருக்கும் ‌என்றார் டிரைவர்.

இல்லை அப்படி இல்லை மதுரை ராமேஸ்வரத்தை விட பெரிய கோயில் நகரம் அங்க விதவிதமான அசைவ உணவுகள் அரச ஓட்டல்ல பரிமாறப்படுகிறதே. இதெல்லாம் மேலிடத்தில இருந்து வந்த மறைமுக உத்தரவு. ஓட்டல் முழுக்க நாங்கள் ஏன் சைவமாக இருக்கிறோம்னு கேக்காதே. நீ ஏன் சைவமாக இருக்கக் கூடாதுனு கேட்டுக்கோனு எல்லாம் எழுதி வச்சுருக்காங்க.ராமேஸ்வரம் முழுவதும் வலதுசாரி ஆட்கள் புகுந்து பல வருசம் ஆச்சு. எங்க பார்த்தாலும் இந்தி, குஜராத்தி தான் என்றார்.

அப்போ வேற எந்த ஓட்டல் போகலாம் என்றேன்.

ஓட்டல் சோழா, சின்ன ஓட்டல் தான் ஆனா நல்லாருக்கும் என்றார்.

நால்வரும் ஓட்டல் சோழாவினுள் நுழைந்தோம். கார் பார்க்கிங் இல்லாததால்
காரை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு இருந்தோம். ஓட்டலினுள் கூட்டம் குறைவாக இருந்தது. இருபது பேர் மட்டுமே உட்கார்ந்து கொள்ளும் வசதி.

மெனு கார்டு இருந்தது.

நானும் டிரைவரும் அருகில் அமர்ந்தோம்.

எங்களுக்கு எதிரே போலிஸ்காரரும் புனித்தும் அமர்ந்தனர்.

என்னை ஆர்டர் செய்ய சொன்னார் புனித்.

ஆர்டர் செய்ய புரட்டினேன். பீப் இல்லை. சர்வரிடம் பீப் இல்லையா என்றேன்.

திடுக்கிட்ட டிரைவர் தம்பி பீப்ல்லாம் ஆர்டர் பண்ணாத என்றார்.

உடனே போலிஸ்காரர் குறுக்கிட்டு ஏன் என்றார்.

அதற்குள் சர்வர் பீப் இல்லை. வெளில தான் கிடைக்கும் என்றார்.

போலிஸ்காரரிடம் தயக்கமாக கோயிலுக்கு போயிட்டு பீப் சாப்பிடுறது தப்பு என்றார் டிரைவர்.

சிரித்துக்கொண்டே போலிஸ்காரர் எதுவும் சொல்லவில்லை.

நான்கு பேருக்கு கனவாய் மசாலா, நெத்திலி வறுவல், நண்டு வறுவல் மற்றும் இறால் வறுவல் ஆர்டர் செய்தேன். 20 நிமிடங்கள் கழித்து வந்தது.

நான்கு பதார்த்தங்களையும் நான்கு பேரும் பங்கிட்டுக் கொண்டோம்.

கனவாய் மசாலா தான் இதில் ஹைலைட். நண்டு மிகுந்த காரமாக இருந்தது.

நண்டில் எவ்வளவு காரம் சேர்க்கிறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும் என்றார் போலிஸகாரர்.

நண்டில் இனிப்பு சுவை கூட உணரப்பட்டது. நெத்திலி உவர்ப்பாய் உவப்பாய் இருந்தது. இறால் வறுவல் எனக்கு பிடிக்கவில்லை. புனித்திற்கு இறால் பிடித்திருந்தது.

ஓட்டலில் இருந்து புறப்பட மணி 5.45 ஆனது. இப்பொழுது ஓட்டலில் சாப்பிட கூட்டம் அள்ளியது. நிற்க கூட இடமில்லை.

பாம்பனில் தான் போலிஸ்காரர் தங்கியிருந்தார். அவரை பாம்பனில் இறக்கி விட்டு நேராக திருச்சி வந்து சேர்ந்தோம்.

இரவு 9.30 க்கு திருச்சி வந்து எஸ்ஸாரம் ஓட்டலில் புனித்தை இறக்கி விட்டு விராலிமலை வந்து சேர்ந்தேன்.

மணி 10.10 காலையில் பார்த்த பீப் புரோட்டா கடைகள் திறந்திருந்தன. காரை நிறுத்த சொல்லி இறங்கி சென்று இரவு உணவிற்கு பீப் கிரேவியும் புரோட்டாவும் வாங்கி காருக்கு உள்ளே வந்தேன்.

டிரைவர் ஏதோ சொல்ல முற்பட்டார். ஆனால் எதுவும் சொல்லவில்லை.

நான் வீட்டில் அருகில் இறங்கி அவரை அனுப்பி வைத்தேன்.

மறுநாள் காலையில் அலுவலகம் சென்றேன். புனித் சர்மா வந்திருந்தார். பிபாப் ஆடிட் ஆரம்பமானது. எனக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் ஏ ஐ‌ ஏ ஜி பிபாப் கையேடு கொடுத்து படிக்க சொல்லப்பட்டது.

மதிய உணவு இடைவேளை வந்தது. 1 மணிநேரம் இடைவேளை. மதியம் ஒரு மணியில் இருந்து இரண்டு மணி வரை.

ராதாகிருஷ்ணன் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வந்திருந்தான். நான் வெளியே வந்து பார்சல் வாங்கி வந்தேன். அதுவரைக்கும் ராதாகிருஷ்ணன் காத்திருந்தான்.

உணவருந்தும் இடத்திற்கு இருவரும் சென்றோம்.

என்ன சாப்பாடு என்றான் ராதாகிருஷ்ணன்.

மீல்ஸ் தான் மீன் குழம்பு வறுவல் ஓட என்றேன்.

திடுக்கிட்ட ராதாகிருஷ்ணன் " ஜி இங்கே நான் வெஜிடேரியன் அலோவ்ட் இல்ல சுவற்றில் உள்ள போஸ்டரை பாருங்க என்றான்.

அதில் வெஜிடேரியன் புட்ஸ் ஒன்லி அலோவ்ட் நான் வெஜிடேரியன் புட்ஸ் ஸ்டிரிக்ட்லி நாட் அலோவ்ட் என்று இருந்தது. அதற்கு கீழே

நாங்கள் ஏன் சைவமாக இருக்கிறோம் என்று கேட்காதே. மாறாக நீ ஏன் சைவமாக இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்.

Animals are my friends and I don’t eat my friends.

My food is grown and harvested, not born and killed. Sorry if that offends you.

என்று எழுதப்பட்டிருந்தது.

எனக்கு ராமேஸ்வரம் போலிஸ்காரர் ஞாபகம் வந்தது.

எல்லாரும் சாப்பிட்டு போன பிறகு சாப்பிடலாம் என்று ராதாகிருஷ்ணன் சொன்னான்.

எல்லாரும் சென்ற பிறகு இருக்கையில் அமர்ந்து பார்சலை திறந்தேன்.

ராதாகிருஷ்ணன் சாம்பார் சாதம் கொண்டு வந்து இருந்தான்.

நான் “நான் வெஜ்” சாப்பிடுவிங்களா என்று ராதாகிருஷ்ணனிடம் கேட்டேன்.

இல்லை சாப்பிட மாட்டேன் என்று கூறினான்.

நான் மீன் குழம்பை எடுத்து ஊற்றும் போது அதன் வாசம் அந்த அறை முழுவதும் பரவியது. அப்படி ஒரு வாசனை. வறுத்த மீனினை சோற்றின் உள்ளே வச்சு ஒவ்வொரு வாய்க்கும் திண்றேன். யாரும் வந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுடன் வேகவேகமாக திண்றேன்.

மிஞ்சிய மீனின் நடு முள்ளை பார்சல் இலையின் உள்ளே வைத்து நான்காக மடக்கி வெளியில் கொண்டு போய் போட போகும் போது எனது மேலாளர் வெங்கட்ராமன் ஆடிட் முடிந்து சாப்பிட உள்ளே வந்தார்.

வந்த உடனே மீன் குழம்பு வாசம் அவருக்கு ஒவ்வாமையை உண்டாக்கியது.

உச்ச கோபத்தில் யார் மீன் சாப்பிட்டது என்று கத்த அலுவலகத்தில் இருந்த சிலர் அனைவரும் கூடினர்.

நந்தகுமார் கை கழுவிட்டு என்னை வந்து பாருங்கனு சொல்லிட்டு சாப்பிடாமல் போனார்.

கை கழுவிட்டு அவரை பார்த்தேன். அவருடைய சிஸ்டம் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

என்னை ஏரெடுத்து பார்த்து "நீங்க சாப்பிட உக்காரும் போது நான்வெஜிடேரியன் சாப்பிட கூடாது னு அங்க போட்ருக்குற அறிவிப்பை பாக்கலையா என்றார்.

பாத்தேன் சார். ஆனால் அதுக்கு முன்னையே பார்சல் வாங்கிட்டு வந்துட்டேன் அதான் சாப்பிட வேண்டியதா போச்சு என்றேன்.

இதான் லாஸ்ட் வார்னிங் என்று கூறி இடத்தை விட்டு எழுந்து கை கழுவ சென்றுவிட்டார்.

சில மணி நேரம் கழித்து மேலாண்மை இயக்குநரிடம் இருந்து அழைப்பு வந்தது.உடனடியாக வந்து சந்திக்குமாறு.

போய் மேலாண்மை இயக்குனரை சந்தித்தேன் அவர் நிர்வாக இயக்குனரிடம் அழைத்துச் சென்றார்.

அங்கு ஏற்கனவே என்னை சிபாரிசு செய்த ஹெச் ஆரும் அமர்ந்து இருந்தார்.

இருக்கையில் அமர சொல்லாமல் நிற்க வைத்து முதல் கேள்வியாக ஏன் நான் வெஜிடேரியன் ஃபுட்டை உள்ள கொண்டு வந்து சாப்ட்டீங்க இனிமேல் மறுபடியும் இப்படி செய்தால் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டி வரும் என்று கூறி போக சொல்லிவிட்டார்.

நான் வெளியே நிற்கும் போது அங்கு வந்த டிரைவர் ‘‘நேத்தே சொல்லனும்னு இருந்தேன். நான் வெஜிடேரியன் கம்பெனி ல உள்ள அனுமதி ‌இல்லேனு’’ என்று என்னைப் பார்த்து பரிதாபமாக கூறிச் சென்றார்.

அன்றைய தினமே ஹெச் ஆர் என் பங்காளிக்கு போன் செய்து நடந்த சம்பவங்களை கூற சில நிமிடங்களில் என் பங்காளி என் நம்பருக்கு அழைத்தார்.

கடும் கோபத்தில் டேய் என்னடா பண்ணி வச்சுருக்க. நீ எப்படி டா கறியெல்லாம் திங்கிற. நம்ம சுத்த சைவப்பிள்ளை டா. சித்தப்பா சித்திக்கு தெரியுமா இது. மாட்டுக்கறி எல்லாம் திங்கிறியாம். என்ன எழவுடா இது என்றார்.

நான் எதுவும் பேசவில்லை.

ஹெச் ஆர் சோம சுந்தரம் பேசுனான். இனிமேல் இப்படி பண்ணா டிஸ்மிஸ் பண்ணிடுவாங்களாம். ஒழுங்கா நடந்துக்கோ. பெரிய கம்பெனி. இனி கறி திங்கனும்னு ஆசை இருந்தால் அடியோடு மறந்திரு. நீ கறி திங்கிறது வீட்டுக்கு தெரிஞ்சுச்சு என்ன நடக்கும்னு உனக்கே தெரியும். அவ்வளவு தான் சொல்லுவேன் என்றார்.

நான் சரிண்ணே என்று சொல்ல. தொடர்பை துண்டித்தார்.

அன்று கம்பெனியில் இருந்து வர மாலை 6 மணி ஆனது. வரும் வழியில் பீப் புரோட்டா கடை இருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு கடைக்காரரிடம் நாளை மதியம் கடை இருக்குமா என்றேன்.

புரோட்டா இருக்காது. வெறும் பீப் பிரியாணி மட்டும் கிடைக்கும் என்றார்.

மறுநாள் பேக்டரிக்கு சென்றேன். உணவு இடைவேளை வந்தது. வண்டியை எடுத்து கொண்டு பீப் பிரியாணி வாங்கி கொண்டு நேராக உணவு உண்ணும் இடத்துக்கு வந்தேன். அங்கு பணிபுரியும் இன்ஜினியர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அவர்களுடன் ராதாகிருஷ்ணனும் சோமசுந்தரமும் இருந்தனர். மேலாளர் வருவதற்கு காத்திருந்தேன். மேலாளர் வருவதற்கு தாமதம் ஆனது. பீப் பிரியாணியால் மேல் அன்னசுரப்பியில் சுரப்பு கூடியது.

இருக்கையில் அமர்ந்தேன். பிரியாணி பொட்டலத்தை திறந்தேன். முதல் வாயாக கறித்துண்டை எடுத்து மென்றேன். முழு பிரியாணியையும் திண்று தீர்த்தேன்.

இருக்கையில் இருந்து எந்திரிக்கும் பொழுது என்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலாண்மை இயக்குனருக்கு மெயில் செய்தேன். மெயில் சிசியில் வெங்கட்ராமன் மேலாளரையும் சோமசுந்தரத்தையும் நிர்வாக இயக்குனரையும் குறிப்பிட்டிருந்தேன்.

~ நவில்

3 Likes

எனது உணவு எனது உரிமை👌
அதை நீ சொன்ன விதம் மிக அருமை நண்பா❤️