Community

தென்மேற்கு பருவக் காதல்

மடகாஸ்கர், ஆப்பிரிக்கா கண்டத்திற்கு தென்கிழக்கு பகுதியில் இருக்கும் ஒரு தீவு தேசம், இந்திய பெருங்கடலின் மிகப்பெரிய தீவும் இது தான். அங்கு நகரமாக வளர்ந்து வரும் ஒரு கிராமத்தில் ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியராக பணியாற்றி வருகிறாள் தஹினா(Tahina), 25 வயது, மாநிறம், தெற்காசிய முக சாயல், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள், தந்தையின் சிறுதொழிலை பெரிதாக்க ஆசை கொண்டவள், கதைகள் படிப்பது தான் இவளுக்கு பொழுதுபோக்கு. வாழ்க்கையில் பெரிதாக வேறு எந்த ஆசையும் இல்லாமல், எளிமையாக, அமைதியாக புத்தகங்களோடு தான் அவளது நாட்கள் கடந்து கொண்டிருந்தது. ஜனவரி 24, 2020 அன்றும் வழக்கம் போல் பணியில் இருந்து வீடு திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, அன்றிரவு மிக கடுமையான புயல் ஒன்று மடகாஸ்கரில் கரையை கடக்கிறது என்ற செய்தியை பார்க்கிறாள். சில மணி நேரங்களிலேயே அந்த டையேன்(Diane) என்ற புயலின் தாக்கத்தை முழுமையாக உணர்ந்தார்கள் அந்த கிராமத்து மக்கள்.

ஊரெல்லாம் வெள்ளம், சில உயர்த்த நிலப்பரப்புகளில் நிலச்சரிவு என்று மடகாஸ்கருக்கு ஒரு மிகப்பெரிய பேரிடரை நிகழ்த்தியது அந்த புயல். வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததும், மக்கள் அவரவர் வீட்டு மொட்டைமாடியில் தஞ்சம் அடைந்தனர். அதில் தஹினாவின் குடும்பமும் விதிவிலக்கல்ல. 25ஆம் தேதி விடிந்ததும் தான் தெரிந்தது, அங்கு ஏற்பட்டிருந்த சேதங்கள் எல்லாம், மின்சாரம் இல்லை, உணவு, நீர் ஏதும் போதிய அளவு இல்லை, அனைவரையும் இடம் மாற்றி நிவாரண முகாமிற்கு அழைத்து செல்லவும் போதிய வசதி இல்லை.

அப்போது தான், இரு நாடுகளிடையே உள்ள நட்பின் அடிப்படையில் மடகாஸ்கருக்கு உதவ முன்வந்தது இந்தியா. ‘Operation Vanilla’ என்பதன் அடிப்படியில், நிவாரண பொருட்களையும், நிவாரண பணிகளில் உதவ, இந்திய கடற்படை வீரர்கள் சிலரையும் அனுப்பியது இந்தியா. அந்த வீரர்களில் ஒருவன் தான் தாமஸ்(Thomas), 27 வயது, நன்கு பயின்ற உடலும், ஒரு பாதுகாப்பு வீரனுக்கான ஒழுக்கமும் கொண்டவன். மடகாஸ்கருக்கு சென்றடைந்ததும், இவர்களுக்கு வந்த பணி, இத்தனை நாட்களும் மீட்கப்படாத மக்களை மீட்பது தான்.

வற்றாத வெள்ளத்தில் தஹினாவின் குடும்பத்தை மீட்க சென்ற குழுவில் ஒருவனாக இருந்தான் தாமஸ். அங்கு, சரியான உணவின்றி சோர்ந்து கிடந்த தன்னை, கரம்பிடித்து படகில் ஏற்றிய தாமஸை பார்த்ததும் தஹினாவிற்கு, கடைசியாக அவள் படித்த கதையில் வரும், அவளுக்கு மிகவும் பிடித்த கதாநாயகனின் நியாபகம் வந்தது. அதில் கதாநாயகியின் இன்னலான சூழலில் இருந்து அவளை மீட்க மாவீரனாக வரும் கதாநாயகனை நினைவில் கொண்டாள். அவள் மனதில் சிறு ஆசையும் மலர்ந்தது. அப்போது அவள், அவனை பார்த்தபோது, இவள் பதற்றத்தோடு ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை பார்த்து அவன் புன்னகைத்திருந்தான். அதுவே அவர்கள் இருவரும் கண்களை பார்த்து புன்னகை பரிமாறிக்கொண்ட முதல் தருணம். அப்போது தாமஸின் மனத்திலும் ஆசை மலர்ந்தது, ஆனால் சாதாரண ஆசை தானே என்று அவன் கடந்து விட்டான். ஆனால் தஹினாவிற்கோ அது காதலாக மாறியது. அன்றிலிருந்து, 3 நாட்கள் நிவாரண முகாமில் இருவரும் அடிக்கடி பார்த்துக்கொள்ள, புன்னகையால் மட்டுமே உரையாடிக் கொண்டனர். பொறுமை இழந்த தஹினா, இறுதி நாளன்று அவனிடம் பேச துணிந்தால், இருவரும் பெயர்கள் மட்டும் பரிமாறிய உடனே யாரோ அழைக்க, தாமஸ் அவளிடம் கூறிவிட்டு விரைந்து சென்று விட்டான். அந்த இடத்தை விட்டு அல்ல. மடகாஸ்கரை விட்டே.

கப்பலில் ஏரிய பின்பு தான் உணர்கிறான் தன் இதயத்தை தொலைத்ததாக. பெயரை தவிர இருவருக்கும் வேறு எந்த விவரமும் தெரியாது, அதுவே அவனை சோகத்தில் ஆழ்த்திட, கொச்சியில்(cochi) இருக்கும் கடற்படை தளத்திற்கு வந்ததும் தான் மற்றொரு சோகமும் அவனை வாட்டியது, இந்த பயணத்தில் தன் கைக்கடிகாரத்தை தொலைத்திருந்தான். அது அவனுடைய அன்னை அவனுக்கு அன்பளிப்பாக கொடுத்தது, அவனுக்கு மிகவும் பிடித்த கைக்கடிகாரம். கைக்கடிகாரமும் இனி கிடைக்காது, தஹினாவையும் இனி சந்திக்க போவதில்லை என்ற வருத்தத்தோடு நாட்களை கழிக்கிறான். ஆழ்மனதில் மலர்ந்த ஆசையை, மறந்தது போல் எண்ணி நகர்ந்து செல்கிறான். நாட்களும் கடந்தன.

ஜூன் 1, 2020 வழக்கமான ஒரு நாளாக துவங்கி, பயிற்சி எல்லாம் முடித்துவிட்டு ஓய்வெடுத்திருந்தான் தாமஸ். அந்த தளத்தின், தபால் அலுவலுகத்தில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்ததால் அங்கு சென்றான். அவனுக்கு வந்திருந்த அஞ்சலில் இருந்த பார்சலை பார்த்ததும், அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தான். காரணம், அதில் தொலைந்து போன இவனது கைக்கடிகாரம் இருந்தது. பிறகு அந்த அஞ்சலில் ஏதோ எழுதி இருந்ததை பார்த்தான். அதில் “With love. from Tahina to Thomas” என்றிருந்தது. அளவில்லா ஆனந்தத்துடன் செய்வதறியாது வானை பார்த்து இவன் புன்னகைக்க, குளிர் காற்றோடு, அவன் கன்னத்தில் வந்து விழுந்தது, தென்மேற்கு பருவமழையின் முதல் தூறல். அத்திசையில் இருந்து வந்த தஹினாவின் முத்தமாக அதை அவன் உணர்ந்தான்.

பிறகு, பல சந்தேகங்களுடன் அந்த அஞ்சலை மீண்டும் பார்த்த போது தான் தெரிந்தது, அதை தஹினா பெப்ரவரி 1 அன்றே அனுப்பி விட்டால் என்றும், உலகளவில் அனைவரையும் அச்சுறுத்தும் கரோனா நோய்கிருமியின் தாக்கத்தினால் தபால் சேவைகள் எல்லாம் முடக்கப்பட்டதால் தான், இவனிடம் இது இத்தனை மாதங்கள் கழித்து வந்ததென்றும். மேலும் அந்த கடிதத்தின் மூலம், இத்தனை நாட்களாக இவனுக்கு புரியாமல் இருந்த புதிருக்கும், இதற்கு மேல் இவன் நடத்த இருக்கும் தேடலுக்கும் முற்று புள்ளி வைத்தால் தஹினா. அவை, இவன் அவளிடம் பெயரை கூறி விட்டு செல்லும் போது அறுந்து விழுந்த கைக்கடிகாரத்தை இவன் கவனிக்காமல் சென்ற கதையும், அவளது கைப்பேசி என்னும் தான். செய்தியை பார்த்து, இவர்கள் வந்த இந்திய கடற்படை தளத்தின் பெயரை தெரிந்து கொண்டு, இவன் நிச்சயம் அங்கு இருப்பான் என்று காதல் சேர்த்த நம்பிக்கையில் மட்டுமே இதை அனுப்பியதாகவும் அவள் குறிப்பிட்டிருந்தால்.

அன்று துவங்கி தொலைபேசியில் தொடர்ந்தது, இந்த தொலைதூர தென்மேற்கு பருவக் காதல். இனி பருவம் கடந்தும், இந்த காதல் நிலைத்திருக்கும். மீண்டும் தஹீனாவை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறான் தாமஸ்…

-கோபி

2 Likes

Innum vegam dhevai… vaazhthukal

1 Like

Kuripitta kaaranangal edhum irukiradha ?

Good thing… I felt this story will include fantasies,but ended practically.

1 Like