திரளான மேகக்கூட்டங்கள் மழை பொழிகின்றன. முற்றத்து ஓட்டுக்கூரையிலிருந்து விழுகின்ற மழைத்துளியில் அவளது அண்ணண் மகள் தாளங்கள் போடுகிறாள். மதிய நேரத்து பழைய படத்தைப் பார்த்தவாறே தங்கள் இளம்பருவத்து கதைகளை அவளது அம்மா சொல்ல அண்ணி தன் குடும்ப நிகழ்வுகளையும் இடையிடையே ஏக்கத்துடன் பகிர்கிறாள். மழையில் விளையாடும் தன் மகளை சமையலறையில் இருந்து நோட்டமிட்டவாறே அவளது அண்ணன் அப்பா சொன்ன வெங்காயம் வெட்டும் வேலையையும் கண்ணில் நீருடன் செவ்வனே செய்துகொண்டிருக்கிறான். ஏதோ அவளது அப்பாவும் அண்ணாவும் மழைக்கு இதமாய் தாமே போண்டாவும் மிளகாய் சட்டினியும் அரைப்பதாய் கங்கணம் கட்டியிருக்கிறார்கள். அப்பா மழையை சிலாகித்தவாறே கடலை மாவை தேடிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அவளோ, அவர்களின் உலகில் எங்கோ தற்காலிகமாக தள்ளி இருக்கிறாள். அவளைப் பற்றி நினைக்கிறார்கள். அழுகிறார்கள். பிறகு மீண்டும் வேலையில் பேச்சில் மூழ்குகிறார்கள். எந்த பேச்சிலும் அவள் இருக்கவே செய்கிறாள்.
அவளுக்கு, தனியே அவள் இருக்குமிடத்தில் அனைத்தும் கிடைக்கவே செய்கிறது. வேளாவேளைக்கு உணவு. பாதுகாப்பான இடம். ஆனால் என்ன ஒரே அமைதி. இயல்புக்கு மாறான பெரிய அமைதி. அருகில் யாருமில்லை. பேசவேண்டுமானால் சாப்பிடும் நேரத்தில் அவள் இருக்குமிடத்தில் இருக்கும் மற்றைய மூவரிடத்தில் பேசலாம் அதுவும் அவர்கள் நேரமும் அவளது நேரமும் ஒன்றாய் இருக்கும் பட்சத்தில். பெரும்பாலும் வேலைப்பளு காரணமாய் அதுவும் சாத்தியப்படுவதில்லை. இந்த மீட்டிங்குகள், அழைப்புகள் பெரும்பாலும் அவளின் சாப்பிடும் நேரத்தைக்கூட இயல்பிலிருந்து வெகுவாய்க் குறைத்து விட்டன.
திடீரென்ற பயங்கள், திடுக்கிடும் செய்திகள், ஒரே அறையில் ஒற்றை ஆளாய் எத்தனை நாட்கள்? வீட்டின் ஞாபகம், அழைப்பில் இல்லத்தாரின் ஏக்கம் அது இது என…
வழக்கத்திற்கு மாறான காலம்தானே இது. மீண்டெழும்வரை இதை பழக்கப்படுத்தித்தானே ஆக வேண்டும்?
இது அவளின் கொரோனா காலத்துக்கதை. சீனாவில் வந்த சமயத்து ஏதோ சார்ஸ் போல் இது குறுகிய வட்டத்திலிருந்து சென்றுவிடும் என்றே நினைத்திருந்தாள். ஆனால் மெல்ல மெல்ல உலகம் முழுக்க இது இப்படி தாண்டவம் ஆடும் என அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அங்கு இங்கு என கடைசியில் இங்கும் வந்தே விட்டது.
வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று அலுவலகத்தில் சொல்லும்போதே மனது வீட்டிற்குச் செல்லலாம் என்று குதியாட்டம் போட்டது. அட அவள் எங்கிருக்கிறாள் என்று நான் சொல்லவில்லையா? சிங்காரச் சென்னை. ஆனால் என்ன உள்ளூரில் இருக்கவேண்டுமென்று அலுவலகத்தில் சொன்னதால் செல்லவில்லை. பலர் அவளிருப்பிடம் விட்டுச் செல்லும்போதும் ஏக்கமாய் பார்த்துக்கொண்டே இருந்தாள். செல்லலாம் என்று ஒப்புதல் கிடைக்கையில் மனம் மாறுவேஷமிட்டுக்கொண்டது.
ஆமாம். இங்கிருந்து எப்படிச் செல்வது? மறுநாள் ஒருநாள் ஊரடங்கு. இன்று பேருந்தில் இடமில்லை. பதிவு செய்யாமல் செல்லவும் பயம். சரி பின் செல்லலாம் என்றால் எத்தனை பேர் ஒரே சமயத்து பயணம்?
மனம் ஒரு குரங்கு என்பதில் சரி இல்லை தவறும் இல்லை. ஏன் என்கிறீர்களா? மனித மனம் குரங்கைப்போல் சிந்திக்காமல் ஓடாது. அதே சமயம் பல வழிகளில் சிந்தித்து ஓடிக்கொண்டிருக்கும். ஆக, நீ செல்ல வேண்டாம். முடிவில் அவள் மனம் ஆணையிட்டது.
அவ்வளவு எளிமையான முடிவல்லவே!!
ஒரு உண்மையை சொல்லட்டுமா? அவள் ஒரு தனிமை விரும்பி. இப்படி யாருமற்ற இடத்தில் தான் செய்ய வேண்டியவை, படிக்க வேண்டியவை, எழுத வேண்டியவை, தன்னோடு தான் பேச வேண்டியவை, அது இது என அவளது ஆசைப் புத்தகதத்தில் ஏராளமான பட்டியல்கள்.
ஆனால் முரண்கள் எப்பொழும் வாழ்வில் முன்னுரைகள் அல்லவா? இந்தத் தனிமை அப்படி எளிமையாய் இல்லை. நான்கு மாதங்கள் யோசித்துப் பாருங்கள்… அவள் மட்டும் தனியே. அவர்கள் அங்கே. இடைஇடையே செய்திகள் கொரோனா அங்கே இங்கே என்று. ஒருகால் யாரையும் பார்க்காமலே தான் பறந்துவிடுவேனோ என்ற எண்ணமும் அவளுக்கு வராமல் இல்லை.
வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களைக் கூட அவள் இப்பொழுதெல்லாம் பார்ப்பதில்லை. எதை பார்த்தாலும் கோவம் வருகிறது. அப்பொழுது சென்றிருக்கலாமோ, அவளோடு சென்றிருக்கலாமோ - நான் தவறு செய்து விட்டேன். இப்படி சுயகழிவிரக்கம் ஒருபக்கம்.
செல்லலாம் என்று முடிவெடுக்கையில், அதிகரிக்கும் எண்ணிக்கை. ஒருகால் அவள் சென்று அவள் ஊரில் ஏதாவதென்றால் என்ற நியாயமான பயம்.
ஆனால் ஒன்று. அவள் ஒன்றும் அத்தனை பயந்தவளும் அல்ல. எத்தனையோ பார்த்துவிட்டோம். இதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் தான் இன்றுவரை அவளை வழிநடத்திக்கொண்டிருக்கிறது.
காலை நேரத்து சூர்யோதயம். யாருமற்ற மொட்டைமாடியில் சத்தமாய் அவளுக்குப் பிடித்த மெல்லிசைகள், ஆமாம் அங்கே அழுதிடவும் இடமுண்டு. வேலை நடக்கும் பாலம். சாப்பிடச்செல்கையில் சமையல் செய்யும் பாட்டி தாத்தாவுடன் கொஞ்சம் பேச்சு. அவ்வப்போது பக்கத்துக்கு கிளப்பில் இருந்து கிளையை இங்கே நீட்டும் கொழுமிச்சையை பாட்டிக்குத் தெரியாமல் பறித்துண்பது என இப்படி வேலைப்பளுவிற்கிடையில் அவளுக்கான மனஅமைதியை அவளே நிர்மாணிக்கிறாள். வெற்றியும் பெறுகிறாள் என்றே எண்ணுகிறேன்.
இருப்பினும் இந்த தொலைபேசியும் வீடியோ காலும் இல்லாவிட்டால் என்னவாகி இருக்குமோ…
இந்த அனுபவங்களை சேகரித்து வைக்கிறாள் . ஒவ்வொரு நாளும் ஒன்று போல் இருந்தாலும் ஒவ்வொருநாளும் அவளுக்கு ஒவ்வொரு யுகமாய் இருக்கின்ற போதிலும் இந்த தனிமையின் மனப்பிறழ்வுகள் புதியதாய் இருக்கின்ற போதிலும் இந்த அனுபவங்களை சேகரித்து வைக்கிறாள்.
நாட்கள் நகருகையில் அனைத்தும் இயல்பாகும் எனும் நம்பிக்கையில், அவளது இறுக்கமான நாட்களை தன்னால் இயலுமென்று கடக்கிறாள்.
கடந்தபின் ஒருநாளில், திரளான மேகக்கூட்டங்கள் மழை பொழிய, முற்றத்து ஓட்டுக்கூரையிலிருந்து விழுகின்ற மழைத்துளியில் தன் அண்ணண் மகள் தாளங்கள் போட, மதிய நேரத்துப் பழைய படத்தைப் பார்த்தவாறே தங்கள் இளம் இளம்பருவத்து கதைகளை அவளது அம்மா சொல்ல அண்ணி தன் குடும்ப நிகழ்வுகளையும் இடையிடையே ஏக்கத்துடன் பகிர, ஏதோ அவளது அப்பாவும் அண்ணாவும் மழைக்கு இதமாய் தாமே போண்டாவும் மிளகாய் சட்டினியும் அரைப்பதாய் கங்கணம் கட்டியிருப்பதால் மழையில் விளையாடும் தன் மகளை சமையலறையில் இருந்து அண்ணன் நோட்டமிட்டவாறே அப்பா சொன்ன வெங்காயம் வெட்டும் வேலையையும் கண்ணில் நீருடன் செவ்வனே செய்துகொண்டிருக்க, அப்பா மழையை சிலாகித்தவாறே கடலை மாவை தேடிக்கொண்டிருக்க, அங்கே அவள் தன் அண்ணன் மகளுக்கு காகிதக்கப்பல் செய்து கொண்டிருப்பாள் அண்ணனைப் பார்த்து, “நீ போண்டா ஒழுங்கா சுடு. உன் பொண்ண நான் கவனிச்சுக்கிறேன்,” என்றவாறே…
தொலைவினில் இசைத்திடும் அவளது கீதம் அன்று அவளருகில் கவிபாடும்
ஆமாம் அவள் சென்னையில் எங்கிருக்கிறாள் என்று நான் சொல்லவே இல்லையே?
மகளிர் விடுதி.