Community

குட்டி நாயும் சில ரொட்டி துண்டுகளும்

குட்டி நாயும் சில ரொட்டி துண்டுகளும்…

எதிர்பாராத விதமாக நானும் என் கணவரும் அன்று ஒரு நாள் பெய்து கொண்டிருந்த கனமழையில் சிக்கிக்கொண்டு ஒரு இடம் தேடிக் கொண்டிருந்த போது…

ஒரு பிள்ளையார் கோயில் அருகே உள்ள ஒரு கொட்டகையில் ஒதுங்கி நின்றோம்…
சற்று நேரத்தில் ஒரு ஆறு, ஏழு வண்டிகள் குவிந்தன… மழை அதிகரிக்கும் போது முக்கால்வாசி கோட்டகை நிரம்பி விட்டது கும்பலால்…

இன்னும் இருவர் அங்கு வந்து சேர்ந்தனர்… ஓரளவு கருப்பு மற்றும் சாம்பல் நிறம்…
முட்ட கண்ணு… ஆனால் கொஞ்சம் துருதுரு வென்று…
ஒட்டிய வயிற்றுடன் ஒரு குட்டி நாயும் அதன் அம்மாவும்.

எல்லோரும் அவரவர் தரப்பு நியாயங்களை அலைபேசியில் ஆரம்பிக்க… அவ்விரு புதியவர்கள் யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை…
ஒரு வேளை மாடி வீட்டு இனம் என்றால் கண்ணைக் கவருமோ என்னவோ… பாவம் போக்கற்று சுற்றி வரும் தெருநாய் அன்றோ… ஆனாலும் அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கிற்று அந்த தாராள கொட்டகை… வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர சற்று நேரத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே இடம் விட்டு இவர்களை கொட்டகை குடியமர்த்தியது…
மிஞ்சியவர்களில் நானும் என் கணவரும் பாக்கியிருந்தோம்…

அவரும் அலைபேசியில் இணைந்திருக்க… வந்தது முதல் அந்த முட்ட கண்ணு என்னைக் கொஞ்சம் ஈர்த்து கொண்டிருக்க முழு நேர வேலையாக நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்… சொல்லப்போனால் என்னை மறந்து ரசித்தேன்…
என் சிந்தனை படார் என்று மணி அடிக்க… எதிர்புறம் இருந்த ஒரு பெட்டிக்கடையில் பத்து ரூபாயில் மேரி ரொட்டி வாங்கி வந்து அதைப் பிரிக்க முயன்ற போது…
மிகவும் ஆச்சரியம் என்னவென்றால்… நான் மட்டுமே அந்த முட்ட கண்ணு துருதுரு மூஞ்சிய பார்த்துக் கொண்டிருந்தேன் என்று நினைத்தேன் ஆனால் அந்த நாய்க்குட்டியும் என்னை கவனிக்க மறக்கவில்லை என்று…

இந்த இடைவெளியில் ரொட்டிப்பொட்டலம் பிரிவினை முடிந்தது என்று அந்த முட்ட கண்ணுவின் குட்டி வால் ஆட்டம் எடுத்துரைத்தது…
ஆர்வம் காட்ட… காட்ட… நானும் ஒரு ரொட்டியை எடுத்து அதன் அருகில் குனிந்து கையை நீட்டினேன்… ஒரு முறை அல்ல… இரு முறை அல்ல… அந்த முட்ட கண்ணு துருதுரு வென்று ஐந்து முறை முக்கோணமிட்டது… ஒரு கோணம் அந்த ரொட்டி… அடுத்த நொடி என்னையும்… மூன்றாவதாக மீதமுள்ள ரொட்டிகள் எனது இன்னொரு கையில்…
இப்படியாக ஐந்து முறை…

ம்ம்ம்ம்… புடி என்றேன்…
முக்கோணம் ஒரு வழியாக ஒரு கோணம் ஆகி… தயக்கம் மற்றும் ஆர்வத்துடன் கவ்விக் கொண்டது.
அப்போது தான் உணர்ந்தேன்… உரிமை மற்றும் செல்ல சேட்டைகள் இது போன்ற தெரு நாய்களுக்கு மனிதனிடம் பழக்கமில்லை என்று… அம்மாவும் குட்டியும் தானே தவிர வேறு எந்த நாயும் இல்லை… ஆகவே கொட்டகையில் ஒரு ஓரமாக மீதமுள்ள ரொட்டிகளை வைத்து விட்டு தள்ளி வந்தேன்…

என்னிடம் தயங்கிய உரிமை இப்போது… அடேங்கப்பா… அந்த முட்ட கண்ணு கிடுகிடுவென ஓடி வந்து அந்த மொத்த ரொட்டிகளை பற்றிக்கொண்டதை கண்டு எங்களுக்கு ஒரே சிரிப்பு…
அந்த ஒத்த ரொட்டியை விட்டு விட்டு தன் அம்மாவைக்கடந்து முந்திக்கொண்டு அந்த முட்ட கண்ணு லொல்… என்று சத்தமிட… அம்மாவும்… தன் குட்டியின் செல்லமான அதிகாரத்திற்கு மரியாதை கொடுத்து சற்று பின்தங்கி நின்றது…
என்னடா இது என்று சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தோம்… எவ்வளவு முறன்றும் ஒரே வாயில் கவ்வித் திண்ண முடியாமல்… சிரமப்பட்டு ரெண்டாய் மூண்றாய் உடைத்து ஒரு ரொட்டியை உண்ண ஆரம்பித்து விட்டது அந்த முட்ட கண்ணு…

இதற்கிடையில் குட்டி விட்டுச்சென்ற அந்த முதல் ரொட்டியை இந்த அம்மா ஒரே வாயில் கவ்வித்திண்றது… சற்று நேர ரொட்டி போராட்டம் ஓய்ந்து… என்ன தோனிற்றோ தெரியவில்லை… அந்த முட்ட கண்ணு ஒரே ஒரு ரொட்டியை கவ்வி வந்து அதன் அம்மாவிடம் போட்டுவிட்டு அதன் அதிக ரொட்டிக்கு காவலுக்கு ஆயத்தமானது… என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை…
சற்று சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தேன்…

ஆனால் பசி ஒன்று தானே… அம்மாவோ… அல்ல அவள் குழந்தையோ… பாவம் மழையில் என்று… நான் ஒரு ஐந்து ரொட்டியை எடுத்து வந்து இந்த அம்மாவிடம் வைத்தேன்… இதை கவனித்த அந்த குட்டி முட்ட கண்ணுவின் கண்கள் இன்னும் விரிந்து பார்த்துவிட்டு சுலபமாக ஒரு வேலையை செய்தது… தான் தின்று கொண்டிருந்த ரொட்டியை விட்டு விட்டு புதிய ரொட்டியை எடுத்து வந்து கடித்து வைத்து விட்டு… மீண்டும் ஒரு புதிய ரொட்டி… மீண்டும் ஒரு புதிய ரொட்டி… இப்படியாக மூன்று ரொட்டியை எடுத்து எச்சில் படுத்தி கிரயம் முடித்தது… அதற்கு மட்டுமல்ல… நிறைய குழந்தைகளுக்கு இந்த மனோபாவம் உண்டு… எச்சில் வைத்துக் கொண்டால் போதும் நமக்கு பட்டா ஆகிவிடும் என்று…
(ஏன் சில நேரங்களில் வளர்ந்தவர்களும் அப்படித்தானே…)

சிரிப்பை அடக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு மீண்டும் இரண்டு ரொட்டியை எடுத்து வந்து அம்மா நாய்க்கு கொடுத்தேன்…
இப்போது இன்னும் வேகம் அதிகரித்தது அந்த முட்ட கண்ணுக்கு… எனக்கு பார்க்க பாவமாக இருந்ததால், என் கணவரிடம் இன்னும் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு சென்றேன்… மழையும் குறைந்தது ஒரு வழியாக…

புதிய ரொட்டி பாக்கெட்டை பிரித்து இருவருக்கும் தனித்தனியே வைத்தேன்… இருந்தும் அந்தக் குட்டி அம்மாவின் பங்கிற்கு ஓடி வந்து விட்டது…
அம்மாவும் தன் குட்டிக்கு விட்டு விட்டு தள்ளி நின்றது…

இந்நிகழ்வில்
அம்மா… அது மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியது…
பாசம், அன்பு மற்றும் ரசனை…ஆம் நம் வீட்டில் உள்ள மழழைகளின் செல்ல சேட்டைகளை நினைவுப்படுத்தியது…

மழையும் குறைய… எங்கள் வண்டியும் நகர ஆரம்பித்து விட்டது… ஆனால் அந்த முட்ட கண்ணு கொஞ்சம் துருதுரு நாய் குட்டியின் செல்லமான சேட்டைகளும்… அதை தள்ளி நின்று ரசித்த அதன் அம்மாவும் எங்கள் நினைவுடனே நகர்ந்து கொண்டிருந்தனர் மழையில் பருகும் ஒரு குவளை தேநீரின் சுவையாய்…

            நன்றி🙏
       பிரியா ஆறுமுகம்.

Nalla kadhai… innum swarasiyamaaga sollalam… aanaal kadhai enaku pidithirukiradhu…

1 Like