பிள்ளைப்பாசம்
சிவராமன் சிறிது நாள் படுக்கையில் இருந்து இறந்து பதினாறு நாள் காரியங்களும் முடிந்தன.மூத்தவன் அமெரிக்காவில் உயர் பதவியிலிருந்தான்.இரண்டு பிள்ளைகள்.மனைவியும் உத்தியோகத்தில் இருந்தாள்.இரண்டாவது மகள் துபாயில் இருந்தாள்.முதல் பெண் குழந்தைக்குப்பின் பத்து வருடங்கள் கழித்து பிள்ளை பிறந்து மூன்று வயதாகிறது.கடைசியாக மூன்றாவது பையன் இரண்டு கால்கள் பிறவியிலேயே ஊனம்.அவர்கள் இருவர் அளவிற்கு அதிகப்படிப்பும் இல்லை.
அனைவரும் வந்து இருபது நாட்கள் ஆகிவிட்டது. மாப்பிள்ளை மட்டும் ஒரு வாரத்திற்குள் வேலை இருப்பதாக கிளம்பிவிட்டார்.அனைவரும் அன்று மாலை அப்பாவைப்பற்றி பேசிக்கொண்டு அவர் உடமைகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
மூத்த மருமகள் அவ்வப்போது கணவரிடம் ஜாடைக் காட்டிக்கொண்டிருந்தாள்.அம்மா கடைசிப்பேரனைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.மூத்த மகன் அம்மாவிடம்'அம்மா என்ன முடிவு பண்ணியிருக்கிறாய் அம்மா 'என்றுக்
கேட்டான்.
'எதைப்பற்றிப்பா' என்றார் அம்மா.
' வயதானக் காலத்தில் தனியாக தம்பியோடு எதற்க்கும்மா'.தங்கையோடு துபாய்க்கு சென்று பேரனோடு கொஞ்சிக் கொண்டு இருக்கலாமே' என்றான்.
'தம்பி தனியாக இங்கு என்னப்பா செய்வான்'என்றார் அம்மா.
'தம்பியை தனியாக விட வேண்டாம்மா.எதாவது இல்லத்தில் சேர்த்து விடுவோம்.வீட்டு வாடகையும் கடை வாடகையும் அவனுக்குப் போதும்.ஆறு மாதத்திற்க்கு ஒருமுறை வந்து நீ பார்க்கலாம்'என்றான்.
துணி மடித்துக்
கொண்டிருந்த தங்கை’அண்ணா நீ பேசுவது சரியில்லை. வீட்டிற்க்கு மூத்தவன் நீ அம்மா உன்னிடம் தான் இருக்கப்பிரிய படுவார்கள்.நீங்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.உங்களுடன் அம்மா இருந்தால்
பிள்ளைகளுக்கு துனண’என்றாள் மகள்.
மூத்தவன் 'தங்கையிடம் அப்பா தன் தகுதிக்கு மீறி உன்னை வசதியான இடத்தில் அவர்கள் கேட்டதை எல்லாம் செய்து உன்னை கட்டிக் கொடுத்து மாப்பிள்ளை துபாயில் நல்ல வேலையில் அமரும் வரை உன்னை நம் வீட்டிலேயே வைத்திருந்தார்.ஆனால் அம்மாவை வைத்துக்கொள்ள யோசிக்கிறாய் பார்'.என்றான்.
தங்கை 'அப்பா கடன் பட்டு உன்னை எங்களை விட அதிகமாக படிக்க வைத்து நீ விரும்பிய அண்ணியை திருமணம் செய்துவைத்தவுடன் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டாய்.
மேலும் நீங்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் அம்மாவை நீ அழைத்துச் செல்வதுதான் நியாயம்’என்றாள்.
இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கடைசித்தம்பி ,'அண்ணா, அக்கா, உங்கள் இருவரளவிற்க்கு படிப்பில் ஆர்வமில்லாததால் நான் அதிகம் படிக்கவில்லை. அதனாலும் என்னால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை.ஆனாலும் இதுநாள் வரை அப்பாவும் அம்மாவும் என்னை எந்தக் குறையும் சொல்லாமல் பார்த்துக்
கொண்டார்கள். அதனால் அப்பாவிற்க்குப் பிறகு அம்மாவைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை உங்களை விட எனக்குத்தான் அதிகம்.இனி அம்மாவை நான் பார்த்துக் கொள்கிறேன்.பொழுதுபோக்கிற்க்காக நான் படம் வரைய கற்றுக் கொண்டது எனக்கு தமிழ் மாத இதழ் ஒன்றில் ஓவியராக சேர்வதற்கு பயன்படுகிறது.இனி அம்மாவைப்பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் கிளம்பலாம். எப்போதும் போல் வருடத்திற்கு ஒருமுறையாவது குழந்தைகளோடு வந்துப்போனால் எங்களுக்கு அதுவே சந்தோஷம் ’ என்றான்.
அண்ணனும்,அக்காவும் அவமானத்துடன் வெட்கி தலை குனிய அம்மா இளைய மகனை சந்தோஷத்துடன்
பிடித்துக் கொண்டார்.
நன்றி.
ஷெண்பகம் பாண்டியன்
9047663725