இதுவரை யாரென்றே தெரியாத உன்னுடன்
என் இல்லற வாழ்க்கை…
தொடங்கும் முன்,
நம்மை நாம் தெரிந்து கொள்வோம்
என்றழைக்க
துடித்துக் கொண்டிருந்தன கண்கள்…
மௌனம் கலைக்காமல் உன் முதல் வார்த்தைக்காக தவித்திருந்தேன்…
பேசாமல் கடந்த சிலமணி நேரம்,
பல வருடங்கள் போல் ஆனது…
நம்மைச் சுற்றி எல்லோரும் இருக்க,
மனம் மட்டும் அலைகழித்தது…
ஒரு வார்த்தை கூடப் பேசாமல்
நம் சம்மதத்தை அவர்கள்
முன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டோம்…
அது வரை துடிக்க மறந்த இதயம்
வேகத்தடையின்றி
தாறுமாறாக அடித்துக் கொண்டது…
மோதலில் மோதிரம் மாட்டி
பிறகு குங்குமம் வைத்து…
இவ்வாறாக அமைந்தது
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் துவக்கம்…
இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை…
பேசாத வார்த்தைகள்
எத்தனையோ கேள்விக்கு பதில்
தெரிவித்துள்ளது…
சில சமயம் சிறப்பான வாழ்க்கை
இப்படியும் தொடங்கும்…
- க விவேக்