Community

என் ஆசை மச்சானே

அது ஒரு அழகிய கிராமம்… பச்சைப் பசேல் என வயல்களும், தென்னந் தோப்புகள், தோட்டங்கள், அதைச் சுற்றி ஆறு குளம் என ஊரே செழிப்பாய் இருந்தது…

அங்கு எண்ணி ஐம்பது வீடுகளே இருந்தன… அதனால் எல்லோருமே தாயாய், பிள்ளையாய் தான் பழகி வந்தார்கள்…

முறை வைத்து தான் அழைப்பார்கள் பெரியவர்களை … மாமா, அத்தை, பெரியம்மா, சித்தி, தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா என…

பாரதியும், மீனாவும் பக்கத்து வீடு … விவரம் தெரிந்ததிலிருந்தே தோழிகள்தான்… எதற்குமே இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் கொள்ள மாட்டார்கள்…

பாரதி, மீனாவின் அண்ணன் ரகுவை காதலிக்கிறாள்… அதை இதுவரையுமே மீனாவிடம் கூட சொல்லவில்லை… ரகுவுக்கும் அவள் தன்னைக் காதலிப்பது தெரியவில்லை…

அவன் தான் அவளைக் கண்ட நேரத்திற்கு எரிந்து விழுவான்… பிறகு எப்படித் தன் காதலை வெளிப்படுத்துவாள்…

என்னடி இன்னிக்கு கடுவன் பூனையோட சத்தத்தையேக் காணும்… எங்க போனாரு உன் அருமை அண்ணன் என நைசாக விசாரிக்கிறாள் மீனாவிடம் …

அவன் இல்லன்னா தான நீ எங்க வீட்டுக்கே வருவ… இனி ஞாயித்துக் கிழமை மட்டும்தான்டி அண்ணன் வீட்டுல இருப்பான்… மத்த நாளெல்லாம் பக்கத்து ஊருல வேலைக்குப் போறான்டி பாரதி… இனிமே உன் இஷ்டத்துக்கு வரலாம், போகலாம்டி… உன்னைத் திட்டுறதுக்கு ஆள் இல்லை என சந்தோஷப்படுகிறாள் மீனா…

காற்றுப் போன பலூன் போல ஆகிறாள் பாரதி… ஓ அப்படியா என…

அவனைக் காணாமல் கண்கள் ஏங்கித் தவித்தது… அவன் பேசும் திட்டுச்சொற்கள் தான் அவளின் காதல் மொழி… ஒரு வாரமாய் அவன் குரல் கேட்காமல் காதுகளும் அடைத்துக் கிடந்தன…

ஏதோ கடமைக்குப் போய் பேசிவிட்டு வந்தாள் பாரதி…

என்னடி பாரதி, ஏதும் உடம்பு சரியில்லையாடி உனக்கு… பழைய கலகலப்பே இல்லையே டி உன்கிட்ட … ஏதாவது காத்து, கருப்பு அடிச்சிட்டாடி எனக் கிண்டல் செய்கிறாள் மீனா…

மீனாவின் அம்மாவும் அவர் பங்குக்கு வம்பு செய்கிறார்… அது ஒன்னும் இல்லடி மீனா… பாரதிக்கு கல்யாண வயசு வந்துட்டுல்ல … அதனால தான் அமைதியா இருக்கா…

சீக்கிரமே உங்க ரெண்டு பேருக்கும் நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து கட்டிக் கொடுக்கணும்டி என்கிறார்…

அதெல்லாம் ஒன்னுமில்லத்தை … நான் எப்போதும் போலத்தான் இருக்கேன்… மீனவை விட்டுப் பிரியவே மாட்டேன் எப்போதுமே… இப்படி எங்களை பிரிக்கிற இந்தத் திருமண பந்தத்தையே வெறுக்கிறேன் அத்தை என்று கூறியபடியே அழுகிறாள் பாரதி…

ச்சீ கழுதை, இதுக்குப் போயி ஏன்டி அழற… என் மகன் ரகுவுக்கு உன்னைக் கட்டிக் கொடுக்கலாம்… ஆனா அவன் தான் உன்னைப் பார்த்தாலே எரிஞ்சி, எரிஞ்சி விழறானே… பார்ப்போம் கடவுள் என்ன முடிவு செஞ்சிருக்கான்னு" என்று புலம்பியபடியே சமைக்கச் செல்கிறார்…

அத்தை மனதிலும் இப்படி ஒரு எண்ணம் ஓடுவதைக் கண்டதும் பாரதிக்கு இப்போதே நிச்சயம் முடிந்துவிட்டதைப் போல மகிழ்ச்சி…

இதைப் போலவே அவன் மனதிலும் ஏதாவது ஆசை இருக்குமோ… ச்சே அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது… அவன் தான் சரியான சிடுமூஞ்சிக் குரங்காச்சே என யோசிக்கிறாள்…

மாதம் ஒன்றும் ஆகிவிட்டது… தன் ஆசை மச்சானைப் பார்க்காமல்… ஞாயிற்றுக்கிழமை தான் அவன் வீட்டில் இருப்பானே… எப்படி வருவது என யோசித்தே ஒரு மாதம் ஓடி விட்டது…

கட்டிலில் படுத்துக்கொண்டு கதை வைக்கிறார்கள் மீனாவும் பாரதியும்… ஏய் மீனா இங்கே வாயேன் என அழைத்து ஏதோ வேலையைக் கொடுக்கவும் அவள் பாரதியை மறந்து வேலையை செய்யத் தொடங்குகிறாள்…

கொஞ்ச நேரம் ஆனதும் பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வருகிறது பாரதிக்கு… அப்படியே தூங்கியும் விடுகிறாள்…

திடீரென முதுகில் சுள்ளென்று ஒரு அடி விழுகிறது பாரதிக்கு… கழுதை, வயசு பொண்ணுக்கு என்னடி பகல் தூக்கம் … எழுந்திரிடி என உலுப்புகிறான்…

அட இது ரகுவின் குரல் தானே… இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லையே… ஐயயோ தொலைஞ்சேன்… சும்மாவேக் கத்துவான்… அவனோடக் கட்டில்ல வேறப் படுத்துத் தூங்கிட்டேனே… என்னப் பேச்சுப் பேசப் போறானோ என வாரி சுருட்டிக் கொண்டு எழுகிறாள் பாரதி…

ஓஹோ உனக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்து விட்டார்களா இந்த வீட்டுல… என் கட்டில்ல ஏண்டி படுத்து தூங்கினே…

என் தங்கச்சிய மயக்கி கைக்குள்ளே போட்டுக் கிட்ட … என் அப்பாவையும் அம்மாவையும் பேசி சிரிச்சு மயக்கிட்ட… இன்னும் என்னடி வேணும் உனக்கு என எரிந்து விழுகிறான்…

அவன் மனதிற்குள், அவங்களுக்கெல்லாம் மட்டும் உன் மனசுல இடம் கொடுத்திருக்கிற… எனக்கும் கொஞ்சம் கொடுக்கக் கூடாதாடி… நான் உன்னை எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்தே காதலிக்கிறேன் டி என எண்ணுகிறான்…

இதை வாயைத் திறந்து கூறியிருந்தாலாவது பாரதி அந்தவிபரீத எண்ணத்தை எடுத்திருக்க மாட்டாள்… சிலர் இப்படித்தான்… ரகு அறிவு கெட்டவன்…

ஏதோ சத்தம் போடுகிறானே என எட்டிப் பார்க்கிறாள் மீனா… தன் தவறு அப்போதுதான் புரிந்தது அவளுக்கு… லீவு போட்டுவிட்டு அண்ணன் வந்திருப்பதை தெரியப்படுத்தாமல் விட்டு விட்டேனே என வருத்தப்படுகிறாள் மீனா…

அவள் சமாதானம் செய்வதற்குள் அழுதுக் கொண்டே ஓடி விடுகிறாள் பாரதி… அடுத்து வந்த ஒரு வாரமுமே மீனாவின் வீட்டுக்கு வரவே இல்லை அவள்… இவள் அங்கு சென்ற போதுமே இரண்டு நாட்கள் முகங்கொடுத்துப் பேசவில்லை பாரதி…

இவளுக்கு என்ன அத்தனைப் பிடிவாதம் என மீனா அடுத்த இரண்டு நாட்கள் பாரதியின் வீட்டுக்குச் செல்லவில்லை… மூன்று பேருமே வறட்டுப் பிடிவாதத்தால் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்…

அந்த வாரத்தின் கடைசி நாளான ஞாயிறு அன்று…மீனாவின் வீட்டுக்கு வருகிறார்கள் பாரதியின் அம்மாவும், அப்பாவும்…

ஏதோ நடக்கப் போகிறது என்று ரகுவுக்குள் உள்ளுணர்வு சொல்கிறது… இந்த உணர்வு நல்லதற்கா என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அனைவரையுமே கூடத்திற்கு அழைக்கிறார் பாரதியின் அப்பா…

யாராலுமே யூகிக்க முடியாத சூழல்… எதற்கு அழைக்கிறார் என …

கிராமிய பழக்கப்படி வெறும் கையுடன் வராமல், பழங்களை வாங்கி எடுத்து வந்திருந்தார்கள்… அதை மீனா அம்மா கையில் கொடுத்து விட்டு செய்தியைக் கூற ஆரம்பிக்கிறார்கள்…

ரகு வைப் பொறுத்தவரை அது செய்தி அல்ல… இடி தான்…

அடுத்த வாரம் தன் உறவுக்கார பையனுக்கும், பாரதிக்கும் நிச்சயதார்த்தம்… குடும்பத்தோடு எல்லாரும் வந்துடுங்க என்று கூறிச் செல்கிறார்…

மீனாவுக்குப் புரியவில்லை தன் அண்ணன் மனதில் உள்ளது… அதே போல அவள் மனதில் உள்ளதும்… இரண்டு பேரின் மனதையும் புரிய முயற்சி எடுக்கிறதுக்குள்ளே அவளுக்கு திருமணமே முடிஞ்சிடும் போல…

அவங்களை வழி அனுப்பிட்டு ரூமுக்கு வர்றா மீனா… இன்னும் கொஞ்ச நாள்ல என்னை விட்டுப் பிரிஞ்சிடுவா பாரதி என நினைக்கும் போதே கண்கள் கலங்குகின்றன…

அதே போலவேக் காட்சியளிக்கிறானே அண்ணன்… இருக்காதே அவன் ஏன் பாரதிக்காக கண் கலங்கப் போறான்… எல்லாம் பிரமை என்றபடியே அவனைப் பார்க்கிறாள்…

அட, ஆமாம் அண்ணனும் அழறானே… டேய் அண்ணா, என்ன ஆச்சு உனக்கு… ஏன் அழற எனப் பதறியபடிக் கேட்கிறாள்…

உடனே ரகு மீனாவைக் கட்டிக் கொண்டு அழுகிறான்… திட்டித் தீர்க்கிறாள் மீனா… இவ்வளவு ஆசைகளை மனசுல வச்சிகிட்டு ஏன்டா எப்பப் பார்த்தாலும் அவளைத் திட்டி கிட்டே இருந்த …

அதுவும் அன்னிக்கு மூணு பேரையும் மயக்கி கைக்குள்ளப் போட்டுகிட்டன்னு சொன்னதும் தான் அவளுக்கு கோபம் வந்துட்டு…

எல்லாம் உன்னாலதான்டா… எதுக்காக அப்படி திட்டி அனுப்புன… பதில் சொல்லேன்டா எனக் கத்துகிறாள்…

உங்க மூணு பேரை மட்டும் மயக்கி இருக்காளே, கொஞ்சம் என்னையும் சேர்த்து மயக்கி இருக்கலாமேன்னு தான் திட்டினேன்… இதைக் கூட புரிஞ்சிக்க முடியலை அவளால…

ஆஹா அருமையான காதல்டா உன்னோடது… காதலியை கண்ணே, மணியேன்னு கொஞ் சாம, நாயே, பேயேன்னு திட்டுறது… உன்னால தாண்டா எனக்கு அண்ணியா வராமப் போயிட்டா அவ என அழுகிறாள்…

அய்யய்யோ மீனா இப்படியெல்லாம் சொல்லாதேடி… அவ இல்லன்னா நான் செத்துடுவேன்டி என ரகுவும் அழுகிறான்… டேய் அண்ணா அழாதடா … இப்ப என்ன செய்யறதுன்னே தெரியலையே என யோசிக்கிறாள்…

உடனே பாரதியிடம் போய் சொல்லலாம் என முடிவெடுத்துக் கிளம்புகிறாள் மீனா…

இனி ஏன்டி போய் சொல்ற… அதுதான் எல்லாமே முடிஞ்சு போய் விட்டே என்று வருத்தமாக கூறுகிறான் ரகு…

தன் அண்ணனைப் பார்க்க பாவமாய் இருக்கிறது மீனாவுக்கு …

அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சு கிட்டு வரேன் அண்ணா அண்ணா என்று கிளம்புகிறாள் மீனா… சுவற்றில் அடித்த பந்து போல உடனேயே திரும்பியும் விடுகிறாள்…

ஒரே சோகம்… அவள் இவனை விரும்பியதைப் கெட்ட கனவாக நினைத்து மறந்து விட்டாளாம்… இப்போது லந்து அவள் மனதை மாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என்று அழுகிறாள் அண்ணா என்கிறாள் மீனா …

ஓஹோ அப்படியா சொல்றா அந்த கழுதை… அதனால் தான் போகாதடி என்றேன் … இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் பார் என்கிறான் கோபமாக…

மறுநாள் காலையில் மீனாவின் வீட்டில் ஒரே சத்தம் … ஒரே அழுகுரல்…பாரதியின் அப்பாவும் ,அம்மாவும், பாரதியும் மீனாவின் வீட்டிற்கு வேகமாக பதற்றத்துடன் ஓடுகிறார்கள் …

அங்கே பூச்சி மருந்தைக் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடக்கிறான் ரகு…அவசரமாக வண்டியைக் கட்டுகிறார் ரகுவின் அப்பா… ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் செல்வதற்காக…

பாரதி ஓடிவந்து அவனை மடியில் போட்டுக் கொண்டு கதறுகிறாள்…நீ என்னை காதலிக்கலன்னு நினைச்சுக்கிட்டு தானடா நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டேன்…

ஒரு கண் பார்வை காட்டி இருந்தாக் கூட நீ என்னை காதலிக்கிறேன்னு நான் கண்டுபிடித்து இருப்பனே என்று அழுகிறாள் …

அவளால் இந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை…திடீரென்று எழுந்து வீட்டை நோக்கி ஓடுகிறாள்…

ஏதோ தப்பா முடிவு எடுத்துட்டா போல இருக்கே என்று எல்லாருமே ஒரு பின்னாலேயே ஓடுகிறார்கள் … ரகுவும் பின்னாலேயே ஓடுகிறான்…

அவனும் மீனாவும் போட்ட சதித்திட்டம் தானே இது… இவள் வேறு ஏதாவது செய்துவிடப் போகிறாளோ என்ற பதட்டத்துடன் ஓடுகிறார்கள் …இவர்கள் போவதற்குள்ளேயே கதவை தாளிட்டு விடுகிறாள்… கதவை உடைத்து உள்ளே சென்று தூக்குப் போட்ட்டுக் கொள்ளும் நிலையில் இருந்த அவளைக் காப்பாற்றுகிறான் ரகு…

உயிரோடு இருக்கும் இவனைக் கண்டதுமே வாய்க்கு வந்த வார்த்தைகளெல்லாம் பேசுகிறாள் பாரதி … ரகு நன்றாக திட்டு வாங்கட்டும் என்று எல்லோருமே வெளியில் சிரிப்புடன் காத்திருக்கிறார்கள் …

பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, ஏன்டி இப்படியெல்லாம் பேசத் தெரியுமாடி உனக்கு… இவ்ளோ கெட்டப் பேச்சு பேசுறீயே டி என அதிர்ச்சி ஆகிறான்…

அவன் கைகளை முறுக்கி முதுகுப் புறம் வளைத்து அடி பின்னி எடுக்கிறாள் பாரதி…

நீ என்னை எவ்ளோ திட்டு திட்டியிருப்படா… அதுக்கு பதிலா தான் என் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறேன் டா என சிரிக்கிறாள் பாரதி…

என்னைத் திட்டுன இந்த வாயை எப்படி மூடுறேன் பாருடி என அருகில் நெருங்குகிறான் ரகு…

வெளியில் கதவில் காதை வைத்து ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், என்னடா சத்தத்தைக் காணோமே என விழிக்கிறார்கள்…

மீனாவுக்குப் புரிந்து விடுகிறது… அங்கு என்ன நடக்கிறது என்று…சரி அடி வாங்கிக்கொண்டு வெளியில் வருகிற தன் அண்ணனை கேலியும், கிண்டலும் செய்கிறாள் மீனா…

பாரதி ஓடி வந்து வெக்கத்துடன் அவள் வாயை மூடுகிறாள்… அந்த இடமே கலகலப்பாகிறது…

திருமணம் முடிந்து முதல் இரவு அறையில் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்…

ஏன்டி உன் உறவுக்கார என் சக்களத்தியனுக்கு என்ன பதில்டி சொன்னீங்க…

அதுவா என திருட்டு விழி விழிக்கிறாள் பாரதி…

சீக்கிரம் சொல்லேண்டி… எவ்ளோ வேலை இருக்கு …

அப்படி யாருமே இல்லைடா… இது நாங்க எல்லாரும் சேர்ந்து போட்ட திட்டம் எனவும், அடிப்பாவி யாரெல்லாம் இதுலக் கூட்டுக் களவாணிங்க… சொல்லுடி சீக்கிரம் என்கிறான்…

உன்னைத் தவிர எல்லாரும் டா எனக் கூறியபடியே ஓடத் தயாராகிறாள்…

எங்கடி ஓடப் பார்க்குற…இன்னிக்கு உன்னை விட்டா தானே எனத் துரத்தத் தொடங்குகிறான் ரகு…

Katturai Pol ulladhu . Kadhaiyin amsam sattru thoivaaga ulladhu… vaazhthukal