Community

இன்றே துணிந்திடு

கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாணவர்களும் பெற்றோர்களும் அங்கு கூடியிருந்தனர். தான் விரும்பிய துறையை விடுத்து பெற்றோரின் வற்புறுத்தலால் வேறொரு துறையைத் தேர்ந்தெடுத்த குமுறலில் அமர்ந்திருந்தாள் வேணி.

பல உயர் விருந்தினரும் உத்வேகம் அளிக்கும் சொற்பொழிவாற்றி அமர்ந்திருந்தனர். "அடுத்ததாக பிரபல எழுத்தாளர் தேசிய விருது பெற்ற பரிபூரணி உங்கள் முன் சிறப்புரை ஆற்றுவார் "என்றவுடன் நிமிர்ந்தாள் வேணி, காரணம் பரிபூரணியின் தீவிர ரசிகை என்பதால்.

"அனைவருக்கும் வணக்கம் இங்கு உட்கார்ந்திருக்கிற மாணவர்களை பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சிலரோட முகத்தில் தடுமாற்றமும், குழப்பமும் தெரிவதை என்னால் உணர முடிகிறது. இது உங்க வாழ்க்கையோட முக்கியமான தருணம் உங்க வாழ்க்கையோட பாதையைத் தேர்ந்தெடுக்கும் தருணம். எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கையில் தடுமாற்றமும், குழப்பங்களும் கண்டிப்பாக வரும், அந்த குழப்பத்தோடு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. குழப்பத்தை தெளிவுபடுத்திய பின்னரே முடிவு எடுக்க வேண்டும். ஆனால் காலம் கடந்து விடுமோ என்று பயந்து அவசரமாக முடிவெடுத்தால் வாழ்க்கையே கேள்விக் குறி ஆகிவிடும். இன்று மட்டுமே உன் கையில் அதை சரியாகக் கையாண்டால் நாளைய சரித்திரம் உன் பெயர் சொல்லும்.

சரி உங்களுக்கு என் வாழ்வின் திருப்பமாக அமைந்த சம்பவத்தை எடுத்துரைக்கிறேன், நான் எனக்கு விருப்பமான துறையை விடுத்து பெற்றோரின் வற்புறுத்தலால் வேறு துறையை தேர்ந்தெடுத்திருந்தேன், நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த சமயத்தில், எனக்கு ஆர்வம் இல்லாத துறை என்பதால் என்னால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தேன் வீட்டில் அதனை கூறுவதற்கு பயந்துகொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டேன்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு என்னை காப்பாற்றி, என்னை எனது பெற்றோர் ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். என்னிடம் பேசிய பின்னர் அந்த மருத்துவர் என் பெற்றோரை அழைத்து பேசினார்.

“உங்க மகளுக்கு பெருசா எதுவும் பிரச்சனை இல்ல, ஒரு சின்ன பிரச்சனை தான் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால் தான் இந்த முடிவை எடுத்திருக்கா” என்று மருத்துவர் கூறினார்.

" பன்னிரண்டாம் வகுப்பு வரை எல்லா படத்துக்கும் டியூசன் அனுப்பி நிறைய மார்க் எடுக்க வச்சிருக்கோம், எவ்ளோ பெரிய காலேஜ்ல படிக்க வைத்திரிகிறோம் தெரியுமா? இவளுக்கு படிப்பதற்கு என்ன பிரச்சனை? " என்று சற்று கடித்தவாறு பேசினார் தயார்

" பெரிய காலேஜோ , சின்ன காலேஜோ, ஆர்வமில்லாத படிப்பை படிக்கணும்னா கஷ்டம் தான், அவளுக்கு விருப்பமான படிப்பை படிக்க அவளுக்கு நீங்கதான் வழிசெய்து கொடுக்கணும்" டாக்டர் கூறினார்.

“அவளுக்கு இலக்கியத் துறையில் தான் ஈடுபாடு ஆனால் அதெல்லாம் படிச்சா நாளைக்கு சொகுசாக வாழ முடியுமா? இப்போ படிச்சுக்கிட்டு இருக்க துறையில் அவளுக்கு வேலை கிடைச்சா லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்” தந்தை கூறினார்

“படிப்பில் எந்த வித்தியாசமும் இல்ல, திறமையில் தான் இருக்கு. நீங்க அவளுக்காக தேர்ந்தெடுத்த துறையில் அவளுக்கு திறமை இல்லை, ஈடுபாடும் இல்லை நிச்சயமா அவளால அங்கு சாதிக்க முடியாது. ஆனால் அவள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்தால் அவளோட திறமைக்கு நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரிய சாதனையாளரா வருவாள்” மருத்துவர் கூறினார்

“சரி நீங்க சொன்னதையே சரின்னு வைத்துக்கொள்வோம் ஏற்கனவே ஒரு வருடம் படித்தாயிற்று, இரண்டாவது வருடமும் தொடங்கி விட்டது இப்போது முடிவை மாற்றினால் இரண்டு வருடம் வீணாகிப் போய் விடுமே” சற்று கோபமாய் தந்தை கேட்டார்

“கழிந்த ஒரு வருடம் பட்ட கஷ்டங்களின் முடிவாய் உங்க மகளோட மனநிலை எப்படி இருக்குன்னு நீங்களே தெரிஞ்சுகிட்டீங்க, அதோட இந்த வருடம் அவள் ஒரு புத்தகத்தை சிறந்த முறையில் எழுதி, அதை வெளியிட நீங்கள் அவளுக்கு ஆதரவாக இருங்கள், ஆக மொத்தம் இந்த வருடமும் வீணாகப்போவதில்லை. அடுத்த கல்வியாண்டில் அவளுக்கு ஆர்வமுள்ள துறையில் அவள் படிக்க ஆவன செய்யுங்கள்” தெளிவுபடக் கூறினார் மருத்துவர்

" இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா? " அப்பா கேட்க

"நாம் நடக்கிற முறைதான் நடைமுறையாக மாறுது, அதுல இருக்கிற தவறுகளை திருத்தணும்னா, திருத்தங்களை நடைமுறை படுத்தனும். உங்க மகளோட இன்றைய பசியை நீங்க போக்குங்க, நாளைய பசியை போக்க அவளே கற்றுக் கொள்வாள். "என்றார் மருத்துவர்

“இல்ல டாக்டர் இதெல்லாம் சரிப்பட்டு வரும்னு எனக்கு தோணல” அப்பா கூறினார்

மருத்துவர் பரிபூரணியை பார்த்தார் “நாளைக்கு யார் கையில் இருக்கும்னு தெரியாது, ஆனால் இன்று உன் கையில் தான் இருக்கு” என்றார்

தெளிவும் உறுதியும் பிறந்த உணர்வோடு புன்னகை சிந்திக் கொண்டே மருத்துவரை பார்த்தாள் பரிபூரணி, " நீங்க சொன்னது தான் சரி டாக்டர் நாளைக்கு நம்ம கையில இருக்குமான்னு தெரியல, இன்னைக்கு என் கையில தான் இருக்கு கண்டிப்பா இந்த வருடம் என்னுடைய ஒரு புத்தகம் வெளியாகும். அடுத்த கல்வியாண்டில் நான் இலக்கியத்துறையில் படிப்பேன் இதை எப்படி செய்யபோறேன்னு தெரியல, ஆனால் கண்டிப்பா செய்வேன்" என்றாள் உறுதியோடு.

“வாழ்த்துக்கள்” என்று டாக்டர் கூறினார்

"அப்படின்னா ஒரு வருஷம் உனக்காக 2 லட்சத்துக்கும் மேல் செலவு பண்ணியிருக்கோம் அதெல்லாம் வீணா? " சற்று கோபத்துடன் கேட்டார் அவள் தந்தை

" என்னோட திறமைய வச்சு இரண்டு கோடியாக அதைத் திருப்பிக் கொடுப்பேன்", என்று உரக்க தன் தந்தையின் கண்களை பார்த்து கூறினாள் பரிபூரணி.

அவளது உறுதியைக் கண்டு அவன் பெற்றோரின் மனமும் அவள் பக்கம் சாய்ந்தது

“என்னோட வாழ்க்கையில் நான் தெளிவாக எடுத்த உறுதியான முடிவு என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது உங்கள் வாழ்க்கையை உண்மையாகவும் நேர்மையாகவும் வாழுங்கள். தக்க சமயத்தில், தைரியமாக சரியான முடிவுகளை மேற்கொள்ளுங்கள், அவ்வாறு செய்தால் உங்கள் வாழ்வில் நீங்கள் இழப்பது தோல்வியாக இருக்கும், பெறுவது வெற்றியாக இருக்கும். ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் இன்று மட்டுமே நம் கையில், நன்றி, ஜெய் ஹிந்த்” என்று கூறி பரிபூரணி அமர்ந்தபோது எழுந்து கைத்தட்டியவாறு தனது பெற்றோரை பார்த்தாள் வேணி. அவள் கண்களில் தெரிந்த உறுதி கண்டு அவளது பெற்றோர் மனமும் அவள் பக்கம் சாய்ந்தது.

விழா நிறைவு பெற்று பரிபூரணி வெளியேறிய போது அவளை வழி மறைத்தவாறு வேணி வந்து நின்றாள்.

" நீங்க பேசியது ரொம்ப நல்லா இருந்தது "என்று கூறினாள் வேணி

“நான் தயார் படுத்தி வைத்திருந்த பேச்சை விட்டு விட்டு, இவ்வாறு பேசியதற்கு காரணம் உன் முகத்தில் தெரிந்த தடுமாற்றம் தான். அது என்னுடைய கடந்த காலத்தை எனக்கு ஞாபகப்படுத்தியது” என்றாள் பரிபூரணி

" உங்கள் முகத்தில் தெரியும் தெளிவு என்னுடைய எதிர்காலத்துக்கு என்னை ஊக்கப்படுத்துகிறது" என்றாள் வேணி, உறுதியோடு

நிறைந்த மகிழ்ச்சியோடு “வாழ்த்துக்கள்” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பரிபூரணி.

தெளிந்த மனதோடு “நன்றி” என்றவாறு தலையசைத்தாள் வேணி, புதுப் பாதையை நோக்கி…