Community

குழந்தையின் அழுகை... கையேந்திய கமலா...!

“அந்த நோயெல்லம் நமக்கு வராது, நாம சாப்புடற சாப்பாட்டுலயே அந்த நோய எதிர்த்திடலாம்.” ‘இந்தியாவின் கேரள மாநிலத்தில் முதல் நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது’ என்ற செய்தியை படித்துவிட்டு ஆறுமுகம் இவ்வாறு பேசிவிட்டு, “இன்னும் அஞ்சு மாசத்துல சீசன் தொடங்கிடும் அப்புறம் தென்காசிக்கும், அருவிக்குமே ரூட்டு அடிச்சு வண்டி தேயும் அதுக்குள்ள வண்டிய ரெடி பண்ணனும் நான் கெளம்புறன்” என்றுஅங்கிருந்து சென்றார். உடன் இருந்த பாண்டியும் “ஆமாம், ஏற்கனவே முனியம்மா மூணு மாச கடை வாடகை பாக்கியிருக்கு நானும் போய் என்னானு ஒரு எட்டு பாத்துட்டு வர்றேன்”

குற்றாலநாதர் கோவில் பக்கவாட்டில் அமைந்திருக்கும் கடைத்தெருவில் பாண்டிக்கு நான்கு கடைகள் இருக்கிறது. அதில் ஒரு கடையைத்தான் கணவனையும் மகனையும் இழந்து மூன்று பெண் குழந்தைகளுடன் வாழாவெட்டியாக வந்த மகளையும் சேர்த்து காப்பாத்தும் முனியம்மாவுக்கு வாடகைக்குவிட்டிருந்தான் பாண்டி.

“அக்கா, மூணு மாச கடை வாடகை இன்னும் கட்டல எப்போ கட்றதா உத்தேசம்”

“பொண்ணு வேல செய்ஞ்சுட்டிருந்த தையல் கடையும் மூடிட்டாங்க, இன்னும் இரண்டு வாரம் டைம் கொடு தம்பி கொடுத்துறேன்.”

முனியம்மாவின் கணவனால் தொழில் கத்துக்கிட்ட பாண்டி முனியம்மா கடை வாடகையை மட்டும் ரொம்ப கறாரா கேட்க மாட்டான்.

மாசத்துக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபானு மூணு மாச வாடகை நாலாயிரத்து ஐநூறு ரூபாயை எப்படியோ பொரட்டி இரண்டு வாரத்துல கட்டிட்டா.

கேரளாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டிருக்கும் பரவியது கொரோனா. நோயின் தீவிரம் அதிகமாக, மார்ச் மாதம் தமிழகத்தில் முதல் ஊரடங்கு போடப்பட்டது. மீண்டும் முனியம்மா, இரண்டு மாத கடை வாடகையை கட்டவில்லை. வீட்டில் சோறு பொங்கவும் பணம் இல்லாத காரணத்தினால் கடைசியாக அவள் மகள் கழுத்தில் இருந்த தாலியை அடகு வைத்து வாடகையையும் ஒரு மாத வீட்டு செலவையும் சரி செய்தாள்.

“அம்மா, எப்போமா கறி ஆக்கிபோடுவ” முனியம்மாவின் முதல் பேரன் வினோத் கேட்க.

“நாம இங்க கஞ்சிக்கே வழியில்லாம உக்காந்துனு இருக்கோம் இதுல உனக்கு கறி கேக்குதா கழுத”

“கஞ்சிக்கே வழியில்லனா எதுக்கு எங்கள பெத்துக்கின”

“எப்பா, இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்துக்கோ, கடை தொறந்ததும் கறி சமைக்கலாம்” என முனியம்மா பாட்டி, அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கவிருந்த கைகலப்ப தடுத்து நிறுத்தினா.

கிட்டத்தட்ட தமிழகத்தின் 40% குடும்பத்தில் இப்படித்தான் அடுத்த வேளை சோறுக்கே என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருந்தார்கள்.

“ஏலே அருணகிரி எங்கள உன் பொஞ்சாதி காலையில அட்டைய தூக்கிட்டு போயிட்டு இருக்கா?”

“ரேஷன் கடைல அட்டைக்கு ரூ 1000 தராங்களே தெரியாதா; அதுக்குத்தான் போயிட்டு இருக்கா.”

கமலா அடுப்பங்கரையில் கஞ்சி காசிட்டிருக்க, முனியம்மா அட்டைய தூக்கிட்டு ரேஷன் கடைக்கு போய் மணிக்கணக்கா நின்னுட்டிருந்தா. உச்சு வெயிலு முக்காட உடைச்சு மண்டைக்குள்ள இறங்க, முனியம்மா மூளையோ ஆயிரத்துல எதவெல்லாம் முடிக்கலாமுன் ஆராய்ஞ்சு கால்குலேட்டர் இல்லாம ஒரு மாசம் கணக்க கச்சிதமா போட்டு வச்சு இருந்தாள்.

வயக்காட்டுல விதைய போட்டுட்டு காவிரி நீருக்கு காத்திருந்த விவசாய போல அவ்வளவு நேரம் நின்னு கடைக்காரன்கிட்ட அட்டைய கொடுத்தா, “ஏன்மா உன் அட்டைக்கு இன்னிக்கு கிடையாது வியாழக்கிழம வா”னு சொல்லிட்டான் கடைக்காரன். ‘ஏன் முன்னாடியே சொல்ல முடியாதானு கடைக்காரன்கிட்ட சண்டையும் போடமுடியாது. அப்படிபோட்டா அடுத்த முறை வரும்போது காசு காலி அப்புறம் வானு சொல்லிட்டா என்ன பண்றதுனு’ மனசுக்குள்ளேயே நினைச்சுக்கிட்டு அங்கிருந்து வீடு சேர்ந்தாள் முனியம்மா.

வீட்டுக்கு வந்த முனியம்மாவுக்கு மாலையில் இருந்து உடம்பு சோர்வாகவே இருக்க கமலா மேல எரிஞ்சு எரிஞ்சு விழுந்துட்டு இருந்தா. “யம்மோ ஒழுங்கா கேட்டுக்காமபோய் உன்ன யாரு நின்னுட்டு வர சொன்னது; இங்க வந்து எங்கள ஏசிகிட்டு இருக்க”னு சொல்லிக்கிட்டே கோதுமை ரொட்டிய கமலா, முனியம்மா, முதல் பயன் வினோத் மூணு பேரும் சாப்புட்டு, குழந்தைங்க இரண்டு பேருக்கும் கஞ்சிய குடிப்பாட்டிட்டு தூங்கனாங்க.

மறு நாள் காலையில எழுந்ததுல இருந்து முனியம்மாவுக்கு உடம்பு அனலா கொதிச்சுட்டு இருந்தது. “எப்பவும் காலையில வாசல் தெளிச்சு கோலம் போடும் முனியம்மா இன்னிக்கு வெளியவே வரல”னு சந்திரா கேட்டதுக்கு. “எங்கம்மாக்கு நைட்ல இருந்து ஒரே காய்ச்சலடிக்குது அதான் படுத்துட்டு இருக்கு” இதை கேட்டதும் சந்திரா, அக்கத்து பக்கத்து வீட்டுகாரங்கலாம் ஊர் தலைவர்கிட்ட சொல்ல, அவரு மருத்துவமனைக்கு சொல்லி ஆள் வரவச்சு முனியம்மாவ மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. பரிசோதனை செஞ்சதுல முனியம்மாவுக்கு கொரோனானு தெரிஞ்சுது. அதனால முனியம்மா வீட்டையும் தனிமைப்படுத்தி யாரையும் வெளியே போகவிடாம பண்ணிட்டாங்க.

பதினஞ்சு நாள் கழிச்சு முனியம்மா குணமாகி வீட்டுக்கு வந்ததும் வீட்டுல இருந்த தகரத்தையும் எடுத்தாங்க. ஆனா அதுக்கு அப்புறமும் அவங்க வீட்டுக்கு யாரும் போகல. முனியம்மா வீட்டுக்காரங்கக் கூட யாரும் பேசுரதும் இல்ல. அதுக்குள்ள ஊரடுங்கும் முடிந்து சிறு குரு தொழில் எல்லாம் தொடங்கியது அரசு. ஆனா முனியம்மாவுக்கு கொரோனா வந்து போனதனால் கடையை காலி பண்ண சொல்லிவிட்டான் பாண்டி. கமலா வேலை செய்ஞ்சுட்டு இருந்த தையல் கடைக்காரரும் கமலாவை கொஞ்ச நாளுக்கு வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாரு.

எந்த வருமானமும் இல்லாம முனியம்மா குடும்பம் அனாதையாய் நின்றது. பெத்த குழந்தைங்களுக்கு ஒரு வேளை சோறும்கூட கொடுக்க முடியாத நிலையில் கமலா. பசி அந்தக் குடும்பத்திற்கு புதிதல்ல. ஆனால், பஞ்சம் புதிதாக இருந்தது. குழந்தைகளை சிரிக்க வைத்தே மகிழும் மானுடத்திற்கு இடையில், பசியால் நித்தமும் அழுவும் குழந்தைகளைக் காணமுடியாமல் உடலில் இருந்த குருதி முழுதும் வறண்டுபோய் சக்கையாய் போனார்கள் முனியம்மாவும் அவள் மகள் கமலாவும். வருமானத்திற்கும் வழியில்லை, மீண்டும் தொழில் தொடங்கலாம் என்றால் முதலுக்கு பணமுமில்லை நடத்த இடமுமில்லை.

பணம் கௌரவும் பார்க்கும் பசி மானத்தைக்கூட பார்க்காது. மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காத மனிதர்களிடமே “அம்மா தாயே” என்று தெரு தெருவாக கையேந்தி பிச்சை எடுத்து குழந்தைகளின் பசியை போக்கினார்கள் முனியம்மாவும் கமலாவும்.