Community

நல்ல காலம் வரும்

# காலம் # வரும்

by RAMANI

நாளைக்கு ராதையைப் பெண்பார்க்க வராங்களாம். நல்ல விஷயம்தான். ஆனா நம்ம சாஸ்திரிகளுக்கு திக் திக் என்றிருந்தது. ஒன்னுமில்லே. வரவாளுக்கு முதல்ல பெண்ணைப் பிடிக்கணும். அப்புறம் அவங்க என்ன கேப்பாங்களோன்னுதான்… ஏன்னா இதுக்கு முன்னால் ரெண்டு பேர் வந்து பாத்ததில ஒருத்தருக்கு பெண்ணைப் பிடிக்கலே, மாநிறமாம்… இன்னொருத்தர் மாநிறமெல்லாம் பரவாயில்லே, ஆனா சிவப்பாக்க கொஞ்சம் செலவாகும்னா. ஒன்னுமில்லே, 50 பவுன், ஒரு லட்சம் ரொக்கம்… ! ஹும்… இப்ப வரவங்க எப்படியோ…?

அடுத்தநாள் வந்தது, அவங்களும் வந்தாங்க. மாப்பிள்ளை ரகு மாநிறம்தான், அதனால் பரவாயில்லே. நிறப்பொருத்தம் ஓகே. பாத்தாங்க, பேசினாங்க, பாடச் சொன்னாங்க… எல்லாம் ஓகே… சரி…அப்புறம்…? சாஸ்திரிகளே பேசினார்… " எனக்கு ஒரே பொண்ணு…‌ என் சக்திக்கு. 15 பவுன், 50000 தரேன். கல்யாணத்தை நல்ல முறையில் நடத்திடுவேன்,… உங்களுக்குன்னு விருப்பம் இருந்தா சொல்லலாம்"

பையனின் அம்மா ( அப்பா கிடையாது) பேசினாள்… என் பையன் வைதீகம் தான்… அதோட கொஞ்சம் சமையல் வேலையும் செய்வான்… ஏதோ தேவையான வருமானம் வருது… கல்யாணத்தை சிம்பிளா நடத்தினா போறும்… "

திருமணம் நடந்தது. பையனோட மாமான்னு ஒருத்தர்… மண்டபத்தில் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த. குடுமிவச்ச இளைஞனைப் பார்த்தார்.

" டேய்… இங்க…வா…" வந்தான்…

" நீ பெண்ணுக்கு யாருவேணம்"…

"அது வந்து… சாஸ்திரிகள் மாமா எனக்கு குரு… அவரோட வைதீகத்துக்குப் போவேன்…கூடமாட ஒத்தாசை செய்வேன்… "

" அப்படியா. சரி சாஸ்திரிகளைக் கூப்பிடு"… வந்தார்…, " ஏன்காணும். கருகப்பிலைக்கொத்து மாதிரி ஒரு பையனைக் கூடவே வச்சுண்டு, ஏன்…ஓய்… வெளீல மாப்பிள்ளை தேடினேள்… அவன் நன்னாத்தானே இருக்கான்…எங்க புள்ளையைவிட கலராவும் இருக்கான்…அப்புற மென்ன?"

" அவன் என்னோட சிஷ்யன், நான் குரு… அம்புட்டுத்தான் எங்க பந்தம்"

" ஏன் பொய் சொல்றேள், ஒங்க பெண்ணுட்ட அவன் சிரிச்சு சிரிச்சு பேசிண்டிருந்தானே… அப்படீன்னா… என்ன அர்த்தம்?"

" என்ன அர்த்தம்?"

“அவா ரெண்டு பேருக்கும் ஏதோ உறவு இருக்கு… அதை மறைச்சு, எங்க தலைல பெண்ணைக் கட்டிட்டேள்… அப்படித்தானே…”

" ஐயையோ… அபச்சாரம்… அபச்சாரம்… இல்லாததையெல்லாம் சொல்லி… நல்ல காரியத்தைத் கெடுத்துடாதேங்கோ… தாலி கட்டியாச்சு". அப்போது மாப்பிள்ளையின் தாயார் அங்கு வந்தாள்… " அண்ணா… என்னாச்சு…"

அவர் எல்லாத்தையும் சொன்னார்…

“இல்லேண்ணா… அவா நல்ல சுபாவம்… நல்ல பொண்ணு… நீ இதைப் பெரிசாக்காம விட்டுடு”

“எதை விடச்சொல்றே… நம்ம பையனுக்கு என்ன கொறை… நன்றாகத்தானே இருக்கான்… நாலு காசு சம்பாதிக்கிறானில்லே… பொண்ணுக்கா பஞ்சம்…நீதான் அவசரப் பட்டுட்டே… சரியா விசாரிக்கலே… இதை இப்படியே விட்டுட்டா நமக்கு நல்லதில்லே”

சாஸ்திரிகள் பேசினார்,

“இப்ப என்ன செய்யணுங்கறீங்க…”

" சரி… சரி… ஏதோ நடந்தது நடந்தாச்சு. காதும் காதும் வச்சமாதிரி முடிச்சுடுவோம்."

" எப்படி?"

" ஒன்னுமில்லே… கூட ஒரு 50 ரூ 10 பவுன் கொடுத்துடுங்கோ… அம்புட்டுத்தான்"

சாஸ்திரிகள் மாப்பிள்ளையின் தாயாரைப் பார்த்தார். அவங்க தலையக்குனிஞ்சு நின்னாங்க.

" இதை…‌ முன்னாடியே சொல்லியிருக்கலாம். இப்ப போய் சொல்றீங்க… என்கிட்டே இப்ப அவ்வளவில்லே… தாலி கட்டியாச்சு…

பெண்ணைக் கூட்டிட்டுப் போங்க. நான் கொஞ்சம் கொஞ்சமா நீங்க சொன்னதைச் செய்ய முயற்சிக்கிறேன்."

" அப்ப நீங்க முயற்சி பண்ணிட்டு கூப்பிடுங்க… வந்து பெண்ணை அழைச்சுட்டு போறோம். இப்ப நாங்க கெளம்பறோம்"

சாஸ்திரிகள் கண்ணீர் விட்டுக் கதறினார். மாப்பிள்ளையோ தாயோ ஏதும் பேசவில்லை.

" டேய் ரகு கெளம்புடா…" எல்லோரும் போய்விட்டார்கள்.

சாஸ்திரிகள் தன் பெண்ணைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறினார். ராதா முதன்முறையாக வாயைத் திறந்து, “அப்பா… அழாதீங்க… நானும் நன்றாக சமைப்பேன்… அப்பா… இனி அதைத் தொழிலாக்கிடுவோம்… எனக்கு நம்பிக்கையிருக்குப்பா… ரெண்டே வருஷத்துல அவங்க கேட்டதை சம்பாதிச்சுக் காட்டறேன்.”

அதேபோல் காட்டினாள்!

ரகுவிற்கு தகவல் வந்தது. அவன் வந்தான்… ராதாவை அழைத்தான்… அவள் சிரித்தாள்… " இந்தா … நீ கட்டின தாலி… இதுக்குத் தான் கூப்பிட்டேன். நீ…போகலாம்… எனக்கு நானே என் காலால் நிக்க முடியும்னு நம்பிக்கையைக் கொடுத்ததற்கு நன்றி".

ரகு தலையைக் குனிந்து வெளியே போனான்.

கதவடைக்கப் பட்டது.