Community

நித்தமும் நீர் வேண்டும்

“ஐயோ… என் கனவுக்கன்னியே என்னைக்கு இல்லாம இன்னைக்கு என்ன இவ்ளோ அழகா இருக்க?” என்று பேசிக்கொண்டிருந்த குமாருக்கு ஏதோ ஒரு சத்தம் “கட முட கட முட…” என்று கேட்டது. “இந்த நேரத்துல என்னடா இது சத்தம், அதுவும் நம்ம வயித்துக்குள்ள இருந்து. என்ன சத்தமோ நம்ம கனவுகன்னிய கவனிப்போம்” என்று மீண்டும் கனவில் ஆழ்ந்துபோனான் குமார்.

தூங்குவதற்கு முன்னாள் எதை நினைக்கிறோமோ எதைப் பார்க்கிறோமோ அதுதான் கனவில் வருமென்று யாரோ சொன்னதை இணையத்தில் பார்த்த குமாரு வெறும் சினிமா நடிகைகளின் பாடல்களை மட்டும் பார்த்துவிட்டு கடவுளிடம் “ஆண்டவா இன்னைக்கு கனவுல நல்ல ஹீரோயின் வரணும்” என்று வேண்டிவிட்டுத் தூங்கினான். இப்படி தினமும் அவனுடைய ஆசை நாயகிகளின் பாடல்களைக் கேட்டுவிட்டுத் தூங்குவது வழக்கம்.

தினமும் குமாரின் கனவில்தான் அவர்கள் வருகிறார்களா? அல்லது கண்ணை மூடிக்கொண்டு இவனாக அவர்களை நினைத்துக்கொள்கிறானா? என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் தினமும் அவன் ஆசை நாயகிகளுடன் டூயட் பாடுவது குமாரின் வழக்கம்.

அப்படித்தான் அன்றும் டூயட் பாட தயாராகிக்கொண்டிருந்தான் குமாரு. சத்தத்தைக் கண்டுகொள்ளாமல் தன் கனவுக்கன்னியைக் கட்டியணைக்கக் கிட்ட நெருங்கிய நேரத்தில் சத்தம் விஸ்வரூபம் எடுத்தது. சத்தத்தோடு சேர்ந்து வலியும் வயித்துக்குள் பிரசவித்தது. கனவைக் கலைக்க மனம் வராமல் எப்படியாவது கட்டிப்பிடித்திடவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தான் குமார். ஆனால் வயித்து வலி கனவையும் களைத்து கண்ணுக்கு வந்தது. சட்டெனக் கண்விழித்தான் குமார் கடிகாரத்தில் மணி சரியாக நடுராத்திரி 12.25 ஆனது.

சட்டென எழுந்து அமர்ந்தான் குமார் ஆனால் வலி பொறுக்க முடியவில்லை. “ஏய் பெண்ணே(கனவுக்கன்னியை) தள்ளிப்போ… இல்லனா எம்மாணம் போய்டும்” என்று நினைத்துக்கொண்டு தூக்கத்தையும் கனவையும் களைத்துக்கொண்டு கக்கூஸ் நோக்கி ஓடினான் குமார். போறவழியில் வைக்கப்பட்டிருந்த வாஷிங்மிஷினில் இடித்துக்கொண்டதுகூட தெரியாமல் ஓடினான். கக்கூசுக்குள் சென்றபின் பதட்டத்தில் பத்து நொடிகளைத் தாழ்ப்பாள் போட எடுத்துக்கொண்டான்.

தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் திரும்பியவன் லைட்டு போட மறந்திருந்தான். மீண்டும் கதவைத் திறந்து லைட்டுபோட்டு உள்ளே வந்தவன் கால்சட்டையை அவசராவசரமாக அவிழ்க்கும்போது பதட்டத்தில் நாடா சிக்கு விழுந்துவிட்டது பின் அதில் ஒரு 30 நொடிகள் கழிந்தது. ஒருவழியாக கால்சட்டையை அவிழ்த்து அமர்ந்து " நல்லவேளை டவுசர்லயே போகல" என்று நிம்மதி பெருமூச்சுவிட்டான். அந்த பெருமூச்சு கிட்டதட்ட ஒரு மலையையே ஒருவன் தூக்கி வேறு இடத்தில் வைத்திருந்தால் அவன் எப்படி பெருமூச்சு விட்டிருப்பானோ அப்படி இருந்தது.

மதியம் அம்மா சமைத்துத் தந்த சிக்கன் பிரியாணி பெருகுடல் சிறுகுடல் கடந்து

மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது. எல்லாம் முடிந்தபின் மெல்லப் பழுப்பைத் திறந்து தண்ணி இப்போ வரும் அப்போ வரும் என்று பார்த்துக்கொண்டிருந்தவனுக்குப் பழுப்பு பதில் சொன்னது. என்னிடம் இருப்பு வெறும் நான்கு சொட்டுதான் என்று வேகவேகமாக சொட்டி அமைதியானது. சட்டென வாலிக்குள் கைவிட்டான் வாலியின் அடிப்பகுதி தட்டுப்பட்டதே தவிர தண்ணீர் சொட்டு படவேயில்லை.

“இந்த வெயில்காலம் வந்தாலே இதே பிரச்சனதான்னு” தலையில் அடித்துக்கொண்டு குளியலுக்கு பயன்படுத்தும் வாலியை எட்டிப்பார்த்தான் அதிலும் தண்ணி தெரியவில்லை. “வேறுவழியில்ல குடித்தண்ணியதா எடுக்கணும்போலனு” எழுந்து கால்சட்டையை மேலே ஏத்திவிட்டு “பைப்புல தண்ணி சொட்டுது நிறுத்துடான்னு அம்மா சொல்லும்போது தண்ணிதான்னு நிறுத்தாம போனப்போ தெரியல இந்த தண்ணியோட அருமை, இன்னைக்குதா புரியுது” என்று புலம்பிக்கொண்டே நடக்கலானான்.

பல கிராமங்களில் கழிப்பிடம் இல்லாமல் தண்ணியில்லா ஏரியிலும்,

கம்மாயிலும் காலைக்கடன் முடித்துவிட்டு தண்ணித்தேடி வீட்டுக்கு வருபவர்கள் அந்த இடத்தில் கட்டி வந்ததுபோல் ஒருவிதமாக நடப்பார்கள் அப்படித்தான் குமாரும் இப்பொழுது தண்ணித்தேடி புறப்பட்டான்.

குமாரின் வீட்டில் தண்ணி இருந்தால்தான் சுத்திகரிக்கப்பட்டு அது ஒரு குடத்தில் ஊற்றிவைக்கப்படும். அன்று தண்ணி இல்லாததால் தண்ணி ஏதும் குடத்தில் ஊற்றிவைக்கப்படவில்லை. குடத்தில் இருந்த தண்ணியை ஒரு பாத்திரத்தில் ஊற்றினான் குமார். அதில் ஒரு சோம்பு தண்ணிதான் தேரியிருந்தது. ஆனால் அதைவைத்து என்ன செய்வது மனம் தளராமல் குமார் மீண்டும் யோசித்தான்.

யோசிக்கிற நேரத்தில் மோட்டரைபோட்டு தண்ணீர் வரவழைக்கலாம் ஆனால் அவன் இருப்பது வாடகை வீடு மோட்டார் சுவிட்ச் இருப்பது வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள்.

சரி மாடியில் இருக்கும் தண்ணிதொட்டியில் ஏறிப் பார்ப்போம் என்று முடிவெடுத்தான். மெல்லக் கதவைத் துறந்து மாடிக்குச்சென்றான். பின் தண்ணித்தொட்டியில் ஏறிப்பார்த்தான் அதிலும் தண்ணியில்லை. “அதான தண்ணி இருந்திருந்தாதா கீழ வந்துருக்குமே” என்று மனதில் நினைத்துக்கொண்டு அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தான். “வேறவழியில்ல காகிதம்தா நமக்கு கைகொடுக்கும்னு” நெனச்சு படியிரங்கும் நேரத்தில் அந்த அதிசயம் அவன் கண்ணுக்குத் தட்டுப்பட்டது.

அது வேறொன்றுமில்லை பக்கத்து வீட்டு தண்ணிதொட்டிதான். அப்பொழுது அவன் அடைந்த இன்பம் அவன் காதலி அவனுக்குத் தந்த முதல் முத்தத்தையும் தாண்டி ஒரு சந்தோசத்தைக் கொடுத்தது. காரணம் காதலியும் காதலும் வயத்துக்குத்தான் தேவை. ஆனால் நீரும் சோறும் வாழ்க்கைக்குத் தேவை. காதல் அவசியம் இது அத்தியாவசியம்.

அடிக்கடி வீட்டு உரிமையாளர் சொல்வார் “நம்மவீட்டிலும் அதே 500 அடிதான், அவங்க வீட்டிலும் அதே 500 அடிதான் ஆனா நம்ம வீட்டு மோட்டாரு கடமைக்கு ஊத்துவோம்னு ஊத்திக்கிட்டு இருக்கு, அவங்கவீட்டு மோட்டார் பிச்சிக்கிட்டு அடிக்குது தண்ணியன்னு”. அந்த வார்த்தைகள்தான் இப்பொழுது அவனுக்கு மகிழ்ச்சி தந்தது.

உடனே கீழே போனான் இரண்டு வாலிகளை எடுத்தான் விருவிருன்னு மாடிக்கு வந்தான். இவன் வீட்டு மாடி சுவரின் மீதிருந்து பக்கத்து வீட்டு மாடி சுவரின் மீது கையை நீட்டி வாலியை வைத்தான். அவனும் சுவரின் மீது ஏறி ஒரு தவ்வு தவ்வினான் பக்கத்து வீட்டுச் சுவரின் மீது. மெல்ல முன்னங்காலைத் தரையில் ஊன்றி நடந்தான் சத்தம் ஏதும் கேட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தான் குமார்.

தண்ணிதொட்டியின் மீது ஏறி மெல்ல மூடியைத் துறந்தான் வானில் இருக்கும் நிலாவின் பிம்பம் நீரில் மின்னியது அத்தோடு சேர்த்து குமாரின் பற்களும் மின்னியது. ஏதோ புதையலைக் கண்டுபிடித்தவன்போல் “அப்பாடா ஒருவழியா தண்ணிய கண்டுபிடிச்சாச்சு” என்று இரண்டு வாலிகளிலும் தண்ணீர் நிரப்பி தண்ணிதொட்டியின் மீதிருந்து கீழே இறங்கினான்.

சட்டென வந்தது சத்தம் “டேய்” என்று. அதிர்ந்துபோனான் குமார் சத்தம் வந்த பக்கம் திடுக்கிட்டுத் திரும்பினான் எதிரே நின்றார் குமாரின் அப்பா. உடனே “ஷ்…” என்று கையிலிருந்த வாலியைத் தரையில்வைத்து ஆள்காட்டி விரலை வாயின்மேல் வைத்து அப்பாவை அமைதியாக்கினான். பின் நடத்த அனைத்தையும் அப்பாவுக்குச் சைகையில் விளக்கினான் குமார்.

அனைத்தையும் அறிந்துகொண்ட அப்பா தொங்கிக்கொண்டிருந்த தனது கையை மெல்ல மேலே உயர்த்தினார். குமாருக்கு சிரிப்பதா? இல்லை ஆச்சரியப்படுவதா? என்று தெரியவில்லை சட்டென முன் நகர்ந்து கையை நீட்டினான் அப்பா பக்கமாக அப்பாவும் தன் கையிலிருந்த குடத்தை குமாரிடம் கொடுத்தார். பாவம் அப்பாவுக்கும் அதே பிரச்சனைதான் போலிருக்கு.

நடப்பது ஏதும் அறியாத அம்மா கணவனுக்கும் மகனுக்கும் மிகச் சிறப்பான பிரியாணி செய்துகொடுத்த சந்தோசத்தில் அசந்து தூங்கிக்கொண்டிருக்க, அப்பாவும் குமாரும் நல்லாயிருக்கேன்னு நல்லா சாப்பிட்டதால் இங்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

Yadharthamaaga illai… vaazhthukal…

1 Like