Community

போர் பம்பும் தாய்மையும்

சில தினங்களாகவே கலாவை கவனித்து வந்தேன். அவளுடைய வாடிய முகமும் வாராத தலையும் எதையோ எனக்கு உணர்த்தின. அம்மா என்று அவள் அழைப்பதே எனக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தரும். கலா எங்கள் வீட்டு பணிப்பெண். ரொம்ப நறுவிசாக எல்லாவற்றையும் செய்வாள் என்று சொல்ல முடியாது, ஆனால் பரவாயில்லை ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்ற ரீதியில் வேலைகளை முடித்து விடுவாள். நான் பணிப் பெண்ணை மிகவும் சார்ந்து இருப்பதில்லை என்பதால் அவள் வேலைகளில் குற்றம் எதுவும் காண்பதில்லை. மாதத்திற்கு இரு முறையாவது விடுப்பு எடுத்துக் கொள்வாள். தூரத்து சொந்தங்களின் காதுகுத்து வளைகாப்பு விழாக்களுக்கு ஒன்றுவிடாமல் போய் வருவாள்.

"ஏன் கைக்காசை செலவழித்து கொண்டு போகிறாய் ? " என்று கேட்டால் "போவாட்டி ஏதாச்சும் சொல்லுவாங்க " என்பாள். "அப்போ யாராவது ஏதாவது சொல்லுவாங்க, அதுக்காகத்தான் போறியா? " என்று கேட்டால்அதற்கு விளக்கமாக பதில் சொல்லத் தெரியாது அவளுக்கு. பெண்ணை வெளியூரில் கட்டிக் கொடுத்திருக்கிறாள். அவள் அடிக்கடி பணம் கேட்பதாக சொல்வாள். பெண் தையல் கற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதால் தையல் மெஷின் வாங்க இவள் பணம் கொடுத்தாள் பெண்ணிற்கு. ஆனால் அவள் கற்றுக்கொண்டாளா என்று தெரியவில்லை. நான் கேட்டதற்கு தையல் படிக்கிறாள் என்றாள்.
இரண்டு மூன்று முறை என்னிடம் கடன் கேட்டாள்.

நான் கொடுத்துவிட்டு உடனே அவளுடைய சம்பளத்தில் கழித்துவிட்டேன். கடன் கேட்பதும் கொடுப்பதும் எனக்கு பிடிக்காத ஒன்று. மீண்டும் ஒருநாள் தயங்கி தயங்கி வந்து நின்றாள். “என்ன கலா?” என்றேன்.

"ஒரு ஆயிரம் ரூபா குடுங்க அம்மா, குழு பணம் நாளைக்கு வந்துரும் ரெண்டு நாள்ல குடுத்துடுறேன் " என்றாள்.

“எதுக்கு கலா” என்று கேட்டேன். “பாப்பா கம்மலை அடகு வச்சு இருக்குது நாளைக்கு கல்யாணத்துக்கு போகணுமாம் அத திருப்பணுமாம் காசு கேக்குது” என்றாள்.

"அடகு வச்சு வாங்கின காசை என்ன பண்ணினா? " என்று கேட்டேன்.

“தையல் மிஷின் ரிப்பேர் ஆப் போச்சு அதற்கு செலவு பண்ணிட்டா.”

எனக்கு மிகவும் வினோதமாக இருந்தது. கலாவின் பெண் தையல் கற்றுக் கொண்ட மாதிரியும் தெரியவில்லை, ஒன்றும் தைத்ததாகவும் தெரியவில்லை. மெஷின் எப்படி பழுதாகும், புரியவில்லை.

"ஏன் இவ்வளவு பொறுப்பில்லாமல் இருக்கா உன் பொண்ணு? உனக்கு மட்டும் பணம் கொட்டுதா என்ன ? நீயும் உழைச்சு தானே சம்பாதிக்கிற? " என்ற என் கேள்விகளுக்கு கலா பதில் கூறாமல் நின்றாள்.

"அது அப்படித்தாம்மா, எதையும் சூதானமா வெச்சுக்க தெரியாது. நீங்க குடுத்த புடவை எல்லாத்தையும் கூட அதுதான் எடுத்துக்கிட்டு போச்சு "

எனக்கு கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. இந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் எவ்வளவோ சலுகைகளை தருகிறது. கிடைத்தற்கு அரிய கல்வி இலவசமாக கிடைக்கிறது. ஆனால் அவர்கள் அதை பயன்படுத்துவது இல்லை. சத்துணவு சாப்பிட மட்டும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், 6, 7 வகுப்புக்கு பிறகு படிப்பதில்லை. தொழில் கல்வியும் ஒழுங்காக பெறுவதில்லை. கலாவுக்கு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது. அவள் பெண்ணாவது படித்தாளா? நான்காம் வகுப்பு மட்டுமே.

"சரி தரேன், ஆனா இந்த மாதிரி உன் பொண்ணு அடிக்கடி உன்ன பணம் கேட்டு இருக்க கூடாது. " என்று கூறிவிட்டு அவளிடம் பணத்தை கொடுத்தேன். நன்றியுடன் பணத்தை பெற்று கொண்டு போனாள். சொன்னபடி நான்கு நாட்களில் பணத்தை திருப்பித் தந்துவிட்டாள்.

ஒரு வாரம் கடந்தது. தம்பி பெண்ணிற்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள் என்று கூறி விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றாள் கலா. மறுநாளே வருவதாக சொன்னவள் இரண்டு நாட்கள் ஆகியும் வரவில்லை. அவள் வேலை செய்யும் மற்ற இடங்களில் விசாரித்தபோது அவர்களுக்கும் தெரியவில்லை. அவளுடைய போன் சுவிட்ச் ஆப் ஆகவே இருந்தது.

நான்கு நாட்கள் கழித்து கலா வந்தாள். அவளுடைய மருமகனுக்கு உடம்பு சரியில்லை என்றும் அதனால் ஆஸ்பத்திரிக்கு அலைந்ததாக கூறினாள். கழுத்தில் மெல்லிய செயின் அணிந்திருப்பாள் அதை இப்போது காணவில்லை. "செயின் எங்கே கலா? " என்ற என் கேள்விக்கு “ஆஸ்பத்திரி செலவுக்கு அதை வெச்சுதான் பணம் வாங்கினேன்” என்றாள்.

இரண்டு நாட்கள் கழித்து தான் தெரிந்தது. கலாவின் மருமகன் குடித்துவிட்டு வண்டியிலிருந்து கீழே விழுந்து அடிபட்டு கொண்டிருக்கிறான். மோட்டர் பைக்கும் ஏகப்பட்ட டேமேஜ். ஆமாம்!! இவர்களுக்கெல்லாம் மோட்டர் பைக் வாங்க எங்கிருந்து பணம் கிடைக்கிறது ?

நான் கலாவிடம் கூறினேன் , "உன் பெண்ணை வரச்சொல் கலா, அவளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறேன், அருகிலுள்ள தையல் வகுப்புக்கும் அவள் போய் வரலாம். மூன்று மாதங்களில் கற்றுக் கொள்ளலாம். "

"அதெல்லாம் வராது மா, 100 நாள் வேலைக்கு போவுது அது, வேலை இல்லாத நாள்ல பஞ்சாயத்து ஆபீச கூட்றத்துக்கு போகும் " என்றாள்.

எனக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது. நல்லதை சொன்னாலும் எடுபட மாட்டேன் என்கிறது இவர்களிடம்.

இந்த ரீதியிலேயே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. கலா தன் தாயுடன் வசிக்கிறாள். வீட்டிலும் எல்லா வேலைகளையும் செய்துவிட்டு இங்கு வந்து மற்றவர் வீட்டு வேலையும் செய்ய வேண்டும் என்றால் எப்படி முடியும் அவளால்? இரக்கப்பட்டு நான் எது செய்தாலும் அவளுக்கும் கொடுத்துவிடுவேன்.

கலாவின் சம்பளத்தை அவளைக் கேட்காமலேயே அவள் அம்மா செலவழித்து விடுவதாக கூறினாள், ஒரு நாள். கலாவின் தம்பி தங்கை இருவரும் அடிக்கடி வருவார்களாம் அவர்கள் செலவுக்கு பணத்தை கொடுத்து விடுவாளாம் அவள் அம்மா. கலா கூறியபோது எனக்கு ஆத்திரம் ஆச்சரியம் கோபம் எல்லாம் ஒன்றாக வந்தது.

"உன் பணத்தை ஒன்ன கேட்காம ஏன் குடுக்குறாங்க? "

"நான் அம்மா வீட்டில் தானே இருக்கேன், அதனால ". கலாவின் கணவன் இறந்து விட்டதால் அவள் தன் தாயுடன் வசிக்கிறாள்.

"வேலையும் உன்கிட்ட வாங்கிக்கறாங்க, உன்னோட சம்பளத்தையும் செலவழிக்கிறாங்க. ஏன் நீ சும்மா இருக்க? கேக்க மாட்டியா?

எல்லாவற்றுக்கும் அவள் பதில் மௌனம் தான்.

ஒருநாள் வெகுநேரம் தன் பெண்ணுடன் போன் பேசிக்கொண்டு இருந்தாள் . பிறகு என்னிடம் வந்து “தையல் மெஷினுக்கு மோட்டார் வைக்கணும்னா எவ்வளவு ஆகும்?” என்று கேட்டாள்.

"அப்போ நல்லா தைக்க தெரியுமா உன் பெண்ணுக்கு? " என்று கேட்டேன் நான்.

“பஞ்சாயத்து ஆபீஸ்ல பெட்ஷீட் எல்லாம் ஓரம் அடிச்சு கொடுக்கணுமாம். இன்னொருத்தி மெஷின்ல மோட்டார் பொருத்தி இருக்கறதுனால வேகமா அடிக்கிறாளாம். அதனால இவளும் மோட்டார் பொருத்திக்கிறேன், அப்படின்னு சொல்றா”.

நான் சிரித்துவிட்டேன். பிறகு கூறினேன். "நல்லா தைக்கத் தெரிந்தவர்களுக்கு தான் மோட்டார் பொருத்தினால் சரியா வரும். உன் பொண்ண முதல்ல நல்லா தையல் பழக சொல்லு. " ஏதோ முனகி கொண்டே சென்றாள் கலா.

இப்போது மீண்டும் அவள் முகம் சரியில்லை. இன்று விசாரிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என் கவனத்தை மியாவ் மியாவ் என்ற பூனையின் குரல் ஈர்த்தது. கடந்த ஒரு மாதமாக வாசலில் வந்து அமர்ந்திருக்கும். தட்டில் பால் வைத்தால் நக்கி சாப்பிட்டுவிட்டு போய்விடும். கொஞ்சம் கொஞ்சமாக சுவாதீனமாக அருகில் வந்து என் கால்களை உரசி பால் கேட்க தெரிந்து கொண்டிருந்தது.

10 நாட்களுக்கு முன் பூனையின் வயிறு உப்பி இருந்தது. "குட்டி போட போகுது "என்றாள் கலா. குட்டியை எங்கோ பத்திரமாக வைத்துவிட்டு தினம் வந்து என்னிடம் பால் கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு போகும்.

நான் திரும்பிப் பார்த்தேன். இரண்டு குட்டிகளுடன் வந்தது பூனை. தாய் பூனையின் வயிறு ஒட்டி கிடந்தது . கொஞ்சம் அதிகமாகவே பாலை வைத்தேன். தாயுடன் சேர்ந்து குட்டிகளும் பாலை நக்கின. குட்டிகள் தான் அதிகமாக சாப்பிட்டன.

"அம்மா " என்ற குரல் வாசலில் கேட்டது. ஆள் ஒருவன் நின்று கொண்டிருந்தான். "என்னப்பா என்றேன். "போர் பம்பு போடணும்னு வர சொன்னீங்களே " என்றான்.

"நாங்க எதுவும் அந்த மாதிரி சொல்லவே இல்லையே "என்றேன்.

அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். "எங்க வீட்டுல சொல்லி இருந்தோம், இங்க வாப்பா "என்றார் அவனைப்பார்த்து.

அடுத்த வீட்டில் போர் பம்ப் போடும் வேலையை ஆரம்பித்தது. ஒரே ட்ரில்லிங் சப்தம் காதைத் துளைத்தது. பூமித்தாயை குடைந்து குடைந்து நிலத்தடி நீரை எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உறிஞ்சி கொண்டிருந்தனர்.

மரங்களை வெட்டி வெட்டி கான்கிரீட் காடுகளை உருவாக்கி மனிதன் தாய் மண்ணுக்கு எவ்வளவு கொடுமை செய்கிறான்.

மீண்டும் பூனையின் மியாவ் குரல் கேட்டது. குட்டிகள் இரண்டும் தாய் பூனையின் மடியில் பால் அருந்திக் கொண்டிருந்தன. தாய் பூனையின் வயிற்றை அழுத்தி அழுத்தி குட்டிகள் இரண்டும் காம்பிலிருந்து பாலை அருந்த முயற்சித்துக் கொண்டிருந்தன.

பால் வரவில்லையோ என்னவோ , முன்னங்கால்களால் தாய் பூனையின் வயிற்றை வலிக்க வலிக்க அழுத்தியது. தாய்ப்பூனை ஈனக் குரலில் முனகியவாறே எழுந்து நகர்ந்து சென்றது. குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுத்து சீறி விட்டு நகர்ந்து சென்று அமர்ந்தது. ஆனால் குட்டிகள் விடவில்லை. மீண்டும் தாய் பூனையின் அருகில் சென்று முட்டி முட்டி பால் அருந்த முயற்சி செய்தது. வேறு வழி இல்லாமல் தாய் பூனையும் பால் இருந்தா குடிச்சுக்கோ என்ற பாவனையில் ஒருக்களித்துப் படுத்தது. குட்டிகள் மீண்டும் தாய் பூனையின் மடியில் உள்ள காம்புகள் எல்லாவற்றிலும் பாலை உறிஞ்சி பார்த்துக்கொண்டிருந்தது. தாய்ப்பூனை இடையிடையே வேதனையுடன் முனகினாலும் குட்டிகள் பால் அருந்துவதை தடுக்கவில்லை.

பக்கத்துவீட்டில் போர் பம்ப் ஓசை நின்றுவிட்டது.
"நாளைக்கு இன்னொரு 300 அடி ஆழம் இறக்கிப் பார்க்கலாம் சார் " என்று ஆட்கள் கூறுவது கேட்டது எனக்கு.

ஏனோ கலாவின் நினைவு வந்து வாட்டியது எனக்கு. கலா, தாய்ப்பூனை, பூமி எல்லோரும் ஒரே கோட்டில். இவர்களை உறிஞ்சி எடுப்பவர்களை தடுக்க நினைத்தாலும் முடியாது. ஏனென்றால் தாய் உள்ளத்தின் வலிமைக்கு ஈடு இணை கிடையாது. இவ்வளவு கொடுமைகள் செய்தாலும் அரவணைப்பாள் தாய் . அவள் தெய்வம் அல்லவா?

1 Like

நல்ல இறுதி முடிவு… நெடிய பயணம் சென்று விளக்கி உள்ளீர்கள்…

மிக்க நன்றி . தங்கள் கருத்துக்கள் எங்களுக்கு வாழ்த்துக்கள்.

1 Like

Kadhaiyum ungal kuralum ondraaga irukka vendum… message solla aarambithal, makkal niraiya yedhirpaarpargal… nalla muyarchi… eppadi ungal kuralaiyum kadhaiyin kattaamaipaiyum urudhipaduthalaam endru paarungal… nandri

1 Like