Community

ஒரு தேவதையின் ஊமை குரல்

ஐப்பசி இருபத்தெட்டு
தீபாவளி கொண்டாட்டம்;
எங்கும் பட்டாசு சத்தம் எதிரொலிக்க, ஒரு அழுகை குரல் மட்டும் பிறப்பெடுத்தது;
அன்று கருவுற்றிருந்த இளம் பெண் ஒருத்தி, உலகிற்கு ஒரு அழகான தேவதையை ஈன்றெடுத்தால். வலிகள் இருந்தாலும் சிசுவின் அழுகையோடு சந்தோஷமும் பிறந்தது பெற்றவளுக்கு. தகப்பன் என்ற ஸ்தானம் கிடைத்ததும் தன்னையறியாது திமிரில்லா தலைகனம் கொண்டான் தந்தை. காசு, பணம், செல்வம், ஆடம்பரம், இவையனைத்தும் சேர்ந்தால் கூட மிஞ்சிவிடுமா பெற்ற தேவதையை விட? கொஞ்சி கொஞ்சி வளர்த்த குழந்தை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கபட்டபோது மனம் நொந்துபோனது பெற்றவர்களுக்கு. அந்த தேவதையின் வயதோ இரண்டு. காய்ச்சலில் இருந்து காப்பாற்றுவது கடினமென்று கைவிறித்தனர் மருத்துவர்கள். “உலகின் எல்லைக்கு சென்றாவது என் மகளை காப்பாற்றுவேன் என்று” மனவுறுதி கொண்டார் தந்தை. காய்ச்சலின் தாக்கம் கடுமையிலும் கடுமையானது. தன் மகளை மார்போடு அனைத்துக்கொண்டு பல மருத்துவமனை எறியிறங்கினார். இறுதியில் ஏதோ ஒரு மூலையில் யாருக்கும் அறியாத வண்ணமிருந்த மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு பல வேண்டுதல்களின் பயனாய் மீண்டு வந்தால் தேவதை. இரண்டாவது குழந்தை பெற்றெடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷம், மரணம் வரை சென்று உயிர் பிழைத்து வந்த தேவதையினால் கிட்டியது.

தேவதையவள் வளரத்தொடங்கினால். தனக்கென்று ஒரு உடன்பிறப்பு கிடைக்கப் பெற்றால்.இருவரும் ஓடியாடி விளையாட, காலங்கள் மடமடவென மறைந்துபோயின. காலங்கள் மட்டுமல்ல, பெற்றோர்கள் இவள்மீது காட்டிய அன்பும் சேர்ந்தே மறைந்து போனது.

தன் பதினான்காவது வயதில் கன்னிப் பருவமடைந்தால் தேவதை. “அன்று அவள்மீது பெற்றவர்களுக்கு குறைந்த அன்பு, இன்று ஏனோ அது வெறுப்பாய் மாறத்தொடங்கியது”.

“அன்பு குறைந்தால் தாங்கிக்கொள்ளலாம், ஆனால்
வெறுப்பு விளைந்தால் வாழவே தோனாது”.

தன் பருவத்தை அடைந்தால்,
அன்பை பெற வாய்ப்பற்று இருந்தால். இந்த இன்னல்களின் போது தான் ஒரு மனித மிருகத்திடம் சிக்கினால். “பருவமடைந்ததே பாவமென்று பயந்துவிட்டால்”. என்ன செய்தாலும் தேவதை வீட்டில் சொல்லமாட்டால் என்று நன்குணர்ந்த நயவஞ்சகன், தேவதை தந்தையின் நண்பன் அவன். எந்த ஒரு குழந்தையும் தனக்கு நடந்த இழிவான சம்பவத்தை அன்பு காட்டாதவர்களிடம் பகிரமாட்டால். ஏனென்றால் இன்னும் நம்மை வெறுத்து விடுவார்களோ என்ற அச்சத்தினால் தான். கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டான் அந்த வஞ்சகன். தீண்டதகாத முறையில் நடந்துக்கொண்டான். இது தெரியாத பெற்றோர்கள், தங்கள் மகளை அவனிடமே விட்டுவிடுவார்கள். “இப்படிபட்ட வாழ்க்கை தேவையா” என்று கவலைகொள்ள வேண்டிய வயதா அவளுக்கு ??? நினைக்கும் போதெல்லாம் உடல் கூசும் இச்சம்பவத்தை மறக்கவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் கோபத்தை மட்டுமே சேர்த்துக்கொண்டிருந்தால். இதுபோல, ஒரு சம்பவம் கிராமத்தில் நடைபெறும் திருவிழா நாளில் நடந்தது. அன்று நன்கு குடித்து போதையின் உச்சியிலே உட்கார்ந்திருந்தான் அந்த விஷகிருமி. குழந்தையவள் எதார்த்தமாய் விளையாட அவன் வீட்டின் முன் சென்றால். அருகில் அழைத்து அமரவைத்தவன் அந்நொடியிலும் தன் விஷத்தை கக்கினான். அவளிடம் அசிகமாய் நடந்தான். இதுபோன்ற பல சம்பவங்களில் பாதிக்கப்பட்டு, தன் வீட்டைவிட்டு வெளியே வரவே தயக்கமுற்றால்.

வயது பதினெட்டையும் அடைந்தால்.
“இனியும் பயந்தால் பாவப்பட்டவளாவேன்” என்று உணர்ந்து, பார்க்கும் இடங்களிலெல்லாம் பார்வையாலேயே பயத்தை உண்டாக்கினால். உலகமறியும் வயதை எட்டிவிட்டால், நம்மை எதிர்த்து நிற்கவும் துணிந்துவிட்டால். இனியும் நாம் செய்ததை தொடர்ந்தால், எங்கே வீட்டில் சொல்லிவிடுவாளோ என்று பயந்து தன் விஷங்களை அடக்கினான்…

இன்றும் பல வீடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் தம் கண் முன்னே தான் இருக்கிறார்கள், பாதுக்காப்பிற்கு பஞ்சமில்லை என்ற தவறான கண்ணோட்டத்தில் இருக்கின்றனர்.

ஒவ்வொரு பெற்றோர்களும் அறிந்துக்கொள்ள வேண்டிய உண்மைகள்…
1.உங்கள் பிள்ளைகள், உங்கள் கண்முன் இருக்கும் சூழ்நிலையை மட்டும் யோசிக்காதீர்கள். அவர்கள் தனியாக இருக்கும் நேரங்களும் நிறைய இருக்கின்றன. அவை பெரும்பாலும் உங்களால் தான் ஒதுக்கப்படுகின்றன.

2.உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று மட்டும் உளவு பார்க்கிறீர்கள் அல்லவா, அதேபோல் அவர்களை சுற்றி என்ன நடக்கிறதென்பதையும் சற்று உற்றுநோக்குங்கள்.

3.நீங்கள் யாரை நம்பி, உங்கள் பெண் பிள்ளையை வீட்டில் தனியாக விட்டுச் செல்லலாம் என்று நம்புகிறீர்களோ,
அவர்களை மட்டும் நம்பிவிடாதீர்கள்… ஏனென்றால் நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே, அவர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்துவிடும்.
-தருண் ஜெயமுருகன்.