Community

நான் அப்பாவானால்

(முன் குறிப்பு: இச்சிறுகதை கோவிட்-19 வைரஸ் அடையாளம் காணப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெறுவதாக புனையப்பட்டுள்ளது.)

அந்த வருடம் காலாண்டுத் தேர்வு முடிந்து தர வரிசை அட்டை எல்லாருக்கும் கொடுக்கப்பட்ட நேரம்.

‘‘அய்யோ … அப்பா … அடிக்காதீங்க… நான் என்ன தப்பு செஞ்சேன்…’’ என்று குமரன் அலறினான்.

பக்கிரிசாமி ஒரு கையில் ராங்க் கார்டையும் மற்றொரு கையில் நீண்ட சவுக்கு குச்சியையும் வைத்து விளாசிக்கொண்டு இருந்தான். ‘‘ராஸ்கல்… செய்யுறதையும் செஞ்சுட்டு நான் என்ன தப்பு செஞ்சேன்னா கேட்குற?..’’ என்று மீண்டும் மகனை அடித்தான்.

அப்போது சாவித்திரி வீட்டில் இல்லை . குமரனின் அலறல் வீதி முழுவதும் கேட்டது. எதிர் வீட்டில் இருந்தவர், மனது கேட்காமல் இங்கே வந்துவிட்டார்.

''என்னப்பா… புள்ளையைப் போட்டு இந்த அடி அடிக்கிற?.. ஏன்? மார்க் ரொம்பவும் குறைச்சலா எடுத்து பெயிலாயிட்டானா?.." என்று வாங்கிப் பார்த்தவர் அதிர்ந்தார்.

‘‘டேய் பக்கிரிசாமி … பைத்தியமாடா நீ… புள்ளை நானூத்தி எண்பத்தோரு மார்க் எடுத்து முதல் ரேங்க் வாங்கி இருக்கான். அதுக்கு போய் இப்படியா உதைப்ப?.’’

''அண்ணே … உங்களுக்கு எதுவும் தெரியாது. அந்தப் பள்ளிக் கூடத்துல அஞ்சாங் கிளாஸ்ல யார் மொத ரேங்க் எடுக்குறாங்களோ அவனோட அப்பாதான் எல்லா கிளாஸ் புள்ளைக்கும் பரிசு வாங்கிக் கொடுக்கணுமாம்…" என்றவன், குமரனை கன்னத்தில் அறைந்தான்.

"இப்போது அவன், கண்களை துடைத்துக்கொண்டு "அப்பா… எல்லோருக்கும் இல்ல… ஒவ்வொரு வகுப்புலேயும் ஒண்ணாவது இரண்டாவது ரேங்க் எடுத்த பசங்ளுக்கு மட்டும்தான் வாங்கிக் கொடுக்கணும்…’’ என்றான்.

“டேய்… அதுக்கும் காசுவேணாமா?’’ என்று மறுபடியும் பக்கிரிசாமி அடிக்கப் போனான். ‘‘ஒரே ஒருநாள் குடிக்காம வந்தா பத்து பேருக்கு என்ன? இருபது பேருக்கே வாங்கிக் கொடுக்கலாம்…’’

“ஏண்டா … எனக்கே புத்தி சொல்றியா?” என்று குமரன் மீது பாயும்போது சாவித்திரி வந்துவிட்டாள்.

மகனுக்காக அழுதாலும் அந்த நேரத்தில் அவளால் எதுவும் செய்ய முடிய வில்லை. விளைவு?

அந்த முறை, நான்காம் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்த மாணவியின் தந்தை எல்லாருக்கும் பரிசு வாங்கிக் கொடுத்தார்.

அந்த மாணவி தன் பெற்றோருடன் வழிபாட்டுக்கூட்டத்தில் தலைமை ஆசிரியையுடன் நின்றதும், சிறிய உரை ஆற்றியதும் குமரன் மனதில் பெரிய ஏக்கத்தை ஏற்படுத்தியது.

நம்ம அப்பா ஒழுங்கா இருந்துருந்தா நமக்கு எவ்வளவு பெருமையா இருந்து ருக்கும் என்ற நினைப்பில் சிலநாட்கள் தூங்காமல் தவித்தான்.

அடுத்தடுத்த மாதாந்திரத் தேர்வுகளில் ஓரிரு மதிப்பெண்களில் குமரனுக்கு முதலிடம் பறிபோனது.

அவனுக்கு பரிசு கிடைத்தாலும் விழாவுக்கு நம் பெற்றோர் தலைமையேற்க முடியவில்லையே என்ற எண்ணத்தில் இருந்து மீளமுடியவில்லை.


"கடையில் போயிதான் சாப்பிட்டுட்டு போவேன். காசு குடுத்தா குடு… இல்ல பட்டினி கெடந்து சாவுறேன்…’ என்று குமரன் உட்கார்ந்து விட்டான். -

அடங்காபய புள்ளயே உங்கொப்பனோட புத்திதான உனக்கும் இருக்கும்… என்று அவன் தலையில் கொட்டிய சாவித்திரி முந்தானையில் முடிந்து வைத்திருந்த பத்து ரூபாய் துட்டை அவனிடம் கொடுத்தாள். “அய் அம்மான்னா அம்மாதான்” என்று குதூகலித்தபடி புத்தகப்பையை எடுத்துக்கொண்டு ஓடினான்.

"ஆனாலும் புள்ளைக்கு இவ்வளவு செல்லம் கொடுக்கக் கூடாது… என்னமோ ஜமீன் வீட்டுப் புள்ளை மாதிரி பழையது சாப்புட மாட்டேன்னு சொல்றவனைக் கண்டிக்காம இது என்ன பழக்கம்? என்றவாறு கோகிலா வந்தாள்.

"எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தியாக்கா… என்ன செய்யச் சொல்ற? இருக்கிறது ஒருபய… வேற யாருக்காவ நான் இப்படி கஷ்டப்படுறேன்… இந்த மனுசனுக்கு வேலையை முடிச்சுட்டு வரும்போது போதை ஏறலைன்னா ஒழுங்கா வீடு வந்து சேர மாட்டாரு… ஒரு நாளாச்சும் ஆக்கிவெச்சதை உருப்படியா தின்னது கிடையாது.

எவ்வளவோ நாள் பழையது தின்னுட்டுதான் போவான். இப்பதான் ரெண்டு நாளா இப்படி அடம் புடிக்கிறான்… இந்த வயசுல ஆசைப்படாம வேற எப்ப?" என்று முந்தானையில் முகத்தை துடைத்துக் கொண்டாள்.

“சாவித்திரி… புள்ளையை ஜாக்கிரதையா பார்த்துக்க… இத்தினி நாள் ஒழுங்கா போட்டதைத் தின்னவன் இப்படி ரெண்டு நாளா செய்யுறான்னா எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு … பயலுக சேர்ந்து கிட்டு ஏதாவது தப்பு தண்டா செய்யப் போறானுவ… அடுத்த வருசம் ஆறாவதுக்கு பெரிய பள்ளிக்கூடம் போக வேண்டியவன்”.என்று கோகிலா வெளியேறினாள்.

ஒண்டுக்குடித்தனத்துல இதுதான் தொல்லை… கொஞ்சம் உட்டா ராத்திரி புருஷனும் நானும் விடுற பெருமூச்சைப் பத்திக் கூட பேசுவா போலிருக்கே…

என் புள்ளை மேல இது வரைக்கும் யாரும் தப்பு சொன்னது கிடையாது. தினமும் மதியத்துல பள்ளிக் கூடத்திலேயே சத்துணவு சாப்பிட்டுகிறான்… நான் வீட்டு வேலை செய்றவங்க தாற மிச்ச மீதிய தின்னுடுறேன். அவரும் கடையிலே சாப்பிட்டிருவாரு… ராத்திரி ஒரு வேளைதான் சமையல். அதுவும் வாய்க்கு ருசியா ஒரு குழம்பு வெச்சு திங்க முடியாது. அவருக்கு என்ன?.. சாராயமும் ஊருகாயுமே போதும். மிஞ்சிப் போற சோத்தை காலையிலேயே தின்னுட்டு வேலைக்கு ஓடிடுவாரு…

அந்த மாதிரியே குமரனும் எத்தனை நாளைக்குத்தான் காலையில் பழையதை தின்னுட்டு போவான். வயிறார கடை இட்லி திங்கட்டுமே… ஆனா தினமும் பத்து ரூபா கேட்டா நான் எங்கே போவேன். என்று சாவித்திரி நினைக்கும்போதே கண்கள் கலங்கின. சட்டென்று கதவை பூட்டி சாவியை நிலைக்கு மேலே ஒரு மறைவில் வைத்துவிட்டு வீட்டு வேலைக்கு கிளம்பினாள்.

மறுநாள், குமரன் எப்போதும்போல் குளித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான். சாவித்திரி கையைப் பிசைத்து கொண்டிருந்தாள்.

அம்மா… பழையதை எடுத்து வை…’’ என்று கீழே உட்கார்ந்து விட்டான்.

இவளுக்கு அப்பாடா’ என்றிருந்தது. அவசர அவசரமாக எடுத்து வைத்தாள்.

''அம்மா, நார்த்தங்கா ஊறுகாய்ல தாளிக்காம சும்மா உப்புல போட்டு காயவெச்சது இருந்தா குடு… வேற எதுவும் வேணாம்…"என்று வாங்கிக் கொண்டான்.

அவன் இன்றும் இட்லி சாப்பிடணும் என்று பத்து ரூபாய் கேட்காதது நிம்மதியாக இருந்தாலும் எத்தனை நாள் பேசாம போவானோ என்று குழம்பினாள்.

ஆனால் பள்ளியில் கல்வித்துறை அதிகாரி விரைவில் ஆய்வுக்கு வர இருப்பதால் எல்லாரும் புத்தகம் நோட்டுக்களை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியை கண்டிப்பாக சொல்லிவிட்டார். அதனால் புதிய நோட்டுக்கள் வாங்கி அவற்றில் எழுதி வைப்பதற்காகத்தான் அம்மாவிடம் கடையில் இட்லி தின்ன வேண்டும் என்று சொல்லி காசு வாங்கியதும், அந்த பணத்தில் நோட்டு வாங்கிவிட்டு, காலையில் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் குடித்து சமாளித்ததும் குமரனுக்கு மட்டும்தான் தெரியும்,


பள்ளியில் ஆய்வு நடைபெற்ற போது, குமரன் இப்படி ஒரு பதிலைச் சொல்லுவான் என்று கல்வித்துறை அதிகாரி மட்டுமல்ல… ஆசிரியைகளும் எதிர்பார்க்கவில்லை.

சியாமளா, ‘‘குமரன்… என்ன பேச்சு பேசுற… "ராஸ்கல்’’ என்று பல்லைக்கடித்தாள்.

உடனே அந்த அதிகாரி ‘‘கொஞ்சம் பேசாம இருங்க… அவன் ஏன் இப்படி சொன்னான்னு தெரியாம திட்டுறது தப்பு…’’ என்றார்.

பிறகு "தம்பி… குமரன் … இங்க வா…’’ என்றதும் அவன் மிரண்டான். இங்க பாரு… உன்னை இங்க யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க… நான் போன பிறகு அடிச்சா கூட என்கிட்ட வந்து புகார் செய்யலாம். நீ தைரியமா சொல்லு…என்றார்.

ஒரு மாதமாக இவ்வளவு உழைத்தும் கடைசி நேரத்தில் இப்படியா அசிங்கப்படுத்துவான் என்று தலைமை ஆசிரியைக்கு கூட கோபம்.

ஆய்வுக்கு வந்த அதிகாரி ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் ''எதிர்காலத்தில் நீ என்னவாகப் போற?" என்றார்.

ஒவ்வொருவரும் டாக்டர், கலெக்டர் என்று சொல்ல குமரன் சில நொடிகள் மவுனமாக நின்றான்.

பிறகு ‘‘சார்… நான் நல்ல அப்பாவா இருக்கணும்…’’ என்றான். குழந்தைகள் எல்லாரும் சிரித்து விட கல்வித்துறை அதிகாரி, ஆசிரியைகள் அதிர்ந்து போனார்கள்.

ஆனாலும் உடனடியாக அந்த அதிகாரி நிதானித்துக்காண்டு “ஏன் இப்படி சொல்ற?” என்று கேட்டார்.

குமரன் வகுப்பில் முதலிடம் பிடித்ததை பாராட்டாமல் செலவு வைத்து விட்டதாக அடித்து உதைத்த தந்தையைப் பற்றியும், வழிபாட்டுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கும் வாய்ப்பை தனது குடிப்பழக்கத்தால் தவறவிட்தையும் ஏக்கத்துடன் சொன்னபோது எல்லாரும் நெகிழ்ந்து போனார்கள். -

அதனாலதான் சார்… மதுவை நினைச்சுப் பார்க்காம, நல்லவனா வளர்ந்து, பிற்காலத்துல என் புள்ளையோட சின்ன சின்ன சந்தோஷத்தையும் விடாம கொண்டாடி பாராட்டுற நல்ல அப்பாவா இருக்கணும்னு ஆசை…’’ என்றான்.

குமரன் அவன் வயதுக்கு மீறி பேசினாலும், அவனை எதுவும் குறை சொல்ல முடியாது என்று உணர்ந்த அதிகாரி, பேச மறந்து நின்றார்.

ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. மனமார்ந்த பாராட்டுக்கள் சார் :bouquet::bouquet::bouquet::bouquet::bouquet:

1 Like

Kalam ok… andha paiyan Appa kudikaaran endru munnadhey sollirukalamey… thamadhamaaga sonnadhu Pol ulladhu… ezhuthu nadai avalavu eerpaaga illai… vaazhthukal…

தங்கள் கருத்துக்களை கவனத்தில் கொள்கிறேன்… நன்றி.