ஆசை ஆசையாய் வாங்கிய இரும்புக் குதிரை…
புரவி ஏறும் மன்னவனாய் நீ…
சீறிச் சீறிச் சென்று…
வேகம் வேகம் வென்று…
உயிர்த் தேடல் காணப் போனாயோ??
நீ துரத்தியது உன் கனவையா ?
அந்தக் காலனையா??
எந்திரக் குருவி கிடுகிடுத்தது…
உன் காயம் காணச் சகியாமலோ?..
ஓடோடி வந்ததும் என்னை வரவேற்றது…
உணர்வற்று வெறித்த உன் பார்வையோ?..
கரம்பற்றி ஆறுதலளிக்க விழைந்தவளைப்
பயம் வந்து தடுத்ததோ?
விழிகள் உறுத்திய கண்ணீர்-நீ
விழித்திருக்கிறாய் என்பதிலே
உள்ளேயே உறைந்திட…
சிறு நம்பிக்கை ஒளி தோன்றியது…
உன் நினைவுகளை- தோழிகள் நாங்கள்
கைகொட்டிக் கொண்டாடி…
சிரித்திருக்க…
மகிழ்ந்திருக்க…
எங்களுடன் சேர்ந்தது
உன் விதியும் தானோ?..
கீழே ஒலித்த அலறலில்
பதறிப் படி இறங்கினேன்.,
உனதுயிர் மேலே சென்றதை அறியாது…
சித்தம் கலங்கி…
சினமேறி…
சிதறிய கனவாய்
நீ ஆகிட…
பெருங்குரலெடுத்துக்
கதறிக் கதறியும்
என் விழி துடைக்க நீளவில்லை
உன் கரங்கள்…
உன் இறுதிப் பார்வையில்
சீக்கிரம் குணமாகிடுவ அண்ணா
என்றொரு வார்த்தை உதிர்க்கவில்லை என
நித்தம் என் நெஞ்சம்…
நெருஞ்சியாய் குத்திக் கிழித்திட…
கனவிலாவது வந்துவிட மாட்டாயா
என ஏக்கம் கொண்டேன்…
முடிவுறா கவிதையே…
உந்தன் நினைவை ,
நெஞ்சில் நிறைத்து…
மனதுள் விதைத்து…
விருட்சமாய் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்!!
உடன் பிறவா உயிர்த் தங்கை தான்…