Community

மரணமில்லா மனிதர்கள்

(கதை நடைபெறும் காலம் : கொரோனாவுக்கு மட்டுமல்ல… ரியல் எஸ்டேட் சற்று ஆட்டம் கண்டிருக்கும் காலத்திற்கும் முன்பு)

ஆலமரம் அல்லது அரசமரத்தடியில் பஞ்சாயத்து நடைபெறுவதாக காட்டப்படும் தமிழ் சினிமாக்களைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு ஊராட்சித் தலைவர் வீட்டுத் திண்ணையில் கூடியிருக்கும் கூட்டம்தான் மருதம்பாக்கம் பஞ்சாயத்து என்று நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும்.

செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் செல்லும் வழியில் உள்ள மருதம்பாக்கம் ஒரு காலத்தில் குக்கிராமமாக இருந்ததுதான். பல ஆண்டுகாலமாக இருந்த பழைய வீடுகள் ஏறத்தாழ ஐநூறு முதல் ஐநூற்று ஐம்பது வரை இருக்கலாம்.

அந்த ஊருக்கு திடீர் மவுசு வரக் காரணமே ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் புண்ணியவான்கள்தான். சென்னையில் வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படும் நடுத்தர வர்க்க பாவப்பட்ட மக்களுக்கு மிச்சம் மீதியைக் கொண்டு நடைபெறும் கடைசி பந்தியைப்போல் கிடைக்கும் வீட்டுமனைகளாக திண்டிவனம் வரை உள்ள வயல்வெளிகள் பயன்படுகின்றன.

அப்படி மருதம்பாக்கத்தைச் சுற்றி உருவான வீட்டுமனைகளில் நிறைய புதிய வீடுகள் முளைத்து விட்டன.அதில் ஒன்றில் சில வாரங்களுக்கு முன்பு குடியேறிய வேதாச்சலத்தைப் பற்றி ஒரு முடிவு எடுக்கத்தான் இந்தப் பஞ்சாயத்து.

ஊருக்கு புதியதாக குடிவந்து ஆறே மாதத்தில் பஞ்சாயத்து கூட்டுவதற்குக் காரணமான வேதாச்சலம் அங்கே இல்லை.

‘‘தலைவரே… நாம வேலை வெட்டியை விட்டுட்டு இங்கே கூடி கிடக்குறோம்… சம்மந்தப்பட்ட ஆளைக் காணலியே…’’ என்று ஒருவர் பேச்சைத் துவக்கினார்.

‘‘நம்ம ஊர்ல மட்டுமில்ல…செங்கல்பட்டு, காஞ்சிபுரம்னு எங்க சாவு விழுந்தாலும் இந்தாளுதான் முதல்ல போய் நிக்கிறாராம்… எரியுற வீட்டுல புடுங்குன வரை லாபம்னு நினைக்குற இந்த மாதிரி ஆளுங்க நம்ம ஊருக்கு வந்து இப்படியா உயிரை எடுப்பாங்க?..எல்லாம் தலையெழுத்து…’’ என்று ஒருவர் சலித்துக் கொண்டார்.

‘‘அதற்கு ஊராட்சித் தலைவர், அந்தக்காலத்து நிலைமை எவ்வளவோ தேவலாம். ஏற்கனவே இருக்குற குடும்பத்தோட உறவுக்காரங்க வர்றதுன்னா கூட ஆயிரத்தெட்டு கேள்வி வரும். இப்பல்லாம் அந்த மாதிரி கட்டுப்பாடு விதிச்சா யார் மதிக்கிறாங்க?..ஏதோ இத்தனை வருஷமா வாழ்ந்த பாவத்துக்காக நீங்கதான் ஏதோ பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு வாழ்றீங்க.

அந்தக் காலத்துல ஏதாவது பிரச்சனைன்னா ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சுடலாம். இப்ப அப்படி செய்தா அடுத்த ரயிலேறிப்போய் சென்னையிலேயே சாமான்கள் வாங்கியாந்துடுவாங்க. அது மட்டுமில்லாம நம்ம மேல புகார் கொடுத்து சிறைக்கு கூட அனுப்பலாம். இது மாதிரி பல பிரச்சனைகள் இருக்கு. இப்ப அந்த ஆளை என்னதான் செய்யலாம்?.. அதுக்கு யாராவது யோசனை சொல்லுங்க…’’ என்றவாறு கூட்டத்திலிருந்த அனைவரையும் மீண்டும் ஒருமுறை பார்த்தார் ஊராட்சித்தலைவர்.

‘‘ஐயா…அந்தாளுக்கு வீட்டை வித்தவனை நாம எதுவும் கேட்க முடியாது. எங்க ஊர் விஷயத்துல தலையிடக்கூடாதுன்னு வேதாச்சலத்தையே கண்டிச்சுடலாம். அவரு ஏதோ கவர்மெண்ட் வேலையில இருந்து ரிடையர் ஆனவராம். புள்ளைங்க எல்லாம் சென்னையிலேயே செட்டிலாயிருப்பாங்க. இவரு நம்ம உயிரை எடுக்க இங்க வந்துட்டாரு.’’ என்று ஒருவர் சொன்னதும் பலரும் அதை ஒத்துக் கொண்டார்கள்.

‘‘அந்த ஆள் ஊருக்குள்ள வந்ததும் மறுபடி பஞ்சாயத்து கூட்டணுமா?..’’ என்று ஒரு சலிப்பான குரல் எழுந்தது.

‘‘ஏன் மறுபடி?.. ஊருக்குள்ள சாவு விழுந்தா கண்டிப்பா வருவார். அப்ப பேசிக்கலாம்… எப்ப சாவு விழும்னு காத்திருக்க வேண்டிய அளவுக்கு நம்ம நிலைமை மோசமாயிடுச்சே…’’ என்று ஒரு நக்கல் பேர்வழி பேசியதும் மற்ற அனைவருமே சிரித்தார்கள்.

அன்று இரவுதான் வேதாச்சலம் வீடுதிரும்பினார். சொல்லி வைத்தார் போல யாருமே அவரிடம் பேசவில்லை. இவர்கள் கோபப்படுவது நியாயம்தான்…ஆனால் எப்படியாவது எல்லாரோட மனசையும் மாற்றிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அவர் வீட்டில் வந்து படுத்தபோது அந்த தனிமை அவரை என்னவோ செய்தது. தூக்கம் வராமல் புரண்டு படுத்தார். விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு இந்த சிறிய கிராமத்திற்கு ஏன் வந்தோம் என்று நினைத்துப் பார்த்தார். வந்த காரியம் ஈடேறியதாகத் தெரியவில்லை.

சென்னையிலேயே இருந்தால் ஒன்றையுமே மறக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் மருதம்பாக்கத்தில் வீடு வாங்கிக் கொண்டு வந்தார். வேதாச்சலத்திற்கு குடும்பத்தினரைப் பற்றிய வேதனையை விட, முப்பது ஆண்டுகளாக சேர்த்து வைத்த பாவ மூட்டைகள்தான் பெரும் வலியாகத் தெரிந்தது.

ஆம்புலன்ஸ் வண்டிக்கு எதிர்பாராத விதமாகத்தான் அவர் ஓட்டுநரானார். சாதாரண டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்த அவருக்கு ஆம்புலன்ஸ் ஓட்டும் வாய்ப்பு கிடைத்ததுமே அது புது அனுபவமாக அமைந்து விட்டது.

எந்த வாகனத்தையும் முந்திச் செல்லலாம்… சிக்னலில் காத்திருக்கத் தேவையே இல்லை… என்பது போன்ற சில விஷயங்கள் வேதாச்சலத்தை மனதளவில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத மனிதனாக மாற்றிவிட்டது.

மேலும் அவரது புத்தியையும் மனதையும் இரக்கமே இல்லாத ஒன்றாக மாற்றிய பொருள் பணம்.

பணக்காரர், ஏழை என்ற பாகுபாடே இல்லாமல் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து பணத்தைப் பிழிந்து எடுத்துவிடுவதில் கில்லாடி அவர். அது மட்டுமின்றி இறந்தவர்களை கொண்டு செல்லும் அமரர் ஊர்திகளை வாடகைக்குப் பேசி விடும்போதும் கமிஷனாகப் பெரிய தொகையைப் பார்த்து விடுவார் அவர்.

எத்தனையோ அப்பாவிகளின் கண்ணீரில் உருவான பணம் வேதாச்சலத்தின் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. எளியவனின் மனவலி என்றாவது ஒருநாள் பழிவாங்கியே தீரும் என்ற உண்மையை உணராமல் முப்பது ஆண்டுகளாக இப்படி ஆட்டம் போட்டோமே என்று வேதாச்சலம் தன்னைத்தானே நொந்து கொண்டார்.

எல்லாம் முடிந்த பிறகு யோசித்து என்ன செய்வது?..இப்படிப் பல வேதனைகளையும் நினைத்து மன வேதனையுடன் அதிகாலையில்தான் தூங்கினார் அவர்.

வேதாச்சலம் இந்த ஊருக்கு குடிவந்த நாலே நாளில் ஒரு மரணம் நிகழ்ந்தது. மண்ணோடு மண்ணாகவோ எரிந்து சாம்பலாகவோ போகும் உடலை மற்றவர்க்கும் பயன்படும்படி செய்யலாமே என்ற எண்ணம் வேதாச்சலத்துக்கு இருந்தது. மரணம் நிகழ்ந்த வீட்டிற்குச் சென்று அந்த எண்ணத்தை வெளிப்படுத்தவும் செய்தார்.

ஆனால் அங்கே நடந்தது வேறு. வேதாச்சலம் கொஞ்சம் தாமதித்திருந்தால் ஏற்கனவே இருந்த பிணத்துடன் வேதாச்சலமும் துணைப்பிணமாக செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும்.

தொலைக்காட்சி, செல்போன் உள்ளிட்ட எல்லா தொழில்நுட்பங்களும் அந்த கிராமத்தில் நுழைந்திருந்தன. ஹிதேந்திரன் என்ற மாணவன் மூளைச்சாவு அடைந்ததும், அவனது உடல் உறுப்புகளை அவனது பெற்றோர் தானமாக கொடுத்ததும் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை மையமாகக் கொண்ட சென்னையில் ஒருநாள் திரைப்படமும் மக்களிடம் வரவேற்பைப்பெற்றது. ஆனால் மருதம்பாக்கம் கிராம மக்களிடம் உடல்தானம், கண்தானம் பற்றிய விழிப்புணர்வு சுத்தமாக இல்லை.

அந்த ஊர் மக்களைச் சொல்லியும் குற்றமில்லை. சென்னை போன்ற பெரிய நகரங்களிலேயே கண்தானத்திற்கு கூட உறவினர்கள் பலநேரங்களில் சம்மதிப்பது இல்லை. மருதம்பாக்கம் போன்ற கிராமங்களிலா இது எளிதில் நடந்துவிடும்?

சந்தேகத்துக்குரிய வகையில் மரணம் நிகழ்ந்தால் கூட பிரேத பரிசோதனை என்ற பெயரில் உடலைக் கூறு போடக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கும் மக்கள்தான் நம் நாட்டில் மிக அதிகம்.

உடல்தானத்திற்கு இதுபோன்ற மக்கள் அறவே சம்மதிக்க மாட்டார்கள் என்று வேதாச்சலம் நன்கு அறிந்திருந்தார். ஆனால் பார்வையற்ற பலரும் பயன்பெறும் வகையில் கண்தானமாவது பெறலாம் என்று அவர் செய்த முயற்சி வெற்றி பெறவில்லை.

அடுத்த நான்கு மாதங்கள் வேதாச்சலத்தை ஊரைவிட்டு ஒதுக்கிய நிலையில்தான் வைத்திருந்தார்கள். அவரும் கவலைப்படவில்லை.ஐந்தாவது மாதம் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தது அந்தக் குடும்பத்தை மட்டுமின்றி ஊரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

‘‘ஐயா…புள்ளைங்க இன்னும் படிப்பைக்கூட முடிக்கலை. இன்னும் பல கடமைகள் மீதம் இருக்குற சூழ்நிலையில அந்தக் குடும்பம், தலைவரை இழந்து நிற்குது. பார்க்குற எங்களாலேயே தாங்கிக்க முடியாம இடிஞ்சு போய் இருக்கோம்…இந்த நிலைமையில செத்தவரோட உடம்புலேர்ந்து கண்ணை எடுக்கணும்னு சொல்றீங்கிளே… உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா… உறவுகளோட இழப்புன்னா என்னன்னு தெரியுமா?..’’ என்று சற்று கடுமையாகவே ஊராட்சித்தலைவர் பேசினார்.

‘‘தெரியும்…’’ என்று வேதாச்சலம் சொன்னதும் கூடியிருந்த ஊர்மக்கள் மீண்டும் ஒருமுறை அதிர்ந்தார்கள்.

தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்தபோது இரக்கமே இல்லாமல் பணம் பறித்த கதையைக் கூறினார்.

தொடர்ந்து, ‘‘நிறைய பணம் வந்ததும் நம்ம வாழ்க்கையில என்றைக்குமே கஷ்டம், மனவேதனை வராதுன்னு தப்புக்கணக்கு போட்டேன்… அதுக்கு இயற்கை ரொம்ப பெரிய தண்டனை கொடுத்துடுச்சு.

மகன்கள், மருமகளுங்க, பேரப்புள்ளைங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன். குலதெய்வம் கோயில்ல பூஜை போடுறதுக்கு சொந்த ஊருக்குப் போகலாம்னு முடிவு பண்ணினோம்.

நான் முதல் நாளே போய் ஏற்பாடுகளைக் கவனிச்சுட்டு இருந்தேன்… மறுநாள் என் குடும்பம் மொத்தமும் வந்த வேன் விபத்துல சிக்கி யாருமே உயிர் பிழைக்கலை. அவங்களோட வந்துருந்தா நானும் போய் சேர்ந்துருப்பேன்.

ஆனா மொத்தக் குடும்பத்தையும் இழந்து வேதனைப்படணும்னு விதி… யாரால மாத்த முடியும்? அந்த விபத்துக்கு காரணம்…டிரைவர் குடிச்சிருந்ததுதான்.

சம்பவ இடத்துலேயே எல்லாரும் சாகலை. ஆஸ்பத்திரியில மூணுபேர் உயிருக்குப் போராடுனாங்க. மாற்று உறுப்பு கிடைச்சிருந்தா அவங்களைக் காப்பாத்தி இருக்கலாம்.

அதான்… என் குடும்ப உறுப்பினர்கள் போலவே தினம்தினம் எவ்வளவோ பேர் மரணமடையுறதை ஒரே ஒரு துளி அளவாவது குறைக்கலாம்னு உடல்தானம், கண்தானம் பெற முயற்சி செய்யுறேன்.

சென்னையிலேயே இருந்தா என் வேதனை தீராதுன்னுதான் இந்த ஊருக்கு வந்தேன். குறைந்தபட்சம் கண்களையாவது தானம் கொடுத்தா இறந்து போன இவர் எங்கயோ உயிரோட இருக்குறார்னு ஒரு நிம்மதி இந்தக் குடும்பத்துக்கு கிடைக்கும்.’’என்று வேதாச்சலம் பேசியபோது அனைவரின் கண்களும் கலங்கி இருந்தன. மருதம்பாக்கம் கிராமத்தில் முதல் கண்தானம் ஊர் மக்களின் ஒப்புதலோடு பெறப்பட்டு புதிய அத்தியாயம் தொடங்கியது.