Community

ச்சும்மாதான்டா

 பதினைந்து வருட சினிமா கனவோடு சென்னை வீதிகளில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அலுவலக வாசலில் பசி, பட்டினியாய் தவம் கிடந்து ஒருவழியாக அங்காடிதெரு சினிமா பட இயக்குனர் வசந்தபாலனின் கருணைப் பார்வை கிடைக்க அடுத்த வாரத்தில் அவரை சந்திக்க சொக்கநாதனுக்கு வாய்ப்பு வந்தபோதுதான் இந்த பாலாய்போனா கொரோனா நோய் வந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒரே அடியாக முற்றிலும் முடக்கிப் போட்டது.

'அப்பாயீ உன்னை ஒரே ஒரு தடவை பார்க்கனும்னு மரண படுக்கையில் அழுவுறாங்கப்பா' என்ற தனது பதினாறு வயது மகள் அருள்மொழி போனில் கண்ணீர் விட்டு கதறியபோது கூட சினிமா இயக்குனர் ஷங்கரின் வீட்டு வாசலில் வாய்ப்புக்காக தவம் கிடந்து, கடைசியில் தனது தாயின் இறந்த உடலை அடக்கம் செய்ய மட்டுமே சொந்த ஊரான அரியநல்லூர் கிராமத்திற்கு வந்து சென்ற சினிமா வெறி பிடித்தவன்தான் இந்த சொக்கநாதன்.

தனது மகளை ஒரு வயதில் விட்டுச் சென்று சினிமா வாய்ப்பு தேடி சென்னை சென்று நரை கூடி இருந்த சொக்கநாதன், இன்று கொரோனாவால் சொந்த ஊரில் பத்து பைசா வருமானமின்றி முடங்கிக் கிடந்தபோதுதான் தனது மகள் அருள்மொழியின் பருவம் பதினாற்றை உற்று கவனித்தான்.

என்னப்பா, ஒரு மாதிரி பார்க்குறீங்க? சொக்கநாதனின் பார்வையை எடை போட்டாள் அருள்மொழி.

ஒன்னுமில்லடா. உன் போட்டோ ஏதாவது இருந்தா அப்பாவுக்கு மெயில்ல அனுப்புறியாடாமா?

சரிபா.
என்றபடி அரசு பள்ளியில் வழங்கிய லேப்டாப்பில் தான் விளையாட்டாய் அப்லோடு செய்திருந்த சில போட்டோக்களை சொக்கனாதனின் செல்லுக்கு அனுப்பினாள் அருண்மொழி.

    தான் உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்டு சென்றபோது இயக்குனர் செல்வரத்தினம் கேட்ட கிராமத்து பெண் வேடத்திற்கு தகுந்த முகம்தானா தனது மகள் அருள்மொழி என்ற ஐயத்தோடு அந்த புகைப்படங்களை அனுப்பிய சிறிது நேரத்தில் கொக்கநாதனின் மொபைலுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

யோவ், யாருயா இந்த பொண்ணு. உன்னுடைய கூகுள் பே அக்கௌன்ட்ல ஒரு லட்சம் ரூபா அனுப்பி இருக்கேன். அந்த குடும்பத்துல பேசி எப்படியாவது அந்த பெண்ணை நம்ம படத்துல நடிக்க வைக்க கூப்பிட்டு உன்னுடன் சென்னைக்கு அழைத்து வா.
-சினிமா இயக்குனர செல்வரத்தினம்

யம்மாடி, அப்பாவோட இந்த முறை நீயும் சென்னைக்கு வர்றே சரியாடா.

எதுக்குப்பா?

சினிமாவுல நடிக்குறதுக்குதான்டா

ரொம்ப கஷ்டமா இருக்குமாபா அது?

அதெல்லாம் ஒன்னுமே இல்லடா. ஆனா சின்னதா ஒரு பொய் சொல்லனும். அப்பாவுக்காக அதை சொல்லுவியாடா அம்மா.

என்னப்பா சொல்லனும்?

நான்தான் உன் அப்பானு சினிமாதுறை சம்மந்தப்பட்டவங்ககிட்ட யாருகிட்டேயும் நீ சொல்லிடக் கூடாது. இந்த ஊரு ஜமின்தாரோட ஒன்னுவிட்ட பேத்தினு மட்டும் சொல்லனும். மத்ததை நான் சமாளிச்சுக்குவேன் சரியாடா.

ஏன்பா அப்படி சொல்லச் சொல்றீங்க?
-சொக்கநாதனிடம் அப்பாவித்தனமாய் கேட்டாள் மகள் அருள்மொழி

ம்… ச்சும்மாதான்டா. அப்பாவுக்காக இதை செய்வியா?

சரிபா என்றாள் அருள்மொழி.

பதினைந்து வருடங்களாக பசியுடன் திரிந்து சினிமா துறையில் தான் கற்ற கபடங்கள் முழுவதையும் தன் மகள் அருள்மொழிக்கு உபதேசித்து வெற்றியடையும் குறிக்கோளுடன் எழுந்தான் சொக்கநாதன். அப்போது மெல்லியதாய் தன் மனதிற்குள் சொக்கநாதன் கூறியது என்னவென்றால்…
‘நன்றி கொரோனா’

  -ஜே.பி.மதுபாலன்
                        
      திண்டுக்கல் 
                                
 செல் : 99766 46477

நாள் : 25/07/2020strong text