Community

ஒரு மயிர்க் கதை..

ஒரு மயிர்க் கதை…

 இப்போதெல்லாம், காலை எட்டரை மணி ஆனாலே, குமாருக்கு நடுக்கம் வந்துவிடுகிறது. எப்படியாவது குளித்து முடித்து ஆடைக்குள் புகுந்துகொண்டு தன் பெட்ரூம் கண்ணாடியை கடந்து போய்விடத்துடித்தான். அலுவலகம் தயாராகி, வரவேற்பறைக்கு வந்துவிட்டால் போதும், அதற்கு பிறகு பயமில்லை. அப்படி தப்பித்து வந்த சில நாட்களில் குழலியிடம் மாட்டிக்கொள்வான். "ஏங்க! தலை வாராம போறீங்க. அங்கயும் இங்கயும் பறக்குது பாருங்க"கைக் கண்ணாடியைக் கொண்டு வந்து முகத்துக்கு நேரே காட்டுவாள். எதற்காக ஓடி ஒளிந்து மறைந்து தப்பித்து வந்தானோ, அதையே பார்க்க நிர்பந்திக்கப்பட்டதில் மனம் வாடி, வேகமாய் ஹெல்மெட்டிற்குள் முகத்தை திணித்துக்கொள்வான். இனி அலுவலகம் வரை பிரச்சனை இல்லை. அலுவலகத்திலும், யாரிடமும் பேசாமல் இருக்கையில் போய் அமர்ந்துவிடுவான். மாலைவரை அதைப்பற்றி யாரும் பேசாமல் இருக்கவேண்டும், இது அடுத்த பிரச்சனை.

  கடந்த சில மாதங்களாக குமாரின் தலைமயிரில் நரைகள் வேகமாக பரவத் தொடங்கியிருந்தன. மீசையிலும், தாடியிலும் கூட ஒன்றிரண்டு நரை மயிர்கள் தென் படத் தொடங்கியிருந்தன. முதல் நரை மயிரைப் பார்த்த மாத்திரத்திலேயே நொறுங்கிப் போய்விட்டான். அவ்வளவுதானா? தன் காலம் முடிந்துவிட்டதா? தான் இனி ஆணழகன் என்ற பட்டத்தோடு நடமாட முடியாதா? முப்பதுகளிலேயே தன் இளமை வறண்டுவிட்டதா? தனக்கு நரைபட்டுவிட்டது தெரிந்தால் குழலிக்கு தன்மீதுள்ள ஈர்ப்பு போய்விடுமா? இப்படி சில மாதங்களாக தூக்கம் இழந்து தவித்தான். 

 முடிந்த அளவு குழலியிடம் மறைக்க படாதபாடுபட்டான். தலைவலி, கால்வலி என அவளின் அருகாமையை தவிர்த்தான். வீட்டிற்குள் குல்லாய் அணிந்து கொள்வது போன்ற கோமாளித்தனங்களையும் செய்து பார்த்தான்.  கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான். மாட்டிக்கொண்டான்.

“ஐ…உங்களுக்கு நரச்சுப்போச்சுங்க”

“எனக்கென்ன ப்ரமோஷனா கெடச்சுருக்கு!” முறைத்தான்.

“இனிமே வயித்துல நெருப்பக்கட்டிகிட்டு இருக்க வேணாம்ல…”

வழக்கமாக ஷேர்ஆட்டோல பயணித்து, மெட்ரோவில் அலுவலகத்தை அடைபவன், யார் தன்னைப் பார்த்தாலும், யாராவது கிசுகிசுத்துக் கொண்டாலும், தன் நரையைப் பார்ப்பதாக பேசுவதாக நினைத்துக்கொண்டான். சில நாட்களுக்கு முன்பு ஷேர்ஆட்டோவில் ஒரு கல்லூரிப்பெண் "அங்கிள்! கொஞ்சம் தள்ளிக்கறீங்களா.." என சொன்னதில் அவமானம் பிடுங்கித்தின்றுவிட்டது அவனுக்கு. மறுநாளிலிருந்து இருசக்கர வாகனத்தில் அலுவலகம் போகத் தொடங்கிவிட்டான்.

ஒரு நாள், "அப்பா! நீங்க தல அஜீத் மாதிரி ஆகப்போறீங்களா?" தன் ஏழுவயது மகன் கேட்டதில் ரொம்பவே கவலைப்பட்டான். குழலிதான் தேற்றினாள், "இதெல்லாம் இயற்கைங்க..எல்லோருக்கும் வந்துதான் தீரும்"

“ஊர்ல…எங்க பெரியப்பாக்கு இன்னும் நரைக்கல தெரியுமா? எல்லாத்துக்கும் காரணம் இந்த சென்னைதான். தண்ணி, காத்து எதுலயும் சுத்தம் இல்ல…”

“உங்களுக்கு மனசுல யயாதினு நெனப்பா?”

“ஆளானபட்ட, யயாதி கூட முதுமய தாங்க முடியாம…தன் பசங்ககிட்ட இளமய கேட்டு கெஞ்சல?”

“அப்பா! நீங்களும் என்னோட கருப்புமுடிய கேப்பீங்களா?” மகனின் கேள்விய கேட்டு குழலி சிரிக்கத் தொடங்கிவிட்டாள்.

 அடுத்த சிலநாட்களுக்கு, குழலி அவனுக்கு மனநல மருத்துவர் போல் கவுன்சிலிங் கொடுக்கத் தொடங்கிவிட்டாள். 

“அடியே! என் தல முழுக்க நரச்சுப்போனாலும், இப்படி தல கோதிவிடுவியா?” மடியில் கிடந்தபடி கேட்டான்.

“மொத்தமாய் கொட்டி வழுக்கையானாலும், கோதிவிடுவேன்”

“எப்…படி…?”

“விக் வச்சு…இல்ல ஹேர் பிளான்ட் பண்ணி”

“அது வேற ஒருத்தரோட மயிர்ல…அதப்போய்…”

“இதான உங்க ஆம்பள புத்திங்கறது. நாலு மயிரு நரச்சுப்போனா யாரும் பாக்கமாட்டாங்களேனு அழ வேண்டியது…வயசு முப்பத்தி அஞ்சாச்சு…காலேஜ் பொண்ணு அண்ணானு கூப்டா என்ன? அங்கிள் கூப்டா என்ன?..நாங்க மட்டும் அடுத்தவன் மயிரக்கூட தொடாத பத்தினியாவே இருக்கனும்” சடாரென தலையை தூக்கிப்போட்டு திரும்பிப்படுத்துக்கொண்டாள்.

 எந்த இடத்தில் எதை பேசுவதென்று இல்லையா? கட்டிலில் எவனாவது மயிர்ப்புராணம் பேசுவானா? எதைப்பேசுவதென்றாலும் முடித்துக்கொண்டு பேசவேண்டாமா? இப்போ பார் என்னாச்சு..என்கிற தொனியில் மின்விளக்கு மினுக்..மினுக்கென்றது.

குமாரும், “வட போச்சே…!” என்பதுபோல் குழலியைத் திருப்ப முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தான்.

குமார் அழைப்பு மணியைத் தட்டியதும், அலுவலக உதவியாளர் ஹரி வந்து நின்றான்.

“ஹரி! ஒரு டீ கொண்டு வாப்பா”

குமாரை விட ஹரி இரண்டு வயதுதான் சிறியவன். ஆனால் , ப்ரோட்டாகாலில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஹரி  எல்லோரிடமும் மிகப் பணிவாகவும் அடக்கமாகவும் பேசுபவன். பேச்சில் நிதானம் இருக்கும், சற்று விஷமம் கலந்திருக்கும். தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்கிறானா, எதிரில் உள்ளவரை கிண்டல் செய்கிறானா என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளமுடியாது. 

ஹரி சில மணித்துளிகளில் சுடச் சுட காபியுடன் வந்தான்.

“நான் டீ கேட்டேன்…”

“ஐயா! உங்க தலைல…டீ அதிகமா குடிக்காதீங்கய்யா…தல முழுக்க பரவிடும்…அதா காபி போட்டுவந்தேன்”

“…”

“ஐயா…எல்லாத்துக்கும் காரணம் புஸ்தகம்தாய்யா. நெறிய படிச்சி யோசிச்சு …ப்ரஸ்ஸர்யா. எனக்குலாம் பாருங்க ஒன்னு கூட இல்ல”

“என்னப்பா சொல்ற…நல்லா படிச்சு, எக்சாம்லாம் எழுதினாதான இந்த நிலைக்கு வரமுடியும் நல்ல சம்பளம் கிடைக்கும். நாளைக்கு உன் பசங்கலாம் இந்த நிலைக்கு வரணும்னு நெனைக்கமாட்டியா?”

“வாணாங்கய்யா… நெம்மிதியா வாந்தா போதுங்கய்யா. நெறிய சம்பளம் வாங்கி இன்னா பிரயோசனம்? எல்லாரும் மூனு வேள தான சாப்டறோம். ஐம்பது ரூபா இருந்தா அதுக்கு தகுந்தாப்ல பொருள் வாங்குவேன். நூறு ரூபா இருந்தா அதுக்கு தகுந்தாப்ல சம்சாரம் பண்ணுவோம். மாட்ட அவுத்து விட்டமா, மேஞ்சுட்டு வந்தா புடிச்சு கட்னமான்னு போகுதுங்கய்யா வாழ்க்க…ஒரு கொறயுமில்ல. இப்ப பாருங்க, எனக்கு இல்ல உங்களுக்கு வந்துருச்சு. இப்ப அத மறைக்க கறுப்பு பூசுவிங்க… அதுக்கு தனி செலவு. ஊராமூட்டு நெய்யி என் பொண்டாட்டி கைய்யிங்ற கதயா கஷ்டப்பட்டு சம்பாதிச்சி நோட்டுக்கு பெயிண்டடிக்க விடுவீங்க… எதோ ஷாம்பூ மாடல்ல கூட வந்துருக்காம். அஞ்சே நிமிஷம் கரு கருனு ஆயிடுதாம்” மேலதிகாரிகிட்ட அதிகமாக பேசிவிட்ட நினைப்பில் “ஐயா…செக்ஷன்க்கு போய்ட்டு வரேன்யா” நழுவினான்.

குமாருக்கு அவன் பேசுவது வேடிக்கையாக இருந்தது. ஆனாலும், நடுநடுவே தன் நரையை இழுத்துவிட்டதை தாங்கமுடியவில்லை. அலுவலகம் விட்டு நேரே வீட்டுக்கு அருகே உள்ளே பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்தான்.

ரேசர், ஷேவிங் க்ரீம் பிரிவிற்கு சற்று தூரத்தில் நின்றுகொண்டு, அருகிலிருந்த விற்பனைப் பெண்ணிடம் ஹேர்கலர் ஷாம்பூ ஒன்றை எடுத்துத் தருமாறு கேட்டான். "சார்! நீங்களே தேவையான பிராண்ட எடுத்துகுங்க" சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

ஏதோ வீரபிரதாபம் புரிபவன்போல ஆணுறையைக் கூட சத்தம் போட்டு கேட்டுவாங்கியவன், ஹேர்கலர் பிரிவிற்கு தயங்கி தயங்கி போவதும், விரல்கள் நடுங்கியபடி தேடுவதும் அருகிலிருந்த விற்பனைப்பெண்களுக்கு சிரிப்பை வரவழைத்தது.

“இதுல அம்மோனியா ஃப்ரீ…எது”

“எல்லாத்துலயும் அம்மோனியா இருக்கும். அம்மோனியா ஃப்ரீ னு போட்டு ஏமாத்துவானுங்க. கம்முனாட்டிங்க…” பக்கத்திலிருந்தவர் கிசுகிசுத்துவிட்டுச் சென்றார்.

ஒருவழியாய் கருநிறப் பூச்சை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டான். அதை காகிதத்தில் சுற்றி வீட்டிற்கு வெளியே காலணி அடுக்கில் மறைத்துவிட்டான். சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பீர் மற்றும் கோழிகறிப் பொட்டலத்தை இப்படி காலணி அடுக்கில் மறைத்து விட்டு, எல்லோரும் தூங்கியபின் எடுக்க நினைத்த போது வெறும் பீர் மட்டுமே இருந்ததும், தூரத்தே நாயொன்று கோழிக்கறியை குதறி விழுங்கிக் கொண்டிருந்ததும், அதுகண்டு விக்கித்து நின்றதும் நினைவுக்கு வந்தது. இப்போதும் அப்படி நடந்துவிட்டால்? சே..சே.. எந்த நாய்க்கு நரைக்குது? போயும் போயும் மனுசப்பிறவியா பொறந்தேமேனு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு படுக்கப்போனான்.

மறுநாள் விடியலில் எழுந்து, யாருக்கும் தெரியாமல் கச்சிதமாக காரியத்தை முடித்துவிட்டு சுவடில்லாமல் டிஸ்போஸ் செய்துவிடவேண்டும் என முடிவுசெய்தபடியே செய்து கண்ணாடி முன் நின்றான். பத்து வயது குறைந்தது போலிருந்தது. என்ன கருமை, என்ன இளமை? தன்னைத் தானே இரசித்துக் கொண்டான். இன்று அலுவலகம் ஷேர் ஆட்டோ, மெட்ரோ என போகலாமா? அந்த 'அங்கிள்' கல்லூரிப் பெண் வருவாளா? இப்போ என்ன சொல்லிக்கூப்பிடுவாள்? குமாரின் மனவோட்டங்கள் சிறகு விரித்து பறந்தது. 

திடீரென சிறகு நின்றது போலிருந்தது. “நான்தான் ஃபேன் அ… நிறுத்தினேன்” பின்னால் குழலி நின்றிருந்தாள்.

“எப்புடி…கலக்கிட்டோம்ல? என்ன கொஞ்சம் பஸ் ஸ்டாப்ல டிராப் பண்றியா? ஆபிஸ்க்கு ஷேர் ஆட்டோல போலாம்னு இருக்கேன்”

“எடு செருப்ப…முதல்ல இந்த நளாயினிகளையும் நளாயினி கதைகளையும் கொளுத்தனும்”

“கோச்சுக்காத புஜ்ஜு! அங்கிள அண்ணா னு மாத்திக்கலாம்னு பாத்தேன்”

“பாஸ்! கொஞ்சம் மூனடி எறக்கி பாருங்க கண்ணாடில. வயிறு ரெண்டு இஞ்சு முன்னாடி வந்துருக்கு. இப்பவும் நீங்க அங்கிள் தான்” தொப்பையை குத்திக்காட்டினாள்.

குமாருக்கு தூக்கிவாரிப்போட்டது. மயிர கவனிச்சோம், வயிற கவனிக்கலயே. நாளையிலிருந்து ஜிம்முக்கு போகலாமா? யோசிக்கத்தொடங்கினான்.

கணவனின் மனதை படம்பிடிப்பவளான குழலி, “மயிரு போயி வயிறு வந்தது டும்…டும்…டும்” பரிகசித்து அவனைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்தாள்.

மு.ச.சதீஷ்குமார்