Community

சமூகத்தால் உருவாகும் மனிதர்கள்

சூரியன் மறைய போகும் சாயங்கால நேரம். வழக்கத்துக்கு மாறாக காவல் நிலையம் அந்த நேரம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. காவல் துறையின் உயரதிகாரிகள் பலர் ஒன்று கூடினர், அவர்களுடன் ஒரு சிறிய போலீஸ் படையும் இணைந்தது.
உயரதிகாரி ஒருவர் பேசத் துவங்கினார், “நம் காவல் துறையிலிருந்து ஒருவரை உளவு பார்க்க கடத்தல் கும்பலிடம் அனுப்பியதற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. அந்த கடத்தல் கும்பலின் தலைவன் இருக்கும் இடத்தை அவர் தெரிவித்தார்” என்றார். “சார் வந்த தகவல் உறுதியானது தானா” என்று ஒருவர் கேள்வி எழுப்ப, “உறுதியானது தான், அவர் பல நாட்கள் வேவு பார்த்த பின்தான் தெரிவித்து இருக்கிறார்” என்றதும், "அப்போ சரி சார், வேட்டையை துவங்கலாம், என்று அந்த போலிசார் சொல்ல, உயரதிகாரி தொடர்ந்தார், "ரத்னவேல்… இந்த படைக்கு தலைவனா உங்கள நியமிக்கிறேன். நீங்க ஏற்கனவே,நிறைய குற்றவாளிகள பிடிச்சி பதவி உயர்வு வாங்கிற்கீங்க, இது உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு… இன்னிக்கு வேலை கச்சிதமா முடிச்சா, உங்களுக்கு அடுத்த பதவி உயர்வு"என்றதும், “பதவி உயர்வுக்காக நான் எப்போதும் உழைச்சதில்ல சார்” என்று கூறி தன் படையை தேர்ந்தெடுக்க ஆயுத்தமானார்.
ரவுடி நந்தக் குமார் என்றால் மிகவும் பிரபலம்.அவன் போதை கடத்தலிலும், பல கொலை குற்றங்களிலும் ஈடுபட்டு இருக்கிறான்.அவனை கைது செய்யவோ, என்கவுண்டர் செய்யவோ பல முறை முயற்சித்தும், தப்பித்து இருக்கிறான்.காவல் துறையில் பல குற்றவாளிகளை என்கவுண்டர் கைது என பல செய்தவர் தான் ரத்னவேல்.எனவே, இந்த வேலைக்கு அவரே பொருத்தமானவர் என்று காவல் துறை அவரை தேர்ந்தெடுத்து இருக்கிறது.ரத்னவேலும், நந்தக் குமாரும் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்லர்.இன்று இரவு ஒரு யுத்தம் போல இருக்க போகிறது என்று அனைவரும் எண்ணினர்.
"சார், என் சிறப்பு படை தயார், இப்போ எனக்கு உங்களுக்கு கிடைத்த முழு தகவலையும் கொடுங்கள் "என்றதும், "இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சிறிய காட்டு பகுதியில் அவன் பதுங்கி இருப்பதாக தகவல், அவனுடன் பத்து பேர் பாதுகாப்புக்கு இருக்கின்றனர்.அந்த பத்து பேரிடமும் நந்தனிடமும் துப்பாக்கி இருக்கிறது"என்று கூறி முடித்தார் அதிகாரி.உடனே தன் படையை அழைத்துக் கொண்டு கிளம்பினார் ரத்னவேல்.
10 போலீசார், துப்பாக்கி மற்றும் மூன்று வாகனங்களுடன் புறப்பட்டனர். அனைவருக்கும், அங்கு என்ன நடக்குமோ என்ற பயமும் பதட்டமும் இருந்தது. "சார், அவனை கைது பண்றதெல்லாம் வேஸ்ட், எப்படியும் ஜாமீன் இல்லனா பெயில் வாங்கிட்டு வெளிய வந்துருவான். சுட்டு விடலாம் சார்"என்றார் ஒரு அதிகாரி. அதற்கு ரத்னவேல், "இவனை நாம் கொன்று விட்டால், இவன் இடத்தில் வேறு ஒருவன் வந்து, அதே தவறுகள் செய்வான். ஆனால், இவனை கைது செய்தால், இவன் மூலமாக பல குற்றவாளிகள் பிடிப்படுவர்.உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் சுட்டு விடுங்கள்… இல்லையேல் அவனை கைது செய்வதே நம் இலக்கு"என்றார் அனைவரும் ஆமோதித்தனர்.
உயரதிகாரி கூறிய இடத்திற்கு சிறுதொலைவிலே வண்டியை நிறுத்தி, கால்நடையாக தங்கள் வேட்டையை துவங்கினர், காவலர்கள். நடந்து சென்று காட்டு பகுதியை அடைந்தநனர். பல மரங்கள் சூழ்ந்த அடர்ந்த காட்டு பகுதி அது. "10 பேரும் சேர்ந்து ஒரு ஒரு மரமாக ஒளிந்து, சத்தமில்லாமல் அவர்களை நெருங்க வேண்டும்"என்றார் ரத்னவேல், அனைவரும் தலையசைத்தனர்.அங்கே ஒருவன் சிறுநீர் கழித்து கொண்டிருந்தான்.இரு போலீசார் இணைந்து, ஒருவர் அவன் வாயை பொத்த, மற்றொருவர் அவனை சுட்டார். பின் இருவர் இருவராக இணைந்து முன்னேறி சென்றனர். சிறிது நேரத்தில் போலீஸ் வருவது தெரிந்த அடியாட்கள், அலறினர். அடியாட்களுக்கும் போலீஸ்கும் இடயே சிறு போர் போல நடந்தது. இறுதியில் அணைத்து அடியாட்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர், 2 போலீசார் உயிர் பிரிந்தது, 6 போலீசார் படுகாயாமடைந்தனர்.
போலீசாரின் இந்த தந்திரமான தாக்குதலால் ஏதும் செய்ய இயலாது என்று புரிந்து கொண்ட நந்தன், தன்னிடம் இருந்த துப்பாக்கியை தூக்கி போட்டு போலீசாரிடம் சரணடைந்தான். அவனிடம் ஆயுதம் ஏதும் இருக்கிறதா என்று சரி பார்த்து அழைத்து சென்றனர்.அவனை அழைத்து செல்லும்போது ஒரு நோட்டம் விட்டு கொண்டே சென்றனர். 2 போலீசார் இறந்தும், 6 பேர் படுகாயம் அடைந்தது தெரிய வந்தது. காட்டு பகுதிக்கு வெளியே வந்தனர், “சார், நம்ப ஜீப்ல மொபைல் இருக்கு, போய் அதுலிருந்து உயரதிகாரிக்கு தகவல் சொல்லுங்க, அவங்க அப்டியே உயிர் காக்கும் ஊர்தி அனுப்புவாங்க… சீக்கிரமா போங்க” என்றதும் சக அதிகாரி விரைந்தார்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.அவன் சற்று அசைந்தான்.
“டேய், தப்பிச்சி போக முயற்சி பண்ண”
“என்ன சார் பண்ணுவ? சுட்டுடுவ அதான…”
“ஆமா, ஒரே தோட்டா போதும், போட்டு போயிட்டே இருப்பேன்”
“என்ன கொன்னுட்டா உன்ன ஜெயில்ல போட்ருவாங்க சார்”
“உன்னலாம் கொன்னா ஜெயில்ல போட மாட்டாங்க டா, பதவி உயர்வு தா கொடுப்பாங்க”
"என்ன சார்…நான் கொலை பண்ணா கைது, அதே நீ பண்ணா அதுக்கு பெயர் என்கவுண்டர், உனக்கு பதவி உயர்வா…என்ன அநியாயம்? "
"இப்போ என்னடா? நீ ரொம்ப நல்லவன்னு சொல்ல போறியா? "
“அப்படியெல்லாம் இல்ல சார்”
“இதெல்லாம் இப்போ ஒரு பெருமைல…கெட்டவனா இருக்கிறது கெத்து, நான் கெட்டவன்னு ஒதுக்குறது, ராமன விட ராவணன் நல்லவன்னு சொல்றது…ச்சை”
“ஏன் சார் இப்படி கோவப்பட்ற”
"உங்கள மாறி ஆளுங்கள பாத்தாலே எரிச்சலா வருதுடா"என்று அவர் கூற, நந்தன் சற்று மௌனமாகி பின் பேச துவங்கினான்,
"இந்த சமூகத்தை பத்தி நீ என்ன சார் நினைக்கிற? "என்று அவன் கேட்க, சற்று சிந்தித்து, "சமூகம்…எல்லாருக்கும் எல்லாம் கொடுக்கிற இடம்.அத ஒழுங்கா பயன்படுத்துறவன், நல்லவனா ஒழுக்கமா வாழுறான்.குறுக்கு புத்தியும், பேராசையும் இருக்கவன் உன்ன மாறி தானும் கெட்டு சமூகத்தையும் கெடுக்குறான்"என்றான்."சரி உன்ன நா சில கேள்வி கேட்கட்டுமா சார்"என்று அவன் கேட்க"ம்ம்ம்ம் தாராளமா கேளு"என்றார்.
"நீ எங்க சார் பொறந்த? "
பலமாக சிரித்து, "ஹாஸ்பிடல்ல தாண்டா…நீ எங்க மாட்டு கொட்டகைலியா பொறந்த"என்றான்.அவன் லேசாக சிரித்து, "5 வயசுல என்ன சார் பண்ணிட்டு இருந்த? " என்றான்
“முதலாம் வகுப்புல என் அப்பா, அம்மா கொண்டு போய் சேர்த்தங்க…ரொம்ப அழுது அடம் பிடிச்சேன், பள்ளிக்கூடம் போ மாட்டேன்னு”
"10 வயசுல என்ன சார் பண்ணிட்டு இருந்த? "
“எனக்கு அந்த வயசுலயே போலீஸ் ஆகணும்னு கனவு…அத புரிஞ்சிக்கிட்டு என் அப்பா என்ன விளையாட்டு போட்டிகள்ள கலந்துக்க ஊக்குவிக்க ஆரம்பிச்சாரு”
"15 வயசுல சார்? "
“12வது வகுப்பு சேர்ந்தேன்…என் அப்பா அம்மா உதவியோடு நல்ல மார்க் வாங்குனேன்”
"ம்ம்ம்ம்…20 வயசுல சார்? "
“என்னோட முதல் டிகிரி முடிச்சு…முதுகலை படிப்பு சேர்ந்தேன்”
"25 வயசுல சார்? "
“அப்போ நான் சப் இன்ஸ்பெக்டரா சேவை செஞ்சிட்டு இருந்தேன்”
"30 வயசுல சார்? "
“பல குற்றவாளிகளை கைது செய்ததுக்காக, என்ன இன்ஸ்பெக்டரா பதவி உயர்வு செஞ்சாங்க”
"உனக்கு இப்போ என்ன வயசு சார்? "
“35 வயசு…இன்னும் நிறைய குற்றவாளிகளை பிடிச்சிருக்கேன்…இன்னிக்கு உன்ன பிடிச்சி ஒப்படைச்சா பதவி உயர்வுனு சொன்னாங்க” என்று அவர் சொன்னதும், இவன் ஏதோ சிந்தித்தான்…"என்னடா நீ என்னவோ போலீஸ்காரன் மாறி என்ன கேள்வி கேக்குற, என்ன விஷயம்? " என்றார். அவன் மெல்ல சொல்ல துவங்கினான்,
"என்னோட 5வது வயசுல வீட்ல ரொம்ப கஷ்டம் சார்…பள்ளிக்கூடத்துல ஒரு வேளை சாப்பாடு போடறாங்கன்னு என்ன ஸ்கூல்ல சேர்த்தாங்க"என்றதும் அவர் முகம் சற்று தளர்ந்தது."உன் அப்பா என்ன வேலை செஞ்சாரு சார்? "என்று கேட்டான், "வங்கி மேனேஜர்"என்றார், “என் அப்பா அறிவாள் செய்றவரு சார்…குடும்பத்துல ரொம்ப வறுமைன்னு, என்னோட 10வது வயசுல என் அப்பா, அவர் வேலைக்கு கனத்த இதயத்தோட என்ன கூட்டு போனாரு”, என்றான்…அவர் முகம் சற்று வருத்தத்தை காட்டியது, அவன் மேலும் தொடர்ந்தான்,
“நாங்க அறிவாள் செஞ்சி, ஒரு பெரிய ரவுடி கிட்ட சப்ளை பண்ணுவோம்…அவருக்கு என்னையும் என் அப்பாவையும் நல்லா தெரியும்.அப்போ எனக்கு 15 வயசு இருக்கும் சார், அந்த ரவுடி அவனுக்கு வேண்டாத ஒருத்தன கொல்ல திட்டம் போட்டுட்டு இருந்தான்…அந்த கொலைக்கு 18 வயசு கீழ உள்ள பையன வச்சி பண்ணனும்னு முடிவு பண்ணி என்ன கூப்பிட்டான், என் அப்பா முடியாதுனு சொல்லிட்டாரு…அவர அருவாள் சப்ளைக்கு வெளியூர்க்கு அனுப்பி, என்ன அந்த கொலை பண்ண வச்சி, என் அப்பாவையும் லாரி ஏத்தி கொன்னுட்டான்…அப்புறம் 5 வருஷம் சீர்திருத்த பள்ளில இருந்தேன்”, என்று சொல்லும் போது துக்கம் அவன் தொண்டையை அடைத்தது…மேலும் தொடர்ந்தான்,
“20 வயசுல அந்த ரவுடி கிட்ட என்ன அடியாளா சேர்த்தாங்க…அவர்கூட சேர்ந்து போதமருந்து கடத்தவும், கொலை பண்ணவும் கத்துகுட்டேன்.25 வயதுல, அவருக்கு வலதுகை மாறி ஆனேன்.அப்பதான் தெரிஞ்சிது என் அப்பா சாவுக்கு அவர்தா காரணம்னு…அவருக்கு கொஞ்சம் உடம்பு முடியாம இருந்தது, கேரளால போய் வைத்தியம் பாத்துட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி, அவர் என் அப்பாவ கொன்னா மாறி, நானும் அவர லாரி வச்சி ஏத்தி கொன்னுட்டு, என் 30வது வயசுல எங்க கூட்டத்துக்கு தலைவன் ஆனேன்…இன்னும் நிறைய கொலைகளும் போதை மருந்தும் கடத்துனேன்…என் வயசும் 35தான்” என்று கூறி முடித்தான்.
ரத்னவேலு ஏதும் பேசாமல் இருந்தார்."என்ன சார், சமூகம் எல்லாருக்கும் ஒரே மாறி இருக்குனு சொன்ன, நீ பள்ளிக்கும் கல்லூரிக்கும் போன வயசுல, நான் சிறுவர் சிறையிலும் அடியாளாவும் இருந்தேன்…இதுக்கு என சார் சொல்ற? “, என்று கேட்டான்.அவர் மௌனத்தை மட்டும் பதிலாக அளித்தார்.மேலும் தொடர்ந்தான்"மனிதர்கள் நாலு பேர் சேர்ந்து தான் சார் சமூகத்தை உருவாக்குனாங்க, ஆனா காலம் மாறி இப்போ சமூகம்தான் மக்கள உருவாக்குது.நீ எங்க பொறந்தன்னு நான் கேட்டபோ நீ ஹாஸ்பிடல்லனு சொல்லி சிரிச்சியே…நான் குப்பதொட்டில பொறந்த சார்”, என்று அவன் சொல்லும்போது அவன் முகத்தில், அதிர்ச்சியும் வருத்தமும் கலந்து இருந்தது."எல்லாரும் கருவில் இருந்துதான் சார் பிறக்கிறோம் ஆனால் நாம் எங்கு பிறக்கிறோம் என்பது தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும்"என்று அவன் சொல்ல ஆமோதிப்பது போல பார்த்தார் ரத்னவேல்.
"நான் இதெல்லாம் என்ன நியாயபடுத்த சொல்லல சார். நானா விரும்பி இதுக்குள்ள வரல…இழுத்துட்டு வந்தாங்க…இங்க எப்படி முன்னேற முடியும்னு யோசிச்சேன், பண்ணேன்.என் அப்பா என்னதான் குப்பைல கடந்த என்ன எடுத்து வளர்த்த நல்லவரா இருந்தாலும், அவரு செஞ்ச அறிவாள்ல தான் பல பேர் கொல்ல பட்டாங்க…அந்த பாவம்தான் அவர காவு வாங்கிடுச்சு…நாங்க பண்றது பாவம்னா உன்ன மாறி ஆளுங்க பண்றதும் பாவம்தான் சார்"என்றதும், “நான் என்னடா பாவம் பண்ணேன்”, என்றார்."எப்போவாச்சும் சாலைகள்ல பிச்ச எடுக்குற குழந்தைகள் எதிர்காலம் பத்தி யோசிச்சிற்கியா சார்? சரி வேணாம்…அவங்களுக்கு ஒரு வேளை சோறு கூட நீ போட வேண்டாம், அவங்க பிச்ச எடுக்கும்போது ஒரு 10ரூபா கொடுத்துற்கியா? "என்று அவன் கேட்க, சற்றே தலை குனிந்து நின்றார் வேல்.
"ஒருத்தனோட பசிதான் சார், இங்க நிறைய விஷயத்துக்கு முதலீடு.இப்படி பசில இருக்க பசங்கள பிடிச்சு, சாப்பாடு இடம் எல்லாம் கொடுத்து, ஒரு செயல் செய்ய சொன்னா, அது நல்லதோ கேட்டதோ அவன் விஸ்வாசமா அத செய்வான் சார்…அப்படி உருவாகுறவன் தான் சார் என்ன மாறி ஆளுங்க"என்று அவன் சொல்லி முடிக்க உயிர் காக்கும் ஊர்தியும், காவல் வாகனங்களும் அங்கு வந்தது.நந்தனை கைது செய்து, மற்ற போலீசாரை மருத்துவமனைக்கு விரைந்து எடுத்து சென்றனர்.
ரத்னவேல், தன் ஜீப்பில் வீட்டுக்கு செல்ல ஆயத்தமானார்,உயரதிகாரி மொபைலில் அழைத்தார் "ரத்னவேல்…உங்கள் திறமை…அடடா சபாஷ்…உங்களுக்கு பதவி உயர்வு காத்திருக்கிறது"என்றார், “நன்றி சார்” என்று கூறி, அழைப்பை துண்டித்தார்.ரவுடி நந்தன் கூறிய எல்லாம் அவர் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.மனம் போன போக்கில் ஜீப்பை ஓட்டிக் கொண்டு சென்றார்.சாலையின் ஓரத்தில் ஒரு சிறுவன் படுத்திருந்ததை கண்டார்.அவன் அருகில் சென்று அவனை எழுப்பினார்.
போலீசை கண்டதும் அவன் பயந்தான்."டேய், பயப்படாத…நீ இங்க என்ன பண்ற? ", என்று கேட்டார்.
“பிச்சை எடுக்கிறேன் சார்”
"சரி நீ தங்க இடம், உடை, உணவு எல்லாம் நான் தரேன்…நீ பள்ளிக்கூடம் சேந்து படிக்கிறியா"என்று கேட்டதும், ஆனந்த கண்ணீருடன் சரி என்று தலையை ஆட்டினான்.அவனை தன் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.செல்லும் வழியில் "உன் பெயர் என்னடா"என்றதும் அவன்"நந்தக் குமார்"என்றான்.
அவர் மனம் சற்றே அவனை எண்ணி"இந்த சமூகத்தில் கெட்டு போன நந்தக் குமாரை கைது செய்து விட்டேன்…கெட்டு போக இருந்த நந்தக் குமாரை மீட்டு விட்டேன்…இது போல சாலையில் இருக்கும் பல நந்தக் குமாரர்களை மீட்டு நல்வழி படுத்துவதே இனிமேல் என் தலையாய பணி"என்று உறுதி எடுத்து தான் பாதையில் முன்னேறி சென்றார் ரத்னவேல்.

1 Like