Community

"என் கல்லூரியில் என்னுடைய முதல் நாள்"

         கடந்த நான்கு வருடங்கள் விருக்ஸத்தின் இலையாக செழித்து வளர்ந்து வந்தேன், இலையுதிர் காலமாய் நான் படித்து வெளிவந்த தும், விருக்ஸத்தின் கிளைகளில் ஒன்றான தரம் வாய்ந்த கிளை என் உள்ளத்தை மண்ணியல் துறையில் மேற்படிப்பு பயில தூண்டியது.

நாளை முதுநிலை மேற்படிப்பிற்கான கல்லூரியின் முதல் நாள். பல போராட்டங்களுக்கு பிறகு பிடித்தது கிடைத்தது என்ற மமதையில் நான். இருமுறை கல்வி சுற்றுலாவிற்கு பயணப்பட்டிருந்த இக்கல்லூரியை ஆராய்ந்ததில்லை, அன்று கூட புலப்படவில்லை திருநெல்வேலியில் எனது அடுத்த 2 வருட போராட்ட காலம் என்று. ஏதேதோ சிந்தனைகளுடன் பயணம் எனது கல்லூரியை நோக்கி, விழியின் ஒரத்தில் தேங்கிய நீர் மழைத்துளியோடு சேர்ந்தே கரைந்தது.

தேடலின் தொடக்கமாய் கல்லூரியின் முதல் நாள், வரவேற்க யாருமின்றி அமைதியுடன். இயற்கையின் நடுவே கிள்ளிக்குளம் என்ற கிராமம் அதுவே எனது கல்லூரியும் கூட, இன்று தான் அறிந்தேன் ஒரு கிராமத்தில் கல்லூரி செயல்படவில்லை கிராமம் முழுவதுமே கல்லூரி என்று.

எனது துறையின் கதவுகள் திறப்பதற்காக காத்திருந்த நேரம் கைகூடியது. என்னுடன் பயில இருவர், மூவரயும் வாழ்த்தி வரவேற்றனர் பேராசிரியர்கள். சில கேள்வி கணைகளை எய்தனர் பதில் அளித்தவாறு நிமிடங்கள் ஒடியது. பெருமையுடன் நான் இளங்களை பட்டம் படித்த கல்லூரியின் பெயரை சொன்னதும் ஏழனச்சரிப்புடன் தனியார் நிறுவனம் தானே அது என்ற குரலுடன். கோபம் வந்தாலும், அக்கல்லூரி இன்றி நான் இங்கில்லை என்பதை உணராமல் இருந்திருக்க மாட்டார்கள், தேற்றிக்கொண்டு விடைபெற்றேன்.

மதிய உணவு பெற்றோருடன் விடுதியில், முதல் நாள் அல்லவா உணவு அருமையாகத்தான் இருக்கும். அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துவிட்டு கண்ணீர் துளியுடன் விடைபெற்றார்கள். இம்முறை பெற்றோர்கள் கண்களில் மட்டும் நீர் ததும்பியது.

நூற்றுநாற்பது பேரில் ஒருவளாக இருந்த எனக்கு மூவர் மட்டும் அமர்ந்திருந்த வகுப்பறை வினோதமாக இருந்தது. அருகில் என் தோழி இல்லாத நிலையில் கட்டாயம் இந்த தனிமையை பழகி விட வேண்டும் என்றே தோன்றியது. கல்லூரியின் வரைபடம் கொண்டு செயல்முறைக்காக மண் சேகரிப்பில் முடிந்தது முதல் நாள் கல்லூரி. களைப்புடன் வந்த எனக்கு புதிய நட்பின் கைவண்ணத்தில் தயாரான தேநீர் போதுமானதாக இருந்தது.

சில உரையாடல்களுக்கு பின் கைப்பேசி ஒலித்தது எடுத்து குரலை கேட்டதும் தேங்கிய கண்ணீர் சிதறியது என்னுயிர் தோழிகளின் கூக்குரல். என்னை தேற்றினார்கள், ஆசை பட்ட ஒன்றை பெற்றதற்காக வாழ்த்துக்களுடன் அதில் மேலும் வளர தூண்டிய உந்து சக்தியாக அவர்கள் உரையாடல்கள் நீடித்தது. கடந்த நினைவுகளை எண்ணியும் நாளை செயல்களை எண்ணியவாரே துயில்கொண்டேன்.