கோடை மழை
நாள் முழுக்க வெயில்
காற்றும் எங்கோ
காணாமல் போனது
அந்தியின் அழகோடு
தோன்றியது ஈரக்காத்து
மழையின் மனத்தையும் கொண்டு
அடம்பிடிக்காமல் இருந்ததற்காக
அம்மா தந்த சிறு
வெல்லம் துண்டு போல்
மழை வந்தது
அழுது உறங்கிய குழந்தை
கனவில் உதிர்க்கும்
சிரிப்பு போல்
மழை வந்தது
புது கவிஞனுக்கு
கிடைத்த முதல் பாராட்டு போல்
மழை வந்தது
மனதில் தோன்றிய பாடல்
எங்கிருந்தோ ஒலிப்பது போல்
மழை வந்தது
முதல் நேர்காணலில்
முதல் சுற்று வெற்றியை போல்
மழை வந்தது
தாய் தன் பிள்ளைக்கு
தந்த முதல் முத்தம் போல்
என் நெற்றியில் முத்தமிட்டு
சென்றது மழை .
மு.தமிழழகன்