Community

முதல் பருவத் தேர்வு

“ரேணு என்ன செஞ்சுட்டு இருக்க ? பரிட்சைக்கு நேரம் ஆயிடுச்சு” மாடியில் இருந்த தன் மகளின் அறையை பார்த்தவாறே ஜானகி சமயலறையிலிந்து வெளிப்பட்டாள்.
“இதோ வந்துட்டேன்ம்மா” என்று சொல்லிக்கொண்டே மாடிப்படிகளில் துள்ளி குதித்து இறங்கி வந்தாள் ரேணு.
“இன்னிக்கு முதல் பரிட்சை. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரேணு”. ஜானகியின் குரலில் ஒரு வித நடுக்கம் தெரிந்தது.
“அட போம்மா ! அதெல்லாம் ஈஸியா தான் இருக்கும்”. ரேணு கூறிக்கொண்டே டைனிங் டேபிள் மீதிருந்த இட்லியை பார்த்து விட்டு “இன்னிக்கும் இட்லி தானா” என்று தன் மனதில் நினைத்துக்கொண்டே தன் தட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“ஹால் டிக்கெட் சாமி படத்துகிட்ட வெச்ச்சுஇருந்தேனே எடுத்து வெச்சுட்டியா ரேணு ?” என்று கேட்டாள் ஜானகி. “நேத்து ராத்திரியே எடுத்து வெச்சுட்டேன்ம்மா” என்று பதில் கூறினால் ரேணு. “அப்ப சரி” என்று சொல்லியபடியே தானும் அமர்ந்து இட்லி சாப்பிட ஆரம்பித்தாள்.
“பேனா, பென்சில், ரப்பர் எல்லாம் கூட எடுத்து வெச்சுட்டியா” என்று மறுபடியும் அடுத்த கேள்வியை கேட்டாள் ஜானகி. அம்மாவை முறைத்துக் கொண்டே “ம்ம்” என்றாள் ரேணு.
“இந்த பரிட்சை நேரம் பார்த்து தான் உங்க அப்பாவுக்கு மீட்டிங் வரணுமா ? அவர்க்கு என்ன ! ஜாலியா ஊட்டிக்கு போய் ஊர் சுத்திகிட்டு இருக்காரு. நான் தான் இங்க தனியா கஷ்டப்படறேன்” என்று புலம்பியவாறே கை கழுவிக்கொண்டிருந்தாள் ஜானகி.
“அம்மா எக்ஸாம் இருக்கும்போது ஏன் இப்படி புலம்பறீங்க? சும்மா இரும்மா” என்று செல்லமாக கடிந்து கொண்டாள் ரேணு.
“அம்மா, நான் கார் சாவி எடுத்துக்கிட்டு முன்னாடி போறேன். நீங்க சீக்கிரமா வீட்டை பூட்டிட்டு வாங்க “ என்று சொல்லிவிட்டு அங்கிருந்த அலமாரியை நோக்கி சென்றாள் ரேணு. எப்போதும் வைக்கும் இடத்தில் கார் சாவி இல்லை. எங்க போச்சு என்று மனதில் நினைத்தவாறே அலமாரியை தன் கண்களால் ஸ்கேன் செய்து கொண்டு இருந்தாள். சாவி தன் கண்களில் படாதலால் ரேணுவின் உடலில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
எக்ஸாம்க்கு டைம் ஆயிடுச்சே என்று மேலும் கீழும் அலமாரியை சலித்து கொண்டிருந்தாள். “ இன்னுமா நீ கெளம்பல” என்ற தன் அம்மாவின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் ரேணு. “கார் சாவிய பார்த்தியமா நீ?” என்று ரேணு கேட்க, “என்னது! சாவிய காணோமா?” என்று ஜானகி அலற ஒரு நிமிடம் களேபர பூமி ஆனது வீடு. பின் சட்டென்று ஏதோ பொறி தட்ட டைனிங் டேபிளை நோக்கி சென்றாள் ரேணு .
நேற்று கோவிலுக்கு சென்று விட்டு வரும்போது பிரசாத கூடையில் வைத்தது நினைவுக்கு வரவே அங்கே சென்று பார்த்தாள். கூடையில் இருந்து கார் சாவியை எடுத்துக் கொண்டு இருவரும் வீட்டை விட்டு கிளம்பினார்கள்.
காரில் அமர்ந்து கொண்டு சீட் பெல்ட்டை போட்டுவிட்டு குல தெய்வம் முதல் இஷ்ட தெய்வம் வரை அனைவரையும் அழைத்த தன் அம்மாவை பார்த்து சிரித்தபடியே காரை ஸ்டார்ட் செய்தாள் ரேணு. அவர்கள் வீட்டில் இருந்து தேர்வு மையம் செல்ல இருபது நிமிடங்கள் மிகாது. இருந்தாலும் சற்று முன்னதாகவே கிளம்பியதால் ஜானகி அமைதியாக இருந்தாள்.
வழி தெரிந்தாலும் டிராபிக் அப்டேட்க்காக கூகிள் மேப்ஸ் போட்டு விட்டுஇருந்தாள் ரேணு. அப்பொழுது எப்போதும் செல்லும் வழியில் டிராபிக் அதிகமாக இருப்பதால் அது மாற்று பாதையில் செல்ல அறிவுரைத்தது. இப்போது ஜானகியின் நாடி துடிப்பு ரேணுவிற்கே கேட்கும் அளவிற்கு படபடப்பு அதிகமாகியது.
ரேணுவும் மாற்று பாதையில் தன் காரை திருப்பினாள். கூகுல் மேப்ஸ் சொன்னது போல வண்டி எங்கும் நிற்க்காமல் போய் கொண்டிருந்தது. ரேணுவோ அமைதியின் சிகரமாக இருக்க, ஜானகியிடம் ஒரு பதைபதைப்பு தெரிந்தது.
எப்படியோ அரை மணி முன்னதாகவே தேர்வு மையத்தை அடைந்து விட்டார்கள். ரேணு ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தினாள். இருவரும் வண்டியில் இருந்து இறங்க ரேணு, “என்னம்மா இப்போ நிம்மதியா ? கரெக்ட் டைம்க்கு வந்தாச்சா”? என்று கேட்டாள்.
“ஆமா ஆமா வேண்டாத தெய்வம் இல்ல” என்று ஜானகி பதில் அளித்தாள். “ரேணு இப்போ தான் எக்ஸாம் பிவேர்ன்னா என்னனு தெரியுது. நீங்க எல்லாம் சொல்லும் போது எனக்கு தெரியல” என்றாள்.
“அம்மா பயப்படாதீங்க. எக்ஸாம் ஈசியாக தான் வரும்” என்று தன் அம்மாவின் தோளை பிடித்து உலுக்கினாள். “சரி ரேணு! அப்ப நான் கிளம்பறேன். டைம் ஆயிடுச்சு” என்று சொல்லியவாறே ஜானகி தன் கை பையை எடுக்க போக, “ஓகே மா. ஆல் தி பெஸ்ட். நல்லா எக்ஸாம் எழுதுங்க. தைரியமா போங்க. ” என்று தன் அம்மாவை வாழ்த்தினாள் ரேணு. “நான் அஃபிடேர்நூன் வந்து உங்கள பிக் அப் பண்ணிக்கிறேன் “ என்றாள் ரேணு.
புன்னகையோடு தலையை ஆட்டிக்கொண்டே தன தோழியை பார்த்து, “என்ன படிச்சுட்டீங்களா ? என்னக்கு பயமா இருக்கு” என்று சொல்லி கொண்டே தேர்வு மையத்தின் உள்ளே சென்றாள் ஜானகி.
தொலை தூரக் கல்வியில் முதலாம் ஆண்டு பயின்று முதல் பருவத் தேர்வு எழுதப் போகும் தன் அம்மாவையே பெருமையாக பார்த்து கொண்டிருந்தாள் ரேணு.

5 Likes

Super twist good story