Community

வீரய்யா தாத்தா

“ஏலேய் தூக்குசட்டிய களவாடிட்டு அம்புட்டு வேகமா எங்க போறாரு தொர?”

தன் 4 வயது பேரன் என்ன செய்ய போகிறான் என்பதை ஆவலோடு நோக்கினார் 65 வயதாகும் வீரய்யா!!!

‘எங்க போவான் நம்ம கரியன்!! பால் பீச்ச ஆரம்பிச்சா இங்கதான் வருவான் நேரா…’
பால் பீச்சுக் கொண்டு இருந்த பொன்னம்மா கூவினாள்…

“சரி கழுத, பேரான்டிக்கு பசி கட்டும்ல! வெசயா பால கொடு அவனுக்கு”
மனைவியிடம் சொல்லி விட்டு மாட்டினை வண்டியில் பூட்டினார்…

“பொன்னம்மா, இன்னைக்கு சனி சந்த… பொழுது ஆயிரும் நா வர!! புள்ளய பத்ரமா பாத்துக்க”

நெல் மூட்டைகளையும், உமி மூட்டைகளையும் மாட்டு வண்டியில் ஏற்றிவிட்டு ஒரு பீடியை மற்ற வைத்தார் வீரய்யா…

‘நா ஆயிர வாட்டி சொல்லிட்டேன், பீடி குடிச்சு நாசமா போகதனு’
கத்திய மனைவியை கண்டு கொள்ளாமல் பீடியை முடித்து விட்டு வண்டியை கிளப்பினார் வீரய்யா…

சேலம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் அது…
ஆனால் பசுமையின் இன்னொரு பெயராய் விளங்கியது…

வீரய்யா மொத்தம் 5 குழந்தைகளின் தகப்பன்…
3 பெண்கள்,2 ஆண்கள் என பெரிய குடும்பம்…
ஆண்பிள்ளை, பெண்பிள்ளை பேதமின்றி பாசம் காட்டி வளர்த்தார்

80களில் காதலின் மீது வெருப்பாகவும், சாதியின் மீது வெறி கொண்டும் இருந்தனர் நம் மக்கள்…
ஆனால் அப்பொழுதே “எம் மவ ஆசப்பட்டுட்டா, வேற என்னங்கடே வேணும்” என்னும் பெருந்தன்மை கொண்டவராய் இருந்தார்…

‘நைனா!!!’ குழைபவள் மூத்த மகள்

“என்னா சேதி, ஜோடனயே சரி இல்லையே”

‘இல்ல நைனா, நா ஒருத்தர கலியாணம் பண்ணணும்னு ஆச படறேன்’

பொன்னம்மா இதை கேட்டதும் கைகளில் விளங்குமாறு ஏந்தினாள்…

“ஏ கழுத, எம்மவள அடிச்சிருவியா என்ன மீறி”
பொன்னம்மாவை அடக்கினார்

“கண்ணு, என்ன ஆளுக அவங்க?”

‘வேற ஆளுங்க தான் நைனா’

பீடியை பிடித்தவாறே யோசனையில் மூழ்கியவர்,
ஊர் மக்கள் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்து வைத்தார்…

தன் பிள்ளைகளின் ஆசைகளுக்கு எப்பொழுதுமே அணை கட்டியதில்லை வீரய்யா…

விவசாயமும் விவசாயிகளும் மதிக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாலோ என்னவோ அவரது 3 ஏக்கர் நிலமும்,விவசாயமும் வீரய்யாக்கு ஊரில் ஓர் நற்பெயர் ஏற்படுத்தி தந்தது…

ஊர் கோவில் திருவிழாவில் மஞ்சு விரட்டில் எப்பொழுதும் முதல் காளை வீரய்யா காளை தான்…

‘நைனா, பஞ்சு மிட்டாய் வாங்கித் தா’
அவரது மூத்த மகள் கேட்க ஆரம்பித்து, இப்பொழுது
‘தாத்தா, பஞ்சு மிட்டாய்’ என்றளவிற்கு மாறி விட்டது…

காலம் மிக வேகமாக ஓடுகிறதே

அவரது பிள்ளைகள் அனைவருக்கும் கல்யாணம் முடிந்து பேரக் குழந்தைகள் வந்து விட்டனர்…

ஆனால் அவருக்கு நடு மகளின் குழந்தையான கரியன் மீது பாசம் மிக அதிகம்…

காரணம் உண்டு…
மற்ற பிள்ளைகள் ஒவ்வொருவரும் தனித்தனியே குடும்பகளாய் பிரிந்து சென்று விட்டனர்…

நடு மகள் 'கண்மணி’யின் வாழ்க்கை குடிகாரக் கணவனால் சீரழிய, குழந்தையை தூக்கிக் கொண்டு தகப்பனிடமே வந்து விட்டாள்…

தன் மகளின் வாழ்க்கை அழிந்து விட்டதே என்று வீரய்யா சிந்திய முதல் கண்ணீரைக் கண்டு ஊரே வியந்தது…

காரணம் உண்டு!!!
40 வருடங்களாய் அவரைக் கண்டு வந்தது அந்த கிராமம்…
அதிகாலை சேவல் கொக்கரிக்கும் முன்பே எழுந்து உழவுத் தொழிலை உயிராய் நேசித்து உழைத்து வந்தவர்…

மழை இல்லாத காலங்களில் கூட மனம் தளர்ந்து போனதில்லை…
அந்த ஊரில் முதலில் போர் மோட்டார் போட்டவரும் வீரய்யா தான்…
அவர் கலங்குவதைக் கண்டு எல்லோரும் திகைத்து நிற்க, கரியன் தன் பிஞ்சுக் கரங்களால் அவர் கண்ணீரைத் துடைத்தான்…
ஏனோ அன்றிலிருந்தே கரியன் மீது அலாதி பிரியம் அவருக்கு…
கண்மணி இங்கு வந்து ஒரு வருடம் ஆகியது…

அன்று கண்மணியின் கணவன், அவளை தன்னோடு அனுப்பி வைக்குமாறு வந்து நின்றான்…

“இத பாரு தங்கராசு, எம் மவ சந்தோசமா இருக்கணும்னு ஒனக்கு கட்டி வச்சேன்… ஆனா எம்மவள நீ பாடா படுத்திருக்க, எனக்கு இருக்க ஆத்திரதுக்கு ஒன்ன வெட்டி போடணும் போல இருக்கு, ஒழுங்கு மருவாதயா போயிடு”

‘மாமா, அத எம்புள்ளையும் பொண்டாட்டியும் சொல்லட்டும், நா போறேன்’

‘கரியா, அப்பா கிட்ட வாடா’ என தங்கராசு அருகில் வர, கரியன் வீரய்யா கால்களை அணைத்துக் கொண்டு ‘தாத்தா நா போவல போவல’ என்று அழுதான்…

தங்கராசு நடையைக் கட்ட, தன் பேரனை அணைத்துக் கொண்டார் வீரய்யா…

இன்று…
சந்தைக்கு சென்ற வீரய்யா மூட்டைகளை இறக்க ஆரம்பித்தார்…
திடீரென மூச்சு வாங்க ஆரம்பித்தது…
கண்கள் இருள, வீரய்யா மயங்கி விழுந்தார்…

கண் திறந்ததுமே தான் மருத்துவமனையில் உள்ளோம் என்பதை உணர்ந்தார்…

‘நைனா எழுந்துட்டியா?’
தன் பிள்ளைகள் சுற்றி நிற்பதை உணர்ந்தார்…

“ஏலேய் என்ன அத்தன பேரும் வந்து நிக்கிறாவ, அப்பனுக்கு ஒடம்புல உசுரு இருக்கானு பாக்க வந்தீரா?”

‘ஏன்பா இப்படி பேசறீங்க?’ இளைய மகள்…

முதன் முதலாய் அப்பா என்றழைப்பதை உணர்ந்தார்…

“என்ன இன்னும் எம்புட்டு நாளு என் உசுருக்கு நாள் குடுத்துருக்கானுக?”

எல்லோரும் திகைத்து நின்று மறுகணமே உடைந்து அழ ஆரம்பித்தனர்…

6 மாதங்களுக்கு முன்பு…
‘நைனா இருக்கற வயல் வரப்பு லாம் ரெண்டா பிரிச்சு எனக்கும் தம்பிக்கும் உயில் எழுதி கொடு’
பெரியவன் இராசுகண்ணு ஆரம்பிக்க இளையவன் பரமசிவன் அதை ஆமோதித்தான்…

“இப்ப என்னடே அவசரம் ரெண்டு பேருக்கும்?”

‘இல்ல நைனா, விவசாயம்-லாம் இனிமே சோறு போடாது… அதான் காட்ட வித்துட்டு தொழில் தொடங்கலாம்னு’

வீரய்யா கண்கள் சிவந்தது…
“காட்ட வித்துபுட்டு ஒங்க அப்பன் ஆத்தாள நடுத்தெருவுல வுடப்போறியா?”

‘ஏன் மாமா கோவப்படுறீங்க, எங்க உரிமைய தான கேக்குறோம்… ரெண்டு மவன் வீட்லயும் 6, 6 மாசம் இருந்துகிடுங்க, சோறு ஆக்கி போடமாட்டோம்னா சொல்றோம்!!’
மூத்த மருமகளின் கரிசனம்…

நொறுங்கித்தான் போனார் வீரய்யா…

மனைவியை பார்க்க, அவள் ‘நீங்க என்ன செஞ்சாலும் சரி’ என்பது போல் பார்த்தாள்…

அடுத்த மாதமே , நிலங்களை அவர்கள் பெயரில் மாற்றி எழுதினார்…
மூத்த மகளுக்கும் இளைய மகளுக்கும் பொன்னம்மாவின் நகைகளை பிரித்துக் கொடுத்தார்…
நடு மகளுக்கு தான் வாழும் வீட்டையும் நிலத்தையும் எழுதி வைத்தார்…

“இப்ப சந்தோசமாடே?”

‘நைனா, மொத ஆறு மாசம் என் வீட்டுக்கு வந்துடு’
இராசு கண்ணு பாசம் காட்ட!!!

“என் கரியன விட்டும், வெவசாயத்த விட்டும் என்னால எப்படிடே இருக்க முடியும்” என்றவர், "கண்ணு கண்மணி, அப்பா ஒங்கூடவும் கரியங்கூடவும் இருந்தக்கவா மா?’ என்று கையெடுக்க …

‘நைனா, என்ன நைனா இப்படி பேசற, ஒன்ன விட்டா யார் எனக்கு இருக்கா’ கண்மணியும் அழ ஆரம்பித்தாள்…

‘வெவசாயம் எப்படி நைனா பண்ணுவ?’ பரமசிவன் வினவ…

“பெத்தவளுக்கு அப்புறம் பொண்டாட்டி தான்டே ஒலகம் ஒவ்வொரு ஆம்பளைக்கும், உங்களுக்கு பண்ணும்போது அவள் எப்படிடே விடுவேன்… அவ பேர்ல நெலம் வாங்கிப் போட்ருக்கேன்டே… புள்ளைங்க அவங்களுக்கு புள்ளைங்க வந்துட்டா அப்பனும் ஆத்தாளும் ரெண்டாபட்சம் ஆயிருவாங்கனு என் ஆத்தா அடிக்கடி சொல்லும்… நெசமாக்கிட்டீங்கடே… ரொம்ப சந்தோசம்… எல்லாம் புத்தியா பொழச்சிகிடுங்க” …

அன்றிலிருந்து பிள்ளைகள், பேரன்கள் வருகை குறைய ‘கரியன்’ வீரய்யாவின் உலகம் என்றானான்…

“தொர சாப்டாரா?” ஒரு நாளில் ஏழெட்டு முறை கேட்டு விடுவார்…

ஒரு நாளைக்கு 3 கட்டு பீடி குடிப்பவர் கரியன் முன்பு மட்டும் தொடக்கூட மாட்டார்…

“ராசா, நீ பெரிய ராசா ஆனதும் பீடி, சிகரெட்டு மட்டும் தொட்ற கூடாதுடே, உன் தாத்தா மூச்சு வாங்க வேல செய்ற மாதிரி நீ இருக்க கூடாதுடே… படிச்சு பெரிய ஆளாகி ராசா மாதிரி வாழனும்”

ஒன்றும் புரியவில்லை என்றாலும் அழகு சிரிப்பை உதிர்ப்பான் கரியன்… அள்ளி அணைத்துக் கொள்வார் வீரய்யா…

இன்று…
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டனர்…
பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அங்கேயே தங்கிக் கொண்டனர்…

எல்லோரும் முகத்தை சோகமயமாய் வைத்திருக்க பொன்னம்மா மட்டும் தன் கணவனை கைக்குழந்தையாய் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள்…

அவள் காதுகளில் மருத்துவர் கூறியது ஒலித்துக் கொண்டே இருந்தது…
“இதோ பாருங்கம்மா, உங்க கணவருக்கு வந்துள்ளது நுரையீரல் புற்றுநோய்… ரொம்ப முத்திப் போன நிலைமைல இருக்கு… இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார்னு கூட சொல்ல முடியாது… அதனால் நல்லபடியா பாத்துக்கோங்க”…

‘அய்யோ இந்த மனுசன்ட அத்தன தடவ சொன்னேனே!!’ பூட்டி வைத்த உணர்வுகளை ஒன்றாய் சேர்த்து வெடித்தாள் பொன்னம்மா…

பொன்னம்மா உலகில் வீரய்யா மட்டுமே…
15 வயதில் உலகம் அறியாத வயதில் வீரய்யாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டாள்…

பிற ஆண்களை போல் இல்லாமல் அவள் உணர்வுகளை அவர் புரிந்துகொண்டது அவளுக்கு மிக பிடித்தது…
அவ்வப்போது சந்தை,சினிமா கொட்டகை என கூட்டிப் போவார்…
‘ஏனுங்க, அந்த நட்சத்திரம் மாதிரி இருக்க ஜிமிக்கி வேணும்’
மறுபேச்சின்றி வாங்கித் தருவார்…
பொன்னம்மா வீரய்யா தான் உலகம் என்று வாழத்தொடங்கினாள்…
வீரய்யாவும் பொன்னம்மா வை எப்போதும் கடிந்து கொண்டதில்லை…
வீரய்யாக்கு ஒரே வருத்தம் தான்… பொன்னம்மா அவரை மாமா என்று கூப்பிட வேண்டும் என மிக ஆசை… ஆனால் பொன்னம்மா வெட்கத்தினால் இதுநாள் வரை கூப்பிட்டதில்லை…
ஆனாலும் இருவருக்கும் இடையேயான புரிதல் ஊரார்க்கு சற்று பொறாமை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம்…
எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், பொன்னாமாவிடம் அனுமதி கேட்பார்…
35 வருடங்கள் அவள் எது சொன்னாலும் கேட்டுக் கொள்பவர், பீடி பிடிக்காதீங்க என்பதையும் கேட்டிருக்கலாம் …

இரண்டு வாரம் கழிந்தது…
ஆடிய பாதம் சும்மா இராதே!!!

“ஏய் கழுத, மாட்டு வண்டி பூட்டு… சந்தைக்கு போவோம்”

‘டாக்டர் சொன்னது செத்த கேளு… பளுவான வேல லாம் செய்ய கூடாதுனு சொல்லிருக்காங்க’

“நா சொல்றத நீ கேளு… கரியன தூக்கிக்க!! கொஞ்சம் வெளிய போனா நல்லாருக்கும்னு தோனுது”…

‘கேட்டா தான’!!!.. தலையில் அடித்துக் கொண்டு கிளம்பினாள் …

“ஏய் கழுத, நா ஆசயா வாங்குன பட்டுப்பொடவ கட்டிட்டு வா”

‘ஆங் அது ஒண்ணுதா கொறச்சல்’

அரை மணி நேரத்தில் பொன்னம்மா பட்டுப்புடவை சகிதமாய் வந்து நிற்க!

“எம் பொண்டாட்டி அழக பாருங்கடே”

பிள்ளைகள் அனைவரும்
‘புதுஜோடி எங்க போவுது’ என்று கூறி சிரிக்க , வெகு நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் எதிரொலித்தது…
‘நைனா, நீங்க போங்க! நாங்க பின்னாடியே வரோம்’

பொன்னம்மா கரியனைத் தூக்கிக் கொள்ள, வீரய்யா மாட்டு வண்டியை செலுத்தினார்…

சனிச்சந்தை…
அந்த சுற்று வட்டார மக்களின் பொழுதுபோக்கு அம்சம்…

வீரய்யா கரியனை தூக்கிக் கொள்ள பின்தொடர்ந்தாள் பொன்னம்மா…

ஒரு கடையில் நின்றவர், “ஏய்யா நட்சத்திரம் மாதிரியான ஜிமிக்கி இருக்கா?”

பொன்னம்மா கண்களில் நீர் கோர்க்க கணவனை நோக்கினாள்…‌

‘இருக்குங்கயா’ கடைக்காரன் எடுத்து தர, மனைவியின் காதுகளில் மாட்டி அழகு பார்த்தார்…

‘தாத்தா’

“தொர கண்ணு என்ன வேணும்?”

‘தாத்தா பஞ்சு மிட்டாய்’

வீரய்யாக்கு தன் கடந்த கால நிகழ்வுகள் கண் முன் வந்து போனது…

‘தாத்தா!!!’

“இந்தா வாங்கியாரன் தொர கண்ணு”

கரியனை பொன்னம்மா விடம் தந்து விட்டு பஞ்சு மிட்டாய் வாங்க ஓடினார்…

மூச்சிரைக்க பஞ்சு மிட்டாய் வாங்கி வந்தவரை கடிந்து கொண்டாள் பொன்னம்மா…

‘எதுக்கிப்டி ஓடனும்… நாம வீட்டுக்குப் போவோம்’
கோபமாய் சொல்ல வீரய்யா சரி என்றவாறு மாட்டு வண்டியிடம் வந்தார்…

கழுத்துக்கட்டையை மாட்டின் கழுத்தில் தூக்கி வைத்தவர், அப்படியே சாய்ந்தார்…

‘அய்யோ’ என அலறியவாறு பொன்னம்மா ஓடி வர, தன் இறுதி மூச்சினை விட்டுக் கொண்டிருந்தார் வீரய்யா…

‘தாத்தா’ என்று அருகில் வந்த கரியன் அவர் கண்ணீரை தன் பிஞ்சுக் கைகளால் துடைக்க, மெல்லிய சிரிப்பை உதிர்த்தார்…

“ஏய் கழுத, கடைசி ஆச ஒண்ணு செய்வியா?”

‘அய்யோ எந் தெய்வமே’ பொன்னம்மாவின் கதறல் சந்தையையே உலுக்கியது…

“ஒரே வாட்டி மாமா -னு கூப்பிடு கழுத”

‘மாமா’ என்று பொன்னம்மா முடிப்பதற்குள் வீரய்யாவின் இறுதி மூச்சு நின்றது…

‘என்னங்க!!!’ பொன்னம்மா மயங்கி சரிய, மழை பொழியத் தொடங்கியது …

நல்ல மனிதனின் இறப்புக்கு இயற்கையே கண்ணீர் சிந்துகிறது போல

             -முற்றும்-