Community

அன்பிற்குரிய ஆசிரியர்

தமிழகத்தில் வருண பகவான் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த மாதம் அது.

ஆம் அதே நவம்பர் மாதம்தான்.

விடிய விடிய ஆடியது போதாதென்று விடிய விடாமல் பகவான் செய்த சேவையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த காலை நேரத்தில் சுவாமிமலை தெருவில் உள்ள அனைத்து வீடுகளும் அமைதியாக இருக்க என்னுடைய வீடு மட்டும் அலறிக் கொண்டிருந்தது.
“இந்த மழையில யாரு உனக்கு ஸ்பெஷல் கிளாஸ் வைக்கிறாங்க” என அம்மா கூறி முடிப்பதற்குள் பையை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். அதற்குள் அப்பா " அப்பு கிளாஸ் ஒன்பது மணிக்கு தானே மணி 8 தான் ஆகுது. ஒரு அரை மணிநேரம் வெயிட் பண்ணு. மழை விடுற மாதிரி இருக்கு. நனையாம போகலாம் பா. ராதா டீச்சர் ஒன்னும் சொல்ல மாட்டாங்க". சற்று நேரம் கழித்து செல்லலாம் என நானும் அமர்ந்து அம்மா கொண்டு வந்த தோசையை ஒரு கை பார்க்க தொடங்கினேன். மழையும் சிறிது நின்று போனது. எட்டரை மணிக்கு எங்கள் ஊரிலிருந்து கும்பகோணம் செல்லும் அதே ஒன்றாம் நம்பர் பேருந்தில் ஏறினேன்.அப்படியே தூக்கமும் கண்களில் ஏறிக்கொண்டது.

எங்கள் ராதா டீச்சருக்கு இருபத்தியெட்டிலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும். எப்போதும் மற்ற ஆசிரியர்களுடன் பேசும் போது எங்களை அவருடைய பிள்ளைகள் என்றே குறிப்பிடுவார். கணிதம் என்பதை கலை போல கையாளும் திறன் பெற்றவர். அவர் தன்னுடைய ஆசிரிய பணி மீது கொண்டிருந்த பற்றுதான் இன்று இந்த மழையில் கூட நான் பள்ளிக்கு செல்வதற்கு காரணம்‌. நான் மட்டுமல்ல என் நண்பர்களும் அதே மரியாதையுடன் தான் அவரை பார்ப்பார்கள். சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன்பே அவர் வந்து விடுவார். அவரை பொருத்தவரை நாங்கள் அனைவரும் அவரது பிள்ளைகள். படிப்பவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடு என்றுமே அவர் பார்த்ததில்லை. இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் முன்னரே சிறப்பு வகுப்புக்கு சொல்லியிருந்தார்.ஆனால் மழை வந்து மொத்த தஞ்சை மாவட்டத்திற்கே விடுமுறை அளித்துவிட்டது.

“வள்ளலார் ஸ்கூல் இறங்குங்க” என்ற குரல் கேட்டதும் அரைத்தூக்கத்தில் இருந்து விழித்து பேருந்தில் இருந்து இறங்கி பள்ளியை நோக்கி நடந்தேன். நான் நினைத்தது போலவே எல்லோருக்கும் முன்பே வந்து அலுவலகம் அருகே அமர்ந்திருந்தார் ராதா டீச்சர். ஒரு கையில் குடையும் மறுகையில் காலை உணவும் அன்று நடக்கவிருக்கும் குறுந்தேர்வுக்கான வினாத்தாள்கள் அடங்கிய பையும் இருந்தது. என்னை பார்த்ததும் " நிர்மல் போய் கிளாஸ தொறம்மா" என்று சாவியை நீட்டினார். நானும் வகுப்பறையை திறந்து டியூப் லைட்டின் ஸ்விட்ச்சை தட்டினேன். பின்னர் உள்ளே வந்த டீச்சர் பள்ளியின் நுழைவு வாயில் தெரியுமாறு இருந்த பென்ஞில் அமர்ந்து வாடிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்‌. எனக்கு புரிந்தது பத்து மணி ஆகியும் ஒருவரும் வராததுதான் அதற்கு காரணம்.ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது எப்படியாவது எல்லோரும் வந்துவிடுவார்கள் என்று. பின்னர் என்னை நோக்கி “சாப்டியா நிர்மல்” என்றார். நானும் ஆம் என்று தலையசைத்து கொண்டே " நீங்க எப்ப வந்தீங்க மிஸ்" என்றேன். “நான் எட்டு மணிக்கு வந்தேன்” என்று மறுமொழி வந்தது.

" மிஸ் நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மழையில வர்றீங்க. உங்க வீட்டுல திட்ட மாட்டாங்களா உங்கள "

" திட்டுவாங்க தான். நான் அதுக்கு எம் புள்ளைங்களே மழைனு பாக்காம வந்துடுங்க. நான் எப்படி போகாம இருக்க முடியும்னு சொல்லிட்டு வந்துட்டேன்" என்று கூறினார். சிறிது நேரம் மெளனமாக கழிந்தது.

மீண்டும் நான் பேச தொடங்கினேன். " உங்களுக்கு மேக்ஸ் அவ்வளவு பிடிக்குமா மிஸ் ?"

"ஆமா. பிடிக்காமயா எம்.எஸ்.சி வரைக்கும் படிச்சேன் " மீண்டும் சில நிமிட அமைதி. ஆனால் இந்த முறை பேச்சை தொடங்கியது அவர்தான்.

" நிர்மல் நீ என்ன ஆகனும்னு ஆச படுற."

“நான் சைன்டிஸ்ட் ஆகனும்னு ஆச படுறன் மிஸ்”

" சூப்பர் டா தம்பி. அத மனசுல வச்சுக்கிட்டு படிக்கனும். அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கனும்ல. அதுக்கு நீ நல்லா படிச்சாதான் முடியும்."

“சரி மிஸ்”

" நல்லா படிச்சி கார்ல வந்து பாக்கனும்டா இந்த டீச்சர. அப்போ நான் இங்க உள்ள பசங்க கிட்ட பெருமையா சொல்லுவன் அது என்கிட்ட படிச்ச புள்ளனு.அப்போ இந்த ராதா டீச்சருக்கு வயசாகியிருக்கும். கிழவி ஆகிருப்பேன். யாருனு கேட்ற மாட்டிலடா தம்பி" என்று கூறி கலகலவென சிரித்தார்.

ஆனால் அதுதான் முதுமையின் துயரம் என்பதை அந்தவயதிலேயே என்னால் யூகிக்க முடிந்தது. இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் அவருடன் சேர்ந்து நானும் சிரித்தேன்.

வாயிலில் நண்பர்களின் குரல் கேட்டதும் " மிஸ் ஹரிஸ் வந்துட்டான் பாருங்க" என்றேன். அப்படியே அரை மணி நேரத்திற்குள் வகுப்பறை நினைத்தது போலவே நிரம்பியது. அந்த நிகழ்வை நல்ல ஆசிரியருக்கு கிடைத்த அங்கீகாரமாகவே என்னால் பார்க்க முடிந்தது.

பிதாகரஸ் தேற்றத்தில் தொடங்கி பிற்பகல் ஒன்றரை மணிக்கு வகுப்பு நிறைவுற்றது. வானமும் கொஞ்சம் வழிவிட்டது. என்னிடம் வகுப்பறையை பூட்டி சாவியை அலுவலகத்தில் தந்துவிட சொன்னார். நானும் சாவியை ஒப்படைத்து விட்டு ஆசிரியர் ஓய்வறைக்குச் சென்று சொல்லிவிடலாம் என்று கிளம்பினேன்.

ஆனால் அங்கு ராதா டீச்சர் அப்போதுதான் காலையில் கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார்.நான் அவரிடம் " மிஸ் அத நீங்க காலையில வந்ததுமே சாப்பிட்டிருக்கலாமே" என்றேன். அதற்கு அவர் " காலையில நீங்கலாம் திடீர்னு வந்துட்டீங்கனா நான் சாப்பிடுற வரைக்கும் காத்திருக்குற மாதிரி ஆகிடும் தம்பி. நம்ம யாரையும் காக்க வைக்க கூடாது நிர்மல்" என்றார். அதுதான் எங்களுடைய ராதா டீச்சர் என்று எனக்குள் நானே மார்தட்டிக் கொண்டேன்.

ஆகையால்தான் அவர் காலனையும் காக்க வைக்கவில்லை. நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்த அதே தருணத்தில் அவருடைய உயிரையும் காலன் முடித்துவிட்டான். அவருக்கு நாங்கள் படிக்கும் போதே இருதயத்தில் பிரச்சினை இருந்ததாக கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அது அவருடைய உயிரையே பறிக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

எனக்கு இன்று இருபத்தியொறு வயதாகிறது. அதே வகுப்பறையின் வாயிலில் நான் நிற்கிறேன். என்னுடைய ராதா டீச்சர் அந்த முதுமை தோற்றத்தில். கூட வந்து என்னை பார்த்தாலே போதும் என்று. ஆனால் அவர் வரவேயில்லை. தெய்வமாக எங்களை எல்லாம் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன்.

அப்போது ஆசிரியர் ஓய்வறையை கடக்கும்போது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேல் இருந்த அவரது புகைப்படம் என்னை சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்ததை கண்டபோது கண்களில் இருந்து கசிந்த கண்ணீர்த்துளிகளை கைகளாலும் அடைக்க முடியவில்லை.