Community

கருப்பட்டி அத்தை

பேச்சிக்காளை பெரியப்பா வீட்டின் மேல்புறம் செல்லும் கோடித் தெருவில் இருக்கிறது காளியம்மா அத்தை வீட்டின் வாசல்…

சானம் வைத்து மொழுகிய அந்த அடுப்பங்கறையில் … விரகடுப்பில் ஊதுகுழலை வைத்து “ஃபூன் …ஃபூன்…” என ஊதி அடுப்பை எரிய வைத்துக்கொண்டிருப்பாள்…

வாசலை எட்டிப் பார்த்ததுமே "ஏயா மருமகனே வாங்க"னுட்டு லேசாக எத்திய அந்த மூன்று முன்பற்கள் தெரியச் சிரிப்பாள்… சத்தியமாக என் ஆத்தா சிரிப்புக் கூட அந்தச் சிரிப்புக்கு அப்புறம் தான்னு சொல்லுவேன்…

நான் காப்பிக்கு தான் வந்துருப்பேன்னுட்டு என்ன காக்க வைக்க கூடாதுன்னு சோத்துக்கு கொதிக்கிற உலைய எறக்கிட்டு, " ஏயா செத்த இருங்க அத்தை காப்பி போட்றுதேன்"னு., விரகடுப்பில் எரித்துத் தூர் கரிப்பிடித்துப்போன அந்த காப்பிச் சட்டியை எடுத்து அடுப்பில் வைப்பாள்…

ரெண்டு செம்பு தண்ணி ஊத்தி… ஒரு பாக்கெட் காப்பித்தூள பிரிச்சு போட்டு… கருப்பட்டிய எடுத்து அருவாமனை மரப்பிடிய வச்சு தட்டி சட்டில போடதுக்கு முன்னாடி “இந்தாங்க யா” னு எனக்கு திங்க ஒரு துண்டு குடுப்பா…

காப்பி கொதிச்சதும் எறக்கி இருத்தாப்புல ஊத்தி மருமகெனுக்கு சுட்ற கூடாதுனு நல்லா ஆத்தி… "காப்பி சுடுது பதப்பற குடிங்க யா"னு குடுக்கைல … பச்சை சிவப்பு நிறத்துல அஞ்சு கல்லு வச்ச பெரிய மூக்குத்தி போட்டுட்டு… சிலைக் கருப்புல அந்த மகமாயி காளி ஆத்தாலே வந்து காப்பி போட்டு குடுத்த மாதிரி கருப்பட்டி காப்பி தித்திக்கும்…

சித்திரை மாச வெயில்ல நல்லா கிரிக்கெட் விளையாண்டு சூடு பிடிச்சுக்குடும்…
“யம்மா…வலிக்குதும்மா”…ம்பேன்…"ஏலே காளியம்மத்தை வீட்டுக்கு போ…நீத்தண்ணி வச்சிருப்பாக… குடி சரியாயிரும்"பா அம்மா…
"அத்தையோவ்… நீத்தண்ணி வேனும்ன்னதும்… அந்த பெரிய பித்தளைச் செம்புல நீத்தண்ணிய ஊத்தி… உப்புப்போட்டு ஆத்தி… புளிப்பு ரொம்ப இருக்கானு ஒரு விரல்ட்டு லேசா நக்கிப் பாத்து குடுத்துட்டு… ஊறப்பானைல இருந்து ரெண்டு துண்டு எழுமிச்சை ஊருகாவ எடுத்து தொட்டுக்க வைப்பாக…

ஒரு தடவ சங்கிலி பூதத்தார் கோயில் கிட்ட "கோலி"க்காய் விளையாடிட்டு நைட்டு 9மணி ஆகியும் வீட்டுக்கு வரலனு எங்கப்பா அங்க இருந்து அடிச்சு இழுத்துட்டு வந்தத கருப்பட்டி அத்தை பார்த்துட்டா… "ஏலேய்…கோட்டைச்சாமி அதென்ன என் பிள்ளைய அப்பிடி அடிப்ப… உன்ன அருவாமனைட்டு வெட்டிப் புடுவேன் பாத்துக்கோ"னு சண்டைக்கு வந்ததுல எங்கப்பாவே மிரண்டுட்டார்…
அன்னைக்கு ஒருதடவ தான் அவ கோவப்பட்டு பாத்துருக்கேன்…

“ஏலே வந்ததும் வராததுமா எங்க போற”…
“யேமா கருப்பட்டி அத்தை வீட்டுக்கு போறேம்மா”…னுட்டு அன்னைக்கு யூனிபார்ம்அ கூட மாத்தாம போனேன்…
வீட்டுல மகன் கூட ஏதோ பிரச்சனை போல …"முந்தி"ல
கண்ணக் கசக்கிட்டு உட்கார்ந்திருந்தா கருப்பட்டி அத்தை… "இவங்கலாம் எதுக்கு… என் மருமகென் இருக்கல… நான் செத்தா தூக்கிப் போடதுக்கு… என்ன யா"னு என்ன பாத்து அந்த வேதனை முகத்தோட சிரிச்சுட்டே லட்சுமி பெரியம்மாட்ட சொல்லிட்டு இருந்தா…இத எத்தன தடவ சொல்லிருப்பா “என் மருமகென் இருக்கல …நான் செத்தா தூக்கிப் போடதுக்கு”…!

இதெல்லாம் நடந்து பத்து பண்ணென்டு வருசம் ஆச்சு… வளர்ந்து அங்க அங்கனு வெளியூர்ல படிக்க போயாச்சு…

டெல்லி ல உட்கார்ந்திருந்தேன்… அம்மா போன் பன்னுதா…
“என்னம்மா…”
“தம்பி… காளியம்மத்தை இருக்காக’ல அவுக இறந்து போனாகப் பா”…
“என்னம்மா சொல்லுற… என்னாச்சு”
“ஏயா… பூஞ்செடிக்கு அடிக்க வச்சிருந்த பூச்சி மருந்த குடிச்சுப்புட்டாகப்பா”…

நெருங்குன சொந்தமில்லை… சம்பந்தா வழியுமில்லை…எங்க நாட்டாமை வகையறா வும் இல்ல… துட்டி கேக்க கிளம்பி வர்ற அளவுக்கு நான் வீட்டுக்கு பெரியவனும் இல்ல… நான் போகல னா ஏன் வரலனு யாரும் கேக்க போறதுமில்லை… இதுக்குனு டெல்லில இருந்து கிளம்பி வந்தா… இவன் எதுக்கு அவளோ தூரத்தில இருந்து வாராம்னு நினைக்க கூட செய்வாக…

ஆனா… "நான் செத்தா தூக்கிப் போட என் மருமகென் இருக்கல"னு சொன்ன அவ வார்த்தைக்கு… அவ செத்து பாக்க கூட வரலனா… அவ குடுத்த காப்பி என் மனசுல செரிக்காது…

மதுரைக்கு பிளைட்… அங்க இருந்து பைக்… வந்துட்டேன் அவள தூக்கதுக்கு முன்னாடி வந்துட்டேன்…

அந்தக் கோடித்தெருவோட சுவத்துல சாஞ்சிட்டு நிக்கேன்… உள்ள அவள நாற்காலில சாத்தி வச்சுருக்காக…அவ கால்மாட்டுல பொம்பளைக மனசுல இருக்கதலாம் ஒப்பாரியா வச்சுட்டு இருக்காக…என் மனசுல ஓடுற ஒப்பாரிய நான் எங்க போயி வைப்பேன்…

அவ போட்டுக்குடுத்த காப்பியெல்லாம் கண்ணீராக் கொட்டுது…அதையும் மறைக்க வேண்டிய நிலமை… பெத்த மகனுக்கே கண்ணுல தண்ணி வரல… இவன் எதுக்கு அழுவுறான்னு நினைப்பாக…

அய்யோ அவள தூக்குறாங்க… எங்கத்தை போராளே…என் கருப்பட்டி அத்தை போறாளே… என் காளியம்மத்தை போராளே…கொன்னுட்டீங்களடா பாவிகளா…அவட்ட இந்த ஊரு சனம் எத்தனை பேரு காப்பி தண்ணி வாங்கி குடிச்சிருக்கும்…அவள விஷத்த குடிக்க வச்சுட்டீங்களடா…கருப்பட்டியா பேசுவாளே… “ஏயா… மருமகனே னு”…இனி யாரு கூப்பிடுவா அப்புடி…

அவள ஏத்துன வண்டி… வடக்கானிக்கு கெளம்பிருச்சு… அவ வீட்டுக் கோடித்தெரு வெறிச்சோடிக் கெடக்கு… யாரும் போறதில்லை… “காளியம்மா ஆவியா அலையுறாலாம்”…அதான் யாரும் போறதில்லையாம்… ஆனா அவ அங்க இல்லை… இருந்திருந்தா என்ன கூப்பிட்ருப்பா … கூப்புட்டு ஒரு டம்ளர் காப்பி போட்டு குடுத்துருப்பா…

1 Like

அருமைங்க.பாட்டிங்க நம்ம மேல வைக்கற பாசமே தனிரகம்தாங்க…

1 Like