Community

எலுமிச்சை- உருளும் தாயம்

எலுமிச்சை

பைகளை திண்ணையில் வைத்துவிட்டு திண்டுபோல சிமெண்ட்டால் உருட்டி அமைக்கப்பட்டிருந்த சாய்மானத்தில் சாய்ந்து வானத்தை பார்த்தாள் கோதை… பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே வானம்தான். இரட்டை ஜடையோடு ஏறமுடியாமல் கோதை துள்ளி ஏறிய சாய்மானம் வானத்தைப் போலவே மாற்றமின்றி இருந்தது. வெயிலிறங்கும் மாலையில் நாக்கு நுனியை சாய்மானத்தில் வைத்தால் ஜிவ் வென்று எச்சில் உறிஞ்சும்…மழைநேர மண்வாசனை உணர்வு தந்து கணநேரத்தில் வறண்டு போகும் நாக்கின் நுனியும்… காய்ந்து போகும் எச்சில் ஈரமும்… அன்று முதுகில் அறை வாங்கித் தந்த விளையாட்டு…

காலை வெயில் சற்றே சூடேற்றத்தொடங்கிய தெருவை சுற்றும் முற்றும் பார்த்தாள் கோதை. தெருவோர புற்களை மேய்ந்து கொண்டிருந்த ஒற்றை மாட்டைத் தவிர யாருமில்லை…நாக்கை சற்று பெரியதாக நீட்டி சாய்மானத் திண்டை கிட்டதட்ட நக்கியேவிட்டாள்…தொலைந்த பால்யத்தை சுவைக்கும் ஆவல் அவளுக்கு… காத்திருந்த ஏக்கம் சாய்மானத்திற்கு… சட்டென உலர்ந்த போனது எச்சில் சுவடு.

மாவற்றல் முறத்தோடு திண்ணைக்கு வந்த பெரியம்மா பூரணி ஒரு நொடி ஸ்தம்பித்து இயல்புநிலைக்கு திரும்பினாள். “ஏ சின்னக்குட்டி எப்ப டி வந்த…உள்ள வராம ஏன் இங்கேயே உக்காந்திருக்க…?”

" திண்ணைய பாத்தோன்ன ஆசையா இருந்துச்சு அதான்"

முறத்தை வெயில் பட வைத்துவிட்டு பைகளை எடுத்துக்கொண்டு உள்ளே போன பூரணியைத் தொடர்ந்தாள் கோதை.

ஒரு காலத்தில் அக்காக்கள் நிறைந்திருந்த வீடு…ஒரு சேலை, இரண்டு தாவணிகள், ஒரு முழுபாவாடை சட்டை, ஒரு அரைபாவாடை சட்டை அணிந்த பட்டாம்பூச்சிகளுடன் வளைய வந்த கவுன் அணிந்த பெண்குழந்தை கோதையை யாரும் சித்தி மகள் என பிரித்துப் பார்த்ததில்லை…இருப்பவர்களில் குட்டி என்பதால் சின்னக்குட்டி என்று பெரியம்மா பூரணி வைத்த பெயரே கோதைக்கு நிலைத்துப் போனது.

கொள்ளிடக் கரையில் இருந்த திருநல்லூர் கோதையின் அம்மா பிறந்த ஊர். அம்மாவை வேறு ஊரிலும் பெரியம்மாவை அதே ஊரிலும் திருமணம் செய்துகொடுத்ததில் கோதையின் பிறந்த ஊர் வேறாகிப்போனது ஆனாலும் பத்து வயது வரை அவளது பால்யத்தை சுவாரசியப்படுத்தியது திருநல்லூரும்…பெரியம்மா வீடும் தான்…இரண்டு அடுக்கு திண்ணை கொண்ட முற்றம் வைத்த வீடு.

திண்ணையில் ஆளுக்கொரு இடத்தில் படுத்துக்கொண்டு கல்கி குமுதம் குங்குமம் என வாரப்பத்திரிகைகளில் மூழ்கிக் கிடப்பது… கோலாங்கட்டி கொண்டு கட்டம் வரைந்து பாண்டி ஆடுவது…நூத்துக்குச்சி… பல்லாங்குழி…கல்லாங்காய் என்று அன்று சொல்லப்பட்ட ஏழுகல் என உள் விளையாட்டு அரங்கமாகிக் கிடந்த திண்ணை… அக்காக்கள் திருமணமாகிச் சென்று விட வெறுமையாய் கிடந்தது.

பிரச்சனைகள் இல்லாத உறவுகள் ஏது?.. மீண்டும் உறவாடிய போதும் மேல்படிப்பு…திருமணம் என பல காரணங்களால் கோதைக்கு திருநல்லூருக்கு வரமுடியாமலேயே போனது…

அன்றாட செயல்கள் ஒவ்வொன்றிலும் நினைவுக்கு வரும் குழந்தைமை அனுபவங்களில் எல்லாமே திருநல்லூர் நினைவுகள் என்பதை உணர்ந்த நொடியில் கிளம்பி பெரியம்மா வீட்டுக்கு வந்துவிட்டாள் கோதை.

மகிழ்ச்சி மட்டுமே உலகில் இருப்பதாய் நம்பிய நாட்கள் அவை. இரண்டு மூன்று மணிநேரம் கொள்ளிடத்தில் ஆட்டம் போட்டுவிட்டு வந்தால் அமுதா அக்கா கல்யாண முருங்கை வடை சுட்டு வைத்திருக்கும்.

கோதைக்கு விவரம் தெரிந்து அன்றைய சமையல் எல்லாமே அக்கா தான் செய்யும்.
பெரியம்மா பூரணி அடுக்களைப் பக்கம் போகவே மாட்டாள். சமையலில் துணை வேலை செய்ய ஒரு மகள் வீடு பெருக்க கோலம் போட ஒரு மகள் என பிரித்து தரப்பட்ட வேலைகளால் பெரியம்மாவுக்கு என்று தனியாக எந்த வேலையும் இருப்பதில்லை.

காலை உணவுக்குப் பின்னர் தேவகி வீட்டுக்குச் சென்றால் மதிய சாப்பாட்டுக்கு
“சின்னகுட்டி அம்மாவ சாப்ட கூப்புட்டு வா” என்று அமுதாக்கா சொல்லி முடிக்கும் முன் தேவகி வீட்டில் இருப்பாள் கோதை.

தேவகி வீடு அந்தத் தெரு பெண்களின் சரணாலயம். அடர்ந்த கூரை வேய்ந்த வீடு…பெரிய செவ்வக கூடத்தின் முடிவில் இரு படிக்கட்டுகள் ஏறினால் மேடை போன்ற ஒரு அமைப்பு. சாதாரண சிமெண்ட் பூச்சு தரையில் அத்தனை வழுவழுப்பு இருக்குமா… என்பது ஆச்சரியம்தான். ஆழ்ந்த சிமெண்ட் நிறத் தரை எப்போதும் ஜில் என்றிருக்கும்.

இரண்டு மூன்று வகை தாயக்கட்டங்கள் நிரந்தரமாக வரையப்பட்டிருக்கும்.
தெருவின் முனையிலேயே தாயக் கட்டைகள் உருளும் கிளிங் சப்தம் கேட்கத்தொடங்கிவிடும்…

ஒவ்வொரு கட்டமும் ஹவுஸ் ஃபுல் தான். ஏற்கனவே ஆடிக்கொண்டு இருப்பவர்கள் பெரிய மனதுடன் புதுவரவுகளுக்கு இடம் கொடுத்து அங்கேயே கையை மடக்கி தலைக்கு வைத்து கட்டையை நீட்டி விடுவார்கள்…ஆட வாய்ப்பு கிடைக்காதவர்கள் சியர் கேர்ள்ஸ் ஆகி விடுவதும் உண்டு. விளக்குமாற்றுக் குச்சி… புளியங்கொட்டை… வேப்பங்கொட்டை என வைத்து விளையாடும் காய்களை செட்டு செட்டாக பிரித்து பித்தளை தாயக்கட்டைகளுடன் டப்பாவில் தேவகி அம்மா வைத்திருக்கும்.

விளையாட்டின் தொடக்கத்தில் தாயத்தோடு உருளும் பல ஊர் கதைகள்…ஆட்டம் சூடு பிடிக்கும் போது நின்றுபோகும்.

தேவகி அம்மா மைசூர்பாகு ஸ்பெஷலிஸ்ட். விளையாட்டு நடுவில் யாரேனும் வந்து மைசூர்பாக் செய்துதர அழைத்தால் அப்படியே விட்டு விட்டுப் போய்விடும்

பெரும்பாலும் ஆட்டத்தில் சேராமல் அடுப்படி வேலையில் இருக்கும் தேவகி அம்மா மகள் விஜி அக்கா அவ்வப்போது விளையாடுபவர்களுக்கு நீர் மோர் கொடுப்பாள்.

இரக்கமே இல்லாமல் வெட்டித் தீர்க்கும் திலகம் அத்தை தேவகி அம்மாவின் எதிர்வீடு “ஏண்டி விஜி நெதய்க்கும் தண்ணி ஊத்தி தளதளன்னு வளர்த்து வச்சிருக்கியே எலும்மிச்ச மரம் அதுல நாலு பழத்த நறுக்கி துளி உப்பு சீனி போட்டு கலக்கி தாயேன்”

" வெட்டி போடுற களப்புல உனக்கு சூஸ் கேக்குதோ" என கடுப்படிக்கும் பெரியம்மா.

மறுபேச்சின்றி பானைத் தண்ணீரில் எலுமிச்சை ஜூஸ் கலந்து தருவாள் விஜி.

ஒரு மழை நாளில் தேவகி அம்மா திலகம் அத்தை வீட்டில் மைசூர் பாகு தயாரிப்பில் குளிர்காய்ந்து கொண்டிருந்தது.

தூறல் தொடங்கும் போதே காயவைத்த துணி எடுக்க ஒவ்வொருவராய் வெளியேற கூடத்தின் வலதுபுற கூரைக்கும் பக்கத்து வீட்டு சுவருக்கும் இடையேயான அரை அடி இடைவெளியில் சிறு ஓடை உருவானது. “சின்னக்குட்டி கப்பல் விடலாம்…வரியா” என்றாள் விஜி அக்கா.

“எனக்கு ஒரு கத்திக்கப்பல் செஞ்சு வருவியா…”

" ஒன்னு என்ன பத்து செஞ்சு தரேன்"

சர சர வென உள் வாசலில் இருந்து பின் வாசலுக்கு கப்பல்கள் பயணிக்கத் தொடங்க கோதைக்கு ஒரே குதூகலம்.

இவர்கள் செய்யாத புதிய கப்பல் அழுத்தமான வண்ணத்தாளில் அழியாத எழுத்துகள் மற்றும் சில பட்டன் ரோஸ்களை சுமந்து வர அவசரமாய் எடுத்து பிரித்த விஜி அக்கா விரல்களில் லேசான நடுக்கம்…

" இது எப்படி அக்கா வந்துச்சு இது நம்ம கப்பல் இல்லயே"

“அது நாம விட்ட கப்பல் புடிச்சு போய் தொரவதை அம்மன் அனுப்பியிருக்கு… யார் கிட்டயும் சொல்லாத… நாம மழவிட்டோன கோயிலுக்குப் போய் நன்றி சொல்லிடலாம்” என்று ஒரு ரோஜாவை கோதையின் ஒருபக்க சடையில் சொருகி விட்டு…இன்னொன்றை கப்பலுக்கு பேப்பர் கிழித்த நோட்டுக்குள் வைத்த விஜியின் முகத்தை அத்தனை அழகாக கோதை அதற்கு முன் பார்த்ததில்லை…

பழைய நினைவுகளில் மூழ்கிய கோதையை மீட்டது பெரியம்மா நீட்டிய உளுந்து வடை.

" சாஃப்ட்டா இருக்கு எண்ணெயும் குடிக்கல இவ்வளோ ருசியா நான் சாப்ட்டதேயில்ல பெரிம்மா…உனக்கு சமைக்கத் தெரியாதுன்னுல இருந்தேன்" என்ற கோதையை செல்லமாக கிள்ளினாள் பூரணி பெரியம்மா.

“நான் போய் கேசரி பண்றேன்”

" ஐயோ பெரிம்மா நான் ஒரு வாரம் இங்க தான் இருக்கப் போறேன்…டெய்லி ஒரு ஐட்டம் செய் போதும்…
நீ ரெஸ்ட் எடு நான் காலாற நடந்துட்டு வாரேன்"

“வெயிலாயிருக்கு சீக்கிரம் வந்துரு சின்னக்குட்டி” பூரணியின் குரல் வாசல் தாண்டிவிட்ட கோதையின் செவியை தீண்டவேயில்லை.

நடுத்தெருவில் கிளிங்… கிளிங்…தாயங்கள் உருளும் சத்தம். டிவி… ஸ்மார்ட் ஃபோன் வந்த பின்னருமா தாயம் விளையாடுகிறார்கள் ஆச்சரியமாக இருந்தது கோதைக்கு…

தேவகி அம்மா வீட்டு ஊதா நிற கதவு கோதையின் கைபட்டதும் விரிந்து வழிவிட்டது.

நெய் மைசூர் பாகின் வாசனை எச்சில் ஊறவைத்தது…

“யாரு…”

“நான் தான் பூரணி தங்கச்சி மவ கோதை”

“சின்ன குட்டியா…எங்கள எல்லாம் மறந்துட்டல்ல” ஆட்டத்தின் கவனத்திலிருந்து மீண்டு ஆர்வமாய் குசலம் விசாரித்தது தேவகி அம்மா.

" நான் இன்னும் வெட்டாட்டம் ஆடல…பேச்சுவாக்குல மறந்துறப்போற" திலகம் அத்தை மாறவே இல்லை.

“விஜி…செத்த இங்க வாயேன்”

விஜி அக்கா ஓடிவந்து கட்டிக் கொண்டது.

" நான் காய் நகத்துறேன் எனக்கு நீ உருட்டு" ஆட்டத்தை தொடங்கியது தேவகி அம்மா.

" நாங்க வெளாடுறப்போ நீ இங்கேயேதான் கிடப்ப… இந்த சிமெண்ட் தரையில் கன்னத்தை வச்சு படுத்துக்குவ… உன் பெரியாயி வெறுந்தரையில படுக்காதன்னு கத்திகிட்டே கிடப்பா… ஜில்லுனு இருக்கு போன்னு சொல்லிட்டு நீ அப்படியே தூங்கிடுவ…"

வெட்டும் வாய்ப்புகளை பயன்படுத்தாமல் திலகம் விட்டுக் கொடுப்பது கோதைக்கு ஆச்சரியமாக இருந்தது.

" இப்பல்லாம் இங்க விளையாட யாரும் வரதேயில்ல உன் பெரியம்மாட்ட சொல்லி தெனமும் ஒரு தடவை வர சொல்றியா" பாவமாக கேட்டது திலகம்.

விஜி அக்கா கொடுத்த எலுமிச்சை ஜூஸ் அடிநாக்கு வரை இனித்தது.

“எப்படி அக்கா நீ மட்டும் அப்ப பார்த்த மாதிரி அப்படியே இருக்க” என்ற கோதையின் வியப்புக்கு விஜி புன்னகைத்தாள்.

பெரும்பாலும் திலகமே முதலில் பழுக்கும் ஆட்டத்தில் அன்று கோதை பழுத்தது நிச்சயம் யதார்த்தமல்ல…

கன்னத்தை தரையில் வைத்து படுத்தாள் கோதை…

அத்தனை ஆண்டு அனுபவிக்காத சில்லிப்பும் சேர்த்து மொத்தமாக கன்னத்தில் ஏற உறங்கிப் போனாள்…

எவ்வளவு நேரம் தூங்கினாளோ எழுந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது.

வாரிசுருட்டி எழுந்தாள்
கூடத்தில் யாரும் இல்லை…உள்ள வேலையா இருப்பாங்க பெரியம்மாவேற தேடும் என்று வேகமாக வெளியேறினாள்.

“வந்தா செத்த உக்காராம எங்க போன”

" டென்சனாகத பெரியம்மா… இப்பல்லாம் உனக்கெப்டி பொழுது போகுது"

“மாடு கன்னு போட்ருக்கு அத பாக்கவே நேரம் சரியா இருக்குடி நீ வேற”

" முன்னடில்லாம் தேவகி வீடே கதின்னு இருப்ப"

“ஆமா…அது ஒரு காலம்…இந்த விஜியால எல்லாம் கெட்டுச்சு” காபி டம்ளரை நீட்டினாள் பூரணி

“ஏன்…” கதைகேட்க வசதியாக அமர்ந்தாள் கோதை…

“கீழண்ட வூட்டு கதிரவன அந்தப்புள்ள விரும்பியிருக்கு…கூர வீட்டுபுள்ள கோவரத்துக்கு ஆசப்பட்டா…என்னா ஆவும்…வெட்டு குத்துன்னு வந்தவங்கள பாத்து மெரண்டு தூக்குல தொங்கிட்டா பாவம்…”

அதிர்ந்தாள் கோதை

“காபி சூடா நாக்குல பட்ருச்சா…பாத்து…
பொண்ணு போனப்புறம் அதே நெனப்புல வருஷம் திரும்பறதுக்குள்ள தேவகியும் போய்ட்டா…இந்த கொடுமைய இந்த ஊரு ஜீரணிக்கிறதுக்குள்ள தெலகமும் கொளுத்தி கிட்டு செத்து போய்ட்டா…என்னா காரணம் ன்னு ஒருத்தருக்கும் தெரில… எப்பயும்
ஜே ஜே ன்னு இருந்த வூடு பாழடஞ்சு கெடக்கு. அது ஆச்சு அஞ்சாறு வருஷம்…இப்பகூட அங்க தாயக்கட்டை உருளுற சத்தம் கேக்குது…மைசூர் பாக்கு வாசனை வருதுன்னு சொல்லிக்கிறாங்க…யாரும் அந்தப்பக்கம் போறதேயில்லை…”

கோதையின் நிலை உணராமல் பேசிக்கொண்டேஉறங்கிப் போனாள் பூரணி.

இரவு முழுக்க கொட்ட கொட்ட விழித்து இருந்த கோதை விடியும் முன் எழுந்து தயாராகி பைகளை அடுக்கிக்கொண்டிருந்தாள்

“என்னடியம்மா அதிசயமா இருக்கு… ஒரு வாரம் இருக்கப் போறேன்னு சொன்னவ ஒரு நாள்ல கிளம்புற…என்ன பொம்பள புள்ளையோ…”

கனவா நிஜமா என குழப்பத்திலேயே இருந்த கோதையை சுமந்துகொண்டிருந்த பேருந்து கொள்ளிடத்தை கடந்து கொண்டிருந்தது.

நடந்தவற்றை கடக்க முடியாத கோதையை கலைத்தது அலைபேசி…

“சொல்லு பெரிம்மா…”

“சின்ன குட்டி சொல்ல மறந்துட்டேன்…உனக்கு புடிக்குமேன்னு தேவகி வூட்டு தோடத்துல காய்ச்ச எலுமிச்சம்பழம் நெறயா பறிச்சாந்து பைல போட்ருக்கேன்…வெயில் காலம்ல மறக்காம ஜூஸ் போட்டு குடி”