Community

ஜன்னல்- இளமன அதிர்வுகள்

*ஜன்னல்*

 வைகாசி மாத கீழைக் காற்று கூடத்தில் வீசும் வகையில் சுவரை இடித்து ஜன்னலைப் பொருத்தியாகி ஆகிவிட்டது...நன்கு அமரும்படி இடம் விட்டு சன்னலை வைக்கவேண்டும் என்ற கண்டிசன் மேஸ்திரி காளிமுத்துவுக்குப் பிடிக்கவே இல்லை... .. தான் தற்போதைய கட்டிட பாணியை பின்பற்றி நவீன நுணுக்கங்களோடு கட்டியிருந்த புது வீட்டில் எவ்வளவு முறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் இந்த பழைய ஜன்னலை பழைய அமைப்போடு வைக்கச் சொன்ன வீட்டு உரிமையாளர்கள் மீது எரிச்சலாக வந்தது. 'அவர்கள் வீடு அவர்கள் பாடு சொன்னதை செய்து விட்டுப் போவோம்' என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு வேலையை முடித்துக் கொடுத்து விட்டார். 

 ஜன்னல் பொருத்தப்பட்ட சிமெண்ட் பூச்சு காயும் வரை மல்லிகாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை... காய்ந்து விட்டதா... கட்டையில் அமரலாமா என சோதித்த படியே இருந்த அம்மா மல்லிகாவை பார்க்க செந்திலுக்கு சிரிப்பாக வந்தது...

”இவ்ளோ பெரியவங்க இன்னும் என்ன சின்ன பிள்ளை மாதிரி” முகவாயை தோள்பட்டையில் இடித்துக்கொண்டாள் செந்திலின் மனைவி பல்லவி.

 ராஜபாளைய வீரனின் குரைப்பு மூவரையும் ஒருசேர வாசல் பக்கம் பார்க்க வைத்தது...வெளிகேட்டில் ஆசாரி பாலு. "வா பாலு வீரா கட்டித்தான் இருக்கு.." என்ற மல்லிகாவின் குரலில் என்ன புரிந்ததோ வீரன் அமைதியாய் படுத்துக் கொண்டது. 

“வா பாலு உள்ள வா… ஜன்னல் நல்லா பிக்ஸ் பண்ணி இருக்காங்களா பாரு,நீ என்ன நினைக்கிற…” மல்லிகாவின் குரலின் குதூகலம் பாலுவுக்கு வினோதமாக இருந்தது…

 பாலுவின் கொள்ளுத் தாத்தா கலியன் ஆசாரி செய்த நல்ல தேக்குமர சன்னல் அது... மெச்சத்தக்க வேலைப்பாடுகளும் இருந்தன தான் என்றாலும் நவீன பாணியில் கட்டப்பட்ட அந்த புது வீட்டில் இடைச்செருகலாக அமர்த்திவைக்கப்பட்ட அந்த பழைய மோஸ்தர் ஜன்னல் சற்று உறுத்தலாக தானிருந்தது பாலுக்கு. 

 "நல்லா இருக்கும்மா அம்சமா இருக்கு" என்றபடி தலையை சொறிந்தான் பாலு. 

 "செந்தில் ஒரு பத்தாயிரம் எடுத்துட்டு வந்து பாலு கிட்ட குடு" என்ற மல்லிகாவின் உத்தரவில் செந்திலும் பாலுவும் ஒரு நொடி அதிர்ந்து அடங்கினார்கள்..

பழைய ஜன்னல்… வேலை பாட்டுக்காக மரத்தோட தரத்திற்காக ஒரு நாலாயிரம் கொடுக்கலாம் என்று கணக்கு போட்டிருந்தான் செந்தில்

மொத்தமா ஏலத்தில் போகப்போற பொருளோடு பொருளா கிடந்த இந்த ஜன்னலுக்கு இரண்டாயிரம் கிடைச்சா கூட போதும் என்று இருந்தது பாலுவுக்கு…

 இறுகிய முகத்தோடு பத்தாயிரத்தை மல்லிகாவிடம் செந்தில் கொடுக்க... வாயில் சிரிப்போடு வாங்கிக்கொண்டான் பாலு..

 ஈரங்காயத சிமெண்ட் பூச்சுடன் இருந்த ஜன்னல் பிரேமின் பூ அலங்காரத்தை பட்டும் படாமல் தொட்டு தடவிய மல்லிகாவின் மனதில் பழைய நினைவுகளின் ஈரம் கசியத் தொடங்கியது.

 சோழர் கால எச்சங்கள் நிறைந்த குக்கிராமம் நாகத்தி. வெட்டாறு இரண்டாய் பிரிந்து சேருமிடத்தில் துருத்திக் கொண்ட பெரு மணல் திட்டு. நாணல் வேலி போட்டிருக்க ஏராளமான நீர்ப் பறவைகள், மயில்கள், பாம்புகள் என இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர்... ஆசீர்வதிக்க படாத மக்களை கொண்டிருந்தது.

 காரைவீட்டு சோமசுந்தரம் பிள்ளை தான் பெரிய தலைக்கட்டு.. காலை உணவு முடிந்து வயல் வேலைகளை மேற்பார்வையிட கிளம்பினார் என்றால் வீடு சேர மணி மூன்றாகிவிடும்...

 


 பசியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மனைவி கமலத்தம்மாளின் முப்பாட்டன் வரை வைது தீர்த்த பின் தான் இலையில் அமர்வார்.

 இதுவரை எங்குமே என்றுமே தட்டில் அவர் சாப்பிட்டதே இல்லை. இஸ்திரி போட்டது போன்ற அப்போது பறித்த வாழை இலையில்தான் அவருக்கு அமுது படைக்க வேண்டும்.

 வீட்டு வேலைக்காரர்களிடம் கம்பீரமாக உலா வரும் கமலத்தம்மாள் ஒவ்வொரு மதியமும் இப்படி செத்து செத்து பிழைப்பதை பார்க்க வீட்டு வேலைக்காரர்களுக்கு உள்ளூர மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்

 சிடுசிடுப்பும் கடுகடுப்பும் அவருக்கு குரங்கு சுந்தரம்பிள்ளை என்ற பட்டப்பெயரை பண்ணையாட்களிடம் உருவாக்கித்தந்திருப்பது கமலத்தம்மாளுக்கு அரசல் புரசலாகத் தெரிந்தபோது...யாருமற்ற அறையில் "யோவ் கொரங்கு சுந்தரம்புள்ள..." என்று உரக்கப் பேசி தனியே சிரித்துக்கொண்டாள்

 உணவுக்குப்பின் பெரிய திண்ணையில் அரைக்கை பனியனுடன்...சாய்வு நாற்காலியில் சாய்ந்து வெற்றிலையை குதப்பத்தொடங்கிய சில நிமிடங்களில் எச்சில் ஒழுக கண்கள் சொருகிவிடும் சோமசுந்தரம் பிள்ளைக்கு. 


 வயல் வேலைகளை முடித்துவிட்டு..மாலை நாலு ஐந்து அளவில் கூலி பெறுவதற்காக வரும் கூட்டம் அவர் முகத்தை பார்த்துக்கொண்டே அமைதி காக்கும். சோமசுந்தரம் பிள்ளை எப்போது கண் விழிக்கிறாரோ அப்போதுதான் அவர்களுக்கு கூலி. சில நேரங்களில் இரவு ஏழு மணி கூட ஆகி இருக்கிறது. ஒருமுறை அவசரத்தில் அவரை எழுப்பி விட்ட பொன்னனை வண்டி சக்கரத்தில் கட்டி விட்டு வெளுத்த நிகழ்வின் பார்வையாளராக இருந்த கூட்டம் விளைவுகள் உணர்ந்து அமைதி காத்து கிடக்கும்.

 விடுமுறை நாட்களில் காரை வீட்டுக்கு வேலைக்கு செல்லும் அம்மா அழகம்மாளோடு மல்லிகாவும் செல்வதுண்டு. வீட்டு வேலைகள் ஆகவேண்டுமே என்பதற்காக வீட்டுக்குள் புழங்க அழகம்மாளுக்கு மட்டுமே அனுமதி.  மற்ற வேலையாட்கள் வாசலிலிருந்து சந்து வழியாகத்தான் கொல்லைப்புறம் செல்ல வேண்டும். 

 கீழ் திண்ணையில் விளையாடுவதும்..அணிலைத் துரத்திக் கொண்டு சந்துவழியாக கொல்லைப்புறம் ஓடுவதும் கன்றுக்குட்டிகளிடம் அணில் ஒளிந்த இடத்தை விசாரிப்பதும் மல்லிகாவின் பொழுதுபோக்கு.

 வெயில் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்த ஒரு பொழுதில்.." ஏண்டி அழகம்மா உன் எதுத்த வீட்டு சின்னதுரை மவன் பாம்பு கடிச்சு செத்துப் போயிட்டானாமே... மூணு மணிக்குள்ள பொணத்தை எடுக்கறாங்களாம் மேலண்டவூட்டு செல்லாயி சொல்லிட்டு போறா...நீ மூச்சுகாட்டாம இருக்க..!?" எஜமானி கமலத்தம்மாள் சீண்டினாள்

“படிக்கிற புள்ள மா அவன். அவங்க அப்பன் காசுக்கு ஆசைப்பட்டு அவனை முந்திரிகாட்டு வேலைக்கு அழைச்சிட்டு போய்…இப்படி நல்லதுக்கு படைச்சுபுட்டான்…நான் இங்க வாரப்ப வைத்தியர் வூட்டுக்கு தூக்கிட்டு போனாங்க …புள்ள பொழச்சுக்கும்ன்னு நெனைச்சேன் அகாலமா போய்ட்டானே…” கட்டுப்படுத்திய கண்ணீர் இமைமீறத்தொடங்கியது அழகம்மாளுக்கு.

"அம்மா தூக்கறதுத்துக்கு முன்ன நான் அந்த புள்ள மூஞ்சிய செத்த போய் பாத்துட்டு குளிச்சிட்டு வந்துடறேன் மா " அழகம்மாள் குரலில் கெஞ்சல் இருந்தது…

“சரி சரி போய்ட்டு வெள்ளனே வந்துடு மாடுங்களுக்கு தண்ணி காட்டனும்…இல்லன்னா கத்திகிட்டே கிடக்குங்க” பெரிய மனதுடன் கமலத்தம்மாள் அனுமதித்தாள்…

அம்மா கிளம்புவதை பார்த்து மல்லிகாவும் கிளம்ப…

“ஏண்டி எழவு வூட்டுக்கு சின்னப்புள்ளய கூட்டிப்போற…புத்தியிருக்கா ஒனக்கு… பயந்து கியந்துட போறா…இங்கனயே வுட்டுட்டு நீ போய்ட்டு வா” கமலத்தம்மாளின் கட்டளையில் இப்படி அத்திப்பூத்தாற் போல அக்கறை மலரும்.

“மல்லிகா நீ இங்கனயே விளாடு வூட்டுக்குள்ளலாம் போய்டகூடாது நான் இந்தா வந்துடறேன்…” கிட்டத்தட்ட ஓடத்தயாராக இருந்தாள் அழகம்மாள்…ஒப்பாரிக்கான வார்த்தைகள் வரிசைக் கட்டத் தொடங்கி இருந்தன.

விட்டால் போதும் என வேப்பம்பழங்களை பொறுக்க ஓடினாள் மல்லிகா… இன்னும் கால்படி சேர்த்துவிட்டால் பால்ஐஸ் வாங்கி சாப்பிடலாம். அம்மா தன் கனவில் கல் எறியாமல் விட்டவரை கொண்டாட்டம் தான் என்றிருந்தது மல்லிகாவுக்கு.

“இந்தா புள்ள இங்க வா…” அதட்டலோடு அழைத்த கமலத்தம்மாளின் குரலால் தடைபட்டது மல்லிகாவின் பால் ஐஸ் கற்பனை.

கொல்லைப்புற வாசலில் தயங்கி நின்ற மல்லிகாவின் கால்களை “இங்க வாங்கறேன் செவுடியா நீ…” என்ற கமலத்தம்மாளின்
கடுமை உள்ளிழுத்தது.

வழுவழுத்த தரையின் சில்லிப்பு உச்சிவரை ஏறியது மல்லிகாவுக்கு…

" நீ எத்தனாவது படிக்கிறந்த…?"

“நாலாப்பு” வாய்க்குள்ளேயே ஒடுங்கியது மல்லிகாவின் குரல்.

'ஒம்போது வயசாச்சி…இன்னும் ரெண்டு மூணு வருசத்துல வயசுக்கு வந்துடுவ அப்பறம் எங்க பள்ளிகொடம்லாம்…ஒங்காயி ஒன்னய கட்டிக்கொடுக்கற வரைக்கும் இங்கனதான் வேலை செய்யப் போற…இப்பயே கத்துக்க…இந்தா வாளித்தண்ணில அந்த துணிய நனைச்சு வூடுபூறா சேச்சு வுடு…ஒரு அச்சு அழுக்கு இருக்ககூடாது"

நம்மளயும் பெரிய மனுஷியா நெனச்சு இவ்வளவு பெரிய வேலையை கொடுத்து இருக்கிறார்களே என்று மல்லிகாவுக்கு குஷியாக போய்விட்டது. சுறுசுறுப்பாக தரையைத் துடைக்கத் தொடங்கினாள்…

 மிகப் பெரிய கூடத்தை முக்கால் பங்கு தேய்க்கும்போதே தோள்பட்டை வலி எடுக்கத் தொடங்கியது. அப்பாடா என வேலை முடித்து நிமிர்ந்த அடுத்தநொடியே "இந்தா இந்த வைக்கோல் பிரிய வச்சு ஜன்னலை அழுத்தி தொட... சீக்கிரம்" கமலத்தம்மாளின் அடுத்த அதட்டலில் தொண்டை வறண்டது மல்லிகாவுக்கு.

நட்சத்திரங்களைப் பொடித்து எண்ணெயில் குழைத்து பூசியது போல ஜன்னல் கம்பிகள் மினுமினுத்தன…

மல்லிகாவின் குழந்தை மனதை அந்த வெள்ளி மினுமினுப்பு ஈர்க்க அதனைத் தடவிப் பார்த்தபடி ஜன்னல் கட்டையில் அமர்ந்து அதன் மரக்கட்டை ஃபிரேமில் சாய்ந்தாள்… கீழைக் காற்றும் வேலைசெய்த அலுப்பும் கண்களை சொக்கவைத்தன…

“அடி செறுக்கி மவளே…நாயை நடுவூட்ல கூப்டதுக்கு என்னைய செருப்பால அடிக்கனும்…” என்று தலைமுடியை கொத்தாகப் பிடித்து மல்லிகாவை தூக்கி நிறுத்தினாள் கமலத்தம்மாள்.

" ஐயோ! ஐயோ! எங்க மாமனார் பர்மா தேக்குல பாத்து பாத்து செஞ்ச மரத்துல உன் சிக்குபிடிச்ச தலைய வச்சு தேச்சு பூரா எண்ணெய் ஆக்கி வச்சிருக்கியே இந்த அழுக்கு போகுமா…? சனியனே" என மல்லிகாவின் முடியைத் பிடித்து ஐன்னலில் மோத…

பூக்கள் எல்லாம் எப்போம் மென்மையானவையாக இருப்பதில்லை.. வேலைப்பாடுகள் நிறைந்த உறுதியான மரப்பூவின் முனை மல்லிகாவின் நெற்றியைப் பதம்பார்த்தது.

“அம்மா……” என்று மல்லிகாவும் அப்போதுதான் உள்நுழைந்த அழகம்மாவும் ஒருசேர அலறினர்.

மகளை வாரியணைத்து முந்தானையால் இரத்தத்தை அழுத்திய அழகம்மாவுக்கு நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது.

" ஏம்மா படிக்கிற பச்சைபுள்ளய இப்படி வேலை வாங்கி கொடுமைப்படுத்துறீங்களே…உங்களுக்கு செருப்பா தேயத்தான் நான் இருக்கேனே எம்பொண்ண ஏன் இப்படி பண்ணிங்க" ஓங்கிய அழகம்மாவின் குரல் தன்னிரக்கத்தில் தேம்பித் தேய்ந்ததுது.

“படிக்கிற புள்ளையாம் படிக்கிற புள்ள…அப்படியே உம்மவ படிச்சி கிழிச்சு இந்த ஜில்லாவுக்கு கலெக்டராவ போறாளா தலமுறை தலமுறையாக எங்காளுங்க வீட்டில உழைச்சாதான் ஒங்களுக்கெல்லாம் கஞ்சி…பொத்தி கிட்டு போய் பொழப்பை பாரு” முந்தானையை உதறி சொருகி அலட்சியமாக திரும்பினாள் கமலம்.

“உம்மவள திண்ணைல கெடத்திட்டு வந்து சோப்புத் தண்ணி வச்சு இந்த தேக்கங்கட்ட ஜன்னல முதல்ல எண்ணெய் பிசுக்கு இல்லாம தொட…”

உணர்ச்சிகள் வடிந்த நடைபிணமாய் வேலை செய்யத் தொடங்கிய அழகம்மாவை மல்லிகாவின் கண்கள் வெறித்துக் கிடந்தன.

அதன்பிறகு மல்லிகாவை அந்த வீட்டிற்கு அழகம்மாள் அழைத்துச்செல்லவே இல்லை…

மல்லிகாவின் பயணத்தில் பல வலுவான கணைகள் தாக்கினாலும் அன்று பிஞ்சு மனதைத்தாக்கிய கமலத்தாம்மாள் கணை போல ஆழப் பதிந்தது ஏதுமில்லை.

குடிமைப்பணித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆகி உச்ச அதிகாரம், குழந்தை, குடும்பம் என்று சொந்தஊரை விரும்பியே மறந்து போன மல்லிகாவை நாகத்திக்கு இழுத்தது மகன் செந்திலின் வீடுகட்டும் ஆசை.

 டவுனில் பிரம்மாண்டமாய் வீடு கட்ட திட்டமிட்ட செந்தில் அம்மாவின் பிடிவாதத்தால் நாகத்தியிலேயே கட்டத்தொடங்கினான்.

கட்டடப்பணியை பார்க்க வரும்போதெல்லாம் காரை வீட்டு தெருவை தவிர்ப்பதற்காக சுற்று வழியாக பயணிப்பதே வழக்கமாகிப் போனது மல்லிகாவுக்கு.

பெயிண்டிங் உட்பட வேலைகள் முடியும் தருவாயில் பாலு தான் பேச்சுவாக்கில் சொன்னான்… “ஊருக்கே அடையாளமா இருந்த காரை வீட்ட இடிச்சுட்டாங்கங்கற கொறைய இந்த வீடு தீர்த்துடுச்சு மா”

திடுக்கிடலை மறைத்து இயன்றவரை தன்னை இயல்பாக்கிக் கொண்ட மல்லிகா…“ஏன் பாலு என்னாச்சு”

“பெருசுங்க மண்டையைபோட்ருச்சு…வாரிசுங்க பிச்சு பிடுங்கிகுதுங்க அதோட முடிவா காரை வீட்டை இடிக்கிற வேலய எங்கிட்ட கொடுத்தாங்க இடிச்சு தேக்கு மர சாமான்களை மட்டும் தனியா ஏலம் விடறதுக்காக என் பட்டறைல தாம்மா போட்டுவச்சுருக்கேன்”

“பாலு என்னை உன் பட்டறைக்கு கூட்டிட்டு போறியா…அந்த மரச்சாமான்கள பாக்கனும்” மல்லிகா

“அட அதுக்கென்னம்மா வாங்க இப்படியே பேசிகிட்டே போவோம்”

பட்டறையில் தனித்து அடுக்கப்பட்டிருந்த கதவுகளுக்கிடையில் பூவேலை நிறைந்த அந்த ஜன்னல் மல்லிகாவை அலட்சியமாகப் பார்ப்பது போல இருந்தது.

அன்றே மல்லிகாவின் புதுவீட்டுக்குள் மாற்றம் செய்யவைத்து அமர்ந்து கொண்டது காரை வீட்டு ஜன்னல்.

சிமெண்ட் பூச்சு காய்ந்திருந்தது.

ஜன்னல் கதவு ஃபிரேமில் படும்படி தலைசாய்த்து வெகுநேரம் அமர்ந்திருந்தாள் மல்லிகா…

 ஒரு பழைய ஜன்னலுக்கு மல்லிகா தரும் முக்கியத்துவத்தை கிண்டலடித்துக்கொண்டேயிருந்த பல்லவி மேல் கோபம் வரவில்லை செந்திலுக்கு.

நடு கூடத்தில் திருஷ்டி போல எண்ணெய் பிசுக்கேறிய ஜன்னல் கதவை பாலிஷ் போடச் சொல்லிக்கிக்கொண்டிருந்த செந்திலிடம்.

 "அந்த ஜன்னல்ல பெயிண்டிங்கோ பாலிஷிங்கோ பண்ணவேணாம் அது அப்படியே தான் இருக்கனும்" என்று கடுமையாக சொன்ன மல்லிகா அதன்பிறகு அந்த ஜன்னலில் அமரவேயில்லை. கீழைக் காற்று மட்டும் அதன் வழியே கூடத்தை நிறைத்துக்கொண்டிருந்தது.