Community

குடி குடியைக் கெடுக்கும்!

குடி குடியைக் கெடுக்கும்!..

துடுப்பதி ரகுநாதன்

ரா கவன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்த கொரோனா பாதிப்பு ராகவனையும், அவன் குடும்பத்தையும் எந்த விதத்திலும் பாதிக்க வில்லை!

வீட்டில் சமையலுக்கும் மற்ற வேலைகளுக்கும் உதவியாக ஒரு வேலைக்காரப் பெண்ணை நிரந்தரமாக அவன் மனைவி சித்ரா வைத்திருக்கிறாள்.

அக்கம் பக்கம் வீடுகளில் எல்லாம் இந்த கொரோனாவுக்கு பயந்து வேலைக்காரிகளை நிறுத்தி விட்டார்கள்.

ஆனால் சித்ரா மட்டும் தங்கள் வீட்டு வேலைக்காரி ரத்னாவை நிறுத்த வில்லை! அவள் கணவன் இல்லாத ஒண்டிக் கட்டை. அதனால் அவளுக்கு தங்கள் வீட்டிலேயே ஒரு அறை கொடுத்து வீட்டோடு வைத்துக் கொண்டாள். கிட்டத் தட்ட அவளும் அந்தக் குடும்ப உறுப்பினர் போல் தான் அங்கு இருந்து வந்தாள். அதனால் அவளுக்கு சித்ரா குடும்பத்தின் மேல் அளவுக்கு அதிகமான மரியாதை! அதனால் ரத்னா சித்ராவை வீட்டில் எந்த வேலையையும் செய்ய விடுவதில்லை!

மகள் ஐஸ்வரியாவுக்கு பதினைந்து வயசாகி விட்டது. சித்ரா, ஐஸ்வரியா இருவரையும் தாயும், மகளும் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! இருவரும் அக்கா தங்கை மாதிரி தான் இருப்பார்கள்!

ராகவன் தன் மனைவி சித்ரா, மகள் ஐஸ்வரியாவுடன் சேர்ந்து கொண்டு கொரோனா காலத்தில் பகல் முழுவதும் வீட்டிலேயே பல பழைய சினிமாக்களைப் பார்த்து பொழுது போக்கிக் கொண்டிருந்தார்!

ராகவன் மனைவி பேரிலும், தன் மகள் ஐஸ்வரியா மேலும் உயிரையே வைத்திருந்தார். அவர்களும் ராகவனிடம் அப்படித் தான் இருந்து வந்தார்கள்.

அவர்களுக்குப் பிடிக்காத ஒரு பழக்கம் ராகவனிடம் இருந்தது!

ராகவன் தன் கம்பெனி வியாபார விஷயமாக பாம்பே, கல்கத்தா போன்ற வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் பார்டி கொடுப்பது வழக்கம்!

அவர்களோடு சேர்த்து பார்டிகளில் ராகவனும் குடித்துப் பழகி விட்டான். பார்டியில் குடித்துப் பழகிய ராகவன் இப்பொழுது பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது குடிக்கத் தொடங்கி விட்டான்.

ராகவன் இயற்கையாகவே ஒரு சொல் பொறுக்க மாட்டான்! அவன் மேல் எந்த விஷயத்திலும் யாரும் குறை சொல்லாத படி நடந்து கொள்வான். அதனால் மிக ஜாக்கிரதையாகத் தான் சித்ரா அவனை இது விஷயத்தில் கண்டித்து வந்தாள்! காரணம் அவன் ஒரு தொட்டால் சிணுங்கி!

ராகவனும் சித்ராவிடம் நம் அரசு சொல்வது போல் படிப்படியாக இந்தப் பழக்கத்தை விட்டு விடுவதாக அடிக்கடி வாக்குறுதி தருவது வழக்கம்.

கடிதம் எழுத ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையார் சுழி போட்டு நாம் ஆரம்பிப்பது போல், நமது சினிமா தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பு ஒரு கடமைக்கு ‘மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு” என்று ஒரு சிலைடு போடுவார்கள்! அது போல் சித்ரா சொல்வதை ராகவனும் எடுத்துக் கொள்வான்!

கொரோனா காலத்தில் வீட்டில் சித்ரா, ஐஸ்வரியா இருவரோடும் ராகவன் ஜாலியாகப் பொழுதை போக்கிக் கொண்டிருந்தான்.

ராகவன் மற்ற எல்லா விஷயத்திலும் தங்கம்! அதனால் சித்ராவும் அவனை விட்டுப் பிடிக்கலாம் என்று கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டாள்.

ன்று மாலை சித்ராவும், ஐஸ்வரியாவும் ஒரே மாதிரி சேலை கட்டிக் கொண்டு கோயிலுக்குப் போய் வருவதாக ராகவனிடம் சொல்லி விட்டு வீதியில் இறங்கி பேசிக் கொண்டே போனார்கள்!

அவர்கள் போவதையே ராகவன் வாசலில் நின்று சிறிது நேரம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

சித்ராவுக்கு இப்பொழுது முப்பத்தி நாலு வயசாகிறது! மகள் ஐஸ்வரியாவோடு ஜோடி சேர்ந்து சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டு போவதைப் பார்க்கும் எவரும் சித்ராவுக்கு ஒரு இருபத்தி நாலு வயசு தான் மதிப்பார்கள்!

அவர்கள் கோயிலுக்குப் போனால் மெதுவாகத்தான் வருவார்கள். அவர்கள் வருவதற்கு எப்டியும் இரண்டு மணி நேரமாவது ஆகும்!

அன்று காலையில் ஆடிட்டர் போன் செய்திருந்தது நினைவுக்கு வந்தது. இன்கம்டாக்ஸ் சம்பந்தமாக சில ஸ்டேட்மெண்ட் அவசரமாக வேண்டுமென்று கேட்டிருந்தார்.

அதை தயார் செய்ய எப்படியும் மூன்று மணி நேரமாவது ஆகும். அந்த வேலையையாவது செய்து முடிக்கலாம் என்று மாடிக்குப் போனார் ராகவன்.

ராகவனுக்கு மாடியில் கம்பெனி வேலைகளை கவனிக்கவென்று தனியாக ஒரு அறை இருக்கிறது! அதில் சகல வசதிகளும் இருக்கிறது! அங்கு தான் அவன் கம்பெனி தொடர்பான கணக்கு புத்தகங்கள், கம்யூட்டர், பிரிண்டர் எல்லாம் இருக்கும்!

இரவு நேரம் அங்கு உட்கார்ந்து கணக்கு வழக்குகளை அவர் பார்ப்பது உண்டு. மாடிக்குப் போய் அந்த வேலையில் மூழ்கி விடுவார். மற்றவர்கள் யாரும் மாடிக்குப் போய் தொந்தரவு செய்ய மாட்டார்கள்!

அன்று நேரம் போனதே தெரியவில்லை!. பல முக்கியமான வேலைகளை இந்த கொரோனா காலத்தில், இதுவரை தான் பார்க்காமல் இருப்பது புரிந்தது. அதனால் வேலையில் மூழ்கி விட்டான். நேரம் போனதே தெரியவில்லை!

கடிகாரத்தைப் பார்க்கும் பொழுது தான் மணி பனிரண்டாகி விட்டது. மிகவும் அசதியாக இருந்தது!

பீரோவில் இருந்த பாரின் விஸ்கி அவன் கண்களில் பட்டது! அசதியைப் போக்க கொஞ்சம் குடிக்கலாம் என்று பாட்டிலை எடுத்தார்.

சித்ராவும், ஐஸ்வரியாவும் கொஞ்ச நாளாக இது விஷயத்தில் அவரிடம் கடுமையா நடந்து கொள்வதால் சற்று குடிப்பதை விட்டிருந்தார்!

குடித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டபடியால் அன்று கட்டுப் படுத்த முடியாமல் நிதானம் இழக்கும் நிலைக்குப் பொய் விட்டார்.

கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஒன்று என்று காட்டியது. இந்த நேரத்தில் கீழே அவர்கள் இருவரும் தூங்கியிருப்பார்கள்.

மாலையில் சித்ரா புடவையில் எவ்வளவு அழகாக இருந்தாள் என்று நினைத்துப் பார்த்த பொழுது, அவள் அருகாமை அந்த நேரத்தில் மிக அவசியமாகப் பட்டது!

உடனே எழுந்தார்… எழுந்து நிற்கும் பொழுது கால்கள் தள்ளாடின! சமாளித்துக் கொண்டு, மெதுவாக படி இறங்கி கீழே ஹாலுக்கு வந்தார்.

ஜன்னலில் வந்த நிலவு வெளிச்சத்தில் பக்கத்து ரூமில் சித்ரா ஒருக்களித்துப் படுத்திருப்பது தெரிந்தது!

கல்யாணம் ஆகும் பொழுது இருந்த அதே வாளிப்பான உடம்பு. கால்களை குறுக்கி படுத்திருந்தாள். நல்ல வளைவுகள்!

வேகமாக ராமிற்குள் போய் பக்கத்தில் போய் படுத்துக் கொண்டு, “ஏய் சித்ரா!.. கொஞ்சம் திரும்பி படுடி!..” என்று தன் பக்கமாக அவளைத் திருப்பினார்…

“வீல்!..” என்ற சத்தம்!

சில விநாடிகளில் திடீரென்று அறையில் மின் விளக்கு பிரகாசித்தது!

“என்னப்பா இது?.. அம்மா ரூம் பக்கத்தில் இருக்கு!..இது என் ரூம்!.. குடிச்சிட்டா… மனைவிக்கும் மகளுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாமல் போய் விடும்?.. உங்களை நினைச்சா ரொம்ப …அசிங்கமா. இருக்கு!..”

ராகவன் போதை போன இடம் தெரியவில்லை! ஒரே ஓட்டமாக மாடிக்குத் திரும்பிப் போய் விட்டார்!

ஐஸ்வரியா தலையில் அடித்துக் கொண்டு படுத்து விட்டாள்!

கா லையில் ஐஸ்வரியா சித்ராவிடம் நடந்ததைச் சொல்லி விடுவாள்… சித்ரா என்ன நினைப்பாள்?..அதன் பின் அவள் முகத்தை நான் எப்படி நிமிர்ந்து பார்ப்பது?..இனி ஐஸ்வரியாவை மகள் என்ற பாசத்தொடு தொட்டுப் பேசினால் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள்?..’.

ராகவனுக்கு உலகமே சுற்றியது!

மறுநாள். காலை. நீண்ட நேரமாக மாடியில் இருந்து ராகவன் வராததால் காப்பியோடு மாடிக்குப் போனாள் சித்ரா!

“வீல்!..” என்ற சித்ராவின் அலறல் அக்கம் பக்கத்தினரை எல்லாம் திரட்டி விட்டது!

ராகவன் மாடி ரூமில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்!

அதைப் பார்த்த அதிர்ச்சியில் சித்ராவுக்கு மாசிவ் அட்டாக்! கீழே விழுந்தவுடன் உயிர் பிரிந்து விட்டது!

தம்பி கொரோனா அரக்கனால் சாதிக்க முடியாததை, அண்ணன் மதுவரக்கன் சாதித்து விட்டான்!

குடி குடியைக் கெடுக்கும்!


முகவரி,

துடுப்பதி ரகுநாதன்,

33, நேதாஜி நகர்,

கோயமுத்தூர் 36

செல் 9789574816

1 Like